இலங்கையின் தமிழ் சினிமாத்துறை என்பதே பிழையான வார்த்தைப் பிரயோகம் - ஜீவா சதாசிவம்

March 26, 2018



ஊடகத்துறையில் சிறந்த ஆளுமையாகவும் ஊடகத்துறையின் விரிவுரையாளராகவும் வலம் வந்தவர் தான் நடராஜா மணிவாணன். மலையகத்தின் பண்டார வளையை பிறப்பிடமாகக் கொண்டு தனது கல்வியையும் தனது பிறப்பிடத்திலேயே பெற்றுக்கொண்ட மணிவாணன் தற்போது இளம் இயக்குனராகவும் வலம் வருகின்றார்.

  அதன் முதலாவது அடையாளமாக  'முதற்கனவே' தொலைக்காட்சி குறுந்தொடரை குறிப்பிடலாம்.  தான் என்றாவது ஒரு நாள் இயக்குநர் ஆகிவிட வேண்டும் என்று சுமார் எட்டு வருட கால மனப்போராட்டத்தின் மத்தியில் இடைவிடாது செய்த முயற்சி எட்டு மாதங்களில் கைகூடியுள்ளது. 
ஆம்... அவரது  'முதற்கனவே' என்னும் முதன்மை தமிழ் மொபைல் தொலைக்காட்சிக் குறுந்தொடர்  வெளியீட்டு  நிகழ்வில் அவரை சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. இதன்போது அவருடன் பகிர்ந்துகொண்ட விடயங்கள் இங்கு எமது வாசகர்களுக்காக…. 

ஊடகத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த உங்களுக்கு சினிமாவில் பிரவேசிக்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு ஏற்பட் டது என்று எம்முடன் பகிர்ந்துகொள்ள முடி யுமா?
நான் ஊடகத்துறைக்கு வர முன்னரே நடிப்புத்துறையில் அதிகம் ஆர்வம் கொண்டருந்தேன். மேடை நாடகங்கள் பலவற்றை இயக்கி நடித்துள்ளேன். நடிப்பிலிருந்த ஆர்வமும் பிரபலமாவதில் இருந்த ஆர்வமும் என்னை ஊடகத்துறைக்கு கொண்டுவந்து சேர்த்தது.

ஊடகத்துறையில் எனக்கு கிடைத்த அனுபவங்களே நான் சினிமாவைப்பற்றி சிந்திக்க காரணமாயின. நான் ஊடகத்துறைக்குள் பிரவேசித்தது சமூக வானொலியாக இருந்த ஊவா வானொலி மூலமாகவே. அவ் வானொலியில்   5 வருடங்கள் பணியாற்றினேன். அதன் பின்னர் கொழும்பில் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அலசும் நிறுவனமொன்றின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக சிரேஷ்ட ஒலிபரப்பாளர்களான ரமணன் சந்திரசேகரமூர்த்தி, முகுந்தன் சுந்தரலிங்கம் ஆகியோர் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டேன்.

பின்னர் இலங்கை இதழியல் கல்லூரியின் விரிவுரையாளர், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் பகுதிநேர அறிவிப்பாளர், வசந்தம் தொலைக்காட்சியின் பகுதிநேர செய்தித் தொகுப்பாளர் என பல ஊடகங்களில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இக்காலக்கட்டங்களில் நிகழ்ச்சித்தொகுப்பிலும்   நிகழ்ச்சித்  தயாரிப்பிலும் எனது ஆர்வம் அதிகமாக இருந்தது, அதன்போது மக்கள் வாய்திறந்து சொல்லமுடியாத பல பிரச்சினைகளோடு எம்மை தொடர்புகொண்டார்கள். 
சில நேரங்களில் எங்களுக்கு இருந்த, இருக்கின்ற வரையறுக்கப்பட்ட  ஊடக சுதந்திரத்துக்குள் இருந்து கொண்டு அவர்களின் வலிகளை எனக்கு வெளியில் சொல்ல முடியாத பல சந்தர்ப் பங்கள் ஏற்பட்டன. 

அவர்களின் வலிகள் எனது வலிகளாக இருந்தன. எம்மை நம்பி வந்தவர்களின் வலிகளைக் கூட வெளி யில் சொல்ல முடியாதவர்களாக இருக்கின்றோமே என்கின்ற வலி என்னை மிகவும் பாதித்தது.  அனைத்தும் அறிந்தும் அமை தியாக இருக்கும் ஒருவனாக குற்ற உணர்ச்சியுடன் இருந்தேன். இவற்றை குறைந்தபட்சம் இவ் உலகிற்கு கூறிவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு பல வழிமுறைகளைத் தேடிக்கொண்டிருந்தேன்.

அப்போதுதான் எனக்கு குறும்படங்கள் தொடர்பில் ஆர்வம் ஏற்பட்டது. நான் ஏற்கனவே வானொலி  நாடக கலைஞனாகவும் நாடகத் தயாரிப்பாளராகவும் பல முயற்சிகளை வானொலியில் பரீட்சித்துப் பார்த்து வெற்றி கண்டிருந்தேன். அந்த நம்பிக்கையில் குறும்படங்களை இயக்க ஆரம்பித்தேன், அந்த வகையில் எனது முதலாவது குறும்படமாக ''தேஞ்ச செருப்பு” என்னும் குறும்படம் வெளிவந்தது, அக் குறும்படம் பலரின் மனதைத் தொட்டதை நான் அறித்தபோது எனக்குள் தன்னம்பிக்கை துளிர்விட்டது. அதன் வழியாக நீண்ட கால தேடல் , கடின உழைப்பின் வழியாக “முதற்கனவே” என்னும் குறுந்தொடரை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அக் குறுந்தொடரை இயக்கியதன் மூலம் என்னை அடையாளப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு எனக்கு கிட்டியது. தற்போது எனது இலட்சியக்கனவான சினிமாவை நோக்கி படிப்படியாக பயணித்துக் கொண்டிருக் கின்றேன். எல்லாவற்றுக்கும் மேல் நான் கடந்து வந்த முட்கள் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தால் ஏற்பட்ட வடுக்கள் என்னை ''சாதிக்காமல் சரிந்துவிடாதே'' என்று என்னை முன்நோக்கி தள்ளிக்கொண்டிருக்கின்றன.இக் காரணங்களே நான் சினிமாவை நோக்கி ஓடக் காரணமாகின்றது.

உங்களது இயக்கத்தில் வெளியான 'முதற்கனவே' என்னும் தொடர் உங்களை இலங்கைத் தமிழ் சினிமா உலகிற்கு முழு மையாக வெளிக்கொண்டு வந்துள்ளது என்று கூறலாமா? அவ்வாறாயின் 'முதற் கனவே' என்ற கதைக்கான கருப்பொருளை எவ்வாறு தெரிவு செய்தீர்கள்? இதற்கான காரணம் என்ன என்பது பற்றி விளக்க முடி யுமா?

'முதற்கனவே' குறுந்தொடர் என்னை  சினிமாத்துறைக்கு அறிமுகப்படுத் தியுள்ளது எனக்கூறலாம். உண்மையில் தற்போது இலங்கையில் தமிழ் சினிமா ஒரு தொழில்துறையாக இல்லை.  இந் நிலையில் பல வருடகாலமாக நல்ல ஒரு படைப்பிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நாம் ஒரு குறுந்தொடரை வழங்கினோம். ஆனால், இப் படைப்பானது முழுமையாக என்னை ஒரு இயக்குநராக மாற்றிவிட்டது என்று என்னால் கூற முடியாதுள்ளது. நான் கனவு காணும் அந்த சினிமாவுக்காக நான் இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

எனினும் சினிமாவில் பிரவேசிப்பதற்கான அங்கீகாரத்தை நான் இயக்கிய இந்த 'முதற்கனவே' குறுந்தொடர் வழங்கியுள்ளது என கூறலாம். 'முதற்கனவே' என்பது வெறும் கற்பனைகளால் பிணைக்கப்பட்ட ஒரு குறுந்தொடர் அல்ல. இது பலரின் வாழ்வில் நடந்த நிஜங்களின் தொகுப்பு.

இக் கதை ஏற்கனவே என் மனதில் ஒடிக்கொண்டிருந்த ஒரு கதை. பலரிடம் இக்கதை தொடர்பில் பேசியிருக்கின்றேன். பலர் அவர்களின் அனுபவங்களை  என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள். பல நண்பர்களின் உறவினர்களின் அறிந்தவர்களின் அறியாதவர்களின் கதைகளை கேட்டபின்னர் அவர்களின் அக் கதைகளை எனது கற்பனையுடன் கலந்து ஒரு தொடராக எழுதினேன். பின்னர் அதை ஒரு குறுந்தொடராக ஒளிப்பதிவு செய்தேன்.

இக்கதை விவாகரத்தான ஒரு பெண்ணின் மறுமணம் பற்றிய கதையாகும். ஆண்கள் மறுமணம் செய்வதை சராசரியாக ஏற்றுக்கொள்ளும் தமிழ்ச்சமூகம் பெண்களின் மறுமணத்தை எவ்வாறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றது என்பதைத்தான் கதையாக தந்திருக்கின்றோம். இக்கதை  ஒரு முற்போக்குள்ள இளைஞனின் கோணத்திலிருந்து உருவாக்கப்பட்ட கதையாகும்.

'முதற்கனவே' தொடரை இயக்கிய அனுபவம், அதில் நடித்த நடிகர்கள், அதன்மூலம் எதிர்கொண்ட சவால்கள் எத்தகையவை என்பது பற்றி எம்முடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
சவால் என்பது சினிமாவின் பிரதான இயல்பு என்று கூறலாம். சவால்கள் இல்லாத சினிமாவை இவ் உலகில் எங்கும் காண முடியாது. அவ்வாறு சவால்களின்றி ஒரு சினிமா வருவது ஆச்சரியமே. எமது படைப்பும் அதற்கு விதிவிலக்கானதல்ல. களத்தில் நாம் பல சவால்களை எதிர்நோக்கினோம். எமக்குள்ளும் பல கருத்து முரண்பாடுகள் காணப்பட்டன. ஒரு திரைப்படத்தை அல்லது தொடரை இயக்குவது என்பது சாதாரண விடயமன்று. அதனை ஒரு தனிநபரால் நிகழ்த்திவிடவும் முடியாது. அதற்கு சிறந்த குழுச்செயற்பாடும் புரிதலும் அவசியம். நாம் என்ன இலக்கை நோக்கிப் பயணிக்கின்றோம் என்பதை அறிந்து அவ் இலக்கிற்காக அனைவரும் ஒன்றாக பயணிக்க வேண்டும்.
முதற்கனவே குறுந் தெொடர்  குழு....
நாம் எமது இலக்கை அடைய பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. முக்கியமாக வழமையாக செய்கின்ற விடயங்களை விட வேறுபட்ட கதைக்களத்தோடு பயணிக்கும் போது பல இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. எனினும் நாம் அனைவரும் அச் சவால்களை ஒரு குழுவாக எதிர்கொண்டோம்.  எப்படியோ  சவால்களை வென்று படைப்பை பூரணப்படுத்தினோம்.

இக் குறுந்தொடரில் ஜெராட், ஹீதேவி, ஷாந்தா, ஜெயசோதி, ராஜஸ்ரீ, மகிழ்ச்சிகரன், அன்டன் சிவகுமார், மேரி, ரெக்சன் விக்கி, விமல், ஜெயகுமார், சஷ்மிதா, ரஜீவன், வாகீ சன் உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்துள்ளனர்.

உதவி இயக்குநராக ஜெனோசன் ஜெயரட்ணம், ஒளிப்பதிவாளர்–அஷ் வக் மொஹமட், ஒலிப்பதிவு–கிறிஸ்டி ரமேஷ், பாடலாசிரியர்-–வருண் துஷி, ஒலிக்கலவை , பின்னணி இசை-–விக்கி பாஸ்கரன், ஒளித்தொகுப்பு-எட்வின், தயாரிப்பு உதவியாளர்கள்-–நித்தியானந்தம், காந்தரூபன்,  டேரியன்,ஜெயரட்ணம்,தயாரிப்பு முகாமை–பானுப்பிரியன் என பலர் தமது பங்களிப்பை வழங்கியிருந்தார்கள்.

இலங்கைத் தமிழ் சினிமாத்துறையின் தற்போதைய நிலைமை பற்றி உங்கள் பார் வை?
இலங்கையின் தமிழ் சினிமாத்துறை என்பதே பிழையான வார்த்தைப் பிரயோகம் என்று நினைக்கின்றேன், இலங்கையின் தமிழ் சினிமா இன்னும் தொழில்துறையாக வளர்ச்சியடையவில்லை. இங்கே  என்னைப்போன்ற பல முயற்சியாளர்கள் திரைப்படங்களை எடுப்பதற்கான முயற்சியில் இருக்கின்றோம். ஆனால், அது எப்போது தொழில்துறையாக மாறும் என்று எங்களுக்குத் தெரியவில்லை.

அது தொழில்துறையாக மாறவேண்டுமென்றால் வருடத்துக்கு 10 இலங்கைத் திரைப்படங்களாவது திரைக்கு வரவேண்டும். தற்போதைய நிலையில் எமக்குள்ள முதலீட்டாளர்கள் குறைவாக இருப்பதால் இலங்கைத் தமிழ் சினிமா ஒரு தொழில்துறையாக உருவாக இன்னும் பல வருடங்கள் எடுக்கும் போல தெரிகின்றது.

 சிங்கள சினிமா வளர்ச்சி பெற்றுள்ள அளவுக்கு தமிழ் சினிமா வளர்ச்சி பெறவில்லை. இவ்வாறு பின்னோக்கிச் செல்ல காரணம் எதுவென நீங்கள் அடையாளம் கண்டுள்ளீர்கள்?
சிங்கள மக்களுக்கு சிங்கள மொழி யில் ரசிக்கக்கூடிய சினிமாவை சிங்களவர்களே தர முடியும். அவர்களுக்கு மாற்று வழியில்லை. எனவே அவர்களின் சினிமாவுக்கான முதலீடும் அவர்கள் இங்கே பெரும்பான்மையாக இருப்பதால் முதலீட்டுக்கான இலாபமும் இருக்கின்றது, எனவே அது ஒரு தொழில்துறையாக இருக்கின்றது.

தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் ஏற்கனவே வர்த்தக ரீதியாக பெரும் வெற்றி கண்டுவரும் இந்திய சினிமா இருக்கின்றது. இந்திய சினிமாவோடு போட்டி போட முயற்சிப்பதால் நம்மவர்கள் தோல்வியடைந்து வருகின்றனர். 
நாம் இந்திய சினிமாவோடு போட்டியிடுவதில் அர்த்தமில்லை. அது அசைக்க முடியாத ஆலமரம்.  நாம் மாற்று சினிமா குறித்தே சிந்திக்க வேண்டும்.

ஒரு படம் அல்லது குறும்படம் தயாரித்து விட்டால் இயக்குநர் ஆகிவிடலாம் என்ற எண்ணம் இன்றைய இளம் கலைஞர் களுக்கு இருக்கின்றது. இவ்வாறான வர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?
அது எனக்குத் தவறாகத் தெரியவில்லை. இந்தியாவில் சினிமாவில் முன் அனுபவமில்லாத பலர் இயக்கிய முதலாவது திைரப்படமே வெற்றியடைந்த வரலாறுகள் ஏராளம் உண்டு.

இந்தியா போன்ற கடும் போட்டி நிலவும் துறையிலேயே பல புதிய இயக்குநர்களால் சாதிக்க முடியுமென்றால் தற்போது எந்த வொரு போட்டி நிலையும் இல்லாத எமது சினிமாவிலும் சாதிக்க முடியும். சினிமா என்பது கலை. அதை முறையாக கற்றும் செய்ய முடியும்.  கற்காமலும் செய்ய முடியும். அது இயக்குநரின் திறமை, அனுபவம், அவருக்குக் கிடைக்கும் வளங்கள் சார்ந்த விடயம்.

எதிர்காலத்தில் எவ்வாறான கதைகளை இயக்கத் திட்டமிட்டுள்ளீர்கள்?
எமது களத்தில் சொல்லப்படாத கதைகள் ஏராளம் உண்டு. அவற் றைக் கண்டறிந்து எமது மக்களை சென்றடையக் கூடிய கதைகளை வழங்குவது தொடர்பில் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். ஏற்கனவே முழுமைப்படுத் தப்பட்டுள்ள மூன்று கதைகள் என்வசம்  உண்டு.

அதற்கான தயாரிப்பாளர்களை தேடிக்கொண்டிருக்கின்றேன். தயாரிப்பாளர்கள் கிடைக்கும் பட்சத்தில் மாத்திரமே எமது கனவு நனவாகும் என்பதுவே சினிமாவின் யதார்த்தம். நாம் தரமான கதைகளோடு தயாராக இருந்தாலும் அவற்றை திரைக்கு கொண்டு வர முதலீட்டாளர்கள் தேவை. 

முதலீட்டாளர்களை கண்டறியும் பயணத்திலேயே எனது அதிக காலங்கள்
கரைந்துவிட்டன. கரைந்து கொண்டிருக்கின்றன. விரைவில் வெள்ளித்
திரைக்கு வருவேன் என்ற நம்பிக்கை யோடு பயணித்துக்கொண்டிருக்கின் றேன்.

அறிவிப்பாளர், தயாரிப்பாளர்,எழுத்து ஆளுமை என பலதுறைகளில் தகுதி கொண்டுள்ள நீங்கள் தற்போது இத்துறை களில் செயற் படுகின்றீர்களா?
ஆம். தற்போதும் அத்துறை சார்ந்த பணிகளில் இருக்கின்றேன். சினிமாத் துறையில் உழைத்து வாழும் காலம் இன்னும் வரவில்லை. ஊடகத் துறை மற்றும் ஊடகத்துறை சார்ந்த பணிகளே என்னை இதுவரை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.

நன்றி வீரகேசரி  (சங்கமம்) - 24.03.2018
snmanivanan@gmail.com  

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images