'எண்' களின் அரசியல் - ஜீவா சதாசிவம்
February 20, 2018
'அலசல்' ஒரு அரசியல் பத்தி. சமகால அரசியல் விடயங்கள் தொடர்பான ஒரு பதிவு பார்வை என்று சொல்லலாம். ஆனாலும், தவிர்க்கமுடியாத வகையில் கடந்த மூன்று வாரங்களாக தொடர் கட்டுரைபோன்று தொடுத்துச் செல்லவேண்டியிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக எழுதிய 'அடுத்த ஜனாதிபதி யார்?', 'சின்னங்களும் எண்ணங்களும் ஆகிய தலைப்புக்களில் எழுதியவற்றின் தொடர்ச்சியாகவே இந்தவாரமும் எழுதவேண்டியிருக்கிறது.
கடந்த வாரம் பேசிய சின்னங்களும் எண்ணங்களும் மக்களின் எண்ணங்களை மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணங்களையும் கூட எடுத்துச் சொல்லிவிட்டது. அன்று அலசல் சொன்னதுபோல மொட்டு மலருமா? கைதாங்குமா? என்ற வினாவுக்கு விடையாக மொட்டு மலர்ந்து அதனைக் 'கை'தாங்க காத்திருக்கிறது என்பது தெளிவாகிறது. இங்கு இறுதிப்பயணத்தை ஆரம்பித்து இருப்பது வெற்றிலை. இனி அது வெற்று இலை.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியமைத்த காலங்களில் எல்லாம் இந்த நாட்டில் கூட்டணி அரசாங்கமே இருந்தது.அத்தகைய கூட்டணிகளில் இடதுசாரி கட்சிகள் என சொல்லிக்கொள்ளும் கொல்வின் ஆர் டி சில்வா முதல் இன்றைய டியு, திஸ்ஸ விதாரண வரை இணைந்திருக்கிறார்கள். ஆனாலும், 1972 – 1977 காலப்பகுதியில் மாத்திரம்தான் ஓரளவு இடதுசாரி தன்மைகொண்ட பண்புகளை அந்த கூட்டணி காட்டியது. 1977 இல் தோல்வியடைந்ததன் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீணடும் ஆட்சிக்கு வந்ததும் கூட்டணியாகவே. ஆனாலும் முன்புபோல இடது சாரி தன்மைகொண்டவர்களுடனான கூட்டணியாக மாத்திரமன்றி எல்லா 'இலக்கங்களையும்' கொண்ட கட்சிகளை அது இணை க்கத் தொடங்கியது.
அத்துடன் பிரதானமாக 77க்கு முன்னான நிலைப்பாடான திறந்த பொருளாதார கொள்கைக்கு மாறாக முடிவெடுக்காமல் ஐ.தே.க அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதார கொள்கையை தொடர்வது என முடிவெடுத்த 1994 ஆம் ஆண்டுக்குப்பின்னர் ஐ.தே.க. தலைமையிலான ஆட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சிக்கும் பாரிய வித்தியாசங்கள் ஏதுமின்றியே இன்றுவரை தொடர்கிறது.
அன்று 1994 இல் சந்திரிகா தலைமையிலான அரசியல் தாராள பொருளாதார கொள்கையையே கொண்டு செல்ல வேண்டுமென மும்முரமாக இருந்தவர் தற்போதைய நிதி அமைச்சர் மங்கள சமரவீர என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டு அன்று அவர்களின் காலத்தில் சின்னம் 'நாற்காலி' என்பதையும் அதற்கு பின்னர் மஹிந்த தலைமையிலான காலத்தில் அவர்களின் சின்னம் 'வெற்றிலை' என்பதை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. 'வெற்றிலை' வந்து எப்படி நாற்காலியைக் காணாமல் ஆக்கியதோ அதேபோல இன்று 'தாமரை மொட்டு' எதிர்காலத்தில் வெற்றிலையை காணாமல் ஆக்கிவிடும் என்பது இந்த தேர்தல் தெளிவுபடுத்தியிருக்கிறது.
இது கடந்த வார அலசலின் தொடர்ச்சி. இதற்கு முன்னைய வார அலசலில் பேசிய 'அடுத்த ஜனாதிபதி யார்' என்பது பற்றி பார்த்தால் அதற்கு அதிர்ஷ்டமில்லாதவராக அறியப்பட்டவர் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் அவரை மேலும் அதிர்ஷ்டமில்லாமலாக்கி அவரது பிரதமர் பதவிக்கே ஆப்பு வைத்துவிடும் நிலைக்கு தள்ளிவிட்டது. இப்போதைக்கு அவர் இந்த விபத்தில் தப்பிப்பிழைத்தாலும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவர் வேட்பாளராகும் வாய்ப்புகூட நழுவிச்செல்வதாக தெரிகிறது. அடுத்ததாக ஐ.தே.க பக்கம் தலைமுறை வழி புதுமுகமே களமிறங்கும் வாய்ப்புள்ளது.
மறுபக்கம் இப்போதைய ஜனாதிபதி இனி அமர்ந்து தனது இறுதிக்கால அரசியல் நாட்களை எண்ணிக்கொண்டிருப்பதையே செய்ய வேண்டிய நிலையை மக்கள் வெளிப்படுத்திவிட்டனர். ஆக, அடுத்த ஜனாதிபதி வேட்பாளருக்கான வாய்ப்பு தாமரை மொட்டில் மீண்டும் ஒரு தலைமுறை வழிக்கு செல்லும் வாய்ப்பு. 2010 ஆம் ஆண்டுத் தெரிவுக்கும் இந்த தெரிவுக்கும் ஒரு பொதுமை காணப்படலாம். 2015 ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் நாட்டைவிட்டு தப்பியோடாத குறையாக ஓடியவர்கள் 2018 உள்ளூராட்சி தேர்தல் முடிவடைந்ததும் கையசைத்து நாடு திரும்புகின்றனர். நான் பிரதமராக தகுதியில்லாதவன் என சொல்வது ஜனாதிபதியாகவே தகுதியானவன் எனும் அர்த்தத்தையும் கொடுக்க வல்லது. இது முன்னையவார அலசலின் தொடர்ச்சி.
சரி, இந்த பின்னணிகளில் இந்த வார அலசல் 'எண்'களின் அரசியல் ஆராய்கிறது. இது 'எண்ணிம உலகம்' (Digital world) என்று சொல்லப்படுகின்றது. 'எண்ணிம பொருளாதாரம்' (Digital Economy) 'எண்ணிம அரசாங்கம்' (Digital Government) கூட இன்று பேசப்படும் சொற்களாகின்றன. அரசாங்க நிர்வாகத்தை எண்ணிமப்படுத்தி மக்களுக்கு உயர்ந்த பட்ச சேவையைப் பெற்றுக்கொடுப்பதே அந்தக் கோட்பாடு. இலங்கை போன்ற நாடுகளில் எண்ணிம விடயங்களை அறிமுகப்படுத்த அமைச்சுக்கள் (ஹரின் பெர்னாண்டோ) உருவாக்கப்பட்டபோதும் அவை சாதகமளிக்கவில்லை. ஆனால், இன்னும் இலங்கை அரசியலை 'எண்' களே (Numbers) தீர்மானித்துக்கொண்டிருக்கின்றன.
இன்றைய நிலையில் இலங்கையில் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கைதான் நாட்டில் பரபரப்பை உருவாக்கிவிட்டிருக்கிறது. ஐ.தே.க தலைமையிலான அணி சுமார் 106ஆசனங்களைக்கொண்டிருக்க 97 ஆசனங்களில் 49 எதிர்ப்பக்கமும் 48 ஆளும் பக்கமும் என இரண்டாம் நிலையில் இருக்க 16 ஐ வைத்துக்கொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக இருக்க 6 ஐ வைத்துக்கொண்டு மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கட்சி பிரதம கொறடாவாக வலம்வந்து கொண்டிருக்கிறது. ஒரு ஆசனத்தை வைத்திருந்தாலும் 'உருப்படியாக' வைத்திருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் தனி ஆசனம் பற்றி அடுத்து வரும் வாரங்களில் அலசலாம்.
இதனிடையே இப்போது பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இன்னுமொரு எண் விவகாரம்தான் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை விகிதாசாரம். அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது வாதத்திற்காக இதனை முன்வைத்தாலும் அந்த 'எண்' ஒரு செய்தியைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது. அதாவது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவும் அவருக்கு எதிரானவர்களும் என்று போட்டியிட்டபோது மஹிந்தவுக்கு எதிராக கிடைத்த வாக்குகள் இன்னும் ஒரு படி மேலே சென்றிருக்கிறது எனும் வியாக்கியானத்தை கூறலாம். கடந்த முறை அவருக்கு ஆதரவாக இருந்த 47வீதம் தற்போது 44 வீதமாக குறைந்துள்ளது.
இதன் மூலம் அவரை எதிர்த்து இன்னுமொரு பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவர் மீண்டும் தோற்கடிக்கப்படுவார் என்பதுதான் இந்த 'எண்'களின் அரசியல். ஆனால், இனிவரும் ஒரு பொது வேட்பாளரை நம்பி ஐக்கிய தேசிய கட்சி இணங்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி. அதற்குரிய பாடத்தை ஜனாதிபதி மைத்திரியிடம் கற்றுக் கொண்டுவிட்டார்கள்.
இப்படி எண்களின் அரசியலைப் பார்க்கும்போது பரிதாபகரமாக நிற்பது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தான். காரணம் அவர்களின் பேச்சுக்கு ரசிகர்களாக இருக்கும் மக்கள் அவர்களின் வாக்குகளின் எண்ணிக்கையை மாத்திரம் அதிகரிப்பதில்லை. அதில் மக்கள் சரியாகவே இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களின் உரைகளின் ஊடாக மற்றைய தரப்பினரை விமர்சிக்கின்றார்களே தவிர தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த வேலைத்திட்டம் என்ன என அவர்கள் ஒருபோதும் மக்களிடம் முன்வைத்ததே இல்லை.
இதனால், மக்கள் மனதில் உள்ள அரசுகள் மீதான விமர்சனத்தை அனுரகுமார அழகாக பேசும்போது மக்கள் தங்கள் மனசாட்சியாக ரசிக்கிறார்களே தவிர, அவர்களின் வேலைத்திட்டத்தை அறிந்துகொள்ள முடியாமையால் வாக்களித்து அவர்களது எண்ணிக்கையை அதிகரிக்கிறார்கள் இல்லை. ஆக அரசியலை விமர்சனம் மட்டும் செய்துகொண்டிருப்பது ரசிப்புக்கு நன்றாக இருக்குமே தவிர, மாற்றத்திற்கு வழிவகுக்காது என்பது 'நம்ம ரசனைக்கார இளைஞர், யுவதிகளுக்கு' நாட்டு மக்கள் சொல்லும் செய்தி.
இதையெல்லாம் தாண்டி இன்னும் இரண்டு இலக்கங்கள் இந்த நாட்டில் தற்போது தலைவிதியை தீர்மானித்துக்கொண்டிருக்கிறது. அதுதான் அரசியலமைப்பில் திருத்தங்களான '18' உம் '19' உம். மஹிந்த கொண்டுவந்த 18 ஐ கீழிறக்கி மைத்திரியை அமர்த்தியவுடன் நாட்டிற்குள் கொண்டுவந்த '19' மாத்திரமே காத்திரமான வருகை. இந்த '19' மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும். இலங்கை இந்த மாதமே இரண்டு அல்ல மூன்று தேர்தல்களைக் கூட கண்டிருக்கும்.
இந்த 19ஐ நிறைவேற்றிய ஒரே விடயத்துக்காக ஜனாதிபதி மைத்திரியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இன்று அவருக்கு கோபம் தலைக்கேறி கலைக்க நினைத்தாலும் 19 விடாது. இதற்காக அவர் வரலாற்றில் இடம்பிடிப்பார். ஆனால், அடுத்து வருபவரின் இலக்கு இந்த '19' ஐ அகற்றுவதாகத்தான் இருக்கும். எனவே 19க்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு அடுத்துவரும் ஆண்டுகளில் பாராளுமன்றம் வருபவர்களிடத்திலேயே குறிப்பாக தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் வசமே உள்ளது.
(நன்றி வீரகேசரி - 15/02/2018)
(நன்றி வீரகேசரி - 15/02/2018)
0 comments