'முதற்கனவே' - இலங்கை கலைஞரின் புது முயற்சி - ஜீவா சதாசிவம்

December 10, 2017 இயக்குநர் ஆக வேண்டும் என்று இலங்கை இளைஞர்கள் பலர் இன்றும் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். அவ்வாறு கனவு கண்டு வயோதிப நிலை அடைந்தவர்களும் இல்லாமல் இல்லை. என்னதான் திறமை இருந்தாலும் அது நிறைவேற வேண்டுமாயின் அவர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைப்பது மிகவும் அரிது. அத்துடன் கிடைத்த வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி வெற்றிப்படியின் ஆரம்பத்தில் காலடி எடுத்து வைப்பது என்பதும் பெரும் சவாலானதொரு விடயம் தான். இதன் உண்மை நிலையை தனது கனவின் ஆரம்ப படியை 'முதற்கனவே' என்னும் குறுந்தொடர் இயக்குநர் மணிவாணனின் உணர்வு பூர்வமான உரையில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது. Open Theater தயாரிப்பில், நடராஜா மணிவாணன் இயக்கும் முதன்மை தமிழ் மொபைல் தொலைக்காட்சித் தொடர் இது. 

மலையகம், பண்டாரவளையை பிறப்பிடமாகக் கொண்டு தனது கல்வியையும் தனது பிறப்பிடத்திலேயே பெற்றுக்கொண்ட மணிவாணன்,  தான் என்றாவது ஒரு நாள் இயக்குநர் ஆகிவிட வேண்டும் என்று சுமார் எட்டு வருட கால மனப்போராட்டத்தின் மத்தியில் இடைவிடாது செய்த முயற்சி எட்டு மாதங்களில் கைகூடியுள்ளது. 

இவ்விடயமும் அவரது உணர்வுபூர்வமான உரையிலேயே அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. அவரது உரையில், இத்துறையில் சாதிக்க வேண்டும் என  தான் எத்தனித்த போது எதிர்கொண்ட சவால்களை, இதன்போது கிடைக்கப்பெற்ற அனுபவங்களை ஒரு புறம் சுவாரஸ்யமாகவும் உணர்வு பூர்வமாகவும் சபையினருடன் பகிர்ந்துக்கொண்டார். அவரது தன்னடக்கமான பணிவு கலந்த இந்த ஆரம்ப உரை அவரை இத்துறையில் உயர் இடத்துக்கு கொண்டு செல்லும்.

என்னதான் திறமை இருந்தாலும் அதனை நிறைவேற்றி தனது ஆளுமையை வெளிப்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்புக்கள் இருந்தால் மாத்திரமே எத்துறையிலும் வெற்றி கொள்ள முடியும் என்பதை இயக்குநர் மணிவாணன் தனது 'முதற் கனவே' என்னும் குறுந்தொடரின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். 
உண்மையில் இந்த வெற்றிக்கான வாய்ப்பை வழங்கிய  Dialog Axiata PLC   நிறுவனத்தினர் பெருமை கொள்ளத்தக்கவர்கள். 

ஆம், 06.11.2017 அன்று மாலை மேற்படி நிறுவன  கேட்போர்  கூடத்தில்   ''முதற் கனவே'' குறுந்தொடர் உள்ளூர் கலைஞர்கள், ஊடக நிறுவன அதிகாரிகள், ஊடகவியலாளர்கள்,  கதாபாத்திரங்களின் உறவுகள் என பல உயர் அதிகாரிகள் மத்தியில் வெளியிட்டு வைக்கப்பட்டது. எமது தமிழ் கலாசாரத்திற்கு ஏற்றாற்போல மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின. 

இந்நிகழ்வில் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரான சங்கீதா பாக்கியராஜா தனக்கே உரிய  அழகு தமிழில் 'முதற்கனவே' குறுந்தொடர் இயக்குநர்,  அங்கு வந்திருந்த முக்கிய அதிதிகள் பற்றி சிறப்பான ஒரு அறிமுகத்தை தந்திருந்தார். இத்தொடர் தயாரிப்பிற்கு மிகவும் உந்துசக்தியாக விளங்கிய Dialog Axiata பற்றியும் விரிவான விளக்கமொன்றை கொடுத்திருந்தார். 

அதனையடுத்து அதிதிகள் உரை இடம்பெற்றது. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த டயலொக் Axiata  நிறுவனத்தின் க்ளோபல் மற்றும் உள்ளடக்க சேவைகள் பிரிவின் சிரேஷ்ட பொது முகாமையாளர்  மங்கள ஹெட்டியாரச்சி உரையாற்றுகையில், தனக்கும் இயக்குநர் மணிவாணனுக்கும் எவ்வாறு உறவு ஏற்பட்டது என்பது பற்றி குறிப்பிட்டு 'முதற்கனவே' என்னும் இத்தொடர் பற்றியும் அதனை எவ்வாறு  நாம் பார்வையிட முடியும் என்பது பற்றியும் இவ்வாறு குறிப்பிடுகின்றார். 

  “டயலொக் ViU  (Dialog ViU) கொண்டுவரும் விநோதே வழங்கும் முதன்மை தமிழ் மொபைல் நாடக தயாரிப்பான இதனை எந்தவொரு  கையடக்க தொலைபேசி வலையமைப்பின் ஊடாகவும், எந்தவொரு மொபைல் சாதனத்திலும் (Device) பார்த்து இரசிக்கலாம். 

Google play Store அல்லது App Store க்கு சென்று டயலொக் ViU இனை டவுன்லோட் செய்து விநோதே மொபைல் App இன் ஊடாக எந்தவொரு இடத்திலிருந்தும் எந்தவொரு நேரத்திலும் 'முதற்கனவே' உள்ளிட்ட அனைத்து வீடியோக்களையும் விநோதே செயலியில் பார்த்து மகிழ்ச்சியடைய முடியும்.
 இந்த வகையில் டயலொக் ViU அறிமுகப்படுத்தும் விநோதே App புதிய தமிழ், சிங்கள தொலைக்காட்சி தொடர்கள், வீடியோக்கள் போன்றவற்றை உங்கள் கைகளுக்கு கொண்டு வந்து தரும் புதிய App ஆகும். இதன்மூலம் அனைத்து டயலொக் வாடிக்கையாளர்களும் 12 மாதங்களுக்கு மாதாந்த கட்டணங்கள் இன்றியும் ஏனைய கையடக்க தொலைபேசி வலையமைப்பு வாடிக்கையாளர்கள் 2 மாதங்களுக்கு மாதாந்த கட்டணங்கள் இன்றியும் வீடியோ உள்ளடக்கங்களை பார்த்து மகிழ்வதற்கான வாய்ப்பினை டயலொக் Axiata நிறுவனம் வழங்கியுள்ளது. என்று படக்குழுவையும் வாழ்த்தி விடைபெற்றார்.  

இத்திரைப்படத்தை பற்றி மூத்த கலைஞர்களில் ஒருவரான கே.சந்திரசேகரன் தனது அனுபவங்களுடன் பல கருத்துக்களை முன்வைத்திருந்தார். இக்குறுந்தொடரில் உள்ள மொழியாள்கை பற்றியே பிரதானமாக சுட்டிக்காட்டி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துச்சென்றார். 

இலங்கையைச் சேர்ந்த இளம் கலைஞர்களான ஜெராட் நோயல், ஸ்ரீதேவி, ராஜஸ்ரீ, ஜெயசோதி, ஷாந்தா உள்ளிட்ட இலங்கையின் புகழ்பெற்ற தமிழ்க்கலைஞர்கள் இந்த மொபைல் நாடகத்தில் நடித்துள்ளனர். 

கதைப்பற்றி...

கதாநாயகன், கதாநாயகி இருவரும் காதல் வசப்பட்டு தங்களின் அன்பினை பரிமாற்றிக்கொண்டாலும், பின்னர் கதாநாயகியின் வீட்டில் அவருக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவருடனேயே கதாநாயகிக்கு திருமணம் நடைபெறுகின்றது. இதன் பின்னர் ஏற்படும் கருத்து
வேறுபாடுகள் காரணமாக தம்பதிகள் பிரிந்த நிலையில், கதாநாயகி தன்னை இன்னும் நேசித்துக் கொண்டிருக்கும் காதலனை சந்திக்கும்போது ஏற்படும் நிலைமைகள், காதலர்கள் இரு வீட்டாரினதும் எதிர்ப்புகளை எவ்வாறு சமாளிக்கின்றார்கள் என்பதை பற்றியதே “முதற்கனவே” கதையின் சாரம்சமாகும்.

புதிய தலைமுறைக்கு ஏற்றவகையில், புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதன்மை மொபைல் நாடகத்தொடராகும். அன்று வந்திருந்த பார்வையாளர்களுக்காக Editor Cut என்று படத்தயாரிப்புக் குழுவினரால் காட்சிப்படுத்தப்பட்ட இத்தொடர் சுருக்கம் பற்றி ஒரு சில விடயங்களை இங்கு குறிப்பிட வேண்டும். 

சுமார் 95 சதவீதமான படப்பிடிப்புக்கள் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அனைத்தும் மிகவும் பிரமாதமாகவே அமைந்திருக்கின்றன.  சில காட்சிகளின் ஒழுங்கமைப்புக்கள்  தென்னிந்திய சினிமாவைத் தொட்டுள்ளன எனலாம்.

உண்மையில் உள்ளூரிலும் இப்படி கலைஞர்கள் இருக்கின்றார்களா என்று பெருமிதம் கொள்ள வைத்தது  முதற்கனவே கதாநாயகனின் நடிப்புத்திறமை. உண்மையில் அவரது நடிப்பு இயற்கையாகவே அமைந்திருந்தது. ஒவ்வொரு காட்சியிலும் அவர் தனது உணர்வுகளை உண்மையாகவே வெளிப்படுத்தி யிருந்தார். இது என்னுடைய கருத்து மாத்திரம் அல்ல. அங்கு வந்திருந்தவர்களின் கருத்தாகவும் அமைந்திருந்தது. 

கதாநாயகியின் நடிப்பும் சிறப்பாக அமைந்திருந்தது. ஏனைய கலை ஞர்களின் நடிப்பும் சிறப்பு. முதற்படைப்பு என்னும் போது இதில் சில குறைகளை மாத்திரம் சுட்டிக்காட்டலாம். ஒளி,ஒலி, வீடியோ காட்சிகள் குரல் வளம் என்பன சிறப்பாகவே அமைந்திருந்தன. உண்மையில் இயக்குநர் மணிவாணனின் தொடர் முயற்சியில் வெளிவந்த இந்த தொடரை  https://www.dialog.lk/dialogviu/ என் இணைய முகவரியினூடாக பார்வையிடலாம். 

வெற்றியின் முதல் படியில் காலடி எடுத்து வைத்துள்ள இயக்குநர், அவரது குழுவை வாழ்த்துவோமாக....
சாப்பிட்டதையும்  செொல்லனும் தானே...

நன்றி வீரகேசரி -சங்கமம்

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images