'குழுக்களின்' அரசியல் - ஜீவா சதாசிவம்

February 23, 2018


இலங்கை அரசியலில் நடப்பு காலம் என்பது ஒரு ஸ்திரமற்ற போக்கையே காட்டி நிற்கின்றது. இந்த ஸ்திரமற்ற நிலைக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் ஒரு காரணமாயினும் இத்தேர்தல் முடிவுகள் இவ்வாறு அமைவதற்கு ஏதுவான காரணிகள் என்னவென்றும் இந்த வார 'அலசல்' ஆராய்கிறது.

ஜனநாயக ஆட்சிக்கட்டமைப்பில் 'கட்சிகள்' என்பது மிக முக்கியமான அம்சம். நாட்டை ஆட்சி செய்வதற்காக அல்லது தமது சமூகத்தின் விருத்திக்கான கொள்கை பிரகடனங்களை செய்து அத்தகைய கொள்கை பிரகடனங்களின் அடிப்படையில் மக்களை அணி திரட்டி, அந்த அமைப்புக்கு ஒரு யாப்பினை உருவாக்கி அந்த யாப்பின் அடிப்படையில் அங்கத்தவர்களை அணிதிரட்டி அதிலிருந்து பல்வேறு படிமுறைகளை உருவாக்கி அந்த படிமுறையில்  தலைவர் அல்லது தலைமைத்துவ குழுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் என தெரிவு செய்து இயங்குவதுதான் கட்சிக்கட்டமைப்பு.

 ஆனால், நடைமுறையில் இத்தகைய நடைமுறைகள்தான் உள்ளனவா என ஆராய்ந்து பார்த்தால் 'கட்சிகள்' எனச் செயற்படுகின்ற எல்லா அமைப்புகளுக்குள்ளும்  'குழு' மனப்பான்மையும் 'குழு' செயற்பாடுகளும் காணப்படுகின்றமையை கட்சி பேதமின்றி எல்லா கட்சிகளிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. 

கட்சி, கொள்கை என ஒன்று திரண்டு செயற்பட்டு வாக்குகளைக் கோரிவரும் இவர்கள் அதிகாரம் என்று வந்தவுடன் இவ்வாறு குழுக்களாக செயற்படத்தொடங்கும் போதே பொதுமக்கள் கட்சிகளின் நிலைப்பாடுகள் என்னவென்று தெரியாமல் ஊகத்தின் அடிப்படையில் அரசியலை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

 அதேபோல இவ்வாறு கட்சிகளுக்குள் நிலவும் குழு மனப்பான்மை தான் கட்சிகள் பிளவடையவும் புதிய கட்சிகள், கூட்டணிகள் உருவாகவும் காரணமாகி அவ்வாறு உருவாகின்ற கட்சிகள் மேலும், மேலும் சிதைவடைந்து செல்கின்றமையை அவதானிக்கிறோம். இதனை ஜனநாயகம் என பேசிக்கொண்டாலும் ஸ்திரமற்ற ஆட்சிக்கும் நிலையான அபிவிருத்தியொன்றை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாமைக்கும் இதுவே காரணம் என சொல்லலாம்.

நடைமுறையில் இன்று இலங்கையில் செயற்பாட்டிலுள்ள பிரதான கட்சிகளை எடுத்து நோக்கினால் இந்த குழு நிலைமைகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தினைச் செலுத்தலாம். இன்று ஜனாதிபதியாக இருக்கக் கூடியவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர். அதேபோல அதன் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கக் கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்னும் கூட்டமைப்பினதும் தலைவர். 

ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கட்சியாகவே இருக்கின்றதா அல்லது அதற்குள் குழுக்கள் இருக்கின்றனவா என பார்த்தால் அங்கு குழு மனப்பான்மையையும் குழு செயற்பாடுகளையும் அவதானிக்கலாம். கட்சியின் போஷகர்கள் என்று சொல்லக்கூடிய முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா ,  மஹிந்த ராஜபக் ஷ ஆகிய இருவரும் சுதந்திரக் கட்சியின் வெவ்வேறு குழுக்கள். சந்திரிகா தனது குழுவாக மைத்திரி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு தனது தீர்மானங்களை கட்சிக்குள் கொண்டுவர எத்தனிக்கின்றபோது மஹிந்த தனது குழுவினை மைத்திரிக்கு எதிரானதாக கட்டமைக்க முயல்கின்றார். 

அந்தக் குழுக்களே இன்றும் கூட மைத்திரியுடன் அமைச்சுப்பதவிகளைப் பெற்றும் பொது எதிரணியில் அமர்ந்தும் அரசியல் செய்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்று எடுத்துக்கொண்டாலும் அந்த கூட்டணிக்குள்ளும் இதே மஹிந்த அணி, மைத்திரி அணி என்ற பிளவுபட்ட அணிகள் உள்ளன. இவ்வாறு பிளவுபட்ட அணிகளை ஊக்குவித்து தமது நலனை அடைந்துகொள்ள இந்த அணிகளுக்கு பலம் சேர்க்கும் இதர அமைப்புகளும் கட்சிகளும் இயங்குகின்றன. 

இதுதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்ற ஒன்று இருக்கும்போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கூட்டமைப்பை உருவாக்க வழிசமைத்துள்ளது. இன்று இந்த நாட்டில் நிலவுகின்ற அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலைக்கு இந்தக் குழு மனப்பான்மைதான் பிரதான காரணம் என சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

ஐ.தே.க.வை எடுத்துக் கொண்டாலும் இதே குழு மனப்பான்மை தான் அங்கேயும் மேலாங்கி நிற்கின்றது. ஜே.ஆர். காலத்தில் பிரேமதாச தனக்கான குழுவைக் கட்டியெழுப்பி அவர் ஆட்சிக்கு வரும்வரை அதனைக் கடைப்பிடித்தார். அவர் ஆட்சியில் அமர்ந்ததன் பின்னர் லலித் அத்துலத் முதலி, காமினி திசாநாயக்க குழுவினர் அவருக்கு எதிரானவர்களாக மாறினர். அதிலிருந்து 'ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி' என்னும் புதிய கட்சியே உருவாகி ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும் சவாலானது.

இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் இருக்கும்போதே எவ்வாறு அதிலிருந்து ஒரு பகுதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாக உருவாகி இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  தலைமையிலான ஆட்சிக்கே சவாலாக அமைந்துள்ளதோ அதே நிலைமையை அன்று 90களில் உருவான ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் 'ராஜாளியா' சின்னம் ஐக்கிய தேசிய கட்சிக்கு அச்சுறுத்தலானது. (இப்போது இருக்கின்ற அரசியல்வாதிகளில் ரவி கருணாநாயக்க இந்த அணியிலிருந்து வந்தவரே)  ஒருவகையில் அந்த பிளவும் அதனைத் தொடர்ந்த மரணங்களும்தான் இளையவரான ரணில் கைக்கு ஐக்கிய தேசிய கட்சி அன்று தலைமைப் பொறுப்பைக் கொண்டுவந்து சேர்த்தது. அன்றிலிருந்து இன்றுவரை ஐக்கிய தேசிய கட்சிக்குள் ரணில் குழு, ரணிலுக்கு எதிரானவர்கள் குழு என இரு குழுக்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. 

இன்றைய அரசியல் சூழல் ஸ்திரமற்றதாக இருப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் சிலர் ரணில் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என முன்வைக்கும் நிபந்தனையை ஐக்கிய தேசிய கட்சிக்குள்  இருக்கும்  ரணில் எதிர்ப்பு குழுவினர் தமக்கு சாதகமாக்கிக் கொள்ள முனைவதும் ஒரு காரணமாகும். அதேபோல பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தனக்கு எத்தனை ஆபத்துக்கள் வந்தபோதும் தனது குழுவை விட்டுக்கொடுக்க முன்வருபவரே அல்ல. அந்த குழுவுக்கு 'ரோயல்' குழு என்ெறாரு செல்லப்பெயரும் உண்டு. 

ரணில், மலிக், சாகல, அகில என அரசியல் மட்டத்திலும் ஆலோசனை மட்டத்தில் பாஸ்கரலிங்கம், சரித்த ரத்வத்தை என இந்தக் குழு ரணில் தலைமையில் ஆட்சி அமைகின்ற போதெல்லாம் கட்சியிலும் ஆட்சியிலும் ஆதிக்கத்தைச் செலுத்துகின்ற குழுவாக ரணில் விக்கிரமசிங்க தனது 'ரோயல்' கல்லூரி நண்பர்களையும் குடும்ப நண்பர்களையும் கொண்டதாக இந்த குழுவைக்கொண்டிருக்கிறார் என்பது ஐக்கிய தேசிய கட்சி மட்டத்தில் இருக்கக்கூடிய  கடும் விமர்சனமாகும். உண்மையில் ரணில் விக்கிரமசிங்க என்ற அறிவுஜீவியின் ஆளுமையை முழுமையாக கட்சிக்கும் நாட்டுக்கும் பயன்படுத்த முடியாமல் போனமைக்கு அவரிடம் காணப்படும் இந்தக் குழு மனப்பான்மையே காரணம் என உறுதியாகச் சொல்லாம்.

இந்த இரு பெரும் கட்சிகளை விடுத்து ஏனைய கட்சிகளை எடுத்துக்கொண்டாலும் இந்த நிலைமைகளைப் பார்க்கலாம். மக்கள் விடுதலை முன்னணிக்குள்ளும் இந்த குழு மனநிலை இருந்த காரணத்தினால்தான் விமல் வீரவன்ச தலைமையில் தேசிய சுதந்திர முன்னணியும் குமார் குணரத்னம் தலைமையில் முன்னணி சோஷலிச கட்சியும் தோற்றம் பெற்றன.

இன்றைய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பலம் பொருந்திய அமைப்பாக தமிழர்கள் பெயரில் இயங்குகின்ற போதிலும் கூட அங்கு நிலவும் குழு மனப்பான்மை ஒற்றுமையாக செயற்பட தடையாக உள்ளமை பலராலும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதன் தலைமைக் கட்சியாக இருக்கும் தமிழரசுக் கட்சி ஏனைய அங்கத்துவ கட்சிகளை அரவணைத்துச் செல்வதில்லை என்கின்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. தமிழரசுக் கட்சிக்குள்ளும் பல்வேறு அடிப்படையிலான குழுக்கள் இயங்கவே செய்கின்றன.

முஸ்லிம் கட்சிகளை எடுத்துக்கொண்டாலும்  அஷ்ரப்பின் மறைவுக்கு பின்னர் ஹக்கீம் அணி, பேரியல் அணி என இரண்டாகப் பிரிந்து பிறகு அவை பல குழுக்களாக பிரிந்து இன்று பல கட்சிகளாக தோற்றம் பெற்றுள்ளன. குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிரதேசவாதம் சார்ந்ததாக குழுக்கள் இயங்குகின்றமையை அவதானிக்கலாம்.

இப்போது தோற்றம் பெற்றிருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி மூன்று பிரதான கட்சிகளின் கூட்டு என்பதன் அடிப்படையில் இயல்பாகவே அங்கு குழு மனப்பான்மை காணப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. உருவாக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை ஆங்காங்கே வதந்திகள் உருவானாலும் கூட்டணி பிரியாமல் இயங்கிச்செல்வது வரவேற்கத்தக்கது. ஆனாலும் அடுத்த பாராளுமன்ற தேர்தலும் அதற்கு பின்னருமான நிலைமைகள் இதனை கேள்விக்குட்படுத்தலாம்.


 மலையகக் கட்சிகளைப் பொறுத்தவரையிலும் கூட பிரதான கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குழு என்பதற்கு அப்பால் ஒரு குடும்பத்தின் கட்சியாகவே அதனைக் கொண்டு செல்வதில் அக்கறை காட்டி வருகின்றமையை அவதானிக்கலாம். சௌமியமூர்த்தி தொண்டமான், இராமநாதன் தொண்டமான், ஆறுமுகம் தொண்டமான், செந்தில் தொண்டமான் என வந்து இப்போது ஜீவன் தொண்டமான் என ஐந்தாம் தலைமுறை தொண்டமானும் களத்தில் இறக்கப்பட்டுவிட்டார். அந்தக்கட்சியில் வரக்கூடிய பிளவுகள் எப்போதும் இந்த குடும்ப ஆதிக்கத்தினால் ஆனது.

இ.தொ.கா. மட்டுமல்ல, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட பண்டா ரநாயக்க, ராஜபக்ஷ என்னும் குடும்பங்களின்பால் உருவான குழு மனப்பான்மை கொண்டது என்பதை மறுப்பதற்கில்லை.

எனவே மக்களின் பெயரில் உருவாக்க ப்படும்  கட்சிகளின் கட்டமைப்பை ஓருபுறம் வைத்துவிட்டு உள்ளே குழுக்களாக இயங்குவதுதான் 'எல்லா' பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதை இந்த சமகாலத்தில் நன்றாகவே புரிந்து  கொள்ளலாம். 

நன்றி வீரகேசரி - 22.02.2018

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images