அரசியல் - சினிமா அரசியல் - ஜீவா சதாசிவம்
March 09, 2018
அரசியல்வாதி என்ற ஒருவரை கண்முன்னே கற்பனை செய்கின்ற ஒருவருக்கு தவிர்க்கமுடியாத வகையில் தொப்பைவயிறும் சொட்டைத்தலையும் வெள்ளை ஜிப்பாவும் என பரவலாக தோன்றி விடுகிறது. பத்திரிகைகளில் இப்படியான தோற்றத்துடன் ஒரு கார்ட்டூன் வெளிவந்தால் அது அரசியல்வாதிகளைக் குறிப்பதாக ஒரு நினைப்பு வந்துவிடுகிறது. குறிப்பாக தெற்காசிய நாடுகளில் தான் இந்தத் தோற்றப்பாடு.
இது மாத்திரமல்ல, தெற்காசிய கலாசாரங்களில் ஒன்றாக குடும்ப அரசியல், வாரிசு அரசியல், பிரபல (Popularity) அரசியல், என ஒரு அரசியல் கலாசாரம் இருப்பது போல 'சினிமா அரசியல்' என்ற ஒன்றும் தொற்றிக்கொண்டுள்ளது. உலகநாடுகளில் கூட இந்த சினிமா பிரபலத்தின் மூலமாக அரசியலுக்குள் வந்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரேகன் ஒரு நடிகரே. ஆனால் நடிகர்கள் அல்லது நடிகைகள் தமது சினிமாவுக்கு பின்னரான ஓய்வுநிலைக்களமாக அரசியலைத் தேர்ந்தெடுக்கும் நிலைமை ஒன்று தமிழ்நாட்டை ஆட்கொண்டிருப்பது பற்றியே இந்த வார அலசல் ஆராய்கிறது.
தமிழ்நாட்டு அரசியலுக்குள் தவிர்க்க முடியாத ஆளுமையாக பார்க்கப்படுபவர் பெரியார் எனப்படும் ஈ.வெ.ரா. இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே சாதிய நிலைப்பாடுகளுக்கு எதிராக குரல்கொடுத்து களமிறங்கி போராடி மக்கள் மத்தியில் பகுத்தறிவு சிந்தனையை பரப்புவதற்காக உழைத்தவர். அவர் ஒருபோதும் தேர்தல் அரசியல் மீது நம்பிக்கை கொண்டு சாதிய எதிர்ப்புக்குரலை முன்வைக்காமல் தனது வாழ்க்கைப் போராட்டமாகவே அதனை முன்னெடுத்தவர். ஆனால், அவரது பாசறையில் வளர்ந்த அடுத்த தலைமுறையினரான அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் முதலானவர்கள் அரசியலை சினிமாவுக்கு கொண்டுபோனவர்கள் என்று சொல்லலாம். இப்போது அதுவே சினிமாவை அரசியலுக்குள் கொண்டுவரும் ஒரு 'யு டேர்ன்' (U Turn) களமாக மாறியிருக்கிறது.
அண்ணாதுரை சினிமாவை அரசியல் கருவியாக கையாளலாம் என எண்ணி கதை, திரைக்கதை என ஆரம்பித்ததை கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் என அரசியல் பிரசார கருவியாக மாற்றினார், அதனையே எம்.ஜி.ஆர். 'நடிப்பு' நிலைக்கு கொண்டு சென்று மக்கள் மத்தியில் தன்னை அரசியல் தலைவராக நிலைப்படுத்தினார். திட்டமிடப்பட்டே எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் அரசியல் பிரசார கருத்து நிலை முன்வைப்பு காட்சிப் படிமங்களாக்கப்பட்டன.
அவர் எதையும் செய்துமுடிக்கும் வீரனாக சித்தரிக்கப்பட்டு மக்கள் மத்தியில் தலைவராக்கப்பட்டார். அண்ணாதுரை, கருணாநிதி சினிமாவில் கையாள நினைத்த கதை, திரைக்கதை, வசனம் என்பவற்றை தோற்கடித்து எம்.ஜி.ஆர். தெரிவு செய்த 'நடிப்பு' அவரது அரசியலைக் கொண்டுசெல்ல மிக இலகுவான சாதனமாக்கியது.
அண்ணாதுரையின் மறைவுக்குப் பின்னர் கதை,-வசனம் என தனது அரசியல் கருத்தினை முன்வைத்து அரசியலை கொண்டுசெல்ல எத்தனித்த கருணாநிதியைப் பின்தள்ளி தனது நடிப்பு கவர்ச்சியால் மக்கள் திலகமானார் எம்.ஜி.ஆர். அவர் திரைப்படங்களில் பேசுவதும் காட்டுவதும் தான் தமிழ்நாட்டிற்கான அரசியல் என்றானது. கூடவே கதை, திரைக்கதை வசனங்களுக்கு அப்பால் எம்.ஜி.ஆர். திரைப்படப் பாடல்கள் அரசியல் பிரசாரப் பாடல்களாயின. கண்ணதாசன், வாலி போன்ற பாடலாசிரியர்கள் அதற்கு துணை நின்றார்கள். டி.எம். செளந்தரராஜனின் குரல் மேலும் வலு சேர்த்தது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் அரசியலை சினிமா தத்தெடுத்துக் கொண்டது.
கட்சி ஒன்றின் முழுநேர கருவியாக தமிழ்நாட்டில் சினிமா மாற்றம் பெற்றதோடு அரசாங்கத்தின் கருவியாகவும் சினிமாவே மாறிப்போனது. எம்.ஜி.ஆர். பாணியில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனும் கூட கட்சி தொடங்கி அரசியலில் வெற்றிக்கொடி கட்டிவிடலாம் என களமிறங்கினார். ஆனால், எம்.ஜி.ஆரின் நிறுவனமயப்பட்ட சினிமா அரசியலுக்கு முன்னால் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
சீனா போன்ற நாடுகளில் அடுத்த பிரதமர் யார் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கும் அரசியல் நிறுவனங்களால் திட்டமிடப்பட்டு அரசியல் ஒரு தொழில்வாண்மையாக (Professional) முன்கொண்டு செல்லப்படுகின்றது. கனடா, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் நடிகர்களைப்போல தோற்றம் கொண்ட இளமையான தலைவர்கள் ஆட்சியாளர்களாக உள்ளனர். தமிழ்நாட்டில் சினிமாவிலிருந்து தான் அடுத்த அரசியல் தலைவர் என்கின்ற கலாசாரமே கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
எது எவ்வாறாயினும் அண்ணாதுரை தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அரசியல் கலாசாரத்திற்குள் அரசியலை இலக்காகவே கொண்டு சினிமாக்கள் தயாரிக்கப்பட்டதும் அரசியல் கொள்கைகள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டதும் நிகழ்ந்ததை மறுப்பதற்கில்லை. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா முதல்வரானதோடு சினிமாவிலிருந்து பிறந்த அரசியல் சினிமாவில் தங்கியிராமல் அதன் அடித்தளத்தில் எழுந்த ஒரு அரசியல் களமாக மாறியது. ஒரு கட்டத்தில் ஜெயலலிதா சினிமா மூலமாக அரசியலுக்குள் வந்தவர் என்கின்ற எல்லையைக் கடந்தவராக அரசியலில் செயற்படத் தொடங்கியிருந்தார். எனினும் அந்த கட்சிக்குள் (அ.இ.அ.தி.மு.க) எம்.ஜி.ஆரின் தாக்கம் இருந்துகொண்டே இருந்தது.
கருணாநிதி சினிமாவை அப்படியே தொலைக்காட்சிக்கு மாற்றி திரையரங்குகளின் மூலமாக முன்னெடுக்கப்பட்ட அரசியலை வீடுகளுக்கே கொண்டு செல்லும் முறையை அறிமுகம் செய்தார். தமது கட்சி சின்னத்தையே முன்னிலைப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட 'சன்' குழுமத் தொலைக்காட்சியினூடாக சினிமா அரசியலை இன்னுமொரு பரிமாணத்தில் கொண்டுவந்தார். இதற்குப் போட்டியாக ஜெயலலிதாவும் இதே பாணியைக் கையாள, 'கட்சி' தொடங்குபவர்கள் எல்லோரும் முதலில் தொலைக் 'காட்சி' ஒன்றைத் தொடங்கிவிடவேண்டும் என்னும் நிலை உருவானது. அல்லது தமக்கு சார்பான ஒரு தொலைக்காட்சி துணையுடன் இயங்க நேர்ந்தது.
ராமதாஸ் போன்ற சினிமா தொடர்பில்லாது அரசியல் களம் கண்டவர்களுக்கும் கூட தொலைக்காட்சி அலைவரிசை அத்தியாவசியமான
ஒன்றாக ஆகிப்போனது. விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது 'கேப்டன்' தொலைக்காட்சியும் வந்தது. திருமாவளவன் கூட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காக 'வெளிச்சம்' தொலைக்காட்சி தொடங்க வேண்டிவந்தது. காங்கிரஸும் 'மெகா' தொலைக்காட்சியூடாகவே தனது கட்சி நிறத்தைக் காட்ட நேர்ந்தது. நாடகம், சினிமா என அரசியலுக்கு வந்த கருணாநிதி தொலைக்காட்சி, சினிமா என முதலீடுகளைச் செய்து தமது அடுத்த தலைமுறையினரையும் அதற்குள் புகுத்தி தமது அரசியலைத் தக்கவைத்துக்கொள்ளும் கைங்கரியத்தையே செய்தார்.
ஒன்றாக ஆகிப்போனது. விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது 'கேப்டன்' தொலைக்காட்சியும் வந்தது. திருமாவளவன் கூட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காக 'வெளிச்சம்' தொலைக்காட்சி தொடங்க வேண்டிவந்தது. காங்கிரஸும் 'மெகா' தொலைக்காட்சியூடாகவே தனது கட்சி நிறத்தைக் காட்ட நேர்ந்தது. நாடகம், சினிமா என அரசியலுக்கு வந்த கருணாநிதி தொலைக்காட்சி, சினிமா என முதலீடுகளைச் செய்து தமது அடுத்த தலைமுறையினரையும் அதற்குள் புகுத்தி தமது அரசியலைத் தக்கவைத்துக்கொள்ளும் கைங்கரியத்தையே செய்தார்.
இந்த வரிசைக்குள் இப்போது வந்துசேர்ந்திருப்பவர் திரைக்கலைஞர் கமல்ஹாசன். தனது திரைப்படங்களில் அரசியல் என்ற ஒற்றை இலக்கு இல்லாமல் பலதரப்பட்ட பாத்திரங்களில் தோன்றினாலும் காதல் மன்னனாகவே பெயரெடுத்தவர். எம்.ஜி.ஆரைப்போன்று அரசியலுக்காக சினிமாவைக் கையாண்டவர் கூட இல்லை. ரஜினியிடம் காணப்பட்ட எம்.ஜி.ஆர். தாக்கம் கூட இல்லாமல் சினிமாவை முழுமூச்சாகக் கொண்டு இயங்கியவர். 'பிக் பெொஸ்' என்ற திட்டமிடப்பட்ட 'தொலைக்காட்சி' நிகழ்ச்சியூடாக அவசரமாக அரசியலில் களமிறங்கியிருக்கிறார். எனவே இவரும் சினிமா, தொலைக்காட்சி கலப்படம்தான்.
ரஜினி கடந்த பலவருடங்களாக தனது அரசியல் பிரவேசம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாலும் தயக்கத்தையே காட்டிவந்தவர். இன்று தயக்கத்துடன் ஆன்மிக அரசியல் என்ற ஒன்றை அறிமுகப்படுத்திக் கொண்டு முனவந்திருக்கிறார். கமல்ஹாசனோ தன்னை பகுத்தறிவுவாதியாக முற்போக்குவாதியாக சினிமாவுக்கு வெளியே காட்டிக்கொண்டு வந்தவர். அப்போது விஞ்ஞானியாக இருந்து இறுதியாக கௌரவத்திற்காக ஜனாதிபதி பதவி வழங்கப்பட்ட கடவுள் நம்பிக்கையாளரான அப்துல் கலாமை முன்னிறுத்திக்கொண்டு அரசியலை முன்னெடுப்பது நெருடலையே கொடுக்கிறது.
சரி, பிழை என்பதற்கு அப்பால் சினிமா அரசியலை ஆரம்பித்த அண்ணாதுரை, கருணாநிதி-, எம்.ஜி.ஆர்., -ஜெயலலிதா அணிக்கு அந்த அரசியலில் இருந்த தெளிவு கமலுக்கும் ரஜினிக்கும் இருப்பதாக தெரியவில்லை. முன்னையவர்கள் பிரசாரமாக முன்னெடுத்த அரசியல் கொள்கைகளுக்கு பதிலாக இவர்கள் இருவரும் திரைப்படங்களில் 'பஞ்ச் டயலாக்' மட்டுமே விட்டவர்கள். இதில் ரஜினியின் வசனங்கள் கோமாளித்தனமாக இருக்கும். கமலின் வசனங்கள் குழப்பமாக இருக்கும்.
'கடவுள் இல்லைன்னு சொல்லல... இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னேன்' என்று எப்படி கமல் குழப்பமாக ஒரு டயலாக் விட்டாரோ அதேபோலத்தான் அவரது அரசியல் பிரவேசமும் குழப்பமாக இருக்கிறது. முன்னையவர்களிடமிருந்த தெளிவான நுழைவு இவர்கள் இருவரிடத்திலும் இல்லை. தாங்கள் சினிமாவில் ஓய்வுபெற்ற பிறகு தொழில் களமாக அரசியலைத் தெரிவு செய்ததுபோல் உள்ளது. அதுவும் பின்னால் ஒரு இயங்குசக்தியின் துணையுடன்.
ஆக, காங்கிரஸிடமிருந்து கழற்றுவதாக எண்ணி அண்ணாதுரையினால் காமராஜரிடமிருந்து கழற்றப்பட்ட தமிழ்நாட்டின் 'மக்கள் அரசியல்', இன்றுவரை அந்த 'சினிமா அரசியல்' மயமாகி சினிமாவையே நம்பியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. புதிதாக அரசியல் வீச்சுடன் சிந்திக்கும் இளைஞர்களும் தமது அரசியலை சினிமாவில் சென்றே காட்டினர்.
இதில் சீமான் இளவயதிலேயே 'அரசியல்' என்று வெளியே இறங்கிவிட்டாலும் இன்னும் 'நடிப்பை' கைவிடவில்லை என்பதே பலரதும் கணிப்பு. தமிழ்நாட்டு இளைஞர், யுவதிகள் தங்களுக்கான தலைவரை செயற்கை இருட்டுக்குள்ளேயே தேடிக்கொண்டிருக்கின்றனர். இது கமல் சீசன். அவ்வளவுதான்.
நன்றி வீரகேசரி - 01.03.2018
இதில் சீமான் இளவயதிலேயே 'அரசியல்' என்று வெளியே இறங்கிவிட்டாலும் இன்னும் 'நடிப்பை' கைவிடவில்லை என்பதே பலரதும் கணிப்பு. தமிழ்நாட்டு இளைஞர், யுவதிகள் தங்களுக்கான தலைவரை செயற்கை இருட்டுக்குள்ளேயே தேடிக்கொண்டிருக்கின்றனர். இது கமல் சீசன். அவ்வளவுதான்.
நன்றி வீரகேசரி - 01.03.2018
0 comments