மகளிர் அரசியலில் மாற்றமா? ஏமாற்றமா? - ஜீவா சதாசிவம்

March 12, 2018


இன்று சர்வதேச மகளிர் தினம். 'இதுதான் நேரம்' (Time is Now) என்பது 2018ஆம் ஆண்டுக்கான மகளிர் தின தொனிப்பொருள்.  இந்த தருணம் இலங்கைக்கு பொருத்தமாக இருக்கும் என்றதனடிப்படையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் 25% ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மகளிர் அரசியலில் மாற்றமா? ஏமாற்றமா? என்பது பற்றி பேசவேண்டியுள்ளது.

 இலங்கை உலகிலேயே முதலாவது பெண் பிரதமரை பெற்றுக்கொடுத்த ஜனநாயக நாடு என பெயர் பெற்றது. அவர் சிறிமாவோ பண்டாரநாயக்க. அதேபோல உலகிலேயே முதலாவது நிறைவேற்று அதிகாரமிக்க பெண் ஜனாதிபதியையும் பெற்றுத்தந்த நாடு இலங்கையாகும். அவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. அந்த இருவருமே ஒரு குடும்ப உறுப்பினர்கள் என்பதும் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க எனும் அரசியல் ஆளுமையின் உதவியோடு அரசியல் களம் கண்டவர்கள். ஆனாலும், இந்த இருவரும் ஆளுமைமிக்க அரசியல் தலைவிகள் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

இவ்வாறு அரசியல் ரீதியாக பெண்களின் பெயர்கள் முக்கியத்துவம் பெற்ற நாடாக இருந்தபோதும் ஆண்களின் அரசியல் ஆளுமைகளினால் உள்ளீர்க்கப்பட்டே பெண்கள் அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டு வந்த ஒரு கலாசாரமே இருந்தது. சிறிமா, சந்திரிக்கா போல் கணவன் அல்லது தந்தை அல்லது சகோதரன் என உறவு முறை இழப்புகளின் பின்பதாகவே பல பெண்கள் அரசியலுக்குள் வந்தார்கள். காமினி திஸாநாயக்க மறைந்ததும் அவரது மனைவி ஸ்ரீமா திஸாநாயக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வேட்பாளராகவே நிறுத்தப்பட்டமை இதற்கு மோசமான உதாரணம்.


அதேபோல லலித் அத்துலத் முதலி இறந்ததும் ஸ்ரீமணி அத்துலத் முதலி, எம்.எச்.எம். அஷ்ரப் இறந்ததும் பேரியல் அஷ்ரப், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி பொதுச்செயலாளர் காமினி அத்துக்கோரள இறந்ததும் அவரது சகோதரி தலதா அத்துக்கோரள, முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் கொல்லப்பட்டதும் விஜயகலா மகேஸ்வரன், ஜெயராஜ் பெர்ணான்டோ பிள்ளை கொல்லப்பட்டதும் சுதர்ஷினி பெர்ணான்டோபிள்ளை, பாரதலக் ஷ்மன் கொல்லப்பட்டதும் அவரது மகள் ஹிருணிகா என இன்று வரை இந்த கலாசாரம் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

இன்றைய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க கூடியவர்களுள் சுமேதா ஜயசேன, பவித்ரா வன்னியாராச்சி, விஜயகலா மகேஸ்வரன், தலதா அத்துகோரள, ஹிருணிக்கா பிரேமசந்திர, ரோஹினி குமாரி கவிரத்ன, சுதர்ஷினி பெர்ணான்டோபிள்ளை, அனோமா கமகே (இவர்கள் கணவன் மனைவி இருவருமே இப்போது அமைச்சர்கள்) என எட்டுபேர் குடும்ப உறவுமுறை இழப்பினால் அல்லது இருப்பினால் அரசியலுக்குள் பிரவேசித்தவர்களாகவே உள்ளனர். இது மொத்த பெண் உறுப்பினர்களில் 75 சதவீதத்தை விட அதிகமாகும். இதன்மூலம் அதிகளவான பெண்களின் அரசியல் பங்கேற்பது என்பது ஆண்கள் அரசியல் பங்குபற்றியதன் விளைவாக அவர்களின் உறவுமுறை காரணமாகவே இடம்பெற்றது என்ற முடிவுக்கு வர முடியும்.

இந்த நிலையில்தான் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற சட்ட ரீதியான ஏற்பாடு செய்யப்பட்டு தேர்தலும் அதற்கேற்ப இடம்பெற்று இப்போது பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் சிக்கல் நிலைதோன்றியுள்ளதாக சொல்லப்படுகின்றது. சிக்கல் நிலை தோன்றியுள்ளமைக்கு அப்பால் 2015 ஆம் ஆண்டு அமைந்த நல்லாட்சி அல்லது கூட்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அடிப்படை அரசியல் மாற்ற விடயங்களில் இந்த பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவ பங்கேற்பை சட்டரீதியாக உறுதிபடுத்தியமையும் முக்கியமான அம்சமாகும். 

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதுபோல, 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தி சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவியதுபோல பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தியதும் ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையாக முதலில் உணர வேண்டியுள்ளது. 

இதற்கு முன்னதான விகிதாசார விருப்புவாக்கு தேர்தல் முறைமையின் கீழ் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களின்போது குறிப்பிட்ட சதவீதம் இளைஞர்களுக்கு  வாய்ப்பளிக்க வேண்டும் என்ற ஏற்பாடு இருந்தது. இதனைக் கொண்டு வந்தமைக்கான காரணம் தென்னிலங்கையில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகள் அரசியலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமையினாலேயே தோன்றுகின்றன என்ற புரிதலின் அடிப்படையிலானதாகும். 

ஆனாலும், அது வேட்பாளர் பட்டியலில் குறித்த சதவீதமான இளைஞர்கள் உள்வாங்கப்படல் வேண்டும் என இருந்ததே தவிர அவர்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் எனும் கட்டாயம் இருக்கவில்லை. எனவே தேர்தல்களில் களமிறங்குகின்ற கட்சிகள் யாராவது இளவயது இளைஞர் யுவதிகளை வேட்பாளர் பட்டியலில் ஒப்புக்காக சேர்த்துவிடுகின்ற சூழ்நிலையே இருந்தது. இதனைச் சரியாக நிரப்பாத வேட்புமனுக்களே முன்பு அதிகளவில் நிராகரிக்கப்பட்டும் வந்தன.


ஆனால், இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெண்களுக்கான 25 சதவீத வாய்ப்பு என்பது வேட்பாளர் பட்டியலில் மாத்திரமல்ல ஒரு உள்ளூராட்சி அதிகார சபையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கியிருக்கிறது. இன்று பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதில் சிக்கலென கூறி ஒட்டுமொத்தமாக இன்று அடையப் பெற்றிருக்கும் பெண் பிரதிநிதித்துவ பங்கேற்பை புறந்தள்ளி விடமுடியாது.

 நீதியானதும், நியாயமானதுமான தேர்தல்களை கண்காணிக்கும் CAFFE எனப்படும் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கையின்படி 95 சதவீதமான சபைகளில் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியும் எனக் கூறப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது. அதேநேரம் ஏனைய ஐந்து சதவீத சபைகளில் கூட 25 சதவீதம் என்ற எல்லையை தொட முடியவில்லையே தவிர அங்கு பெண்களின் பிரதிநிதித்துவம் அறவே இல்லாமல் இல்லை.

இந்த சிக்கலுக்கு காரணம் இந்த சட்டத்தினை ஐக்கிய தேசிய கட்சி சார்பாக பிரதமர் இந்த முன்மொழிவினை வைத்தபோது மாத்திரம் ஏற்படவில்லை. மாறாக இறுதிநேரத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போது 20 சதவீதத்துக்கு குறைவான வாக்குகளைப்பெற்ற இரண்டு உறுப்பினர்களை மட்டும் வென்ற கட்சியொன்று பெண் உறுப்பினரை நியமிக்க வேண்டும் என கட்டாயமில்லை என்ற சரத்தினை குழுநிலை விவாதத்தில் உட்புகுத்தியது 'மக்கள் விடுதலை முன்னணி'.  இந்த சரத்தினை உள்வாங்கியதன் பின்னரே அவர்கள் சட்டத்துக்கு ஆதவாக வாக்களித்தனர். 

அவர்களின் நிலைப்பாட்டின்படி எல்லா உள்ளூராட்சி மன்றங்களிலும் அவர்கள் பெறப்போகும் வாக்குவீதம் பற்றி கருத்தில்கொண்டு இந்த சரத்தினை முன்வைக்காத பட்சத்தில் தமது கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டியது அதிகளவில் பெண்களாகிவிடும், அது அவர்களின் கட்சி செயற்பாடுகளுக்கு சிரமமாகிவிடும் என்கின்ற அடிப்படையிலேயே கொண்டு வந்திருக்கின்றனர். அது இப்போது அவர்களுக்கு எதிர்பார்த்த பிரதிபலனையும் கொடுத்துள்ளது.

 மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து அதிக பெண் உறுப்பினர்கள் தெரிவு செய்ய வேண்டும் என்ற சட்டக்கடப்பாடு இல்லை. அவர்கள் விரும்பினால் நியமிக்கலாம். அதேபோல அதிகளவான வட்டாரங்களை வென்றெடுத்த தாமரை மொட்டு கட்சியும் தங்களது வட்டாரங்களில் போட்டியிட்ட பெண்வேட்பாளர்களினால் தப்பித்துக்கொண்டது. 

இடையில் மொத்தமாக 20 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்று அதிகளவான விகிதாசார ஆசனங்களை கைப்பற்றிய கட்சிக்கே பெண்களின் பிரதிநிதித்துவத்தை நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பொறியில் மாட்டிக்கொண்ட கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியே உள்ளது. ஏனெனில் நாடு முழுவதிலும் பரவலாக இரண்டாம் இடத்தைப்பெற்ற கட்சி என்ற வகையில் 20 சதவீதத்திக்கு அதிகமான வாக்குகளையும் ஒவ்வொரு சபையிலும் இரண்டுக்கும் மேற்பட்ட ஆசனங்களையும் பெற்றுக்கொண்ட கட்சியாக அதுவே உள்ளது.

எனவே பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க கொண்டுவந்த சட்ட ஏற்பாடுகளைச் செய்யப்போய் இப்போது இரண்டாவதாக வந்த கட்சியில் அதிகளவு பெண் உறுப்பினர்களே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறமாகச் சொன்னால் எதிர்க்கட்சி அரசியலுக்கு பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையாக மாறியுள்ளது. இது ஆரோக்கியமானது அல்ல. காரணம் ஆளும்சக்தி ஆணாதிக்கம் மிக்கதாகவும் எதிர்க்கட்சி வரிசை பெண்உறுப்பினர்களால் நிரம்புவதும் ஆண்- பெண் மனநிலையை அதிகம் தோற்றுவித்து பிரச்சினையை உருவாக்க வல்லது.  

 பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உள்ளூராட்சியில் உறுதிப்படுத்திய ஐக்கிய தேசிய கட்சி தனது கட்சியினூடாகவே அதனைப்பெற்றுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சட்டத்தில் வல்லவர் என எதிர்பார்க்கப்பட்ட பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எப்படி இந்த பொறியில் சிக்கினார் என தெரியவில்லை. 


இந்த சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அவருக்கு ஆலோசனை கூறியவர் 'மைத்திரி' யே என தகவல்கள் கிடைக்கின்றது.  இது ஜனாதிபதி மைத்திரி அல்ல. பிரதமரின் துணைவியாரான மைத்திரி விக்கிரமசிங்க. பேராசிரியரான இவர் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பெண்ணுரிமை செயற்பாட்டாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிவருபவர். சரியான சந்தர்ப்பம் ஒன்றில் தனது கணவரின் ஊடாக பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்துவிட்டார். இறுதிநேரத்தில் அனுரகுமாரவின் அணி போட்ட முடிச்சில் பிரதமர் மாட்டிக்கொண்டார். வீட்டு மைத்திரியிடம் ஆலோசனைப்பெற அப்போது அவருக்கு நேரம் கிடைக்கவில்லை போலும்.

எது எவ்வாறாயினும்  95  சதவீதம் பெண்களின்  பிரதிநிதித்துவத்தை உள்ளூராட்சி சபையில் உறுதிப்படுத்திய புதிய முறையை ஏமாற்றமாகக் கொள்ளாது ஒரு மாற்றமாக கருதுவதே நீண்டகாலமாக போராடி பெற்ற உரிமையை காப்பாற்றிக்கொள்வதற்கான படிமுறையாகும். சட்டங்கள் கொண்டுவரப்படும்போது அல்லது திருத்தங்கள் செய்யும்போது இத்தகைய தவறுகள் இடம்பெறக்கூடிய ஒன்றே.

 19 ஆவது திருத்தத்தை கொண்டுவந்த ஜனாதிபதியே தனது பதவிக்காலம் பற்றி நீதிமன்ற அபிப்பிராயத்தை கோரியதே சட்டத்தில் ஏதேனும் கருத்து மயக்கங்கள் இருந்தால் அதனை சாதகமாக்கலாம் என்ற நம்பிக்கையில்தானே. இதுபோல உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் மயக்கம் இருந்தால் திருத்தத்தைக்கொண்டுவந்து இந்த 25 சதவீத பெண்களின் பங்கேற்பை தொடர்ந்தும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. இது ஏமாற்றம் அல்ல  மாற்றம் என்று முன்னோக்கி பயணிக்க வேண்டியுள்ளது.

நன்றி வீரகேசரி  - 08.03.2018
படங்கள் - நன்றி நமது மலையகம்

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images