எமது இலக்கின் செயற்பாட்டை சிறப்பாக கொண்டு செல்வதற்கான தளமே இவ்விருது - ஜீவா சதாசிவம்
December 31, 2017
சட்டத்தையும் மனித உரிமையை நிலை நாட்டு வதற்கும் (Human Rights and the Rule of Law) பிரான்ஸ் – ஜேர்மன் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விருதினைப்பெற்றுக்கொண்டவர் ஷ்றீன் அப்துல் சரூர். இவ் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. இவ்விருதுக்கு உலக நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 15 பேர்களில் இலங்கை யைச் சேர்ந்த ஷ்றீன் அப்துல் சரூர் இவ்விருதினை பெற்றுக்கொண்டமை நாட்டுக்கு மாத்திரம் அல்ல, பெண்கள் சமூகத்திற்கே பெருமை சேர்க்கும் விடயமாகும். இவ்விருதை பெற்றுக்கொண்ட ஷ்றீனுக்கு அண்மையில் அமைச்சர் மங்கள சமவீர தலைமையில் கௌரவிப்பு நிகழ்வொன்றும் இடம்பெற்றது.
1998 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையின் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் சளைக்காது தொடர்ச்சியாக தனது சேவைகளை முன்னெடுத்து வரும் சிறந்த பெண் ஆளுமையாக இருக்கும் இவர் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவே செயற்பட்டு வருகின்றார்.
சட்டத்தை நிலைநாட்டுவதற்காக மட்டுமல்ல பெண்கள் தொடர்பிலான அவர்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களது உரிமைசார் விடயங்களிலும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.
மேற்படி விருதை பெற்றுக்கொண்ட ஷ்ரீனை அண்மையில் சந்திக்கும் வாய்ப்பொன்று கிடைத்தது. இதன்போது அவர் எம்முடன் பகிர்ந்து கொண்ட விடயங்கள் எமது வாசகர்களுக்காக....
மனித உரிமைகள், குறிப்பாக பெண்கள் உரிமைகள் சார் விடயங்களில் செயற்பாட்டாளராக இருக்கும் உங்களது பின்னணி குறித்து எம்முடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து மனித உரிமைகள் சார் விடயங்களில் செயற்பட்டு வருகின்றேன். ஆசிரியர் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு விளையாட்டுத் துறையில் சிறுவயதில் இருந்தே அதீத ஈடுபாடு. தற்காப்புகலை, நூறு மீற்றர் ஓட்டம், உயரம் பாய்தல் , நீளம் பாய்தல் போன்ற பலதுறை சார் விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் இருக்கின்றது. மன்னார் கன்னியர் மடத்தில் உயர்தரம் வரை கல்வி கற்று பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவம் (Business Adminstration) என்னும் துறையில் கற்று பட்டம் பெற்று மேலதிக கற்கைக்காக வெளிநாட்டில் பயின்றேன்.
எனது கல்வியை பூர்த்தி செய்த பின்னர் சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரி, பிரதம நிறைவேற்று அதிகாரி என நல்ல நிறுவனங்களில் வேலை கிடைத்தபோதும் சில காலமே அதில் நான் பணிபுரிந்தேன்.
சமூகத்திற்கு என்னாலான சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தமையால் அதற்கு ஏற்றால் போல ஒரு வேலையை தேடிக்கொண்டேன். இவ்வாறான நிலையிலேயே கனேடியன் சீடா நிறுவனத்தில் திட்டமுகாமையாளராக இணைந்தேன். இதன் பின்னர் மனித உரிமைகள் சார் விடயங்களில் ஈடுபட்டு செயற்படுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
மனித உரிமைகள் சார் விடயத்தில் உங் களை முழுமையாக எப்போது ஈடுபடுத்திக்கொண்டீர்கள்?
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் சுமார் 75000 முஸ்லிம்களை வெளியேற்றினர். அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் எங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பெரும்பாலானவர்கள் இருந்தார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் இருந்த முகாம்களுக்கு எனது தந்தையுடன் சென்று அவர்களை பார்வையிடுவதுடன் எம்மாலான சிறிய உதவிகளையும் வழங்கி வந்தோம். இதன் பின்னர் தொடர்ச்சியாக செல்லும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் , 1998ஆம் ஆண்டு அங்கு செல்லும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தது. இது எனக்கு சந்தோஷமானதாக இருந்தது. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு என்னூடாக எதனை செய்ய முடியுமோ அதனை செய்வதற்கான வாய்ப்பை பெற்றேன்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்காக மன்னார் மாவட்டத்தில் உங்களது தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியம் , அதன் செயற்பாடுகள் பற்றி எம்முடன் ன் பகிர்ந்துக்கொள்ள முடியுமா?
1998ஆம் ஆண்டு மன்னார் சென்ற போது, அங்குள்ள பெண்கள் நிலைமைகள் பற்றி தெரிந்து கொண்ட பின்னரே அவர்களுக்காக பெண்கள் அமைப்பை ஆரம்பிப்பதற்கு என்னுடன் கல்வி கற்ற நண்பிகளுடன் கலந்துரையாடினேன். இதன்பின்னர் அருட்தந்தை சேவியர் குரூஸின் உதவியினூடாக 1999 ஆம் ஆண்டு மன்னார் மாதர் ஒன்றியத்தை ஆரம்பித்தோம். அதனை 2002 ஆம் ஆண்டு பதிவு செய்தோம்.
ஆறு பேர் சேர்ந்து ஆரம்பித்த இந்த ஒன்றியத்தில் இப்போது சுமார் 130 கிராம மாதர் அபிவிருத்தி சங்கங்கள் அங்கம் வகிக்கின்றனர். இந்த அமைப்பினூடாக பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும், அவர்களை சமூகத்தில் பொருளாதார ரீதியில் எவ்வாறு விருத்தி செய்ய முடியும் என்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு செயற்பட ஆரம்பித்தோம். இதன் ஒரு கட்டமாக வட்டியில்லா சிறு கடன் தொகையொன்றை வழங்கினோம். இதுவே எங்களது முதற்படி.
குறிப்பாக யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில், வடக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு விசேட செயற்றிட்டங்களை முன்னெடுத்து உதவிகளை வழங்கி வரும் அதேவேளை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் சார் ஆலோசனைகளை (counselling) அத்துறை சார் நிபுணர்களைக் கொண்டு வழங்குகின்றோம்.
துன்புறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகள் அதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பெண்களுக்கும் சிறுவர்களுக்குமான மாதிரி பொலிஸ் பிரிவொன்றை மன்னாரில் அமைத்து அதனூடாக அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முன்னெடுப்புகளை செய்கின்றோம். குறிப்பாக வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட விடயங்கள் தொடர்பில் விழிப்புணர்வு கொடுக்கும் அதேவேளை, அவர்களது பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கான உதவிகளை ஏற்படுத்திக்கொடுப்பது எமது பிரதான நோக்கம்.
இது இவ்வாறிருக்க, பெண்கள் செயல்பாட்டு வலையமைப்பின் ஊடாக (Women Action Network ) முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், புத்தளம், மன்னார் , அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழ், முஸ்லிம் பெண்களை உள்ளடக்கியதான வலையமைப்பொன்றை உருவாக்கி பல்வேறு பெண்கள் உரிமை சார்ந்த செயற்றிட்டங்களை செயற்படுத்தி வருகின்றோம்.
அதன் ஊடாகவே 'கோசம்' என்னும் சஞ்சிகையும் வெளியிடுகின்றோம். பல கொள்கை ரீதியான , சட்டரீதியான மாற்றங்களையும் யுத்தத்தின் பின்னராக சிறுபாண்மை பெண்களது சமாதானம், சமத்துவம் தொடர்பான பரிந்துரைகளையும் வெளிக்கொணர்வதே 'கோசம்' சஞ்சிகையின் நோக்கம்.
2010 ஆம் ஆண்டு முதல் இச்சஞ்சிகை வெளி வருகின்றது. காலாண்டு
சஞ்சிகையாக வெளிவரும் இச்சஞ்சிகையில், பெண்கள், சிறுமியர்களுக்கெதிராக எழும் பிரச்சினைகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள், பெண்களின் அரசியல் பிரகடனம் உட்பட பல தரப்பட்ட விடயங்களை இதனூடாக வெளிகொணர்ந்துள்ளோம். இவ்வாறு எழுதும் எழுத்துக்கள் சாட்சியங்களாகவும் மாறியுள்ளது. மாற்றுத்திறனாளிகளாக ஆக்கப்பட்ட பெண்களும் எம்முடன் இணைந்து செயற்படுகின்றனர். அவர்களுக்கான வலுவூட்டல்களையும் நாம் முன்னெடுக்கி ன்றோம்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் உங்களிடம் பிரதானமாக முன்வைத்த கோரிக்கை என்ன?
ஆணாதிக்க கட்டமைப்புகளும் பாராபட்சமான சட்டங்களும் மாற்றப்பட வேண்டியதே அவர்களது முக்கியமான தேவையாக இருக்கின்றது. நீதியும் உண்மையுமான கட்டமைப்பு ரீதியான மாற்றங்களையே கோருகின்றனர். குறிப்பாக யுத்தம் முடிந்த பகுதியில் யுத்த குற்றங்கள் தொடர்பான உண்மையையும் வகைப்பொறுப்பையும் நீதியையும் பெண்கள் கோருகின்றனர். வடக்கில் கூடுதலாக, பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்கள் இருக்கின்றமையால் பெண்கள் முதன்மை வருமானம் ஈட்டக்கூடியவர்களாக அரசாங்கம் கொள்கை ரீதியான முன்னெடுப்புகளை கொண்டு வர வேண்டும்.
உதாரணமாக கணவர் இல்லாத வீடுகளில் பெண்கள் முதன்மை வருமானம் ஈட்டக் கூடியவர்களாக இருப்பார்களாயின் அவர்கள் முதன்மை வருமானம் பெறக்கூடியவர்களாக மாற்றப்பட வேண்டும். மிக முக்கியமாக, இலங்கையில் இருக்கின்ற காணி அபிவிருத்திச் சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.
இலங்கையில் இருக்கும் காணி அபிவிருத்திச் சட்டத்தில் (LDO) ஆண்களுக்கு மாத்திரம் விவசாய காணி கொடுக்கும் முறைமையே இருக்கின்றது. அதனை மாற்றி பெண்களும் விவசாய காணி பெறக்கூடியவாறு அமையப்பெற வேண்டும்.
அதேபோல தனியார் சட்டங்கள் குறிப்பாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம், தேசவழமைச்சட்டம் ஆகிய இரண்டும் பாரியளவில் பெண்களை அசமத்துவ நிலையில் வைத்திருக்கின்றன. ஆகையால் மேற்கூறப்பட்ட இரண்டு சட்டங்களும் பெண்களுக்கு சம உரிமை வழங்கக் கூடிய ஒரு தளத்திற்கு வரவேண்டும்.
உதாரணமாக தேசவழமைச்சட்டத்தின் கீழ் பெண்கள் தங்களது சொத்துக்களை சுயமாக அனுபவிக்கக் கூடிய மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறி யுள்ளீர்களா?
ஆம். பாதிக்கப்பட்டவர்களுக்கூடாகவே அரசாங்கத்திற்கு அவர்களது கருத்துக்களை கொண்டுச் செல்கின்றோம். அதாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களூடாகவே இதனை செய்கின்றோம். இதன் மூலம் அவர்கள் நேரடியாகவே தமது கருத்துக்கள், கோரிக்கைகளை உரிய தரப்புக்கு சொல்லும் வழி ஏற்படுகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்காக தீர்மானம் எடுப்பவர்களாக நாம் செயற்படுவதில்லை இது எங்களது அடிப்படை நோக்கம்.
முஸ்லிம் பெண்ணாக இருக்கும் நீங்கள் ஒரு சமூக செயற்பாட்டாளராக செயற்படும் போது நீங்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு எவ்வாறு முகங்கொடுக்கின்றீர்கள்?
நான் வளர்ந்த சூழலே என்னை இவ்வாறு மாற்றியுள்ளது. தனியாக முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் மாத்திரம் நான் வளரவில்லை. பலதரப்பட்ட இனங்களுடன் பழகும் வாய்ப்பு சிறுவயதிலேயே எனக்கு அமைந்து விட்டது. இனம், மத வேற்றுமை சிறு வயதில் இருந்தே என்னிடம் இல்லை. என்னுடைய தந்தையும் என்னை ஒரு முற்போக்கான , தைரியமான பெண்ணாகவே வளர்த்துள்ளார். எனது குடும்பத்தினரும் எனக்கு எமது மதத்தை திணிக்கவில்லை. எனது மதத்தின் மீது நம்பிக்கையுடையவள். அதனை பின்பற்றுகின்றேன், நேசிக்கின்றேன். பாதிக்கப்பட்ட எமது முஸ்லிம் சமூகம் நல்லதொரு நிலைமையில் வரவேண்டும் என்பதும் எமது பிரதான நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது.
இப்போது சமூகத்திலும் மதவாதம் தலைதூக்கியிருக்கின்றது. சமயம் என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விடயம். தனியான உரிமை. அதனை திணிப்பது, ஆதிக்கம் செலுத்துவதென்பது பிரச்சினைக்குறிய விடயம். இதுவே இப்போது தலைதூக்கியிருகின்றது. இனப்பிரச்சினை முடிந்து இப்போது, மதப்பிரச்சினை உருவாகியிருக்கின்றது. இது தீவிரமாக இப்போது நிகழ்ந்து வருகின்றது.
பிரான்ஸ் -– ஜேர்மன் விருது பெற்ற நீங்கள் இது பற்றி உங்களது உணர்வு எவ் வாறு இருக்கின்றது?
மகிழ்ச்சியாக இருந்தது. இந்த விருது கிடைத்த போது இதனை ஏற்றுக்கொள்வது தொடர்பாக சிறிது சிந்திக்க வேண்டியிருந்தது. இவ்விருதைபெற்று்கொண்டால் தற்போது செய்து கொண்டிருக்கின்ற மனித உரிமை வேலைகளைத் தொடர்ந்து செய்ய முடியுமா? இல்லாவிடின் தற்போது செய்து வரும் மனித உரிமை வேலைகளுக்கு ஒரு சவால் வருமா என சிந்திக்க வேண்டிய ஒரு தேவையும் ஏற்பட்டது. ஆனாலும் கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போது இவ்விருது கிடைத்திருந்தால் இதனை கட்டாயம் நான் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன்.
பிரான்ஸ் - ஜேர்மன் தூதுவர்களிடமிருந்து விருதை பெற்றுக்கொண்ட போது... |
இப்போது இந்த விருது கிடைத்திருப்பதால் நாங்கள் மக்களுக்கு எந்தெந்த வகையில் சேவை செய்திருக்கின்றோம் என்று அரசாங்கத்திற்கு ஓரளவு தெரியும். இந்த விருது பெற்றமையினால் என்னுடன் இணைந்து செயற்படும் பெண்கள் அமைப்புகளுக்கு நிறைய வியடங்களை சாதித்துக்கொள்ள முடியும் இந்த அரசாங்கத்தின் மீது பாதிக்கப்பட்ட பெருமளவான பெண்கள் நம்பிக்கை வைத்திருந்தும் மூன்று வருடங்கள் கடந்தும் அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். இந்த விருது எமது செயற்பாட்டை சூட்சுமமாக கொண்டு செல்வதற்கு ஒரு தளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றார்.
நன்றி வீரகேசரி - 23.12.2017
நன்றி வீரகேசரி - 23.12.2017
0 comments