அடுத்த ஜனாதிபதி யார்? ஜீவா சதாசிவம்
February 02, 2018
இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது உள்ளூராட்சி மன்றத் தேர்தல். இந்தத் தேர்தலில் பிரதேச சபைத் தலைவரையோ, மாநகரசபைத் தலைவரையோ, மாநகர சபை மேயரையோ தான் தெரிவு செய்யலாம். ஆனால், இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சார மேடைகளில் அடுத்த ஜனாதிபதி யார் என்றே அரசியல்வாதிகள் பேசி முடிக்கின்றனர்.
இந்நாள் ஜனாதிபதி இதுதான் நான் போட்டியிடுகின்ற கடைசி தேர்தல் என்று கூறிக்கொண்டு கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் இப்போது தனது பதவிக்காலம் எத்தனை வருடங்கள் என சட்ட ஆலோசனை பெற்றார். அது ஐந்தாண்டுகள் என அறிவிக்கப்படடதும் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என தான் இன்னும் தீர்மானிக்கவில்லையென்று அண்மையில் கருத்து கூறியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ மைத்திரி அடுத்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு எதிராக தானே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இந்த இரண்டு பேரும் இப்படி தாமே தனது கனவுகளைச் சொல்லிக் கொண்டிருக்க, கடந்த பல ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டும் அந்த கனவு நிறைவேறாமலேயே ஏங்கிக்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவையே அடுத்த ஜனாதிபதியாக்குவோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார மேடைகளில் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆதரவாளர்கள் என சொன்னதன் காரணம் ஐக்கிய தேசிய கட்சியின் நேரடி உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மாத்திரமல்ல ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கக்கூடிய சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சிகள் கூட அடுத்து நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவோம் என்று பேசி வருகின்றனர்.
எனவேதான், சாதாரண கிராம அல்லது நகர மட்டத்தினாலான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சார மேடைகள் எப்போதும் இல்லாத அளவுக்கு சூடு பறக்கும் பிரச்சார மேடைகளாக மாறிப்போயிருக்கின்றன. எனவே, அடுத்த ஜனாதி பதித் தேர்தல் எப்போது? அப்படி வரப்போகின்ற தேர் தல் எத்தகைய ஜனாதிபதிக்குரியது? அதில் யார் ஜனாதிபதியாகக் கூடும் என்பது போன்ற எதிர்பார்ப்பை அலசுவதாகவே இந்த வார அலசல் அமைகிறது.
நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டு அது அத்தனை அதிகாரமிக்கதா என இந்த நாட்டு மக்கள் அறிந்திருக்கவில்லை. ஏனெனில் 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்திருந்தாலும், 1972 ஆம் ஆண்டு வரை குடியரசாகவில்லை. இலங்கை இறைமையினடிப்படையில் அல்லாது பிரித்தானிய மகாராணியாரின் மதிப்பளித்தே உள்நாட்டு மக்கள் பிரதிநிதிகள் தமது பதவிபிரமாணத்தைக் கூட செய்து வந்தனர்.
1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசான போது பிரதமரைத் தலைமையாகக் கொண்ட பாராளுமன்ற ஆட்சி முறையே இலங்கையில் இருந்தது. அப்போது பிரதமராக இருந்தவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க. ஆனால், 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையும் இலங்கையின் ஆட்சி முறையை அப்படியே மாற்றிப்போட்டது.
இந்த சிறிய நாட்டில் அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களைக்கொ ண்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்திய ஜே.ஆர்.ஜயவர்தன அதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் நாட்டில் பிரதமராக இருந்த ஸ்ரீமா பண்டாரநாயக்கவின் இலங்கை குடியுரிமையையே பறிக்கும் வகையில் அதனை பயன்படுத்தியபோதுதான் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையின் அதிகார பலத்தை நாட்டு மக்கள் அறியத்தொடங்கினர்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நபர் அதேமக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தை வலுவற்றதாக்கியது. அது நாட்டின் இறைமையையே கேள்விக்குள்ளாக்கியது. இறைமை என்பதன் இலகுவான அர்த்தம் இந்த நாட்டின் மீது மக்களுக்கு இருக்கக்கூடிய உரித்து.மன்னராட்சியில் மன்னரின் உரித்தாக இருந்த நாட்டினை மக்கள் ஆட்சியில் மக்களுக்கானதாக மாற்றியதே ஜனநாயக ஆட்சி.மக்கள், மக்களால் மக்களுக்கே உரித்தாக்கிக்கொண்ட அந்த இறைமையை பாராளுமன்றம் வசம் ஒப்படைக்க அதனை மிக இலகுவாக மறைமுகமாக 'நிறைவேற்றதிகார' ஜனாதிபதி முறை மூலம் தனியொருவரின் கைக்கு ஒப்படைக்க மக்களின் இறைமை என்பது கேள்விக்குறியானது.
இந்த நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதனை முழுமையாக பயன்படுத்தியவர்கள் என இருவரைக் கொள்ளலாம். ஒன்று ஜே.ஆர். ஜயவர்தன அடுத்தவர் மஹிந்த ராஜபக் ஷ. ஜே.ஆரைவிட ஒருபடி மேலே சென்று குறித்த ஜனாதிபதி முறைமையை ஒரு தனிநபர் இரண்டு தடவைகள் மாத்திரமே வகிக்கலாம் என்ற நிலையினை மாற்றி அரசியலமைப்பில் 18ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அந்த கால எல்லை தடையற்றதாக மாற்றியமைத்தார்.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ வெற்றிபெற்றிருந்தால் இந்த நாட்டில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை என்கின்ற பெயரில் மன்னர் ஆட்சி ஒன்றே நடைபெற்றிருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அதனை நோக்கி இந்த நாடு நகர்ந்துகொண்டிருந்த ஒரு கட்டத்தில்தான் மைத்திரி (கருணையின்) யின் வடிவமாக வரவழைக்கப்பட்ட இந்நாள் ஜனாதிபதி அந்த அதிகார பயணத்திற்கு முற்றுப்புள்ளியிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கியது மாத்திரமல்ல அவர் கொண்டு வந்த 18ஆவது திருத்தத்தை நீக்கும் 19ஆவது திருத்தத்தைக்கொ ண்டுவந்து நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களும் தற்போது குறைக்கப்பட்டுவிட்டன. இனி மீண்டும் 18ஆவது திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தாலே ஒழிய 'நிறைவேற்றதிகார ஜனாதிபதி' எனும் முன்னைய அதிகாரம் இனி அமையப்போவதில்லை. அதுவும் புதிய அரசியலமைப்பை உருவாக்கு வதற்கென முன்வைக்கப்பட்டிருக்கும் இடைக்கால அறிக்கையின்படி புதிய அரசியலமைப்பு வருமானால் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மேலும் குறைக்கப்பட்டு அவர் 'நாம நிர்வாகியாக' மாற்றப்படும் சூழலும் கூட நிலவுகின்றது.
ஆனால், போகிற போக்கில் புதிய அரசியலமைப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதுவரை இப்போதைக்கு இருக்கின்ற 19ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான சிறகு வெட்டப்பட்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை நடைமுறையில் இருக்கும். அந்த ஜனாதிபதியாக அடுத்து யார் வருவார் என்பதுதான் இப்போது மேடைகளில் பேசப்பட்டு வருகின்றது.
இந்தப் பேச்சுக்களில் போட்டியிடாமலே திடீர் என நிறைவேற்றதிகார ஜனாதிபதியானவரும் உண்டு. அவர்தான் டி.பி.விஜேதுங்க. ஜே.ஆருக்கு பிறகு இரண்டாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆர். பிரேமதாச இரண்டாவது முறைக்கான தேர்தலை எதிர்கொள்ளாமலே இறந்துபோனார்.
அது இயற்கை இறப்பாக அல்லாமல் கொலையாக அமைய அவசரமாக அந்த இடத்திற்கு தெரிவானவர் அப்போதைய பிரதமர் டி.பி.விஜேதுங்க. அந்த அதிகாரமிக்க பதவியை அனுபவிக்க கிடைத்த அதிர்ஷ்டசாலி அவர் மட்டும்தான். அந்த இடத்திற்கு அவர் வருவார் என அவர் உட்பட யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த பதவிக்காக போட்டியிட்டு வெற்றி பெற முடியாது போன துரதிர்ஷ்டசாலி ரணில் விக்கிரமசிங்க.
டி.பி.விஜேதுங்கவின் பதவிக்காலம் ஆர்.பிரேமதாசவின் எஞ்சிய முதல் பதவிக்காலமாக அமைந்து 1994 ஆம் ஆண்டு அடுத்த தேர்தல் வந்தபோது அதில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக நின்றிருக்க வேண்டியவர் ரணில் விக்கிரமசிங்க. அவருக்கு எதிராக சந்திரிகா போட்டியிட்டபோது மேல் மாகாண சபை முதலமைச்சராக அப்போதுதான் பிரதமரா ஆகியிருந்த சந்திரிகாவைவிட 17 வருட தொடர் ஆட்சியில் பலமாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி யின் இளம் தலைவராக கல்வி அமைச்சராக ஜே.ஆரின் வாரிசாக வளர்ந்து வந்திருந்தவர் ரணில்.
எனினும் ஆர்.பிரேமதாச ஆட்சிக்காலத்தில் அதிருப்தியுற்று ஐ.தே.கவில் இருந்து வெளியேறியிருந்த லலித் - காமினி இரட்டை ஆளுமைகளில் லலித் அத்துலத் முதலியும் இறந்த பின்னர் பிரேமதாசவும் இறந்த பின்னர் ஐக்கிய தேசிய கட்சிக்குள் மீண்டும் உள்நுழைந்த காமினி திசாநாயக்க அந்த வாய்ப்பினை தனதாக்கிக்கொண்டார்.
ரணிலோடு ஒப்பிடும்போது காமினிக்கு அந்த ஆளுமையும் இருந்தது. அவரும் வேட்பாளராக தெரிவாகியிருக்கும்போது சொல்லப்பட ரணிலின் ஆளுமையைவிட காமினியின் துணைவியாரின் விதவைக்கோலத்தை நம்பியது ஐ.தே.க. அங்கு ஆரம்பித்த சரிவு சந்திரிகாவை ஜனா திபதியாக்கியது.
அவரது இரண்டாவது தேர்தலில் முதலாவதை விட அதிகாரமிக்கவரான சந்திரிகாவை ரணிலால் வெல்ல முடியாது போட்டியிட்டும் தோல்வியுற்றார். அடுத்து வந்த 2005 ஆம் ஆண்டு தேர்தலில் மஹிந்தவிடம் போட்டியிட்டு தோல்வியுற்றார். அடுத்து 2010இல் தான் தோல்வியடையக்கூடும் எனும் அச்சத்தினாலேயே சரத் பொன்சேகாவை துரும்புச் சீட்டாக இறக்கிவிட்டார். அடுத்து 2015 ஆம் ஆண்டு தான் இறங்கினால் தோல்வி என உணர்ந்தே மைத்திரிபாலவை பொது வேட்பாளராக இறக்கிவிட்டு ஒதுங்கி நின்றார்.
ஆக 1994இல் நழுவிய வாய்ப்பு தொடர் தோல்வி அல்லது தோல்வி அச்சத்தினால் அதிகாரமிக்க அந்த ஜனாதிபதி பதவியை அடையவிடாமல் அவரை துரதிர்ஷ்டவா தியாக்கியது. ஐ.தே.க. ஆசைபடுவதுபோல அடுத்த ஜனாதிபதியாக ரணில் வரக்கூடும். ஆனால் அது 'நிறைவேற்றதிகார ஜனாதிபதி' பதவியில்லை என்பது அவருக்கு துரதிர்ஷ்டம். ஜே.ஆர். நாட்டிய மரம் அவரது வாரிசுக்கு வாய்க்கவேயில்லை.
(நன்றி வீரகேசரி - 01.02.2018)
0 comments