எழுத்துத் துறையில் நான்கு தசாப்த இலக்கிய ஆளுமை உடனான உரையாடல் : ஜீவா சதாசிவம்

July 22, 2018நான்கு தசாப்த காலமாக இலக்கியத்துறையில் ஈடுபட்டு வரும் ஒரு அமைதியான பெண் ஆளுமை 'மண்டூர் அசோகா' என சகலராலும் அறியப்பட்டவர் அசோகாம்பிகை யோகராஜா.  மட்டக்களப்பு, மண்டூரைச் சேர்ந்த இவர்,  தனது ஆரம்ப கல்வியை மண்டூர் அரசினர் தமிழ் பெண்கள் பாடசாலையிலும் உயர்தர கல்வியை மட்டு. பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் கற்றார். 1977 இல் ஆசிரியர் சேவையில் இணைந்து மண்டூர் மகா வித்தியாலயத்தில் பணி தொடங்கினார். மட்டு. ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிற்சி பெற்ற இவர், தனது பிரதேசத்தில் பல பாடசாலைகளில் பணியாற்றி இறுதியாக மட்டு.சிவானந்தா வித்தியாலயத்தில் பணியாற்றி 2009 இல் ஓய்வு பெற்றார். 

1970களில் எழுதத் தொடங்கிய இவர் 'மண்டூர் அசோகா' என்ற புனைபெயரால் நன்கறியப்படுகிறார். ரேவதி, செந்தில் பிரியா ஆகிய புனைபெயர்களிலும் எழுதி வந்துள்ளார். வீரகேசரி, தினகரன், தினபதி, மித்திரன், ஜோதி, தென்றல், தாய்நாடு, சுடர், தினக்குரல், ஞானம், இருக்கிறம் போன்ற பல்வேறு இதழ்களில் எழுதியுள்ளார். இலங்கை வானொலிக்கு ஆக்கங்கள் எழுதியுள்ள இவர் வானொலி மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கு  பல பாடல்களை எழுதியுள்ளார்.

கொன்றைப்பூக்கள் (சிறுகதைகள், 1976), சிறகொடிந்த பறவைகள் (சிறுகதைகள், 1993), உறவைத்தேடி (சிறுகதைகள், 2002), பாதை மாறிய பயணங்கள் (நாவல், 1992) போன்றவை இவரது நூல்கள். பல விருதுகள், கௌரவங்களைப் பெற்ற இவர், 2001 இல் தஞ்சாவூரில் உதய கீதம் இலக்கிய பொதுநல இயக்கத்தினர் நடத்திய உலக கவிஞர் விழாவில் 'தமிழருவி' பட்டம் வழங்கப்பட்டது. அத்துடன், கண்டியில் கடந்தவாரம் கண்டியில் இடம்பெற்ற விழாவொன்றில் 'ரூபராணி ஜோஸப்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

 எழுத்தாளர், கவிஞர், நூலாசிரியர், சமூக பணியாளர், மேடை  நாடக நடிகை, இயக்குநர்,  பேச்சாளர், தொழிற்சங்கவாதி, என பல பரிமாணங்களை  கொண்ட பல்துறை ஆளுமையே  அமரர் கலாபூஷணம்  ரூபராணி ஜோஸப்.  

அவரது பெயரிலான விருதைப் பெற்றுக்கொண்ட மண்டூர் அசோக்காவை  விருதுவிழாவில், சந்தித்து உரையாடிய போது அவர்  எம்முடன்   பகிர்ந்து கொண்ட விடயங்கள் எமது வாசகர்களுக்காக.....கிழக்கிலங்கை இலக்கிய ஆளுமையாக இருக்கும் நீங்கள்  மத்திய மாகாணத்தில் கலாபூஷணம் 'ரூபராணி ஜோஸப்'  விருதினை கடந்த வாரம் பெற்றுள்ளீர்கள்.இது பற்றி எம்முடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ஆம்! கிழக்கிலங்கையில் பிறந்து வளர்ந்து  மத்திய  மாகாணத்தை வாழ்விடமாக கொண்டு  பல துறைகளில் முத்திரை  பதித்தவர் திருமதி  ரூபராணி ஜோஸப். அவர் நினைவாக  அவரது குடும்பத்தினரும் கண்டி  மக்களின்  கலை இலக்கிய  ஒன்றியமும் இணைந்து வழங்கிய  இந்த விருதினை பெற்றுக்கொண்டதில்  நான் மகிழ்ச்சியடைகின்றேன். மத்திய மாகாணத்துக்கு நான் புதியவன். அங்குள்ள இலக்கிய வாதிகள்  பலரையும் நான்   அறிந்திருந்தாலும் அவர்களின்  கணிப்புக்குள்  நானும் இருக்கிறேன் என்ற  செய்தி  ஒரு நம்பிக்கையையும்   மன நிறைவையும்  தந்தது. 
விருதை  பெறுகிறார்...

உங்கள் எழுத்துலக பிரவேசம்? அதனால் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி சுருக்க மாக சொல்வீர்களா? 
சிறுவயதிலேற்பட்ட வாசிப்பு பழக்கம் தந்த  உந்துதலாலேயே என்னுள்  எழுத்தார்வம் ஏற்பட்டதென  நினைக்கிறேன்.  என் எழுத்து முயற்சிகளை அறிந்து என்னை ஊக்குவித்த   எனது பாடசாலை ஆசிரியர்கள், தடைக்கல் போடாமல்  என்னை என்  வழியிலேயே   விட்டு  வைத்த என் பெற்றோர்,  சகோதரர்கள் ஆகியோரின் அனுசரணை நான்  எழுதுவதற்கு   உறுதுணையாய் அமைந்தன. 

அனுபவங்கள் என்று எதை சொல்ல?  ஆரம்பத்தில்  என் அதிவேகமான  எழுத்து  முயற்சிகளைக்கண்டு பொறாமைப்பட்டவர்கள். இவற்றையெல்லாம்  நானே  எழுதவில்லை. எனக்காக  யாரோ   எழுதுகிறார்கள் என்று எனது  முயற்சிகளுக்கு முற்றுப் புள்ளி  வைக்க முயன்றதை சொல்லவா, என்  எழுத்தின் மீது   நம்பிக்கையும் நல் அபிப்பிராயமும்  என்னை பாராட்டி யதையும்  பெருமைப்படுத்தியதையும்  சொல்லவா?  என் அனுபவங்கள்   பல்வேறு  வகைப்பட்டவை.  கல்லெறியும், சொல்லெறியும்  ஒன்று தானே,  அதேவேளை  அழகிய   வாச  மலர்களின்  அர்ச்சனையும்  சேர்ந்தே  வளர்ந்தேன். 

இலக்கிய ஆளுமையாக இருக்கும் நீங்கள் குடும்பத்தையும் கவனித்து வருகின்றீர்கள். இவை இரண்டையும் எப்படி உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி   ்கொண்டீர்கள்?

ஒரு பெண்ணுக்கு  தன் குடும்பத்தை  கவனிப்பது  என்பது சுமையாக தெரிவதில்லை. அதிலும் ஒரு சுவையான  மனத்திருப்தியே  கிடைக்கிறது.  நான் ஆசிரியையாக  தொழில் செய்ததால் எனக்கு போதுமான   ஓய்வு  இருந்தது.  இரண்டு  பெண்  குழந்தைகள். அவர்களும் கணவரும்  புரிந்துணர்வுடன் நடந்து  கொண்டதாலும் எனது எழுத்து  முயற்சியை  ஊக்கப்படுத்தியதாலும் எழுதுவதும் குடும்பத்தை கவனிப்பதும்   சிரமமாக  தெரியவில்லை. 

பெண்கள் பெரும்பாலும் எழுத்துல கில் நிலைத்திருப்பதற்கு தடைகள் பல. இவ்வாறான நிலையில் உங்களை எப்படி தக்க வைத்து கொண் டீர்கள் ?
என்னை நான் எழுத்துலகில்  தக்க வைத்து கொண்டதற்கு  முதற் காரணம்  எழுத்தின்  மீது  எனக்கிருந்த தீராத மோகம், மன உறுதி.  இரண்டாவது  காரணம்   எனது குடும்பத்தாரின்  ஒத்துழைப்பு. வீட்டில்  அனுசரணை  இல்லையென்றால் என்னால் எழுதியிருக்க முடியாது. 

பெண்கள் எழுத்துலகில் நிலைத்திருப்பதற்கான  தடைகள்  என்று  நீங்கள் குறிப்பிடுவதில்  இந்த  குடும்ப  அனுசரணையில்லை. முதலிடம் பெறுகிறதென்பது  என் எண்ணம். சுடர் விளக்கிற்கும்  தூண்டுகோல்  வேண்டுமல்லவா?  எழுதிய எண்ணத்தை கிழிக்க போகிறாய்? என்று  யாராவது கேட்கும் ஒரு கேள்வி கூட சில பெண்களை எழுத்துலகில் இருந்து ஒதுக்கி விடும்.  சில குடும்பங்களில்  பெண்கள் மீது திணிக்கப்படும்  அளவுக்கதிகமான  வேலைப்பழுவும் அவர்களை  எழுத்துலகிலிருந்து  விலக்கி  விடலாம்.  இவற்றை மீறி பெண்கள் எழுத்துலகில்  நிலைத்திருக்க அவர்களுக்கு தன்னம்பிக்கையும் மனத்துணிவும் தேவைப்படுகிறது. 

எதிர்கால சந்ததியினர் குறிப்பாக பெண்கள் எழுத்துலகில் பிரவேசிப்பதில் மிகவும் அரிதாகவே இருக்கின்றனர். இந் நிலையில் எதிர்காலத்தில் பெண் படைப்பாளிகள் இல்லாமல் போகும்  நிலை ஏற்படலாம் அல்லவா?
எதிர்கால சந்ததியினரின்  கவனத்தை திசை திருப்பும்  பல்வேறு  ஊடகங்களும், சாதனங்களும்  மலிந்து விட்டதால்  எழுத்தின் மீது   கவனம் செலுத்துவது குறைந்து வருகிறது என்று தான்  சொல்ல வேண்டும். போதுமான  ஓய்வு தான்  சிந்திப்பதற்கான  வழிகளை  திறந்து விடும். இன்றைய தலைமுறையினருக்கு சிந்திப்பதற்கோ, சமூகத்தை  உற்று நோக்குவதற்கோ, வாசிப்பதற்கோ நேரம் கிடைப்பதில்லை. இந்த நிலையில்  எழுத்தார்வம் எப்படி  வரும்?  ஆனாலும்  இளைய   தலைமுறையினரில்   பெண் படைப்பாளிகள்  முற்று முழுதாக   இல்லாமற் போய் விடவில்லை.  காத்திரமாக சிந்தித்து  எழுதும் சிலராவது  எப்போதும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். 

சிறுகதைகள்,  நாவல்கள், கவிதைகள் என பல துறைகளில் எழுதியுள் ளீர்கள். இவற்றில் நீங்கள் அதிகமாக விரும்பும் துறை பற்றி குறிப்பிட முடியுமா?

நான்  சிறுகதைகள் எழுதுவதில்  காட்டிய  ஆர்வத்தை  நாவல் எழுதுவதில்  காண்பிக்கவில்லை. கூட்டாக  இரு நாவல்களும் தனித்து  ஒரு நாவலும் எழுதியிருக்கிறேன்.  இந்த இரண்டு துறைகளையும் விட கவிதை  எழுதுவதற்கு தான்  எனக்கு கூடுதல் விருப்பம் இருந்தது. ஆரம்ப  காலத்தில்  என்போன்றே  எழுத்தாளர்களுக்கு  களம் அமைத்து தந்த  இலங்கை வானொலியில் எனது  மெல்லிசை பாடலோ, கவிதையோ ஒலிக்காத  நாட்கள் குறைவு என்றே கூற வேண்டும்.  அந்த  அளவுக்கு  நான் கவிதை துறையை நேசித்தேன். எழுதினேன். 

எழுத்துலகிற்கு தற்போது நீங்கள் வழங்கும் பங்களிப்பு பற்றி எம்முடன் பகிர்ந்து  கொள்ள முடியுமா?
ஒரு சங்கடமான கேள்வி இது.  ஆரம்ப  காலத்தில் எவ்வளவு  தீவிரமாக எழுதினேனோ அந்த  தீவிரம்  குறைந்து அண்மைக்காலமாக  எதுவுமே   எழுத முடியாத  ஒரு சூழ்நிலை அமைந்து விட்டது. ஆயினும்  மனதில் ஒரு கொந்தளிப்போடு   கூடிய  தாகம்  இருந்து  கொண்டே இருக்கிறது.  கடந்துபோன  நாட்கள்  அதிகம். இருப்பவை  சொற்பம். இந்த சொற்ப  நாட்களுக்குள்  என தாகத்தை   அடக்கி விட வேண்டும் என நினைக்கிறேன். காலம் தான் அதற்கு வழி அமைத்து தர வேண்டும். 

நான் நினைக்கின்றேன் சுமார் நான்கு தசாப்தத்திற்கு மேலாக எழுத்து துறையில் இருக்கும் நீங்கள் மிக குறைந்தளவிலான நூல்களையே இதுவரை வெளியிட்டுள்ளீர்கள். ஆனால், இப்போதுள்ள எழுத்தாளர்கள் இரு மாதத்திற்கு ஒரு முறை என்றடிப்படையில் நூல்களை வெளியிடுகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
நான்கு  தசாப்தத்துக்கு மேலாக   எழுதி வருகின்றேன். நூல்கள் வெளியிட வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்தால்  நானும் வருடமொரு நூலாவது வெளியிட்டிருக்கலாம். பெயருக்கு எதையாவது  எழுதி விட்டு  நூல்களாக   வெளியிடுவதில்  யாருக்கு பயன் கிடைக்க போகிறது?  நாம் கிறுக்கி வைக்கும் எல்லாவற்றையும்  வாசிப்பதற்கு  யார் முன்வர போகிறார்கள்?  நம் எழுத்து நல்ல வாசகரை திருப்திப்படுத்த வேண்டும். அப்போதுதான் அந்த எழுத்திற்கும் ஒரு அங்கீகாரம்  கிடைக்கும். அப்படியான நல்ல கதைகள் எழுதினால் அவற்றை  நூலாக  வெளியிடலாம்.

நூல்களை வெளியிட வேண்டும் என்பதற்காகவே சிலர் எழுதுவது   போல தெரிகிறது. அது அவரவர் பண வசதியையும். மனத் துணிவையும் பொறுத்த விடயம். எப்படியோ  எமது நாட்டிலும் இலக்கியம் வளர்வது  வரவேற்கத் தக்க விடயம் தானே. 

எழுத்துலகில் உங்களால் மறக்க முடி யாது என்று நினைப்பது?
எனது எழுத்துலக  வாழ்வில் மறக்க முடியாத  சம்பவங்கள் பல நடந்திருந்தாலும் எனது சிறுகதைகள் அடங்கிய முதலாவது சிறுகதை தொகுதி வெளியீட்டு நிகழ்வே பெறுமதி  மிக்க ஒரு சம்பவமாக  மனதில் பதிந்திருக்கின்றது.  சின்னஞ்சிறு  கிராமத்தில்  வாழ்ந்த  எனது சிறுகதைகள் தலைநகரில்  பெறுமதி மிக்க இலக்கிய வாதிகளின் விமர்சனங்கள்,  பாராட் டுக்களுக்கு  மத்தியில்  வெளியிட்டு வைக்கப் பட்டது மறக்க முடியாத  அனுபவம் அல்லவா? 

இதுவரை  பெற்ற விருதுகள் பற்றி கூற முடியுமா? இந்தியாவில் விருதுக்காக உங்களை தேர்வு செய்த போதும் அதனை பெற முடியாத சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டது. இது உங்களுக்கு கவலையளிப்பதாக இல்லையா?

'கொன்றைப் பூக்கள்'  என்ற எனது முதலாவது  சிறுகதை தொகுதிக்கு அரச சாஹித்திய  விருது கிடைத்தது.  அதனை தொடர்ந்து ‘பாதை மாறிய பயணங்கள்’ நாவலுக்கு   வடகிழக்கு  மாகாண அமைச்சின் விருது கிடைத் தது.  மட்டக்களப்பு  மண்முனை  வடக்கு பிரதேச செயலகம்  நடத்திய  முத்தமிழ் விழாவில்  ‘தேகைக்  கலைச் சுடர்’  விருது, கலாசார  அலுவல்கள்  திணைக்களமும்   மட்டு.மாவட்ட கலாசார பேரவையும் இணைந்து நடத் திய கலை விழாவின் போது இலக்கிய மணி விருது கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது கலா பூஷணம் விருது என்பவற்றுடன் தற்போது 'ரூபராணி ஜோஸப்' இலக்கிய விருதும் கிடைத்துள்ளது.

தஞ்சாவூரிலிருந்து 2000 ஆம் ஆண்டிலும் 2001 ஆம் ஆண்டிலும் விருதுக் காக அழைத்திருந்தார்கள். இரண்டு வருடங்களிலும் மக்கள் இருவரினதும்  பரீட்சைகள் இருந்த தால் என்னால் போக முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இது குறித்து சற்று மன வேதனை இருந்தாலும் அவர்கள் வெளியிட்ட உலக கவிஞர்கள் சிறப்பு மலரில் எனது கவிதையும் இடம்பெற்று பலரது பாராட்டையும்  பெற்றிருந்தது.
நானும் மதிப்பிற்குறிய எழுத்தாளர் மண்டூர் அசோகாவும்

இளம் தலைமுறையினரின் எழுத்துக்கள் உங்களது பார்வையில் எவ்வாறு இருக்கின்றது?
இன்றைய இளம் தலைமுறையினரின் கவனங்கள் பல்வேறு வகைகளில் திருப்பப்பட்டாலும் அவர்களது எழுத்துக்களில் காத்திரமான சிந்தனைகள் வெளிப்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது. முந்திய தலைமுறையினரிடமிருந்து வேறொரு இலக்கை நோக்கி பிரிந்து செல்லும் எத்தனம் தென்படுகின்றது. அவர்களது முயற்சிகள் துணிகரமானவை. நம்பிக்கை தருபவை கூடுதலாக கவிதையின் பால் அவர்கள் காட்டும் ஆர்வத்தை சிறுகதை போன்ற துறைகளிலும் காட்டினால் நல்லதென நினைக்கின்றேன்.

நன்றி
வீரகேசரி - சங்கமம் (21.06.2018)

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images