இலக்கிய ஆளுமைகள் சிலருடன்.... ஜீவா சதாசிவம்
March 12, 2018
பெண்களின் தலைமைத்துவம், துறைசார் விடயங்கள் அதனுடனான அனுபங்கள் பற்றி பேசும் போது நேரடியாகவே ஒரு குரல் எழும். அதாவது ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் சாதித்து தலை நிமிர்வதென்பது சவாலான விடயம் என்பதே பலரது கருத்து. ஆனால், பெண்களின் சாதனைக்கு அல்லது அவர்கள் முன்வருவதற்கு தடையாக ஆண்கள் மட்டுமா? இருக்கின்றனர் என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
ஏனெனில் அலுவலகங்கள், பொதுத்தளங்கள், சமூக மட்டம், உட்பட பல தளங்களிலும் எத்தனை பெண்கள் தமது பெண்ணினத்துக்கு உதவுபவர்களாக இருந்திருக்கின்றனர் என சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஒரு பெண்னை பற்றி இன்னொரு பெண் விமர்சிப்பது அவர்களைப் பற்றி தகாத வகையில் பேசி தமது பொழுதை கழிப்பது என்ற நிலைமையும் நடந்தேறாமல் இல்லை. ஒவ்வொருக்கிடையில் எத்தனை போட்டி பொறாமை. இதனை விடுத்து பெண்கள் தமது சக பெண்களை ஆதாரித்த அவர்களுக்கு உந்து சக்தியாக ஊக்குவிப்பு வழங்குபவர்களாக இருந்து விட்டால் எத்தனையோ பெண்கள் சாதித்து விடுவார்கள்.
பல் துறைகளிலும் சவாலுக்கு மத்தியில் பெண்கள் இன்று தலைத்தூக்கி பெண்னிணத்துக்கு பெருமை சேர்த்து வருகின்றதையும் இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. அந்த வகையில் இலக்கியத்தில் பெண்கள் எவ்வாறு தமது பங்களிப்பை வழங்குகின்றனர் என்பதையே இப்பகுதி பேசுகின்றது. இன்று பெரும்பாலான பெண்கள் எழுத்தாளுமை மிக்கவர்களாக இருக்கின்றனர்.
ஆனால், அவர்கள் தங்களது ஆளுமையை பொதுத்தளத்தில் வெளிக்கொணர்வதற்கு பின்வாங்கி விடுகின்றனர். என்னதான் தடைகள் வந்தாலும் பெண்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாதல்லவா அதற்கமைய சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலக்கிய ஆளுமைகள் சிலருடன் பகிர்ந்து கொண்ட விடயங்கள் எமது வாசகர்களுக்காக ...
சிந்தனைகளைத் தரக்கூடிய படைப்புக்களை படைக்க வேண்டும்
மூத்த எழுத்தாளர், உளவள ஆலோசகர் , சமூக சிந்தனையாளர் கோகிலா மகேந்திரன்
பெண் எழுத்தாளர்கள் என்று சொல்லப்ப டுகின்றவர்கள் ஆண்களில் இருந்து உயிரியல் வேறுபாடுகள் உடையவர்கள். ஓமோன்களில் வேறுபாடுடையவர்கள். இவை அனைத்தும் இயற்கைக்கு சாதகமாக உள்ளது.
அரசியல், உளவியல் , சமூகவியல், பொருளியல் என பல வற்றிலும் பெண்கள் ஆணாதிக்கத்திற்குள் சங்கடப்பட வேண்டிய நிலைமையே இருக்கின்றது. அது மெல்ல மெல்ல போரடப்பட்டு பல துறைகளிலும் விடுபட்டு வந்தாலும் யதார்த்தத்தில் பெண்கள் ஆண்களுக்கு சமமாக வாழுகின்ற ஒரு நாடு உலகில் காணப்பட வில்லை.
இவ்வாறான நிலைமையிலேய பெண் எழுத்தாளர்கள் இலக்கி யங்களை படைக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இருப்பினும் குறிப்பிட்ட காலத்திற்குள் பெண்கள் எழுதுவதை நிறுத்துவதற்கான காரணங்கள் பல உள்ளன. ஆரம்ப காலத்தில் பெண்கள் கல்வியிலும் சமையல், தையல் எனப் பல்வேறு கல்விகளை உள்ளடக்கியதாக இருந்துள்ளது. ஆண்கள் அவ்வாறில்லை. பெண்களின் கல்வி முறையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்காலத்திலும் இந்நிலை காணப்படுகின்றது. அவை பிழை என்று கூறவில்லை. பெண் பாத்திரம் என்பது இப்படித்தான் என்ற எண்ணம் இன்னும் காணப்படுகின்றது.
இவ்வாறான ஆளுமைகள் ஊடாகத் தான் இலக்கியங்கள் வந்துள்ளன. இவ்வாறான ஒரு கட்டத்தில் தான் இலங்கையிலும் பெண்கள் எழுதத் தொடங்கினார்கள். 1914ஆம் ஆண்டு நாவலில் பெண்கள் முதலில் எழுதத் தொடங்கினார்கள். அதன் பின்னர் கவிதை எழுதத் தெடங்கினார்கள் 40ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதை எழுதத் தொடங்கினார்கள். இன்னும் விமர்சனம், ஆய்வு இதழியல் எனப் பலவற்றிலும் பெண்களின் ஈடுபாடு அதிகரித்து வந்துள்ளது. இவ்வாறான பாதைகளை வகுத்து பயணத்தை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். சில விமர்சனங்கள் கவிதைகளுக்கு பெண்களுக்கு சாதகமாக வந்த வண்ணமும் இருக்கின்றது. ஆனால், சிறுகதைகளில் பெண்கள் அவ்வளவு ஈடுபாடு காணப்படுவதாக இல்லை.
பொறுமை என்ற சில விடயங்கள் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக இயற்கை எமக்கு தந்துள்ளது. இவை அனைத்துடனும் நாம் இலக்கியத்தையும் செய்கின்றோம். இன்னும் நாம் முன்னேற வேண்டிய விடயங்கள் உண்டு. பெண் மொழி, பெண் பாத்திர படைப்புகள் எனபவற்றை அதிகமாக செய்ய வேண்டிய தேவை எமக்குண்டு. பெண் வரையறைக்குரிய எண்ணக்கருக்களை உடைத்து இன்னும் நாம் முன்னோக்கி நகர வேண்டியவர்களாக இருக்க வேண்டும்.
பெண் பாத்திரம் தனக்கொரு நீதிக்காக முகங்கொடுக்க வேண்டிய போது அதற்கான முறைகளை பெண் பாத்திரம் கையாளும் விதத்தினை வழங்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் பெண்ணுக்கு பிரச்சினை வந்தால் மரணம் தான் தீர்வு என்ற நிலைமையை மாற்ற வேண்டும். எவ்வாறு இப்பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம் உறுதியாக எதிர்கொண்டு எவ்வாறு வெற்றியடையலாம் என்ற சிந்தனைகளைத் தரக்கூடிய படைப்புக்களை நாம் படைக்க வேண்டும்.
தற்போது இளம் பெண் படைப்பாளிகள் கவிதையிலும் சிறுகதைகளிலும் சிறப்பாக செய்து வருகின்றார்கள். நாவல் பொதுவாகவே குறைவு இருபாலரிடத்தும். பெண் கவிதை சிறுகதைகளில் பெண் பாத்திரங்களில் கவனம் எடுத்து படைக்கப்பட வேண்டும். எனினும் அவை எதிர்ப்பை சண்டை ஏற்படுத்துவனவாக அமையக்கூடாது. பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கான தீர்வுகளை இலக்கியங்கள் ஊடாக கொண்டு வரவேண்டிய கடமை எம்மிடம் உண்டு. இனிவரும் காலங்களில் இளம் பெண் எழுத்தாளர்கள் கவனத்தில் கொண்டு பல்வேறு படைப்புக்களை படைக்க முயற்சிக்க வேண்டும்.
பெண்கள் ஏன் எழுத வேண்டும்? - எழுத்தாளர் - மண்டூர் அசோகா
காலங் காலமாகப் பெண்ணினம் தன் ஆளுமைப் பண்பை சகல துறைகளிலும் நிலைநாட்டி வந்திருப்பதை வரலாறுகளும் இலக்கியங்களும் எடுத்துக் கூறிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். அரசியற் களமாகட்டும், போர் முனைகளாகட்டும், நாட்டுஇ வீட்டு நிர்வாகங்களாகட்டும், இலக்கியத் துறைகளாகட்டும் இவற்றிலும் இன்னும் பிறவற்றிலும் பெண்மையின் முத்திரைகள் பதியப்பட்ட வரலாறுகள் உண்டு.
ஆயினும் பெண்களிடம் எத்தனை திறமைகள் ஊறிக்கிடந்தாலும் ஆண்களுக்குச் சமமாக எண்ணிக்கையளவில் அவர்களால் தலையெடுக்க முடிந்ததில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை யாகும். இதற்குப் பெண்களிடமுள்ள பலவீனம் காரணமாகக் கூறப்பட்டாலும் முற்றுமுழுதாகப் பெண்ணினத்தின் மீது சுமத்தப்பட்ட குடும்பச் சுமைகளும் ஆணினத்தின் அடக்குமுறைகளுமே காரணம் எனலாம்.
தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நேரமின்மை, போதிய ஆதரவும் அனுசரணையுமின்மை, அதற்கான களமும், சூழ்நிலைகளுமின்மை போன்றவற்றால் பெண்களின் திறமைகள் வெளிக்கொணரப்படாமலே போய்விடுகின்றன.
இலக்கியத் துறையைப் பொறுத்த அளவிலும் இதே காரணங்களையே கூற முடியும். எம்மிடையே வாழ்கின்ற ஏராளமான பெண்கள் கற்பனை வளமும் எழுத்தார்வமும் உள்ளவர்களாக இருந்தும் இவர்கள் ஏன் அத்துறையில் பிரகாசிப்பதில்லை? நான் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள் என்று எழுதித்தள்ளிய ஏராளமான சகோதரிகளின் முகவரிகள் பின் நாட்களில் காணாமலே போய்விட்டன. இதே நிலை தான் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. திருமணத்திற்கு முன்னர் எழுத்தின் மீதிருந்த ஆர்வமும் வேகமும் பற்றுதலும் திருமணத்திற்குப் பின் பிடிப்பிழந்து போய்விடுகின்றது.
தனக்கென ஒரு குடும்பம் அமைந்த பின்னர் அந்தக் குடும்பச் சுமைகளின் அழுத்தம் பலரது எழுத்தார்வத்தை அப்படியே நசுக்கிவிடுகின்றது. சில பெண்களது குடும்பங்களில் அவர்களது எழுத்தார்வத்தைத் தூண்டிவிடக்கூடிய சூழ்நிலைகளும் ஆதரவுக் கரங்களும் கிடைக்காமற் போய்விடுவதும் உண்டு.
பெண்களுக்கான பிரச்சினைகள், பாதிப்புக்கள், சிக்கல்கள்,சங்கடங்கள்இ நிராகரிப்புக்கள் ஏராளம். இவற்றை ஆண்கள் எழுதும்போது அவை பார்வையாளர்களின் படப்பிடிப்பாக மட்டுமே அமைந்துவிடுகின்றது. பெண்களின் பிரச்சினைகளைப் பெண்களால் தான் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த முடியும்....
ஏனைய துறைகளில் எமது பெண்கள் பிரகாசிப்பது போன்று இலக்கியத்துறையிலும் பெண்களின் பங்களிப்பு மிக அவசியமானதாகும். எமது திறமைகளைப் பிறர் அறிந்துகொள்ள நமது செயற்பாடுகள் காத்திரமானதாகவும் கனதியானதாகவும் அமைய வேண்டும்.
எனவே எமது சகோதரிகள் தூசு படிந்து கிடக்கின்ற தங்கள் திறமைகளை மீட்டெடுத்து சவால்களை வென்று எழுத்துலகில் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும். விரல்விட்டு எண்ணக்கூடிய பெண் எழுத்தாளர்களிடையே உங்களின் பிரசன்னம் பல்கிப்பெருக வேண்டும். எழுதுங்கள் சகோதரிகளே, நம்மையும் பிறர் அறிய நல்ல படைப்புக்களைத் தாருங்கள்.
பெண்களின் எழுத்து வேகம் குறைவது போல் தோன்றுகிறது
மூத்த பத்திரிகையாளரும், இலக்கியவாதியும் கலைக்கேசரி சஞ்சிகை ஆசிரியருமான திருமதி அன்னலட்சுமி இராஜதுரை
தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள், 1960 ஆம் ஆண்டுத் தசாப்தத்தில் இருந்து ஆக்க இலக்கியத்துறையில் ஆர்வம் கொண்டு, சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள் போன்றவற்றினை எழுதுவதில் ஆர்வம் காட்டி வந்திருக்கிறார்கள். அதற்கு ஊக்கம் அளிப்பவையாக வீரகேசரி, தினகர, சிந்தாமணி, தினக்குரல் போன்ற பத்திரிகைகளும் கலைச்செல்வி, மல்லிகை, மரகதம், மலர் போன்ற சஞ்சிகைகளும் விளங்கிவந்ததை நாம் அறிவோம்.
ஜோதி, மித்திரன் வாரமலர் ஆகிய வீரகேசரியின் வார இதழ்களை நான் பொறுப்பேற்று நடாத்தி வந்த வேளையிலும் பெண் எழுத்தாளர்கள் பலரும் ஊக்கமாகச் சிறுகதைகளை எழுதியதை ஞாபகத்தில் கொள்கிறேன். யோகா பாலச்சந்தி
ரன், பத்மா சோமகாந்தன், பா.பாலேஸ்வரி, கோகிலா மகேந்திரன், நஸீமா ஏ.பஸீர், யோகா யோகேந்திரன், தாமரைச்செல்வி இந்திராணி, மண்டூர் அசோகா, மண்டூர் மீனா, யோகேஸ்வரி சிவப்பிரகாசம், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், மண்டைத்தீவு கலைச்செல்வி, குறமகள், சந்திரா தனபாலசிங்கம் என பல எழுத்தாளர்கள் எழுதினார்கள். சிலர் தமது படைப்புகளை நூலாக்கி வெளியிடவும் செய்தார்கள்.
இவர்களில் சிலர் தற்போதும் இலக்கியம் படைக்கிறார்கள். புதியவர்கள் சிலரும் தற்போது எழுதிவருகிறார்கள். பிரமிளா பிரதீபன், வெலிமட ரம்யா, மைதிலி தயாபரன், தாட்சாயணி போன்ற சிலர் அவ்வப்போது தமது எழுத்துப்படைப்புகளை வெளியிடுகிறார்கள். இருப்பினும் பெண்களிடையே, இலக்கியப் படைப்புகளில் முற்காலத்தில் காணப்பட்ட வேகம் குறைந்து விட்ட ஒன்று போலவே தோன்றுகிறது எனலாம். களங்கள் தட்டுப்பாடு என்று கூறமுடியாவிட்டாலும் வேறு காரணங்களும் இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.
புலமையினால் சாதித்து சுடர்விட்டு பிரகாசித்திருக்கிறார்கள்
- திருமலை ரதி தனஞ்செயன் -
விடிவெள்ளி பார்த்து கோலமிட்ட பெண்கள்... விடிவெள்ளி பூத்த விண்வெளிவரை விரைந்து சென்று சாதனை படைக்கின்ற யுகமிது. எத்துறையிலும் பெண்களின் பங்களிப்பு
இன்றைய காலகட்டத்திலே மிகவும் இன்றியமையாதது மட்டுமல்ல...போட்டிச்சூழ்நிலையிலும் தனித்தன்மை யுடன் அவர்களால் பரிமளிக்கவும் முடிகிறது. சோதனை, வேதனை, கண்ணீர், கஷ்டங்கள் என்று குறுகிய வட்டத்துக்குள் குறுகி வாழாமல்..
பலவந்தமாக உலகம் தன்மீது திணித்த முன்முடிபுகளை துணிந்து அழித்து வட்டத்தையும் தாண்டிச்சென்று சாதனை நாயகிகளாக சரித்திரம்படைத்த வரலாறுகளும்... படைக்கின்ற சம்பவங்களும் அதிகமதிகம். பெண்ணடிமைத் தனங்களும்... பெண்களை மிக மிக மலினமாக நடத்திய சங்க காலத்திலேயே குறிப்பாக இலக்கியத்துறையிலே பெண்கள் தமது புலமையினால் சாதித்து சுடர்விட்டு பிரகாசித்திருக்கிறார்கள்...
குறிப்பாக ஆணாதிக்க சக்திகளை மீறி பெண்ணின் தனிப்பட்ட வெற்றி என்பது அப்போதும் - இப்போதும் - எப்போதும் இயல்பான இலகுவான தொன்றல்லவே... பெண் இலக்கியவாதிகள் தமது முன்மாதிரியாக கொள்ளவேண்டிய பெண்புலவர் ஔவையாரைத்தான்... அவர் கம்பர் - ஒட்டக்கூத்தர் என்ற ஆணாதிக்கத்தின் தனிப்பட்ட தாக்குதல்களை - தனக்கு எதிரான சவால்களை மதிமிகு புலமையினால் மாத்திரம் வீறுகொண்டு வெற்றிநடைபோட்டு சரித்திரம் படைத்து தன் பெயரை நிலை நாட்டியிருந்ததை வரலாறு இயம்புகிறது.
நவீனயுகமிதில் சமூக வலைத்தளங்களினூடாக சில பதிவேற்றங்களும் , பகிர்வுகளும்... இலக்கியத்தை கூட 'லேகியமாக்கிவிடும்' அபாயத்தை எட்டுமளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்றால் மிகையாகாது. அதேபோல் இலக்கியத்தில் பெண்கள் நிலைத்திருப்பதும்... புதிய வரவுகளும் மிக சொற்பமாகவுள்ள தற்போதைய நிலைப்பாடு கவனித்து களைய வேண்டியது காலத்தின் அவசியமாகவும் இருக்கிறது.
இலக்கியத்தில் பெண்களின் வளர்ச்சி உயர்ந்துள்ளது
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
இலக்கியத்தில் பெண்களைப் பற்றி எழுதாதவர்கள் யாருமில்லை. பெண் என்பவள் பலவீனப்பட்டவளாகவோ, அதீத பாசத்துக்குரியவளாகவோ, அழகியாகவோ, தியாகியாகவோ பாடுபொருள்களில் வந்து போகின்றாள். அத்தகைய பெண்கள் தற்காலத்தில் தங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதில் அதிக முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள்.
அதிலும் இலக்கியத்தின் மீது பெண்கள் கொண்டுள்ள ஆர்வமும் அர்ப்பணிப்புகளும் அவர்களின் திறமைகளை சுட்டிக்காட்டுகின்றது. குடும்பப் பெண்கள் தங்களது குடும்ப வேலைகளுக்கு மத்தியிலும் இலக்கியத்தில் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்காக பல ஆண்களும் சந்தோசமாக முன்வந்து பெண்களை உற்சாப்படுத்தி அவர்களுக்கு வழிகாட்டுவதில் உதவியாயிருக்கின்றார்கள் .
ஆரம்ப காலங்களில் இருந்ததைவிட தற்காலத்தில் இலக்கியத் துறையில் பெண்களின் பங்கு கணிசமாகக் காணப்படுகின்றது, வீட்டு வேலைகளில் மாத்திரம் மட்டுப்பட்டிருந்த பெண் சமுதாயம் இன்று விழித்துக்கொண்டுவிட்டது. எல்லாத் துறைகளிலும் சாதித்து வரும் பெண்களை இன்று நாம் கண்கூடாக காண்கின்றோம்.
நன்றி வீரகேசரி - சங்கமம் (10.03.2018)
0 comments