நல்லாட்சி; அன்று 'ஒன்று' - இன்று 'இரண்டு' - நாளை? - ஜீவா சதாசிவம்

January 13, 2018இறுதியுத்தம் முடிந்த பின்னர் நம்பிக்கையிழந்திருந்த மக்களுக்கு  குறிப்பாக சிறுபான்மையின மக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திக்கொடுத்ததாக  2015ஆம் ஆண்டு  அமைந்திருந்தது என்று கூறலாம். 2015 இல் ஏற்படுத்தப்பட்ட  தேசியஅரசாங்கமே  இதற்கு பிரதான காரணம் என்று உறுதியாகக் கூறலாம். 

2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்துக்கு 08.01.2018 அன்று வயது மூன்றாகிவிட்டது. ஆனால், அரசாங்கம் வயதுக்கு தகுந்த வேலைகளை இங்கு நிறைவேற்றியிருக்கின்றதா? அதன் வலு எப்படி இருக்கின்றது என்பது பற்றியும் சற்று மீட்டிப் பார்க்க வேண்டியுள்ளது.  2015ஆண்டுக்கு கொஞ்சம் பின்நோக்கிச் சென்று அப்போதிருந்த அரசியல் சூழல், அதன் மூலம் ஏற்படுத்திய, ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களைப் பற்றி பேச வேண்டியதொரு தேவையுள்ளது. 

 தேசிய அரசாங்கத்தின் அன்றைய வேட்பாளர் பிரதிநிதிகள் வழங்கிய வாக்குறுதிகள், வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் 50வீதமானவையாவது இந்த மூன்று வருட காலப்பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்று நோக்கி னால் இல்லை என்ற முடிவுக்கே வரலாம். நல்லாட்சியின் நாளாந்த நடவடிக்கைகளினூடாக இதனை அவதானிக்கலாம். 

நாட்டில் நல்லாட்சி உருவாக்கப்படும் என பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டபோதே அப்போது இருந்த  ஆட்சி நல்லாட்சியில்லை என்கின்ற முடிவுக்கு வரவேண்டியிருந்தது. அப்போதைய ஆட்சியை  மாற்றிவிட்டால் அது நல்லாட்சி என்கின்ற புரிதலே பரவலாக ஏற்பட்டது. அதன்படி அமைந்தும் விட்டதுடன் அதற்கும் இன்று  மூன்று வயதாகிவிட்டது. உண்மையில் இந்த காலப்பகுதிக்குள் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கென வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா? அல்லது அம்மக்கள் நல்லாட்சியிடம் எதிர்ப்பார்த்த விடயங்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றதா என்பது பற்றியும் பேசவேண்டியுள்ளது. 

விடுதலைப்புலிகளை ஒழித்துவிட்டோம்  இன்று புதுயுகம் பிறந்து விட்டது என்று அன்று கூறினார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ. இந்த சம்பவம் மே மாதம் 2009 நடந்தது. அவரது அறிவித்தல் கிட்டத்தட்ட தனது நல்லாட்சியில் அனைத்து மக்களும்  சுதந்திர காற்றை சுவாசித்து வாழலாம் என்றவாறே  அமைந்திருந்தது. அதனை ஒத்ததாகவே 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்  இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ''எமது நல்லாட்சியில் (தேசிய அரசாங்கம்) இந்நாட்டு மக்கள் சகலரும் ஒரு கூடையின் கீழ் சுதந்திரமாக வாழலாம்'' என்று கூறியிருந்தார் '' .  . ஆனால் இப்போது அவ்வாறு இருக்கின்றதா?

முன்னைய ஆட்சியில் இருந்த குறைபாடுகள் பல விமர்சனத்துக்கு உள்ளாகின. குறிப்பாக ஜனநாயக மறுப்பு, சர்வாதிகாரத்தை நோக்கிய ஆட்சி, மனித உரிமை மீறல்,  போன்றன அதில் பிரதான கவனத்தைப்பெற்றன. கடந்த ஆட்சி பாராளுமன்றத்திடம் இருந்து விடுபட்டு நிறைவேற்று முறை நிறைந்ததாக இருந்து இறுதியில் குடும்ப ஆட்சிக்கு வழிவகுத்திருந்தது. இது ஜனநாயகத்தை வலுவிழக்கச்  செய்த அதேவேளை   சர்வாதிகாரத்திற்கும் வழிவகுத்தது.   

அதிகார மையப்படுத்தலை தன்வசமே வைத்துக்கொள்ள கொண்டு வரப்பட்ட பதினெட்டாவது அரசியலமைப்பு திருத்தம், ஆட்சியை நீடித்துக்கொள்வதற்காக அவசரமாக ஜனாதிபதித் தேர்தலையும் முன்கொண்டு வந்தது. ஆட்சியை மாற்ற வேண்டும் என எதிர்ப்பார்த்திருந்த மக்களுக்கு  கிடைத்த வாய்ப்பாகவும் இது அமைந்தது.  எனவே ஜனாதிபதி தேர்தலின்போதே மக்கள் நல்லாட்சிக்கான ஆரம்பத்தை கொடுத்தார்கள். 

அதற்கு பின்னதான நடைமுறைகளினால்  சர்வாதிகார குடும்ப ஆட்சி   ஆட்டம் கண்டது. அரசியலமைப்பில் 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு 18ஆவது திருத்தம் வலுவிழக்கச் செய்யப்பட்டது. நிறைவேற்று அதிகாரத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பதவிக்காலமும் மட்டுப்படுத்தப்பட்டது. எனவே மக்கள் மாற்ற வேண்டும் என தமது வாக்குகளால் வழங்கிய ஆணையை அரசாங்கம் சட்டபூர்வமாக நிறைவேற்றியமை நல்லாட்சியின் அடையாளமாகக் கொள்ள முடிந்தது. 

 17ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினூடாக தீர்மானிக்கப்பட்டும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன.  இது இவ்வாறிருக்க அடுத்த எதிர்பார்ப்பு உத்தேச அரசியல் யாப்பு. அத்தகைய யாப்பினை உருவாக்குவதற்காக மேற்கொண்ட  முயற்சிகள் ஜனநாயகத்தன்மையை காட்டி நிற்பது மகிழ்ச்சியாக இருந்தது. மக்கள் கருத்தறியும் குழு, பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாகவும் செயற்படுதல் போன்றன ஆட்சியமைப்பை தீர்மானிக்கும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கும் ஜனநாயகத்தை காட்டிநின்றது. 

இந்த முன்னெடுப்பு கடந்த டிசம்பர் மாத இறுதியில் முழுமையாக வெற்றியடையும் என பலராலும் எதிரப்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று ஏமாற்றமான சூழ்நிலையே உருவாகியுள்ளது. எதிர்பார்த்த மக்களுக்கு இன்று வரை முழுமையான பதில் இல்லை. அரசியல் சீர்திருத்த விடயத்தில். இதர நல்லெண்ண வெளிப்பாடுகள் இருந்தாலும் சில அத்தியாவசியமான விடயங்கள் குறித்து குறிப்பாக சிறுபான்மையினரின் அடிப்படை உரிமை சார் பிரச்சினைகள் குறித்து இன்னும் முழுமையான தீர்வு எட்டப்படாதிருப்பது   நல்லாட்சியின் 'ஆட்சி' யை கேள்விக்குறியாக்கியுள்ளது. 

முன்னைய அரசாங்கத்தின் ஊழலை கண்டுபிடிப்பேன், அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்த  அன்றைய ஜனாதிபதி வேட்பாளரும் இன்றைய ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினால்  இன்று முன்னெடுக்கப்பட்ட பிணைமுறி விடயம் இன்று தேசிய அரசாங்கத்தையே இரண்டாக்கும் நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. 

ஆனாலும், இந்த எல்லா முயற்சிகளும் நல்லாட்சியை உருவாக்குவதற்கான முயற்சிகளாக மாத்திரமே கொள்ளப்பட வேண்டியுள்ளது. காரணம் நல்லாட்சிக்கான ஆணையை மக்கள் வழங்கியிருந்தாலும் அதனைக் கொண்டு நடத்த வேண்டியது ஆட்சியில் பங்கேற்போரின் பொறுப்பாகிறது. அத்தகைய ஆட்சிப்பங்கேற்போர்  மக்கள் ஆணையை மட்டுமின்றி மரபு சார்ந்த முறைசாரா முறைமையொன்றுக்கும் கட்டுப்பட்டு இயங்க வேண்டிய நிலைமையில் உள்ளனர். அது சுயாதீனமாக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் மந்தமான போக்கினைக் காட்டிநிற்கின்றது. அது மக்களிடத்தில் நம்பிக்கையீனத்தையே அதிகரிக்கச் செய்கின்றது. எனவே நல்லாட்சி என்பது  இருக்கின்ற ஆட்சியை மாற்றிவிடுவது மாத்திரமல்ல.  மரபு ரீதியான அரசியல் முறைமைகளில் இருந்தும் விடுபட்டு சுயாதீனமாக செயற்படுவதில் இருந்தே ஏற்படுத்தப்படக்கூடியது. 

இந்த ஆட்சியின் தவறுக்கான நியாயங்கள் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற தவறுகளாக இருந்துவிட முடியாது. பண்பு சார் மாற்றங்களுக்கு அப்பால் மக்களின் நாளாந்த வாழ்வில் உணரக்கூடிய அபிவிருத்தியை, பொருளாதார வாய்ப்பு வசதிகளையும் மக்கள் எதிர்பார்க்கும் மக்களுக்கு அதனை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. . நல்லாட்சி என்பது மக்கள் உணர்வதாக இருக்க வேண்டும். மக்கள் ஆட்சி மாற்றத்தை உணர்கிறார்களே அன்றி நல்லாட்சி நடப்பதாக இன்னும் உணர்வு பெறவில்லை.  

இந்நிலையில் அன்று 'ஒன்று' ஆக இருந்த 'நல்லாட்சி'  இன்று 'இரண்டு' ஆக  ஆகிவிட்ட  நிலையை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்ற நிலையில் 'எத்தனை' ஆகும்  என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியிருக்கின்றது.

நன்றி - வீரகேசரி (11.01.2017)


You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images