சின்னங்களும் எண்ணங்களும் - ஜீவா சதாசிவம்
February 11, 2018
இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலங்களில் பல மேடைகளில் பேசப்பட்ட சில பிரசார வசனங்கள் இப்படி அமைகின்றன. 'எண்ணங்கள் எதுவானாலும் சின்னங்களே முக்கியம்', 'எண்ணம் வேறாகலாம் சின்னம் ஒன்றாகட்டும்',' 'சின்னங்கள் வேறாகலாம் எண்ணங்களே முக்கியம்' 'வண்ணங்கள் மாறலாம். சின்னங்கள் மாறலாம். எண்ணங்கள் மாறக்கூடாது' இது போன்ற எல்லா கோஷங்களிலும் உள்ளர்த்தமாக அமைவது தாம் 'இந்த முறை' போட்டியிடும் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்பது தான். கட்சிகளுக்கு சின்னங்கள் உள்ள போதும் அவற்றில் இருந்து எவ்வாறு ஏன் மாறுகிறார்கள், இந்த 'சின்ன' மாறல்கள் ஊடாக வெளிப்படும் 'எண்ண' மாறல்கள் என்ன என்பதை பற்றியே இந்த வார அலசல் ஆராய்கிறது.
இலங்கையின் பிரபலமான கட்சி சின்னங்கள் என்று பார்த்தால் யானை, கை, மணி, வெற்றிலை, வீடு, சைக்கிள், உதயசூரியன், மரம், ஏணி, சேவல், மயில், வீணை, மண்வெட்டி, நாற்காலி, மேசை, சாவி, குடை, மீன் என பொதுவாக கூறலாம். ஆனால், இவற்றையும் தாண்டி ஏகப்பட்ட சின்னங்களை கொண்ட கட்சிகள் உண்டு. இவை கட்சிகளாகவும் கூட்டணிகளாகவும் தாம் பெற்றுக் கொண்ட அல்லது தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட சின்னங்களை கொண்டுள்ளன. அண்மைக்காலத்தில் தேர்தல் திணைக்களம் அங்கீகரித்த சில சின்னங்களாக இரட்டைக்கொடி, அரிவாள், வாழைப்பழசீப்பு போன்றன உள்ளன.
இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பொறுத்த வரையில் தேசிய ரீதியாக நாடு தழுவிய ரீதியில் போட்டியிடக் கூடிய சின்னங்களாக யானை, மணி, தாமரை மொட்டு, வெற்றிலை, கை என்பனவே அமைகின்றன. ஏனைய சின்னங்களான வீடு, சைக்கிள், மரம், ஏணி, மயில், சேவல், இரட்டைக்கொடி, வாழைப்பழசீப்பு போன்றன அமைகின்றன. இந்த வரிசைக்குள் புதிதாக முளைத்து தேசிய ரீதியாக நாடுதழுவிய ரீதியாக பேட்டியிடும் சின்னம் 'தாமரை மொட்டு'. இந்த கட்சியின் பெயர் 'ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன' (Sri Lanka Pothujana Permuna – SLPP) இந்த கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் என சொல்லப்படுகின்றது.
ஆனால், யாரும் சொல் லாமலே அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவர் தன்னை அந்த கட்சியின் தலைவர் என அறிவிக்காமலே தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போஷகர்களில் ஒருவர் என்ற நிலையில் இருந்து கொண்டே 'தாமரை மொட்டின்' தலைவராக அறியப்பட்டுள்ளார்.
இவ்வாறு திடீரென தோன்றும் கட்சிகள் தேசிய ரீதியாக முக்கியத்துவம் பெறும் போது நிச்சயமாக அவை பாரிய தந்திரோபாய அரசியல் நகர்வுகளுடன் முன்வைக்கப்படுவதாகவே அமையும். இதற்கு முன்னதான சந்தர்ப்பங்களில் 'அன்னம்' சின்னம் இரண்டு தடவை இந்த நிலையை அடைந்தது. 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா களமிறங்கவும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன களமிறங்கவும் பாவிக்கப்பட்ட 'அன்னம்' சின்னத்தின் கட்சியின் பெயர் எதுவென்று தெரியாமலேயே தேசிய ரீதியாக பிரபலம் பெற்றது.
முதலாவது தடவை நாட்டின் இரண்டாம் அதிகபட்ச வாக்கினை பெற்ற அன்னம், இரண்டாவது தடவையில் இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானித்த சின்னமாக மாறியது.மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சியின் பெயர் என்ன? என பொது அறிவு கேள்வியாக முன்வைத்தால் இந்த நாட்டில் 99 சதவீதமானோரிடம் சரியான பதிலை பெற முடியாது போகும். இப்போது கூட தேடலின் தேவை கருதி அந்த பெயரை இங்கு எழுதாமலே விடுவோம். ஆனால், தேடுபவர்களுக்கு வசதியாக ஒரு 'க்ளு' கொடுக்கலாம். அந்த கட்சியின் தலைவர் இப்போது 'உள்ளே' இருக்கிறார்.
எரிவாயு நிறுவனம் ஒன்றின் தலைவராக இருந்து இணையத்தள மோசடியூடாக தாய்வான் வங்கியில் பெரும் கொள்ளையிட்டதாக கருதப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள Shalila Moonasinghe நபரே 'அன்னம்' கட்சியின் தலைவர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஊழல் வாதிகளை ஒழிக்கப் போவதாக சூளுரைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தையும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு (பொஹொட்டுவ) சின்னத்தையும் 'போட்டு தாக்கி' வருகிறார். அதேநேரம் அவர் போட்டியிட்டு தெரிவான கட்சியான 'அன்னம்' சின்னத்தின் தலைவர் ஏற்கனவே சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
எனவே பெரும் ஊழலில் ஈடுபட்டவரின் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டே மைத்திரி வெற்றி பெற்றார் என்பதும் தான் முன்னர் பங்காளியாகவிருந்த மஹிந்த ராஜபக் ஷவின் மொட்டு இன்று ஊழல் நிறைந்தது என்றும் இப்போதைய பங்காளியாக விருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஊழல் நிறைந்தது என்றும் விரல்களை நீட்டும் போதும் தனது அடுத்த விரல்கள் தான் போட்டியிட்ட 'அன்னம்' சின்னத்தை அவருக்கு நினைவூட்டுமா என்பது தெரியவில்லை. குறிப்பாக அந்த அன்னம் சின்னத்தின் சொந்தக்காரரான Shalila Moonasinghe ரவி கருணாநாயக்கவுடன் நெருக்கமானவர் என்றும் சொல்லப்படுகின்றது. ரவி கருணாநாயக்கவே பிணைமுறி மோசடியின் முக்கிய நபர் என்றும் குற்றம் சாட்டப் படுகின்றது. இப்படி சுற்றி சுற்றி பார்த்தாலும் தெரிந்தோ தெரியாமலோ ஊழல் மோசடி செய்தோருடன் கூட்டு (அரசியல்) எல்லோருக்கும் இருந்திருக்கவே செய்கின்றது.
இந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்து கொள்ள ஜனாதிபதி தான் தற்காலிகமாகவே அன்னம் சின்னத்தில் போட்டியிட்டதாகவும் தற்காலிகமாகவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகியதாகவும் நியாயம் கூறலாம். அது அப்படியே அமைந்தும் விட்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி அதன் பொதுச்செயலாளர் பதவியையும் துறந்து அதற்கு எதிராகவே, அதாவது வெற்றிலைக்கு எதிராகவோ அன்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று இன்று மீண்டும் வெற்றிலையிலும் கையிலும் போட்டியிட்டு அந்த இரண்டுமே தூய்மையான கட்சிகள் மற்றையவை எல்லாம் ஊழல் நிறைந்தவை என அவர் கைநீட்டும் போது எமது 'எண்ண'த்தில் என்னவோ 'அன்னம்' நினைவு வந்து தொலைகிறது.
இதில் உள்ள சுவாரஸ்யம் என்னவென்றால் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி எந்த தந்திரோபாயத்தை கையாண்டாரோ அதே தந்திேராபாயத்தை இப்போது மஹிந்த ராஜபக் ஷ கையாள்கிறார் என்பது தான். அன்று அவர் சுதந்திரக் கட்சியில் இருந்து தற்காலிகமாக வெளியே நின்று மஹிந்தவை எதிர்த்து அன்னத்தில் தேர்தலை சந்தித்து விட்டு இப்போது மீண்டும் சுதந்திரக் கட்சியின் தலைவராகவே உள்நுழைந்தார்.
இந்த இரண்டரை ஆண்டுகளில் மஹிந்த ராஜபக்ஸ சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறாமல் தற்காலிகமாக பொதுஜன பெரமுன எனும் புதிய கட்சிக்கு நிழல் தலைவராக இருந்து மைத்திரியை எதிர்த்து தனது அணியை கட்டி எழுப்புகிறார். எனவே ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி வெற்றி பெற்றதும் அன்னம் கைவிடப்பட்டு எப்படி மைத்திரி கையையும் வெற்றிலையையும் கைப்பற்றினாரோ அதேபோல தாமரை மொட்டு கணிசமான வாக்குகளை பெற்று இலங்கையில் இரண்டாவது அதிகூடிய வாக்குகளை பெற்ற கட்சியாக அங்கீகரிக்கப்படுமிடத்து கையும், வெற்றிலையும் தாமரை மொட்டினால் சுவீகரிக்கப்படலாம்.
ஆக, ஜனாதிபதி தேர்தலில் அன்னம் எப்படி தற்காலிகமானதோ, அதேபோல இப்போது தாமரையும் தற்காலிகமானதே. சுதந்திரக் கட்சியில் தற்காலிமாக வெளியேறி இப்போது மீண்டும் கை சின்னத்துக்கும் வெற்றிலை சின்னத்துக்கும் தலைவரான மைத்திரியின் அதே 'தியரி' நாளை மஹிந்தவுக்கும் பொருந்தும். அந்த கட்டத்தில் மஹிந்தவின் நியாயம் இன்னும் பலமாக இருக்கும் எனெனில், அவர் இன்னும் கூட சுதந்திரக் கட்சியின் போஷகர் பதவியில் விலகவுமில்லை.
தாமரை மொட்டுக்கு தாவியதால் சுதந்திரக் கட்சி அவரை விலக்கவுமில்லை. தாமரை மொட்டுக்கு ஆதரவு வழங்கியதற்காக சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியில் இருந்து எத்தனையோ பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்ட நிலையில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்தே நீக்கப்பட்ட நிலையில் ம-ஹி-ந்த ராஜபக்ஷ சுதந்திர கட்சிக்கு எதிராக இன்று பலமாக கட்சி ஒன்றை கட்டியெழுப்பி அதன் நிழல் தலைவராக செயற்படுகின்ற பட்சத்தில் கூட அவர் சுதந்திரக் கட்சியில் இருந்து விலக்கப்படவில்லை. ]
மாறாக அதன் கூட்டணி கட்சியான வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவோர் மஹிந்தவின் நிழற்படத்தை மேலே போட்டு கொள்ளுவதற்கு கூட அனு மதிக்கப் பட்டுள்ளது. எனவே சுதந்திரக் கட்சியை மீண்டும் கைப்பற்றும் மஹிந்தவி-ன் வியூகம் மைத்திரி பாதையிலேயே இடப்படுகின்றது. இப்போதே தான் மைத்திரியுடன் நிபந்த னையுடன் பேசத்தயார் என மஹிந்த அறிவித்திருப்பதாக கேள்வி. நிபந்தனை என்ன என்பது இப்போது இலகுவாக வெளிச்சமாகிறது.
மஹிந்தவின் அவசர தேவை பிரதமர் பதவியல்ல. அவருக்கு முக்கியம் 'எண்ணமே' அன்றி 'சின்னம்' அல்ல. எனவே, 'மொட்டு' மலராகுமா? 'கை' தாங்குமா? அடுத்து வரும் வாரங்களில் அலசலாம். .....
(நன்றி வீரகேசரி - 08.02.2017)
0 comments