வாழ்வில் பொன்விழா, இசைத்துறையில் வைரவிழா...

January 17, 2018


அறிமுகம் தேவைப்படாத ஒரு கலைஞர்... ஒரு காலத்தில் ஒவ்வொரு வீட்டு தொலைக்காட்சியிலும்  இவரது முகம் வராத நாட்கள் இருக்காது.... சிறுவனாக வெறும்  கேள்விஞானத்தோடு இசைத்துறைக்குள் நுழைந்து    50 வருடங்களுக்கு மேலாக மொழிகளை கடந்து இலங்கை இசை உலகை தனது குரலால் கட்டிப்போட்டு வைத்துள்ள  பிரபல மெல்லிசை, திரையிசை பின்னணி பாடகர் முத்தழகு தனது பவள விழாவை எதிர்வரும் 18 ஆம் திகதி கொண்டாடுகின்றார்.  கலைஞனுக்கு வயது ஏது ...உண்மையில் முத்தழகை  பவள விழா காணும் இளைஞன்   என்றே கூற வேண்டும்... இலங்கை  இசைதுறையில் ஆறு தசாப்த்தங்களை எட்டியுள்ள இவர்  மார்க்கண்டேயனாகவே   இன்றும் மிளிர்கிறார்...

இவரது பெயர் வி. முத்தழகு. பிற்காலத்தில் முத்தழகு என்ற பெயருக்கு பின்னால் 'சூரியகுமார' என்ற பெயரும் சேர்ந்துவிட்டது. இதற்கு பிரதான காரணம் சிங்கள கலைஞர்களிடையே இவருக்கு கிடைத்த வரவேற்பும் மதிப்புமே. இன்று சிங்கள ஊடகங்களாக இருக்கட்டும், சிங் கள ரசிகர்களாக இருக்கட்டும். அவர்களது மத்தியில் சூரியகுமார  என்று சொன்னால் மாத்திரமே அவர்களால் புரிந்துக்கொள்ள முடியும் என்றளவிற்கு சிங்கள  ரசிகர்களின் மனதில் குடிகொண்டிருப்பவர் முத்தழகு. தனது இசைப்பயணம் வாழ்க்கை வரலாறு தொடர்பிலான ஆவணப்படம் ஒன்றினை வெளியிடவுள்ளார்.

 கண்டி, பேராதனையில் பிறந்து மெல்லிசைப் பாடகராக கலை உலகிற்கு வந்தவர் வி. முத்தழகு. சிங்களம், தமிழ், ஹிந்தி,உருது, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடியிருக்கிறார். மெல்லிசைப் பாடல்கள், மேடை நிகழ்ச்சிகள், திரைப்படப்பாடல்கள் என அவர் பங்களிப்பு இருந்திருக்கிறது. 1953 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 5000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

டி.எவ்.லத்தீவ் அவர்களின் இசையில் தொடர்ச்சியாக 'நான் உங்கள் தோழன்', 'நாடு போற்ற வாழ்க', 'தென்றலும் புயலும்', 'அநுராகம்', 'அவள் ஒரு ஜீவநதி', 'வாடைக்காற்று', 'கோமாளிகள்', 'ஏமாளிகள்', முதல் வண்ணத் திரைப்படமான 'ஷர்மிளாவின் இதயராகம்' போன்ற 28 தமிழ்ப்படங்களுக்கும் 05 சிங்கள சகோதர  மொழிப்பாடல்களுக்கும் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

இவருக்கு1987 இல் இந்துகலாசார அமைச்சினால் 'மெல்லிசைச் செல்வன்' என்னும் கௌரவிப்பும் SVR. கிரியேஷன்ஸ் சார்பில் 'தேசியப் பாடகர்' என்னும் கௌரவம் கிடைத்தது.  1995 இல் சிறந்த பாடகருக்கான ஜனாதிபதி விருது,  2003 இல், கலாசார அமைச்சினால் கலாபூஷணம் என பல விருதுகளைப் பெற்றுள்ளார். 

இலங்கை இசை உலகில் தொடர்ச்சியாக தன்னை தக்கவைத்துள்ள பல்லாயிரக்கணக்கான இசை ரசிகர்களை  தனது அபூர்வ குரலால் கட்டிப்போட்டுவைத்துள்ள இசைக்கலைஞர் முத்தழகுக்கு உள்ளூரில் மாத்திரமல்ல உலகளாவிய ரீதியிலும் கலைஞர்கள் இருக்கின்றார்கள் என்பது மிகவும் பெருமைக்குரிய விடயமே. தான் ஒரு தமிழ்க்கலைஞனாக இருந்தாலும் சிங்கள இசைத்துறையில் மாத்திரமல்ல சிங்கள  ரசிகர்களின் மனதிலும்   இடம்பிடித்து தமிழ்க்கலை உலகிற்கும் பெருமை சேர்த் துள்ளார் வி.முத்தழகு. ஓரிரு வார்த்தையில் அவரது இசைதுறை அனுபவத்தை அங்கு குறிப்பிட்டு விட முடியாது.  

நீண்டகால அனுபவமிக்க இவர் தான் ஒரு புகழ் பூத்த கலைஞன் என்று தற்பெருமை பேசிக்கொள்ளாது சகலருடனும் இயல்பாக பழகும் சுபாவம் கொண்ட ஒரு நல்ல கலைஞர் என்பதை அவருடன் பேசும்போது அறிந்துக்கொள்ளக் கூடியதாக இருந்தது. 

வாழ்வில் பொன்விழா, இசைத்துறையில் வைரவிழா, எனும் இரு விழாக்களை கொண்டாடும் இக்கலைஞர் எமது அலுவலகத்திற்கு  வருகை தந்திருந்த போது அவருடன் பகிர்ந்து கொண்ட விடயங்கள் இங்கு எமது வாசகர்களுக்காக.

வாழ்வில் பொன்விழா, இசைத்துறையில் வைரவிழா... காணும் நீங்கள்  இத்து றையில் உங்களது பிரவேசம், அனுபவங்கள் என்பவற்றை எம்முடன் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

இலங்கை வானொலி தேசிய சேவையின் சிறுவர் மலர்  மூலமாகவே  1953ஆம் ஆண்டு  காலப்பகுதியில் எனது இசைப்பயணம் ஆரம்பித்தது. 1957 ஆம் ஆண்டு ஹே. எம். சவாஹிரின் இசையமைப்பில் பாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.   அன்று முதல் இன்று வரை தமிழ், சிங்களம் என இரு மொழிகளிலும் தொடர்ந்து பாடிவருகின்றேன். 1957 இல் வானொலி 'தொழிலாளர் வேளை' நிகழ்ச்சியில் பாடல் பாட சந்தர்ப்பம் கிட்டியது.  

கொழும்பு, பம்பலப்பிட்டி சென்.மேரீஸ் பாடசாலையில் கல்வி பயின்றேன். கர்நாடக இசையை வித்துவான் ஏ.எஸ்.நாராயணனிடமும் இந்துஸ்தான் இசையை வானொலி, திரைப்பட இசையமைப்பாளர்  எம்.எஸ்.செல்வராஜாவிடமும் கற்றுக் கொண்டேன். 1963 இல் பாகிஸ்தானில் சாரணர் பாசறை ஜம்பொறியில் பங்குபற்றி லாகூர் சர்வகலாசாலையில் உருது மொழியில் பாடி பதக்கம் பெற்றேன். 1969 முதல் சகோதர சிங்களமொழி  'சரளக்' பாடகராக தெரிவு பெற்று  இன்றுவரை பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

1971இலிருந்து மெல்லிசை, பொப்பிசைப் பாடல்களை வானொலியில் பாடும் சந்தர்ப்பத்தையும் பெற்றுக்கொண்டேன்.  1974 இல் 'புதிய காற்று' இலங்கை தமிழ்த்திரைப்படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமானேன். உண்மையில் இப்படத்தில் கிடைத்த சந்தர்ப்பமே எனது இசைத்துறை வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியது எனலாம். இது எனது வாழ்வில் அதாவது கலைத்துறையில்  மறக்க முடியாத சந்தர்ப்பம் என்றும் கூட கூறலாம்.  தமிழ், சிங்களம் என 35 திரைப்படங்களுக்கு பாடியுள்ளேன்.  1977 இல் தனிநபர் இசை நிகழ்ச்சியாகிய 'ஸப்தஸ்வரம்'  எனும் இசை நிகழ்வை 27 தடவை மேடையேற்றியுள்ளேன்.  

 தென்னிந்திய திரைப்படப் புகழ் ஸ்ரீமதி .ம. ஜமுனாராணி, ஜிக்கி, பி.சுசிலா ஆகியோருடன் இணைந்து பாடும் வாய்ப்பு அப்போது எனக்கு கிடைத்தமை பெரும் மகிழ்ச்சியாகவே இருந்தது. 


 ஏ.எம். ராஜாவின் குரல்வளம்   உங்களுக்கும் இருக்கின்றது. இது பற்றி?

அது இயற்கையாகவே அமைந்துவிட்டது. ஆண்டவனுக்குத்தான் நன்றி கூற வேண்டும். அவர் போட்ட பிச்சைதான் இது என்றும் நான் கூறுவேன்.  பாடசாலையில் படிக்கும் போதே இக் குரல்வளம் இனம் காணப்பட்டது.  ராஜாவுக்கு நன்றிகள்.   ராஜாவின் துணைவியார் ஜிக்கியுடன் பாடும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்த போது,   நான் பாடிக்கொண்டிருந்தபோது ஜிக்கி அம்மா கண்ணீர் வடித்து விட்டார்கள்...  சிங்கள நண்பரகள்.  என்னை ராஜா என்றேஅழைப்பர்கள்...

சரளமாக சிங்களம் அறியாத நீங்கள் தமிழ் பாடல்களை விட சிங்கள பாடல்களையே அதிகமாக பாடியுள்ளீர்கள்.  இது எவ்வாறு சாத்திய மானது...?

சிங்களம் எனக்கு வாசிக்க எழுத தெரியாது. சிங்கள பாடல்களை தமிழில் எழுதித்தான் பாடுகின்றேன். ஆனால் வரிகளை தெளிவாக அழுத்தமாக பாடுகின்றேன்.  உண்மையில் தமிழை விட சிங்கள ரசிகர்களே எனக்கு அதிகமாக உள்ளனர். அதிகமான   முறை வெளிநாடுகளுக்கு சிங்கள இசை கச்சேரிகளுக்கு  என்னை அழைத்து செல்கின்றனர். அங்கு சென்றும் சிங்கள மொழியில் தான்பாடுகின்றேன். 1988 இல் சைப்பிரஸ், லெபனான் இசை நிகழ்ச்சிகளில் பங்குபற்றியது. 1994 – 95 இல் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, சுவிஸ் நாடுகளில்  இசை நிகழ்ச்சிகள். 2008, 2011, 2013 களில் தமிழ்நாடு சென்னையிலுள்ள இலங்கை துணை தூதுவராலயத்தில் சிங்கள, தமிழ்ப்புத்தாண்டு வைபவ இசை நிகழ்ச்சிகளும் 2013 இல் சென்னையில் உள்ள தூதுவராலயத்தில் இலங்கையின் 65 ஆவது சுதந்திரதின வைபவத்திலும் பாடல் நிகழ்ச்சியில் பங்குபற்றியது. தமிழகத்தின் கலைஞர்T.V , ராஜ் டி.வி. ஊடகங்களிலும் பாடிச்சிறப்பித்தமை. 2012 இல் டுபாய், சார்ஜா ஆகிய இடங்களில்  இசைநிகழ்வுகளில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை தமிழ் இசைத்துறையின் தற்போதைய நிலை குறித்து...?

 தற்போது தேக்கம் அடைந்தே காணப்படுகின்றது. தென்னிந்திய பாடல்கள் இல்லை என்றால் வானொலிகள் வேறு பாடல்கள் ஒலிக்காது  என்ற நிலையே தற்போது உள்ளன. முன்பெல்லாம் தேசிய தொலைக்காட்சி, வானொலிகளில் இலங் கை இசைக் கலைஞர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. 

இப்போது அவ்வாறான சந்தர்ப்பங்கள் மிககுறைவாகவே உள்ளது. இலங்கை இசையை தரப்படுத்துவதற்கோ ஊக்குவிப்பதற்கான களமோ இல்லை. மிக குறைவே..பொருளாதார ரீதியாக கலைஞர்களை மேம் படுத்துவதற்கான வாய்ப்புகளும். இல்லை. 

தென்னிந்திய மேலைத்தேய திரை இசையுடன் நம் இசையை ஒப்பிட்டே பார்க்கின்றனர். நம்மால் அவைகளுடன் போட்டி போட கூடியதற்கான நிலைமை போதிய ளவு இல்லை. நம் நாட்டு தமிழ் இசைத்துறை தேக்கமடைந்தே உள்ளது.  ஆனால், சிங்களத்தில் இவ்வாறு இல்லை. அவர்கள் நம் இசையை விரும்புகின்றனர். அதிகமான சந்தர்ப்பங்களை வழங்குகின்றனர்.

 இளம் தலைமுறையினருக்கு நீங்கள் கூற விரும்புவது?

இலங்கையின் இசைத்துறை என்னும் போது மெல்லிசைப் பாடல்களையே நான் குறிப்பாக சொல்ல விரும்புகிறேன். வளர்ந்து வர நினைக்கின்ற பாடக்கூடியவர்கள் இப்பாடல் துறையில் அதிக கணமும், ஈர்ப்பும் ஏற்படுத்தினால் முன்னேற்றம் காண முடியும். 

இலங்கையில் தமிழ் சினிமா வெற்றி பெறும் என்பதை நினைக்க முடியாமல் உள்ளது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பொருளாதாரம் என்பது பிரதான காரணியாக உள்ளது. அதுவே பெரும்பாலான விடயங்களை தீர்மானிக் கும் சக்தியாக இருக்கின்றது. சினிமா என்றதும் முதலீடு அதிகம் தேவைப்படும். அப்படி ஒன்று செய்து முடித்தாலும்  பண வசூலில் தோல்வி கண்டால் எல்லாம் வீண் விரயம் என்றாகிவிடும். 

இவ்வாறு முதலீடு செய்து ஒரு திரைப் படத்தை செய்தாலும் அது எந்தளவு மக் களை சென்றடையும் என்று சொல்ல முடியாது. அதற்கு பிரதான காரணம் இலங் கையில் தென்னிந்திய சினிமாவின் தாக்கம். இலங்கையில் உருவாக்கப்ட்ட பல இசை ஆக்கங்களை நான் நேரில் கேட்டிருக்கி றேன். தரமான நல்ல படைப்புக்களை இளைய தலைமுறையினர் செய்துள்ளார் கள். ஆனால்! அவர்களுக்கு உரியதளம் கிடைப்பது அரிதாக இருப்பதனால் அவர் கள் இனம்காணப்படாமல் இருப்பது வேத னைக்குரியது. சினிமா என்றதும் பாடல் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. பாடல் இல்லையேல் படம் இல்லை என்றாகிவிடும். நான் நல்ல கருத்துக்கள் கொண்ட சில குறுந்திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். பெயருக்கேற்றால் போல குறுந்தி ரைப்படமே தான். 

 அவைகள் 35mm வெள்ளித்திரைக்கு பெரும் திரைப்படங்களுடன் போட்டி போட முடியாமல் போய்விடும் குறுந் திரைப்படங்களில் பாடல்கள் கூட மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. எனவே ரசிகர்கள், மக்கள் மத்தியில் அதிகம் பேசப் படுவதாக இல்லை. கலைஞர்களுக்கு எல்லாவகையிலும் ஊக்குவிப்பு அவசியம். அதுவே அவர்களை உச்சத்தக்கு கொண்டு செல்லும். அவ் வாறான ஒரு ஊக்குவிப்பு இலங்கை தமிழ் சினிமாவில் உருவாகுமா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறி விடைபெற்றார்.

நன்றி - வீரகேசரி சங்கமம்  (13.01.2017)

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images