அரசியலும் நடிப்பும் - ஜீவா சதாசிவம்
January 05, 2018
அரசியல் என்றாலே 'நடிப்பு' என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் நடிகர்களும் அரசியலில் தமது ஆதிக்கத்தை கொண்டுள்ளார்கள். தென்னிந்திய அரசியலில் மாத்திரமல்ல, இலங்கை அரசியலிலும் இந்த 'நடிப்பு' அரசியலும் , அரசியலில் 'நடிப்பும்' காலங்காலமாக இருந்து வருகின்றது.
தமிழக அரசியலை பொறுத்தவரையில், சினிமா ஸ்டார்களின் அரசியல் ஆதிக்கம் மக்கள் மனதில் தொடர்ச்சியாக இடம்பிடித்து வந்தது. இதன் ஆரம்பம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசத்திலிருந்து ஆரம்பித்து சுமார் மூன்று தசாப்த காலம் தமிழக மக்கள் மனதில் குடிகொண்டிருந்ததை யாரும் மறந்து விட முடியாது.
கதாநாயகர்களை முதன்மையாக ஏற்றுக்கொண்ட தமிழக மக்கள் அவ்வாறல்லாதவர்களை தலைமையாக ஏற்றுக்கொள்வதில் எப்படி பின்னடைந்தார்கள் என்பதை 2016 ,அக்டோபர் மாதத்தின் பின்னர் 2017ஆம் ஆண்டு முடியும் வரையிலான காலப்பகுதி தெட்டத் தெளிவாக உணர்த்தியுள்ளது. இவ்வாறான நிலைமையில் தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் அமைந்துள்ளது. இன, மத, சாதி பேதமற்ற ஆன்மீக அரசியலை முன்னெடுத்து அதனூடாக அழுக்கடைந்த தமிழக அரசியலை தூய்மைப் படுத்துவேன் என்ற கோஷத்துடன் ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு மக்கள் என்னை ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவேன். தவறும் பட்சத்தில் தான் பதவி யேற்று மூன்று வருடங்களில் பதவியைத் துறப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் ரஜினி... இந்த அறிவிப்பு பலருக்கு சந்தோஷத்தை கொடுத்திருந்தாலும் சிலருக்கு சலிப்பையும் கொடுக்கத் தவறவில்லை.
காமராசருக்குப் பின்னர் தமிழகத்தில் மக்கள் தலைவர் என்று பெயரெடுத்த கருப்பையா மூப்பனாரும், தமிழகத்தின் முக்கிய அரசியல் திருப்பங்களுக்குப் பின்னாலிருந்த சோ.ராமசாமியும் 20 வருடங்களுக்கு முன்பே ரஜினிகாந்தை அரசியல் களத்துக்குள் அழைத்து வர ஆசைப்பட்டார்கள். அச்சந்தர்ப்பத்தில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று சில அவதானிகள் கெஞ்சிய சந்தர்ப்பங்களும் 21 வருடங்களுக்கு முன்பு இடம்பெற்றிருந்தமையும் இங்கு மறந்துவிட முடியாது. அக்காலக்கட்டத்தில் தனது அரசியல் பிரவேசத்தை கவனமாக தவிர்த்த ரஜினி தற்போது அரசியலுக்குள் வருவதாக அறிவித்து தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த முனைந்துள்ளார். .
''கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு, காலத் தின் கையில் அது இருக்கு...'' என்ற பாடலுக்கு நடித்த ரஜினிக்கு இப்போது காலம் கனிந்திருக்கிறது. இந்த கனிவு தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்றுபல்வேறு தரப்பி னராலும் கருத்துக்கள் எழும்பியுள்ளன. இந்தியாவுக்கு மாத்திரமல்ல உலகத்துக்கே ஒரு 'ஸ்டார்' ஆக இருந்த ரஜனி அரசியலிலும் தான் ஒரு 'ஸ்டார்' ஆக தன்னை வெளிப்ப டுத்துவார் என்ற எதிர்பார்ப்பு பலதரப்பினர் மனதில் இருந்தா லும், அரசியல் அறிவிப்பு க்கு பின்னர் அவர் மீது எழுப்பப் பட்டுள்ள விமர்சனங்களும் தமிழகத்தில் உள்ள சில மூத்த அரசியல்வாதி களின் அறிக்கைளும் ரஜினிக்கு பெரும் சவாலாக இருக்குமா என்றும் எண்ணத் தோன்றுகிறது.
தமிழக மக்களிலிருந்து ரஜினியை பார்ப்பதா அல்லது ரஜினியில் இருந்து
தமிழக மக்களை பார்ப்பதா? என்ற நிலைமையும் இப்போது உருவாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த 96ஆம் ஆண்டு அரசியலுக்குள் வருவதற்கு சங்கடப்பட்ட ஸ்டார் 21 ஆண்டுகளுக்குப் பின்னரான இந்த அறிவிப்புக்கு என்ன காரணமாக இருக்கும் என்று பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய இரு பிரதான கட்சிகளில் சிறந்த தலைமைத்துவம் தற்போது இல்லை என்பதை 2017ஆம் ஆண்டு தமிழக செயற்பாடுகள் தெட்டத் தெளிவாக உணர்த்தியுள்ளன. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அ.தி.மு.க.வில் ஆளுமை மிக்க தலைமை இல்லை என்பது அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்கள், பிளவுகள் என்பன தெளிவாக வெளிப்படுத்தியள்ளன.
அதேபோல, திராவிட முன்னேற்ற கழகத்தில், கலைஞர் கருணாநிதி உயிருடன் இருந்தாலும் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட முடியாதுள்ளார். அவரது வாரிசுகளிடமும் சிறந்ததொரு தலைமைத்துவம் இல்லை என்பதை அண்மையில், நடந்து முடிந்த ஆர்.கே. நகர் தேர்தலின் வெளிப்பாடும் தெளிவான பதிலை தந்துவிட்டது. ஆக இவ்விரு கட்சிகளிலும் சிறந்த தலைமைத்துவம் இல்லை என்பதை புலப்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் ஆளுமைகளாக ஜெயாவும் கருணாநிதியும் இருக்கும் காலப்பகுதியில் ரஜினி தனது அறிவிப்பை வெளியிடுவதற்கு தயங்கினார். தேர்தலில் வெற்றி, தோல்விகள் ஒரு புறமிருக்க அவர்களுக்கு ஈடு கொடுக்கின்ற வகையில் ரஜினியால் அரசியல் செய்திருக்க முடியாது என்பதை மற்றவர்களை விட ரஜினி நன்றாக அறிந்திருந்தமையினாலேயே அவர் நேரடி அரசியலில் இறங்குவதற்கு பின்வாங்கினார்.
ஹீரோவாக ரஜினியை ஏற்றுக்கொண்ட சமூகம் தலைவராக ஏற்றுக்கொள்ளுமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கின்றது. ஜெ.யின் இறப்பின் பின்னர் அதாவது 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் பின்னர் இன்று ஒரு வருடமும் கடந்து விட்ட நிலையில் இரு கட்சிகளிடையே தலைமைத்துவம் இல்லாத பட்சத்தில் பலமான , சிறந்த ஆளுமையை எதிர்பார்க்கும் தமிழக மக்களுக்கு நிவாரணமாக ரஜினியின் வருகை அமையுமா?
சுமார் மூன்று தசாப்த காலமாக திராவிட கட்சிகள் தமிழ் நாட்டை ஆட்சி செய்து வந்த நிலையில், ரஜினியின் திடீர் அறிவிப்பு திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுமா? என்றும் எண்ணத் தோன்றுகிறது. தமிழகத்தைப்பொறுத்த வரையில் திராவிட கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. இந்நிலையில் ரஜினியின் புதிய கட்சியின் உருவாக்கம் என்பது திராவிட கட்சிகளுக்கு சவாலாகவும் இருக்கின்றது எனலாம்.
தலைமைப்பதவி/ பொறுப்பு என்பது கற்ற கல்வியில் மாத்திரம் வந்துவிடாது. மக்கள் அந்த தலைமையை ஹீரோவாக ஏற்றுக்கொள்ளும் போதுதான் தலைமை தனது பதவியை சிறப்பாக கொண்டு செல்ல முடியும். சினிமாவில் மக்கள் மனதில் ஸ்டாராக இடம் பிடித்த ரஜினி அரசியல் ரீதியில் மக்கள் மனதில் ஸ்டாராக இடம்பிடிக்க முடியுமா? என்ற சவாலும் அவர் முன் இருக்கின்றது.
சமூகம் சார்ந்த, சமூக மாற்றத்துக்காக சிந்திக்கும் இளைஞர்கள் அனைவரும் சினிமாவை எடுப்பதற்கே தற்போது முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். சினிமாவில் இருப்பவர்கள் எல்லாரும் அரசியல் செய்வதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த யதார்த்த நிலைமையே இப்போது தமிழகத்தில் இருக்கின்றது.
அரசியல் சிந்தனைகளைக்கொண்டு சினிமா எடுக்க வேண்டும் என துடிதுடிப்போடு சினிமா உள்ளே வரும் இளைஞர்கள், அந்த சிந்தனைகளைக்கொண்டு மக்களுக்கான அரசியலை கையில் எடுக்காதவரை துடிதுடிப்போடு சினிமாவில் இயங்கிக் கொண்டிருக்கும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க முடியாது.
நன்றி வீரகேசரி (04.01.2017)
நன்றி வீரகேசரி (04.01.2017)
0 comments