மாத்தளை சோமுவின் இலக்கிய பயணம் - ஜீவா சதாசிவம்
March 17, 2018
தோட்டக்காட்டினிலே.... தொடங்கி சிட்னி தமிழ் எழுத்தாளர் சங்கம் வரையான மாத்தளை சோமுவின் இலக்கிய பயணம் இன்று 'கண்டிச் சீமை' எனும் வரலாற்று நாவலுடன் மீண்டும் இலங்கை மலையகப்பக்கம் திரும்பியுள்ளது. மாத்தளை மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மலையக எழுத்தாளர் மாத்தளை சோமு கண்டிச்சீமை நாவல் வெளியீட்டிற்காக இலங்கை வந்துள்ளார். அவருடனான ஓர் இலக்கிய உரையாடல்...
மாத்தளையில் வாழ்ந்த பள்ளிப்பருவம்முதல் இளமைக்காலம் வரையான உங்கள் வாழ்க்கைப்பதிவுகளையும் இலக்கிய ஈடுபாட்டையும் அறிமுகக் குறிப்பாக கூறுங்களேன்...
மாத்தளையில் விஜயாக் கல்லூரியின் தமிழ்ப் பிரிவில் கல்வி கற்றபோது அங்கு ஆசிரியராக இருந்த யாழ்ப்பாண ஆசிரியர்களால் தமிழ், ஆங்கிலம் கற்றேன். எங்கள் அப்பா வாங்கிய வீரகேசரி, பக்கத்துவீட்டு ராயர் வாங்கிய தினமணி, எதிர்வீட்டு அன்பர் மா .சுப்பிரமணியம் வாங்கிய திராவிட இதழ்களான மாலைமணி, முரசொலி, சுதந்திரன், ஆனந்தவிகடன், கல்கி ஆகிய இதழ்களால் எனது வாசிப்பு அறிவு விரிவடைந்தது. மாத்தளையில் நடக்கும் தேர்த்திருவிழா, இலக்கிய விழாக்கள் என்பன இன்னொரு உலகத்தை அறிமுகம் செய்தன.
சொல்லப் போனால் மாத்தளை அம்மன் கோயிலில் நடக்கும் பேச்சுக்கள், விரிவுரைகள் என்பன எனக்கு பல்கலைக்கழக விரிவுரையாக இருந்தன. மாத்தளை கார்த்திகேசு நடத்திய வள்ளுவர் மாநாட்டின் ஓர் அங்கமாக நடந்த கதையரங்கில்தான் தெளிவத்தை ஜோசப், என். எஸ்.எம். ராமையா, மரியதாஸ் போன்ற எழுத்தாளர்களைச் சந்தித்தேன். மேற்கூறிய யாவுமே என்னை ஒரு எழுத்தாளனாக்கும் பயிற்சிக்கு உட்படுத்தின. முதலில் சிறுவர் கதை எழுதி, பிறகு கவிதை எழுதி, சிறுகதை எழுத்தாளனானேன். முதற்கதையை மு. சோமசுந்தரம் என எழுதிய நான் பிறகு மாத்தளை சோமு என எழுதத் தொடங்கினேன். மாத்தளையில் பிறந்து கற்று எழுதத் தொடங்கியதால், பிறந்த ஊரைச் சூடிக்கொண்டேன்.
தோட்டக்காட்டினிலே... எனும் கூட்டுத்தயாரிப்பான அந்த படைப்பு மலையக இலக்கிய செல்நெறியில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து சொல்லுங்கள்
சென்னையில் ஒரு இலக்கியக் கூட்டம் நடந்தது. அதில் ஈழத்து இலக்கியம் குறித்துப் பேசப்பட்டபோது மலையகம் குறித்து எதுவுமே பேசப்படவில்லை. அது என்னுள் அதிர்வலைகளை உருவாக்கியபோது மலையகச் சிறுகதைகள், நாவல்கள் நூலாக வராததே அதற்கு முக்கிய காரணம் என உணர்ந்தேன். இலங்கை திரும்பியதும் மலரன்பன், பெ. வடிவேலன் ஆகியோரின் சிறுகதைகளோடு எனது சிறுகதைகளையும் ‘தோட்டக்காட்டினிலே’ என்ற சிறுகதைத் தொகுதியை அமரர் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் முன்னுரையோடு வெளியிட்டேன். அதன் தலைப்பு விவாதங்களை உருவாக்கியபோதும் மலையகத்தில் இலக்கியநூல்கள் உருவாக ஒரு உந்துசக்தியாக ‘தோட்டக்காட்டினிலே’ சிறுகதைத் தொகுப்பு இருந்தது. அதன் பிறகு எனது சிறுகதைகளை உள்ளடக்கிய “நமக்கென்றொரு பூமி”, “அவன் ஒருவனல்ல” என்பனவும் தமிழகத்தில் மீனாட்சி பதிப்பகம் வெளியிட்டது. ஏனைய எழுத்தாளர்கள் படைப்புகளும் மலையகத்தில் வரத் தொடங்கின.
தமிழ் நாட்டிற்கு புலம்பெயர்ந்து செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது? அங்கு வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட இலக்கிய தொடர்புகள் குறித்து கூறுங்கள்..?
1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் என் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. சவூதி அரேபியாவில் வேலை செய்து கொழும்பு திரும்பிய என்னை சிங்களவர்கள் தாக்கினர். நான் உயிர் பிழைப்பேன் என நினைக்கவில்லை. என் கதை முடியப் போகிறது என்று நினைத்தபோது ஒரு விமானப்படையினரின் வாகனம் அங்கு வந்ததில் தீவிரவாதிகள் ஓட்டம் பிடித்தனர். நானும் தப்பி ஓடினேன். அப்போது என் தம்பியும் கூட இருந்தார். என்னைப் பிடித்தபோது புத்திசாதுரியத்துடன் நழுவி கூட்டத்தில் ஒருவராக இருந்தார். இரவு கொழும்பு எரிந்தது. தாக்கப்பட்ட ஒரு கட்டடத்தில் மறைந்திருந்து மறுநாள் காலை பம்பலப்பிட்டி அகதி முகாமுக்குச் சென்றேன். பிறகு தமிழகம் சென்றேன்.
தமிழகத்தில் எழுதும் சிந்தனையில்லாமல் ஒரு அகதியாகவே இருந்தேன். ஈழப் பிரச்சினை தமிழக அரசியலில் உச்சமாய் இருந்தகாலம். இதனிடையே 84இல் தந்தையார் தமிழகத்தில் காலமானார். 85இல் அம்மா காலமானார். என்னோட சேர்த்து எட்டு சகோதர, சகோதரிகள் குடும்பத்தைப் பற்றியே சிந்தனை மேலோங்கிய காலம். எழுத்தைப் பற்றிச் சிந்திக்க நேரமில்லை. எனவே இலக்கியத் தொடர்பு கொள்ளாமல் இருந்தேன்.
அவுஸ்திரேலியாவுக்கு செல்ல நேர்ந்தது ஏன்..? அங்கு புலம்பெயர் இலக்கிய களத்தில் உங்கள் பங்களிப்பு எவ்வாறானது..? அங்கு நீங்கள் எதிர்நோக்கிய சவால்கள் என்ன?
இனக்கலவரத்தால்தான் அவுஸ்திரேலியா சென்றேன். தாய் தந்தையர் மறைவுக்குப் பிறகு எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆகவேதான் அகதியாகப் போனேன். அங்கு மெல்ல மெல்ல நம்பிக்கை பிறக்க ‘தமிழ்க்குரல்’ என்ற போட்டோஸ்டட் மாத இதழை நடத்தினேன். சிறுகதைகள் எழுதினேன். புலம்பெயர்ந்த மண்ணிலிருந்து எழுதிய முதல் சிறுகதை “பிளக் அன் வைட்”. அது வீரகேசரியில் வெளி வந்தது. அதன் பிறகு சிட்னி வாழ் ஈழத்தமிழர்கள் என்னை ஒரு எழுத்தாளனாய் அடையாளம் கண்டார்கள். “அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்” என்ற நாவலுக்கு சாஹித்திய விருது கிடைத்தது. அச் செய்தியறிந்த பலர் அந்த நூல் வேண்டும் என்றார்கள். புதிய பதிப்பு போடப்பட்டது. அதன் வெளியீடு சிட்னியில் நடைபெற்றது.
மண்டபம் நிறைந்த கூட்டம், சிட்னியில் முதல் தமிழ் நூலை வெளியிட்ட பெருமை என்னைச் சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் நூல்களை வெளியிட்டேன். நூல் வெளியீட்டில் சவால்களை எதிர்நோக்கவில்லை. அதற்குக்காரணம் மக்களின் ஆதரவு. ஆனால் என் பெயரிலேயே மலையக நகரான மாத்தளை என்ற பெயர் இருந்ததால் எனது அடையாளம் பலருக்கும் தெரிந்தது. அது எனக்கு எதிராக இருக்கவில்லை.
சிட்னியில் வாழ்கிற தமிழ் மக்களோடு நானும் ஒருவன் என்ற உணர்வில் நான் இருந்ததால் பலரின் ஆதரவும் கிடைத்தது. ஒரு தமிழ் எழுத்தாளனாய் என்னைப் பார்க்கிற பார்வை எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. இருந்தபோதும் சிலர் என் பேச்சுத் தமிழைக் கேட்டு தமிழ்நாட்டில் எவ்விடம் எனக் கேட்டபோது நான் அளித்த பதில் தமிழ்நாட்டில் கண்டிக்குப் பக்கத்தில் மாத்தளை என்றேன். அவர் பதில் பேசவில்லை. பிறகு அவரிடம் எனக்கு யாழ்ப்பாணத் தமிழ், வல்வெட்டித்துறை தமிழ், வண்ணைத் தமிழ், மட்டக்களப்பு தமிழ், கல்ஹின்னை இஸ்லாமியத் தமிழ், கொழும்புத் தமிழ் எல்லாம் பரிச்சயம். உங்களுக்கு உங்கள் தமிழ் மட்டுமே பரிச்சயம் என்றேன். இவையெல்லாம் சவால்கள் அல்ல அறியாமை.
சிட்னி தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவர் என்ற வகையில் புலம்பெயர் இலக்கியத்தில் மலையக இலக்கியத்தின் பங்கு எத்தகையது என நினைக்கிறீர்கள்?
சிட்னி தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் என்ற ரீதியில் மலையக இலக்கியம் அங்கீகரிக்கப்பட்டதால் நான் சங்கத்தின் தலைவரானேன். எந்த இலக்கியமானாலும் அதனைப் பரப்புகிற முயற்சி வேண்டும். ஈழத்து இலக்கியத்தில் மலையக இலக்கியம் ஒரு பிரிவாக இருக்கிறது. ஈழத்தின் பல்வேறு தமிழ்ப் பகுதிகளின் இலக்கியமும் ஈழத்து இலக்கியத்தில் அடக்கம். 1983 க்குப் பிறகு குடிபெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் “புலம்பெயர் இலக்கியமாக” அடையாளம் காணப்பட்டுள்ளது.
200 ஆண்டுகளுக்கு முன் குடிபெயர்ந்த மலையக மக்களின் இலக்கியமும் புலம்பெயர் இலக்கியம்தான். ஆனால் காலப்போக்கில் அது மலையக இலக்கியமாகிவிட்டது. இன்னும் 50 ஆண்டுகளில் புலம்பெயர் இலக்கியம் அந்தந்த நாட்டு இலக்கியங்களாக ஆகக்கூடும். அதற்கு மலையக இலக்கியப் பரிமாணம் உதாரணமாகிறது.
அண்மையில் தமிழ் நாட்டில் மலையக இலக்கிய பண்பாட்டு கலைவடிவங்கள் தொடர்பான ஆய்வு மாநாடு ஒன்றிற்கு நீங்கள் அடித்தளம் இட்டிருந்தீர்கள். அத்தகைய ஒரு சிந்தனை எவ்வாறு தோன்றியது. அத்தகைய மாநாட்டின் பிரதிபலன் எவ்வாறு அமைந்தது?
புதுமைப்பித்தன் ‘துன்பக்கேணி’ என்ற சிறுகதையை எழுதியபோதும் மலையக இலக்கியம் தமிழகத்தில் பரவலாக அறியப்படவில்லை. என்னை சுஜாதா யாழ்ப்பாணத்தில் எங்கே என்று கேட்ட வரலாறு உண்டு. இதற்கு எவரையும் குறைசொல்லிப் பலன் இல்லை. நம்மை நாம் அறிமுகம் செய்ய வேண்டும். அதன் வெளிப்பாடுதான் திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் நடந்த 3 நாள் மலையகக் கருத்தரங்கு. பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு வெற்றிகண்ட கருத்தரங்கு. அதன் எதிரொலி மலையக இலக்கியத் தேடல்கள் ஆய்வு மாணவர்களை எட்டியுள்ளது. இம்மாநாட்டின் பலனாக மலையக எழுத்துக்களை நூலாக்க பதிப்பகங்கள் முன்வந்துள்ளன. பல பல்கலைக்கழகங்கள் மலையகப் படைப்புகளை ஆய்வு செய்ய முன்வந்துள்ளன.
சிறுகதை இலக்கிய துறையில் பிரவேசித்த நீங்கள் ஆய்விலக்கியம் சார்ந்தும் பயண இலக்கியம் சார்ந்தும் பயணிக்க நேர்ந்ததற்கு ஏதும் விஷேட காரணங்கள் உண்டா?
சிறுகதை, நாவல்களை எழுதி வந்த என்னை ம.ப. சோமு என்பவரின் “நமது செல்வம்” என்ற நூல் தாய்மொழி தமிழ் குறித்துச் சிந்திக்க வைத்தது. சங்க இலக்கியங்களில் மறைந்திருக்கும் அறிவியல் கருத்துக்களை தேடித்தேடி படிக்க தொடங்கியபோது எந்தவொரு இலக்கியத்திற்கும் சொந்தக்காரன் தமிழன். பிற மொழியைக் கடன் வாங்கி வாழ்கிறானே என்ற உணர்வு வந்தது.
எனது இலக்கியத் தேடலின் அறுவடையாக உருவானது “வியக்க வைக்கும் தமிழரின் அறிவியல்” நூல் வீரகேசரியில் தொடராக வந்தது. 4,000 பிரதிகளைத் தாண்டி விற்பனையாகிறது. இதற்கு அடுத்தது “திருக்குறள் அறிவியல் அகலவுரை” பிறகு “வியக்க வைக்கும் தமிழர் காதல்” இந்நூல்களை எழுதிய காலங்களில் படைப்பிலக்கியத்தில் தேக்க நிலை உருவானது. அதையிட்டு நான் கவலைப்படவில்லை. என் தாய்மொழியின் ஆழத்தை அதன் சிறப்பை அது காட்டியிருக்கிற அறிவியலை அறிந்து கொள்ளவும் அவற்றை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யவும் கிடைத்த ஒரு வாய்ப்பாக இந்த ஆய்வின் வெளிப்பாட்டைத்தான் கருதி னேன்.
கடல் கடந்த தொன்மங்களைத் தேடிப்போன பயணம். தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், பர்மா ஆகிய நாடுகளுக்கு தமிழ் வர்த்தகர்களால், தமிழ் மன்னர்களால் கொண்டு செல்லப்பட்ட மொழி, பண்பாடு என்பனவற்றைக் கண்டு ஆய்வு செய்து எழுத வேண்டும் என்றுதான் பயணங்களை மேற்கொண்டு பயண நூல்களை எழுதினேன். புலம்பெயர்ந்த தமிழர்களைக் கண்டு எழுதிய நூல்கள் மூன்று. கடல் கடந்த தமிழ் தொன்மங்களைக் கண்டு எழுதிய நூல் ஒன்று. கடைசியாக வந்த “பாலி முதல் மியன்மார் வரை”நூலினை தமிழின் முதல் பயண இலக்கிய முன்னோடி ஏ.கே. செட்டியாருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.
மலையக இலக்கிய பரப்புக்கு வெளியேயும் இலக்கிய படைப்புகளை தந்த நீங்கள் 'கண்டிச்சீமை' நாவல் ஊடாக மீண்டும் மலையக இலக்கிய பக்கம் திரும்பியிருக்கிறீர்கள். இத்தகைய ஒரு நாவலை படைத்ததன் பின்புலம் பற்றி கூறுங்கள்.
சிட்னி வாழ் தமிழர்களின் உரையாடலில் கிடைத்த “கரு”க்களை ஈழத்து யுத்தக்களத்தை வைத்து பல சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். ஆனந்த விகடன் ஜனவரி பொங்கல் இதழில் வந்த எனது “சப்பாத்தும் ஓர் உயிரும்” என்ற சிறுகதை யுத்தத்திற்குப் பிறகு உள்ள ஒரு காட்சியைக் காட்டுகிறது. அவையெல்லாம் வாழும் மக்களுடான உறவில் வந்த இலக்கியம். அதே நேரத்தில் வெள்ளையர்கள் ஆட்சியில் எவ்வாறு தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் அடைந்த துயரம். அவர்களின் வேதனை. வெள்ளையர்களின் இலட்சியத்திற்காக அவர்கள் தந்த உயிர்க்கொடை ஆகியவற்றை நாவலாக எழுத வேண்டும் என்று கடந்த மூன்று ஆண்டுகளாகச் சிந்தித்து, ஆய்வு செய்து எழுதிய நாவல் “கண்டிச் சீமை”. இந்நாவல் நமது சரித்திரத்தை நாமும் அடுத்த தலைமுறை அறியவும் பிற தேச தமிழர்கள் அறியவும் உதவும் என்பதால் நாவலோடு பழைய காலத்துப் படங்கள், மலையக மக்கள் வரலாறு, மலேசிய மலையக வரலாறு என்பன இணைக்கப்பட்டுள்ளன. பொதுவாக குடும்ப வரலாறு, சமூக வரலாறு, இன வரலாறு, எழுதுகிற பழக்கம் தமிழர்களிடையே அருகி வருகிறது. வரலாற்றை மறந்த இனம் வரலாற்றில் வாழாது. 200 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மலையக மக்களுக்கு வரலாறு உண்டு. அதனைக் கொணரவே கதையாக கண்டிச் சீமையை எழுதினேன். இந்நூலின் வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெறவுள்ளது.
எழுத்துலகில் உங்களது எதிர்காலத் திட்டம்?
எதிர்காலத்தில் பல நூல்களை எழுத எண்ணியிருக்கிறேன். நடந்து முடிந்த முள்ளிவாய்க் கால் யுத்தக் கொடுமைகளைச் சித்தரிக்கும் நாவல்ஒன்று எழுதும் உணர்வு உண்டு. கண்டிச் சீமையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிற உத்வேகம் இருக் கிறது. எதை எழுதினாலும் மனிதர்களுக்காக எழுத வேண்டும் என்ற நோக்கே என்னுள் எப்போதும் உண்டு. எழுத்தாளனின் பேனா காலத்தை, வாழ்க்கையைச் சித்தரிக்கும் கண்ணாடி. அதனைச் சரியாகச் செய்வதில்தான் எழுத்தாளனின் வெற்றியி ருக்கிறது. 25 நூல்களை எழுதினாலும், அடுத்த நூல் வருவது முதல் நூல் வரும்போது உள்ள உணர்வே எனக்குள் மேலோங்கி இருக்கிறது.
நமக்குத் தொழில் கவிதை என்றான் பாரதி. எனக்கு எழுத்து மூச்சாக இருக்கிறது. மாத்தளை யில் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்த என்னை
தமிழ் உலகம் அறிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணமே எழுத்தில் காட்டிய உழைப்புத்தான். உழைப்பின் அறுவடை பொருளாதாரத்தைத் தராவிட் டாலும் எழுத்தாளன் என்ற பெயரில் ஒரு சக்தி தெரிகிறது. அதுதான் என்னை எழுத வைக்கிறது.
நன்றி வீரகேசரி சங்கமம்- 17.03.2018
0 comments