மலையகமும் மைத்திரியும் - ஜீவா சதாசிவம்

February 20, 2018நீண்டகாலமாக இழுபறிநிலையில் இருந்த உள்ளூராட்சி தேர்தல் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இத்தேர்தல் முடிவுகளின் பின்னர்  நிர்வாகம் உட்பட பலதரப்பட்ட அதிகாரங்களில் மாற்றங்கள் வரும் என்று பலராலும் பேசப்பட்டுக்கொண்டிருப்பதை முடிவுகள் வெளியான தருணத்திலிருந்து  கேட்கக் கூடியதாக இருக்கின்றது. 

ஆம்! நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பெருவாரியாக வெற்றிபெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாம் இடத்தையும் ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றை இணைத்து ப்பார்க்கும்போது மூன்றாமிடத்தையும் மக்கள் விடுதலை முன்னணி நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,ஐக்கிய தேசியக் கட்சியையும் மஹிந்த ராஜபக் ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் பகிரங்கமாக விமர்சித்தே தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வந்தார். எனவே அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் அனைத்துமே மஹிந்தவுக்கும் ஐ.தே.க.வுக்கும் எதிரானது என்றே கொள்ள வேண்டியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே மாவட்ட ரீதியாக அதிகளவு வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ள அதேநேரம் ஐந்து சபைகளையும் வெற்றிகொண்டு முன்னிலையிலுள்ளது. அதற்கு அடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நான்கு சபைகளையும்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SPPP) மூன்று சபைகளையும் கைப்பற்றிக்கொண்டுள்ளன.

எனினும் புதிய கலப்பு தேர்தல்முறையின் அடிப்படையில் இரு கட்சிகள் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கலாம் என்பதன் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் அறிவித்து முடிவதற்கு முன்னதாகவே மஹிந்த அணியுடன் இணைந்து பதினொரு சபைகளில் ஆட்சியமைக்கப் போவதாக  இ. தொ.கா. பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமான் அறிவித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்ததோ , இல்லையோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்.

ஏனெனில் நுவரெலியா மாவட்டத்தில் உண்மையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது அம்பகமுவை பிரதேச சபை, தலவாக்கலை - லிந்துலை நகர சபை, நுவரெலியா மாநகர சபை, நுவரெலியா பிரதேச சபை ஆகியவற்றில் மாத்திரமே. ஏனைய ஒன்பது சபைகளிலும் ஒன்றில் சேவலில் வெற்றிலையும் அல்லது வெற்றிலையில் சேவலும் என இணைந்தே போட்டியிட்டிருந்தன.  

கொட்டகலை, நோர்வூட், அக்கரப்பத்தன, மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர சுட்டமைப்பு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவல் சின்னத்திலேயே போட்டியிட்டது. மறுபுறம் ஹங்குராங்கத்தை, கொத்மலை, வலப்பனை ஆகிய பிரதேச சபைகளில் ஜனாதிபதி தலைமையிலான வெற்றிலை சின்னத்திலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை களமிறக்கியிருந்தது.

எனினும் வெற்றிலை சின்னத்தின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கட்சி முக்கியஸ்தர்களையும்  அமைச்சர்களையும் அழைத்து வெற்றிலை,  கைச்சின்னத்தில் போட்டியிட்ட தமது அணி தேர்தல் முடிவுகளின் பின்னர் எத்தகைய முடிவுகளை எடுக்கவுள்ளது என்பதை கூடி ஆராய்ந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த ஞாயிற்றுக்கிழமை காலை கூடி மதியம் வரை தொடர்ந்து அந்தக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்ரீ  லங்கா சுதந்திர கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இன்னும் ஓரிரு தினங்களில் ஜனாதிபதி தனது தீர்மானத்தை அறிவிப்பார். அந்த அறிவிப்பு முக்கிய மாற்றங்களைக் கொண்டு வருவதாக இருக்கும் என சொன்னார்களே தவிர அது என்னவென்று சொல்லவில்லை. 

ஊடகவியலாளர்கள் துருவித்துருவி கேட்டபோதும் சிரேஷ்ட அமைச்சர்கள் உறுதியான பதிலளிக்காமல் சிரித்துச் சமாளித்தனர். ஆனாலும், ஜனாதிபதி தலைமையிலான  வெற்றிலைச்சின்னத்துடன் இணைந்து போட்டியிட்ட இ.தொ.கா. ஜனாதிபதியின் அறிவிப்புக்கு காத்திராமலே தான் மஹிந்த அணியுடன்  இணைந்து ஆட்சியமைப்பதாக அறிவித்தமையானது ஜனாதிபதி வட்டாரத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அதுவும் மஹிந்த அணியின் முக்கிய உறுப்பினரான நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்கவுடன் இணைந்து வாகனபவனி வந்து ஊடகங்களுக்கு அறிவித்தமையானது அவர்கள் கூட்டிணைந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. தனது கட்சியிலிருந்து மஹிந்த அணிக்கு செயற்பட்டார்கள் என்ற காரணத்தால் சில  பாராளுமன்ற உறுப்பினர்களை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் பதவிகளிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலக்கியிருந்தார். அவர்களுள் சி.பி.ரத்நாயக்கவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்து போட்டியிட்ட  சபைகளில் மொட்டுடன் இணைந்து இ.தொ.கா. ஆட்சி
அமைப்பது அவர்களது தீர்மானம். ஆனால் ஏனைய இடங்களில் இணைந்து போட்டியிட்டு இத்தகைய தீர்மானத்தை எடுத்திருப்பது கேள்விக்குறியாக்கியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு வாக்களித்த அத்தனை பேரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஒருவேளை அங்கு கிடைத்த தமிழ் மக்களின் வாக்குகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்குரியது எனக் கொண்டாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு கணிசமான சிங்கள மக்களின் வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. அவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்தவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொண்ட மக்களின் வாக்குகளாகும்.  அதேபோல மஹிந்த ராஜபக் ஷவின் அணியினருக்கு எதிராக பல்வேறு சவால்களை எதிர்கொண்டே மைத்திரியின் ஆதரவாளர்கள் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களித்திருப்பார்கள். 

எனவே அவர்கள் பற்றி எவ்விதமான அக்கறையும் கொள்ளாமல் ஜனாதிபதியுடனும் ஆலோசிக்காமல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மஹிந்த அணியுடன் இணைந்து விடுத்திருக்கும் அறிவித்தலானது தேசிய அரசியலில் ஓரு சலசலப்பை உருவாக்கியுள்ளது. ஒருவேளை இந்த அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால கண்டுகொள்ளாமல் விடுவாராக இருந்தால் இன்னும் இரண்டொரு நாட்களில் அவர் நாட்டு மக்களுக்கு விடுக்கப்போகும் செய்தியும் இதுதான் என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.

ஆனால், பொலன்னறுவையில் இடம்பெற்ற இறுதி பிரசார கூட்டத்தில் அவர் உரையாற்றியபோது தெரிவித்த கருத்துக்களே நாளை மறுதினங்களில் ஜனாதிபதியிடம் இருந்து வரக்கூடும். இனிமேல்தான் அவர் பொது ஜனாதிபதியாக வலம் வர எதிர்பார்க்கிறார் என்றே எதிர்வு கூறவேண்டியுள்ளது இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேன அன்று தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு காரணமான ஐக்கிய தேசியக் கட்சியையும் குறிப்பாக தமிழ்பேசும் மக்களையும் எந்தளவு தூரம் அறத்துடன் அணுகியிருக்கிறார் என்கின்ற கேள்வி சிறுபான்மை சமூகத்திடமும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களிடத்திலும் எழுந்துள்ளது.

நாடு முழுவதிலும் மஹிந்த ராஜபக்ஷ அணியினருக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குகள் பேரினவாத வாக்குகள் என்பது தெளிவாக புலனாகிறது. நுவரெலியா மாவட்ட முடிவுகளை பார்க்கும் போது கூட இதனை தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். சிங்கள மக்கள் அதிகமாக வாழும் ஹங்குராங்கத்தை பிரதேச சபையில் 24 வட்டாரங்களில் ஐக்கிய தேசிய கட்சி மூன்று ஆசனங்களையும் (இதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வாக்குகளே அதிகம்) வெற்றிலைக்கு ஒரு ஆசனமும் (இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாக்குகளே அதிகம்)  கிடைத்துள்ள அதேவேளை ஏனைய இருபது வட்டாரங்களையும் நேரடியாக மஹிந்தவின் 'தாமரை மொட்டு' வென்றெடுத்தது.

அதேபோல வலப்பனை பிரதேச சபையின் 28 வட்டாரங்களில்  ஏழு ஆசனங்களை ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற (இதில் ஐந்து வட்டாரங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி நேரடியாகவும் ஏனையவற்றில் பங்களிப்பையும் செய்துள்ளன.) நான்கு வட்டாரங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் வெற்றிபெற (இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பங்களிப்பு இருந்துள்ளது) ஏனைய பதினேழு வட்டாரங்களில் மஹிந்த அணியினரே வெற்றிபெற்றுள்ளனர். 

இந்த நிலைமைதான் முழு இலங்கை மட்டத்திலும் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஜனாதிபதியின் முழுமையான ஆதரவு இருந்தது. தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது தனக்கு  எதிரான முழு பிரசாரங்களை மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆறுமுகம் தொண்டமானையும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திசாநாயக்கவையும் துணைக்கு அழைத்துக்கொண்டே இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கினார் மைத்திரிபால சிறிசேன. 

இங்கே ஞாபகப்படுத்த வேண்டிய விடயம் அன்று இவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது ஆதரவளித்த தமிழ் முற்போக்கு கூட்டணியும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களும் மைத்திரி நுவரெலியா  மாவட்டத்திற்கு பிரசாரத்துக்கு வராதபோதே வாக்களித்து வெற்றிபெறச் செய்திருந்தனர் என்பதுதான். ஆனால், அதனையெல்லாம் மறந்துவிட்ட ஜனாதிபதி இன்று தனது கட்சியை காப்பாற்றவென ஆறுமுகனுடனும் , எஸ்.பி.யுடனும் கைகோர்த்து ஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேடையில் ஏறி தனது கட்சியையும் மறந்து சேவலுக்கு ஆதரவாக தலவாக்கலையில் பேசியிருந்தார்.

இத்தனைக்கும் நுவரெலியா – அம்பகமுவ பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனியாகவும் வெற்றிலை தனியாகவும் போட்டியிட்டிருந்தன.  இன்று வெற்றிலை அங்கு காணாமலாக்கப்பட்டுள்ளது. இ.தொ.கா. மூன்று உறுப்பினர்களைக்கொண்டுள்ளது. அங்கு இ.தொ.கா. மஹிந்தவுடன் இணையவுள்ளது. எனவே தனது கட்சியை பணயம் வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு ஆதரவளித்த ஜனாதிபதிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொடுத்திருக்கும் கைமாறு அதிர்ச்சிமிக்கதே.

இது மாத்திரமல்ல, தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு  நுவரெலியா மாவட்டத்தை வெற்றிகொண்டது மட்டுமல்லாமல், மயிரிழையில் தமது வெற்றியை நழுவவிட்டமைக்கும் ஜனாதிபதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட்டமையும் அவர்களது மேடையில் ஏறியமையுமே பிரதான காரணம்.  இதனை தமிழ் முற்போக்கு கூட்டணி தமது தவறுக்கான காரணமாக கொள்ள முடியாது என்பது வேறு விடயம். 


புதிய சபைகளை உருவாக்கிக் கொண்டதாக  அவர்கள் உரத்துக் கூறியளவிற்கு அதனை வெற்றிகொள்வதில்  தவறியுள்ளார்கள் என்பதை உணரவேண்டும். அரசாங்கத்திடம் பிரதேச சபை வெல்வது என்பதும் மக்களிடம்  வெல்வது  என்பதும் வேறு என தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு இப்போது நன்றாகவே புரிந்திருக்கும்.  

பொதுத் தேர்தலில் தமக்கு கிடைத்த ஆணையின் அடிப்படையில்  அவர்கள் பணிபுரிந்திருந்தாலும் மக்கள் மத்தியில் வாக்கு கேட்பதில் அவர்கள் காட்டியிருந்த அசமந்த போக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக எடுத்திருந்த நிலைப்பாடும் கூட நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு கூட்டணி பின்னடைவுக்கு காரணமெனலாம். 

குறிப்பாக கண்டி, இரத்தினபுரி, கொழும்பு மாவட்டங்களில் அவர்கள் தனித்து போட்டியிட்டு கணிசமான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளனர். தாம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டதால் பிணைமுறி விவகாரமும் ஊழியர் சேலாப நிதி விடயமும் தமக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் திகாம்பரம் கூறியிருப்பது உண்மைதான். எனினும் கண்கெட்ட பிறகு சூரிய  நமஸ்காரம் என்ற கதைதான் இது.

எது எவ்வாறாயினும் மைத்திரிபால சிறிசேனவுக்கு அன்று வாக்களித்த மலையக மக்களுக்கு கடந்த இரு ஆண்டுகளாக அவரிடமிருந்து கிடைத்திருக்கக் கூடிய பிரதியுபகாரம் என்பது ஒன்று மில்லை. மாறாக அவருக்கு எதிராக செயற்பட்ட வர்களுக்கு அண்மையில் பதவிகளையும் வழங்கியிருந்தமையும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கது. 

எது எவ்வாறாயினும் எதிர்காலத்தில் தாம் எவ்வாறு, யாருடன் செயற்பட போகிறது என  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எடுத்திருக்கும் நிலைப்பாடும் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தனது கட்சி எவ்வாறு செயற்படப்போகின்றது என எடுக்கப்போகும் தீர்மானமும் ஒன்றாக அமையாது என்றே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

மைத்திரியும் மலையக மக்களில் தமக்கு விசுவாசமாக இருப்பவர்கள் யார் என்பதை அறிந்துகொண்டு பிரதியுபகாரம் செய்ய இதுவே தருணம். தனது நன்றியுணர்வை வெளிப்படுத்த கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன   நிறைவேற்றுவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம். 

நன்றி வீரகேசரி - 13/02/2018

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images