நம்பிக்கை இல்லா பிரேரணை வருமா? - ஜீவா சதாசிவம்

March 23, 2018



உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை இல்லாப்பிரேரணை இப்போது பேசுபொருளாகியிருக்கிறது. தேர்தல்கள் முடிந்த கையோடு நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிக்கட்சி யான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நேரடியாகவே  ரணில் விக்கிரமசிங்க  பிரதமராக இருக்கும் அரசாங்கத்தில் தாம் அங்கம் வகிக்கப் போவதில்லை எனும் தொனிப்பட பேசி வந்தது. 

எனினும், ஒருவார கால இழுபறியின் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக இருப்பார் என்ற உறுதிப்பாடு பாராளுமன்றத்தில் ஏற்பட்டது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் நேரடியாகவே நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்வதாக பாராளுமன்றத்தில் அறிவித்தனர்.

இந்தக்காட்சி முடிவடைந்த கையோடு ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கப்போவதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான பாலித்த ரங்கே பண்டார ஊடகங்களுக்கு அறிவிக்க, மீண்டும் பிரதமர் தொடர்பான சர்ச்சை எழுந்தது.

மேற்படி இரண்டு சந்தர்ப்பங்களிலும் 'உஷாரடைந்தவர்கள்' கூட்டு எதிரணியினர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில்  போட்டியிட்டு அந்த வெற்றிலையின் ஒரு பகுதி ஐக்கியதேசிய கட்சியுடன் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகளாகிவிட எஞ்சியோர் 'கூட்டு எதிரணி' என பாராளுமன்றத்தில் இயங்கிவந்தது. எனினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர் அவர்கள் தங்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என அழுத்தமாக சொல்லும் அளவுக்கு தங்களை ஒரு அணியாக ஸ்திரப்படுத்திக் கொண்டனர். 

அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு கட்சியை சேர்ந்ததாகவோ அல்லது ஸ்திரமானதாகவோ இல்லை. இன்றைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒரு பகுதி, தினேஸ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய என நானகு கட்சிகளின் கூட்டு. இந்தக் கட்சிகளின் எண்ணிக்கை மாறாதிருந்தாலும் அந்த  ஒவ்வொரு கட்சியினதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டே வந்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன மாகாண சபைகள் உள்ளூராட்சி பிரதியமைச்சர் பதவியைத் துறந்து கூட்டு எதிரணியுடன் இணைந்தார். அதேபோல கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தபால் துறை பிரதியமைச்சருமான துலிப் விஜேசேகர  இதே வழியைத் தொடர்ந்தார். அதனைத்தொடர்ந்து உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சராகவிருந்த கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிமால் லங்ஸா வும் எடுத்திருந்தார்.

எனினும் தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிரியானி விஜேவிக்கிரமவும் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் வீரகுமார திசாநாயக்கவும் ஜனாதிபதியடன் கைகோர்த்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்தனர். 

கூட்டு எதிரணியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நடிகை கீதா குமாரசிங்க இரட்டை பிரஜாவுரிமை விடயத்தில் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேர்ந்ததும் அதற்கு ஈடாக தெரிவான பியசேன கமகே ஜனாதிபதியின் அணியில் சென்று அமர இந்த அணிமாறல்கள் கூட்டு எதிரணியினரின் எண்ணிக்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.  

தங்களது பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டிராத கூட்டு எதிரணியினர் மேற்படி இரண்டு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி தரப்பு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு சிலரும் வெளியிட்ட ரணில் எதிர்ப்பு கோஷத்தை தமக்கு சாதகமாக மாற்றி ஆட்சியைக் கைப்பற்றலாம் என எண்ணினர். 

முதலாவது கட்டத்தில் ஜனாதிபதியுடன் இணைந்திருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களில் சுமார் பத்து உறுப்பினர்கள் மஹிந்த அணியுடன் எவ்விதத்திலும் சேர முடியாது என எடுத்த நிலைப்பாடு காரணமாக பின்வாங்கிய நிலையில், அதுவே ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் இருந்து வெளிப்பட்ட போது மீண்டும் தமது முயற்சியில் இறங்கினர்.

 இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ரங்கே பண்டார கொண்டு வருவதாகச் சொன்ன பிரேரணைக்கு தாம் ஆதரவு என்கிற நிலைப்பாட்டினை எடுக்காமல் தாமே நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக கூட்டு எதிரணியினர் அறிவித்தனர். 

அதனை தாமே முன்கொண்டு செல்வதான தோரணையை பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச காட்டினார். எனினும், கண்டி கலவரங்கள் காரணமாக அத்தகைய சூழ்நிலையில் அந்த நடவடிக்கையை பின்போடுவதாக மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய கூட்டு எதிரணியினர் அறிவித்தனர்.

எனினும் கடந்த வாரம் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை இல்லாபிரேரணை கொண்டுவரப்படும் என கூறியதைத் தொடர்ந்து  அதன் மீதான் எதிர்பார்ப்பு அதிகமாகியது. 

ஆனாலும், இவர்களின் முதலாவது அறிவிப்புக்கு உந்துதலாகவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் அதிருப்தி தரப்பினர் இப்போது நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைப்பு விடயத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள். அதற்கு ரணில் விக்கரமசிங்க மேற்கொண்ட உள்வீட்டு கலந்துரையாடல்கள் காரணமாக அமைந்தன எனலாம்.

இதனால் இப்போது நம்பிக்கை இல்லாப்பிரேரணையை முன்கொண்டு செல்லவேண்டிய முழுமையான பொறுப்பும் கூட்டு எதிரணியினர் கைக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்பு முன்னிலை வகித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒரு தரப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு சிலரும் இப்போது பின்வாங்கியுள்ள நிலையில் கூட்டு எதிரணி முன்வைக்கவுள்ள நம்பிக்கை இல்லாப்பிரேரணைக்கு ஆதரவாக எத்தனை பேர் வாக்களிப்பர் என்கின்ற பிரச்சினை எழுந்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி அணியில் 42 உறுப்பினர்கள் இருப்பதாகக் கொண்டாலும் அதில் சுமார் 12 உறுப்பினர்கள் மஹிந்த அணியுடன் எவ்விதத்திலும் சேர முடியாது என்கின்ற நிலையில் பகையை வளர்த்துக்கொண்டுள்ளார்கள். எனவே அவர்களின் ஆதரவைப் பெறுவது என்பது கடினமே. ஏனையோரை கூட்டு எதிரணி வளைத்து பிடித்தாலும் எண்ணிக்கை எண்பதைத் தாண்டாது. 

இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் அதிருப்தியாளர்களாக இப்போது நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ள அந்தவரிசையில் அமர்ந்திருக்கும் ஒரு தேரரும், ஒரு சட்டத்தரணியும், பிரேரணையை முன்வைக்கப்போவதாக கூறிய உறுப்பினரும் தவிர ஏனைய யார் யாரெல்லாம் வாக்களிப்பார்கள் என்பதில் உறுதியில்லை. 

எனவே இப்போதைய கணிப்பீட்டின்படி கூட்டு எதிரணி இந்த பிரேரணையில் சாதாரண பெரும்பான்மையுடன் வெற்றிபெற இன்னும் 33 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றாக வேண்டும். எதிரணியில் அமர்ந்திருக்க கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் 6 உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் விடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றதே தவிர மஹிந்த அணிக்கு ஆதரவாக வாக்களிக்க வாய்ப்புகள் இல்லை. 

எனவே, எஞ்சிய 33 உறுப்பினர்களின் ஆதரவையும் ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் இருந்தே பெற்றுக்கொண்டாக வேண்டும். ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள சிறு கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (6) தமிழ் முற்போக்கு கூட்டணி (6) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (5) ஆகியன இப்போதைய நிலையில் மஹிந்த அணியை 'நம்பி' பிரேரணைக்கு ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை. ஜாதிக்க ஹெல உறுமயவின்(2) நிலையும் இதேதான்.

எனவே, ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருந்து சுமார் முப்பது அளவான உறுப்பினர்களை அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் பெற்றுக்கொள்வது என்பது இலகுவான காரியமாக இருக்காது. மறுபுறம் ஐக்கிய தேசிய சட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வரிசையில் 30 அல்ல அதனைவிட அதிகமானோர் ரணிலின் தலைமையில் நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கின்றனர் என்ற கருத்தை மறுப்பதற்கில்லை.

ரணிலை அடிப்படையாகக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைமீதான அதிருப்தி என்பதும் அவர் வகிக்கும் பிரதமர் பதவி மீதான அதிருப்தி என்பதும் வேறு வேறானவை என்கின்ற அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் இருந்து பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்குகளைப்பெறுவது என்பது சிரமமானதே. அத்தகைய தீர்மானங்களை எடுக்கும் எந்தவொரு உறுப்பினரும் அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்வர்.

எது எப்படியாயினும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுமிடத்து அதில் அவர் தப்பிப் பிழைப்பதற்கான களச்சூழலே இருக்கிறது. ஆனால், தமது கட்சியினதும், கூட்டணியினதும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோரின் 'நம்பிக்கையை' வெல்ல அவர் அதிகமாக பணியாற்ற வேண்டியிருக்கிறது. அதற்கான கால அவகாசம் இப்போது அவருக்கு இல்லை என்பது மிகத்தெளிவு.

நன்றி வீரகேசரி - 22.03.2018

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images