'கண்டிச்சீமை' நாவல் வெளியீட்டில் நூல் பற்றி அறிமுக உரை - ஜீவா சதாசிவம்

March 24, 2018


புலம்பெயர் எழுத்துக்கள் எதிர்காலத்தில் தமிழ் இலக்கிய பரப்பில்  முன்னணியில் இருக்குமென மூத்த முற்போக்கு எழுத்தாளர்  எஸ். போ அவர்கள் கூறியது உண்மை என்பதை புலப்படுத்தும் வகையில்,  புலம்பெயர் எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக சிறப்பான படைப்புக்களை தந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறான படைப்புக்களை தந்து கொண்டிருப் பவர்களில் மாத்தளை சோமுவும் இங்கு குறிப்பிடத்தக்கவர்.

எண்பதுகளில் மலையகத்தில் உருவான எழுத்தாளர்களுள் மாத்தளை சோமு முக்கியமானவர்.  சோமசுந்தரம் எனும் தனது இயற்பெயரை மாத்தளை சோமு எனும் மலையக மண்வாசனையுடன் இணைத்துக்கொண்டு இன்று அவுஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வாழுகின்றார். 1983இல் மாத்தளை பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்துடன் இந்தியாவுக்கு சென்ற மாத்தளை சோமு அங்கு தமிழ்நாட்டு இலக்கியவாதிகளுடன் கொண்டிருந்த தொடர்பு அவர் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. 

இந்த தொடர் உறவே 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத முதல் வாரத்தில்   அவரால் மலையக இலக்கிய ஆய்வரங்கம் ஒன்றை தமிழ்நாட்டில் அதுவும்  இந்திய மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் திண்டுக்கல், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில்  நடாத்துவதற்கு இயலுமானதாக இருந்திருக்கின்றது என்றவகையில், எழுத்தாளர் மாத்தளை சோமுவின் மலையக உணர்வு போற்றுதற்கரியது. 

அங்கு நடைபெற்ற மலையக இலக்கிய ஆய்வரங்கத்தில் மலையகத்தைச் சேர்ந்தவள் என்ற வகையில் எனக்கும் அந்த ஆய்வரங்கத்தில் கட்டுரையொன்றை சமர்ப்பித்து உரையாற்றுவதற்கான வாய்ப்பொன்றையும் தந்திருந்தார். தமிழ் இலக்கிய உலகில் மிகவும் பரிச்சியமான மாத்தளை சோமுவை நான்  இந்த ஆய்வரங்கத்திற்கு சென்றிருந்தபோதே  நேரில் சந்தித்தேன். 

மலையகத்தை மாற்ற வேண்டும் என்று வெறுமனே பேச்சில் மாத்திரம் வெளிப்படுத்துபவர்கள் மத்தியில், மாத்தளை சோமு அவர்கள் சற்று வித்தியாசமானவர், மலையகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர் என அன்றைய கருத்தரங்கின் போது அறிந்துக்கொள்ளக்கூடியது. அவ்வாறான கருத்தரங்கு ஒன்றின் மூலம் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துச் சென்ற மலையக உறவுகளையும் அக்கருத்தரங்கின் ஊடாக ஒன்றிணைத்திருந்தார். 

மலையக விடயங்களும் தமிழ்நாட்டில் பேசுபொருளானது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் அதேவேளை அதற்கு பிரதியுபகாரமாகவே இன்றைய இந்த மலையக நாவல் வெளியீட்டையும் அக்கறையுடன் நண்பர்கள் வட்டத்தின் ஊடாக செய்வதற்கு எண்ணியது. 

மாத்தளை சோமு அவர்கள் மலையகத்தின் மீது வைத்துள்ள  உணர்வுகள் எந்தளவிற்கு உண்மையானது என இன்று வெளியிடப்படவுள்ள கண்டிச்சீமை எனும் இந்நாவலை வாசித்து புரிந்துக்கொண்டேன்.   இந்த நாவல் அவரது இலக்கிய முயற்சிகளின் சிகரமாக இருக்கின்றது என்று குறிப்பிடலாம். இந்நாவலுக்காக அவர் கடுமையாக உழைத்திருக்கின்றார் என்பதை இந்நாவலில் உள்ள கதையோட்டங்கள், கதாப்பாத்திரங்கள் ஊடாக அறிந்துக்கொள்ளலாம். 

சிறுகதை, நாவல், பயண இலக்கியம், விமர்னசம் என பல துறைகளில் கால் பதித்துள்ள எழுத்தாளர் மாத்தளை சோமு  நூல்வெளியீட்டில் இன்று வெள்ளிவிழா காண்கின்றார். கண்டிச்சீமை அவரது 25 ஆவது நூல்.  சமகாலத்தில் முன்னணி எழுத்தாளராக நோக்கப்படும் இவர் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த நிலையில் தனது எழுத்துப்பணியை சமூக  நோக்கோடு ஆழமாகச் செய்து வருகின்றார். 

இலங்கைத் தீவின் மலையகம் என்கின்ற பெருநிலப்பரப்பில், ஏறத்தாழ 190 ஆண்டுகள் செறிந்து வாழ்ந்து சாதனை படைத்துள்ள மலையக மக்களின் வரலாற்றைப் பேசுகின்ற நாவல் இது. ‘  

சிறுகதை, குறுநாவல், நாவல் என்று பத்துக்கு மேற்பட்ட தொகுதிகள் மூலம் புனைவுகளை தமிழிலக்கிய உலகிற்களித்துள்ள மாத்தளை சோமு அவர்களுக்கு புனைவு சார்ந்த எழுத்து அவருக்கு கை வந்ததோர் கலை. இது அவருடைய 5ஆவது நாவல் என்பது குறிப்பிடத்தக்கது. 

புனைவினூடாக இந்த மலையக மக்களின் வரலாற்றைப் பதிவு செய்யும் பணிகள் ஏற்கனவே நடந்திருந்தாலும்   இந்த மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் மலையக இலக்கியத்தின் வகி பாகம் மகத்தானது.  

நன்றி வீரகேசரி சங்கமம்
24.03.2018
உலகின் எங்கெங்கோ இருந்தெல்லாம் தன் படைப்புக்களைத் தொடங் கினாலும் பெருந்தோட்டத்தின் மரங்களினூடாகவும், லயங்களுக்குள்ளாகவும் அவை ஓடி வந்து நிலைபெறுவதை, நான் மலைநாட்டான் மாத்தளைக்காரன் என்னும் சோமுவின் மனத் தெளிவை மிகத்துல்லியமாகவே இந்த நாவல் எடுத்து காட்டுகின்றது. 

1974இல் சென்னையில் நடந்த ஓர் இலக்கிய கூட்டத்தில், இலங்கையின் வட, கிழக்கு இலக்கியம் பற்றி, மலேசிய இலக்கியம் பற்றியெல்லாம் பேசியவர்கள் 150 ஆண்டுகளுக்கு மேலாகத் தம் உழைப்பால், வியர்வையால், ரத்தத்தால் இலங்கை நாட்டைக் கட்டி எழுப்பிய மலையக மக்கள் பற்றி, அவர் தம் இலக்கியம் பற்றி ஒரு சொல்லேனும் சொல்லாத ஆதங்கம் ஆத்திரமாகக் கிளம்ப உடனடியாக நூல் வெளியிடும் பணியில் இறங்கினார் மாத்தளை சோமு.

பல நாட்களின் முயற்சியினால் எழுதப்பட்ட இந்த கண்டிச்சீமை எனும் இந்நாவல் 2017ஆம் ஆண்டே முழுமைப்பெற்று  இன்று நூலுருவாகியுள்ளது.
 400 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை 1000 ரூபா. இந்நூலின் விலை ஆயிரம் ரூபாவாக இருந்தாலும் அதில் உள்ள படைப்புக்கள் மிகவும் கணதியாணவையே.

 நாவலின் களமாக இலங்கை மட்டுமன்றி மலாயாவும் வருகிறது. மலையக இலக்கியம் என்னும் ஆவலுடனும், அர்ப்பணிப்புடனும், மனித நேயத்துடனும் செயற்படும் மாத்தளை சோமு அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, எழுத்துலகில் சாதனைப் படைக்கவேண்டும் என வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை வாய்ப்புக்கு நன்றி கூறி  விடைபெறுகின்றேன் 
நன்றி வணக்கம் 

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images