இரண்டரை வயதில் நாட்டியத்துறைக்குள் பிரவேசித்து இரண்டு தசாப்தத்தை தொட்டுள்ள அம்ரிதா விஸ்வநாதன்
Amritha Vish April 07, 2021உங்களது அத்தையே குருவாக அமைந்த அனுபவம் ?
மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ!
K .சண்முகம்பிள்ளை மற்றும் திருமதி. விஜயலக்ஷ்மி சண்முகம்பிள்ளையின் வழி தோன்றிய நான், இலங்கையின் கலை பாரம்பரியமிக்க கலைக்குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர். சிறு பராயத்திலிருந்தே என் குடும்ப பின்னணி காரணமாகவும், எனது தந்தையான எஸ். விஸ்வநாதன் மற்றும் தாய் திருமதி. சாந்தி விஸ்வநாதனின் வழிகாட்டலில் கலை மீது மிகுந்த ஆர்வம் கொண்டேன். நான் இரண்டரை வயதிலிருந்து சரிவர நாட்டிய பயிற்சியை, எனது அத்தையான காலசூரி. ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரன் இடமிருந்து பெற்று, கடந்த இருபத்து இரண்டு வருட காலமாக ஆயிரக்கணக்கான இலங்கை மற்றும் சர்வதேச அரங்குகளில் நடனமாடியுள்ளேன்.
அத்தை எனது குருவாக அமைந்ததன் காரணமாக, நாட்டிய கலை எனது இயல்பு வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது, காரணம் என்னுடைய வாழ்வில் அதிகளவிலான நேரத்தை நாட்டியம் கற்பதிலேயே செலவிட்டுள்ளேன். வீட்டுப்பிள்ளையாக இருந்தாலும், பயிற்சியின் போது குரு - சிஷ்யை என்ற உறவே மேலோங்கி காணப்படும்.
நடன வகுப்புகளுக்கு வரும் மற்றைய மாணாக்கள் போலவே தான் நானும் இந்த கலையை கற்று வந்தேன். அத்தை வீடு என்பதால் வெளியே செல்ல வேண்டிய தேவை இல்லை, கிட்டதட்ட குருகுல கல்வி முறை. பாசத்தை அள்ளி வழங்க தாத்தா, அதே வேளையில் தொடர்ச்சியான பயிற்சியை வழங்கும் அத்தை என சிறப்பான அனுபவம்! என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு சிறந்த கலைஞராக என்னை உருவாக்கிய பெருமை என் குருவையும், என் மகா குருவான என் தந்தையையுமே சாரும்.
2: கலைக்குடும்பத்தினை சேர்ந்த நீங்கள், அடுத்த கட்டத்தினை நோக்கி எவ்வாறு பயணம் செய்கிறீர்கள்?
கலை எல்லையற்றது! கற்றல் ஒரு மனிதனை புது புது பாதைகளை தேடிச்செல்ல வைக்கும். மேலும் சிறந்த கலைஞராக என்னை வளர்த்துக்கொள்ளவதற்கு, என்னுடைய பயணமானது மேலதிக கற்கையை நோக்கியே உள்ளது. என்னுடைய முன்னோர்கள் எவ்வாறு அயராது உழைத்து இந்த கலையை அடுத்த தலைமுறைக்கு வழங்கி சென்றார்களோ, அவர்களின் வழியில் நானும் இந்த கலையின் புனிதத்தினை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறேன்.
3: உங்களை பற்றிய அறிமுக குறிப்பு, மற்றும் தற்போது என்ன செய்கின்றீர்கள்? மற்றும் கலை மேலுள்ள ஆர்வம் பற்றி?
நான் சர்வதேச வணிகம் மற்றும் வர்த்தக துறை சார் பட்டதாரி. தற்பொழுது கொழும்பில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் பிரிவில் சிரேஷ்ட உயர் அதிகாரியாக பணியாற்றி வருகின்றேன். அது மாத்திரமல்ல, ஊடகத்துறையிலும் பகுதி நேர தொகுப்பாளினியாக கடந்த ஐந்து வருடமாக பணியாற்றி வருகின்றேன். கலைக்கு எவ்வளவு முக்கியத்துவம் எங்கள் வீட்டில் வழங்கப்பட்டதோ அதே அளவு முன்னுரிமை கல்விக்கும் வழங்கப்பட்டது.
ஒருபுறம் கலை ஆர்வம் அதிகளவில் இருந்தாலும் என்னுடைய பெற்றோர், நானும் என்னுடைய சகோதரனும் நன்கு கல்வி கற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதன் காரணமாக பாடசாலை கல்வியைத் தொடர்ந்து மேற்படிப்பையும், அத்தோடு வட இலங்கை சங்கீத சபையால் வருடாந்தம் நடாத்தப்படும் சங்கீத மற்றும் நாட்டிய பரீட்சைகளை முழுமையாக பூர்த்தி செய்து "கலாவித்தகர்" பட்டத்தினை 2016ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டேன்.
அது மாத்திரமல்ல, Wendy Whatmore Academy of Speech & Drama வில் ஆசிரிய தர தேர்வுகளை 2016ஆம் ஆண்டில் பூர்த்தி செய்தேன். அறியாத பருவத்திலிருந்தே இந்த கலை சார் ஆர்வம் எனக்கு வந்ததற்கு காரணம் என்னுடைய குடும்ப பின்னணி, மற்றும் என்னுடைய குடும்பத்தினர் கலை மீது கொண்டிருந்த அளவில்லா மதிப்பும் மரியாதையும். அது மாத்திரமல்ல, எட்டு வயதில் இந்தியாவின் முதல் தர பரதநாட்டிய விற்பன்னர் பத்மஸ்ரீ அடையாறு K. லக்ஷ்மணன் தலைமையில் அரங்கபிரவேசம் (Arangetram) செய்யும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது.
நாட்டியம் பார்வையாளரை மகிழ்விக்கும் ஆற்றலை மட்டும் கொண்டதல்ல, நடனமாடுபவரையும் அகத்தே மகிழ்விக்கும் சக்தி கொண்டது. இது மகிமை வாய்ந்த தவம், ஒரு கலைஞரை, குறிப்பாக ஒரு பெண்ணை அகம் மற்றும் புறத்தே உறுதிப்படுத்தும் மகிமை கொண்டது. இது ஓர் உணர்வு, உணர்ந்தால் மட்டும் தான் புரியும். இவை அனைத்துடன் எனது கலை பயணமும் தொடரும்.
4: தந்தையின் பங்களிப்பு
நான் முன்னர் கூறியது போல, எனது தந்தை தான் எனக்கு மகா குரு. அப்பாவின் செல்லப்பிள்ளை நான். எத்தனை வயதானாலும், அன்போடும் பாசத்தோடும் எனக்கு என்றும் மிகப்பெரிய உறுதுணையாக நிற்பவர். கலைத்துறையில் மாத்திரமல்ல, நடைமுறை வாழ்க்கையிலும் எமது நல்வாழ்வு தொடர்பாக அதிகம் கவனம் கொண்டவர். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் ஒரு மிகப்பெரிய சாதனையாளராக இருந்தாலும், தகப்பன் ஸ்தானத்தில் அவர் கடமை தவறாமல் எங்கள் முன்னேற்றத்திற்க்கு, துறை சார் நுணுக்கங்களைப் பற்றிய அவரின் எண்ணப்பாடுகளை நாளாந்தம் எம்மோடு பகிர்ந்துக்கொள்வார்.
என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம். அவரினூடாக நான் கற்றதே அதிகம். மறு புறத்தில் அம்மா! அப்பா எவ்வாறு எங்கள் முன்னேற்றத்திற்கு வழி அமைத்து தந்தாரோ, அதில் சரியாக பயணிக்க அம்மா தான் பெரும் பங்காற்றியவர். அனைத்து வகையிலும் அவரின் முழுமையான பங்களிப்பை வழங்கி எமது வெற்றியை எமக்கு பின் நின்று கொண்டாடுபவர். அப்பா மேடையில், அம்மா மேடைக்கு பின்னால் எனக்கு என்றும் உறுதுணையாய் நிற்பவர்கள். இந்த இருவருக்கும் நான் இந்த வேளையில் சிரம் தாழ்த்தி, பாதம் தொட்டு வணங்கி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
5: நாட்டிய கலா மந்திரின் சிரேஷ்ட கலைஞர்களுடனான தொடர்பு?
நாம் அனைவரும் சிறுவயது முதல் அதிகளவிலான மேடைகளில் ஒன்றாக நடனமாடி, ஒன்றாக வளர்ந்த கலைஞர்கள். எமக்கிடையில் எவ்விதமான பாகுபாடும் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்ததில்லை. எனக்கு தனிப்பட எந்த சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது இல்லை. அவர்கள் என்னை குரு வீட்டுப்பிள்ளையாக பார்த்ததும் இல்லை, நான் அவ்வாறு நடந்து கொண்டதும் இல்லை. எம் தனிப்பட்ட குடும்பங்களோடு செலவழித்த நேரத்தை விட தோழிகளாய் நாம் ஒன்றாக செலவழித்த நேரமே அதிகம். இது ஓர் அழகிய குடும்பம். எனது வளர்ச்சியில் இவர்களின் பங்களிப்பும் உண்டு. என்றும் எம் நட்பை தாண்டிய பந்தம் தொடரும்.
6: நடனத்துறையில் ஆர்வம் கொண்ட நீங்கள், இதை முழு நேர தொழிலாக எடுப்பீர்களா? அல்லது பகுதி நேர தொழிலாக எடுப்பீர்களா?
முன்னர் தெரிவித்தது போல் நான் இன்னும் நடனக்கலையில் கற்க வேண்டிய விடயங்கள் கடலளவு. இன்னும் ஒரு மாணவராகத்தான் இருக்கின்றேன். இந்த உலகினை சிறந்ததொரு வாழுமிடமாக அமைக்கக்கூடிய சக்தி கலைக்கு மட்டுமே உண்டு. அந்த நம்பிக்கையின் பிரகாரம், என்றும் சிறந்ததோர் கலைஞராக வாழ ஆசைப்படுகிறேன். தற்போது பலதுறைகளில் ஈடுபட்டு இருக்கிறேன். எதிர்காலம் யாருக்கும் எப்படி வேண்டுமானாலும் அமையலாம். இறைவன் ஆசிக்கேற்ப, எது நடந்தாலும் மகிழ்ச்சி!
உரையாடல் - ராம் ஜீவா