தமிழ் இலக்கிய சூழலில் பேசு பொருளாக 'புலம்பெயர்' இலக்கியம் - ஜீவா சதாசிவம்

July 18, 2018


எழுத்தாளர்களான திருமதி இராணி ஸ்ரீதரன்,  வி.ஜீவகுமாரன்,  தி.ஞானசேகரம்
ஆகியேோருடன் பேராசிரியர் மகேஸ்வரன் (மத்தியில்)
யாழ்ப்பாணம், சங்கானையை பிறப்பிடமாகக் கொண்ட  புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளரும்   டென்மார்க் நகரசபை ஒன்றில் புவியியல் சார்ந்த கணினிப் பகுதியின் முழுநேரப் பொறுப்பாளரும்   டென்மார்க் அரச நூலகத்தின் தமிழ்ப் பகுதி பொறுப்பாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும்  கடமையாற் றுபவருமான  வி.ஜீவகுமாரனின்   3  நூல்களின் அறிமுக விழாவும் கலந்துரை யாடலும் கடந்த  திங்கட்கிழமை   கொழும்பு தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் பேராசிரியர் வ.மகேஸ்வரன் தலைமையில்  இடம்பெற்றது.  

இந்நிகழ்வில்,   "குதிரை வாகனம்", "நிர்வாண மனிதர்கள்", "புலம்பெயர் தமிழ்ச் சிறுகதைகளின் நோக்கும் போக்கும்" ஆகிய நூல்களின் அறிமுகமும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

நிழ்வுக்குத்  தலைமை வகித்து உரையாற்றிய பேராசிரியர் மகேஸ்வரன், இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் அதிகமான பேசுபொருளாக புலம்பெயர் இலக்கியம் என்னும் சொல்லாடல் அமைகின்றது. தமிழ் இலக்கிய சிந்தனையில் இப்போதிருக்கின்ற ஒரு சொல் புலம்பெயர் இலக்கியம்.  புலம்பெயர் இலக்கியம் பலதரப்பட்டதாக இருந்தாலும் தன்னுடைய பார்வையில் எழுத்தாளர் வீ.ஜீவகுமாரன் எழுதியிருக்கும் கருத்துக்கள் காலத்துக்குத் தேவையானதொன்றாக   அமைகின்றது என்றார்.

"குதிரைவாகனம்" எனும் நாவல் பற்றி உரையாற்றிய  "ஞானம்" இலக்கிய சஞ்சிகை ஆசிரியர் - கலாபூஷணம் தி.ஞானசேகரன், ஈழத்தமிழரின் அரை நூற்றாண்டுகால சமூக மாற்றத்தைப் பதிவு செய்யும் வரலாற்று ஆவணம் - "குதிரைவாகனம்" என்றார்.  நாவல் பற்றிய அவரது கருத்து நீண்ட உரையாக இருந்தமையால் இதன் சுருக்கக் குறிப்பு பின்வருமாறு அமைகின்றது.

 "குதிரைவாகனம்" என்ற நாவலைப்படைத்த வி.ஜீவகுமாரன் ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1980களில் புலம்பெயர்ந்து சென்று டென்மார்க் நாட்டில் வாழ்பவர். தமிழில் புலம்பெயர் இலக்கியம் என்பது 1980களின் நடுப்பகுதியில் இனப்பிரச்சினை காரணமாக பிறநாடுகளை நோக்கிப் புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கிய முயற்சிகளைக் குறிக்கும் ஓர் சொற்றொடராகும். கால ஓட்டத்தில் புலம்பெயர் தமிழரின் இரண்டாம் தலைமுறையினர் மேலைத்தேயச் சமூகச் சிந்தனைகளினூடாக வாழ்க்கையை நோக்குகின்ற தன்மை உருவாகத் தொடங்கியது. இவ்வகையில் பெண்ணியம், சாதியம் ஆகிய உணர்வுத்தளங்கள் சார்ந்த வெளிப்பாடுகள் இலக்கியங்களிலும் பதிவாகத் தொடங்கின.

அந்தவகையில்,  ஜீவகுமாரன் எழுதிய "குதிரை வாகனம்"    நாவல் பற்றி பின்வருமாறு தனது கருத்தைக் கூறுகின்றார்.   

டென்மார்க் நாட்டில், அரச மருத்துவ மனையில் 28 நாட்களாக மரணப்படுக்கையிலிருக்கும் 58 வயது நிரம்பிய ஒருவரது நனவிடை தோய்தலாகவும் சமகால நிகழ்வுகளின் பதிவாகவும் இந்நாவல் வார்க்கப்பட்டுள்ளது.

கோலம் ஒன்றைப் போடுவதற்குமுன் சில புள்ளிகளிட்டு பின்பு அப்புள்ளிகளைத் தொடுத்து கோலமாக்குவது போன்று இந் நாவலின் முதல் அத்தியாயத்திலேயே கதையமைப்புக்கான முக்கியமான சில புள்ளிகளை இட்டுவிடுகிறார் நாவலாசிரியர் ஜீவகுமாரன்.

 இந் நாவல் இலங்கை, புலம்பெயர் நாடு ஆகியவற்றின் பகைப்புலங்களில் இயங்கப் போகிறது என்பதை வாசகனுக்கு முன்மொழிவாக இப் புள்ளிகள் கட்டியம் கூறுகின்றன. நாவலின் வளரச்சி நிலையில் இந்த இருபுலங்களில் இடம்பெறும் நிகழ்வுக்கோலங்கள் முகிழ்வுகொள்கின்றன.

ஒரு காலகட்டத்தில் யாழ்ப்பாண மக்களின் எண்ணங்கள், சிந்தனைகள், கனவுகள், கவலைகள், நம்பிக்கைகள், சந்தோஷங்கள், சடங்குகள், சமூக இயக்கம் பற்றிய அவர்களது பார்வை, அவர்கள் வாழ்ந்த சூழல் இவையாவும் எப்படி இருந்தனவோ அப்படியே இந் நாவலில் பதிவு செய்துள்ளார் ஜீவகுமாரன்  போன்ற பல கருத்துக்களை முன்வைத்தார்.

எழுத்தாளர் திருமதி ராணி ஸ்ரீதரன் "நிர்வாண மனிதர்கள்" என்னும் சிறுகதைத் தொகுதி பற்றிய கருத்தை இவ்வாறு முன்வைத்தார்.  ஜீவகுமாரன் எழுதியுள்ள இந்நூலிலுள்ள சிறுகதைகளில் அடிமட்டத்திலிருக்கும் கூலித் தொழிலாளி  முதல் உயர் பதவி வகிப்பவர்களையும் பாத்திரமாக உருவாக்கியுள்ளார். போரின் போது மகனை இழந்த பெண், அரவாணி உட்பட பல கதாபாத்திரங்களைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது இவரது கதைகளில். இந்நூலில் 20 வரையிலான சிறுகதைகள் இருக்கின்றன.

இக்கதைகளின் ஓட்டங்கள் கதையை வாசிக்கும் போது நமது கைகளைப் பிடித்துக் கொண்டு செல்வதாக கதையை அமைத்துள்ளார் நூலாசிரியர். கதையையும் களத்தையும் கவனமாகவே புனைந்துள்ளார் ஆசிரியர். அவர் எங்கு வாழ்ந்தாலும் அவரது அனுபவத்தை  எவ்வாறு கதைக்களத்தில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது என்று குறிப்பிட்ட அவர் ஒவ்வொரு கதையின் கருத்தையும் மிகவும் விளக்கமாகக் குறிப்பிட்டார். உண்மையில் அவரது கருத்துக்கள் படம் பார்ப்பதைப்போல அமைந்திருந்தது.

இந்நிகழ்வுக்கு வருகை தந்தவர்கள், இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி கூறி தனதுரையில் நூலாசிரியர் ஜீவகுமாரன் இவ்வாறு குறிப்பிட்டார். புலம்பெயர்ந்தோர் இலக்கியம், குடிபுகுந்தோர் இலக்கியம், புகலிட இலக்கியம், இடம் பெயர்ந்தோர் இலக்கியம் என்ற சொல்லாடல்களும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அல்லது புகலிட எழுத்தாளர்கள் என்ற சொற்பிரயோகங்கள் பரவலாக இன்று இலக்கியப் பரப்பில் காணப்படுகின்றன.  இலங்கையில் போருக்குப் பின்பும் போரின் போதும் ஏற்பட்ட புலம்பெயர்வுகளின் பின்பு தமிழ் இலக்கியப்பரப்பு விரிவடைந்தது.

Diaspora literature, Expatriate literature  என்ற  இரு ஆங்கில சொற்பதங்களுக்கு இணைவாக தமிழ்ச் சொற்களைக் காணும் முயற்சியில் இந்த சொற்றொடர்களும் இனம் காணப்பட்டு தாமாகவே பாவனைக்கு வந்தன. பாவனைக்கு வந்த சொற்றொடர்களை பயன்பாட்டில் வைத்துக் கொண்டே இலக்கிய உலகம் நகர்ந்து கொண்டு இருக்கின்றது.

ஒரு தனிமனிதன் அகதி அந்தஸ்துப் பெற்று வாழப்புகுந்த நாட்டில் தன் அடையாளத்தையும் தன் குடியுரிமையையும் இழக்கும் நிலையிலும் கல்வி அல்லது தொழில் காரணமாக ஒரு நாட்டினுள் இடம்பெயர்ந்த அல்லது குடிபுகுந்த நிலையில் தன் அடையாளத்தையும் தன் குடியுரிமையையும் இழந்து அந் நாட்டின் குடியுரிமையைப் பெற்ற நிலையிலுள்ள மக்களை புலம் பெயர்ந்த மக்கள் என வரையறுத்துக் கொள்ள முடியும். இவர்களின் படைப்புகள் புலம்பெயர் இலக்கியம் என்ற பெயரைப் பெறுகின்றன.

இந்த கோட்பாட்டுக்கு நான் வருவதற்கு காரணமாக அமைந்த டென்மார்க்கின் பல அரசியல் சட்டதிட்ட நிகழ்வுகளையும் கலை, கலாசார வாழ்வியல்புகளையும் பின்னிணைப்பாகவும் இணைத்துள்ளேன். தமிழ் இலக்கியத்தை இந்திய தமிழ் இலக்கியம், ஈழத்து தமிழ் இலக்கியம், புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்ற 3 பிரிவுகளில் அடக்கி எந்த எந்த நாடுகளுக்கு மக்கள் புலம்பெயர்ந்து அல்லது புகலிடம் தேடி அல்லது இடம்பெயர்ந்து சென்று அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்று வாழுகின்றார்களோ அந்த அந்த நாட்டின் பெயரால் அவர்களின் புலம்பெயர் இலக்கியம் இனம் காணப்படுதல் சாலச்சிறந்தது என்று குறிப்பிட்டார்.

மேற்படி இருவரின் உரைகளும் விரிவாகப்பதிவு செய்யப்பட்டள. உரைகளைத் தொடர்ந்து கலந்துரையாடல்களும் இடம்பெற்று இராப்போசனத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

நன்றி வீரகேசரி - சங்கமம்  (14.07.2018)


You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images