தமிழ் உள்ளவரை புலம்பெயர் இலக்கியம் வாழும் - ஜீவா சதாசிவம்

December 16, 2017

எழுத்துலகிற்கு பிரவேசித்த ஆரம்பத்திலேயே தனது ஊர்ப்பெ யரை தனது பெயருடன்  இணைத்து  பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில் 
'வவுனியூர் இரா. உதயணன்' என எழுத்துத்துறையில் கால்பதித்து இன்று சுமார் நான்கு தசாப்தங்களை எட்டியுள்ளார் புலம்பெயர் எழுத்தாளர் இரா.உதயணன்.  இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து இன்று லண்டனில்  கணக்கியல் துறையில்  தனது நிரந்தர தொழிலைக் கொண்டிருந்தாலும் தான் பிறந்த மண்ணின் சிந்தனையில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளதுடன்  இப்போதும் எழுதி வருகின்றார். 

இலங்கையில் உள்ள எழுத்தாளர் ஒருவரின் நாவல் முதன் முதலில் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்றால் அது வவுனியூர்  இரா. உதயனனின் நாவல் என்பதைக் குறிப்பிடலாம்.  இரண்டு சிறுகதைகள், ஆறு நாவல்கள் உட்பட மொத்தமாக எட்டு நூல்களை எழுதியுள்ளார்.   இவர் எழுதிய 'விதி வரைந்த பாதை' எனும் நூல் சாஹித்திய விருதைப்பெற்றுள்ளது.

புலம்பெயர்ந்து சென்று தான் உண்டு தனது வேலையுண்டு என்றிருக்காமல் இலங்கையில் உள்ள எழுத்தாளர்களை தொடர்ச்சியாக ஊக்குவித்து அவர்கள் மேலும் இத்துறையில் கால்பதிக்க வேண்டும் என்ற நோக்கில்  'உதயணன் இலக்கிய விருது' என்று அரவது பெயரிலேயே பல்துறைசார் ஆளுமைகளுக்கு விருது  வழங்கி வருகின்றார். 

அந்தவகையில் இன்று இரண்டாவது வருடமாக கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இவ்விருது விழா நடைபெறவுள்ள நிலையில், இவ்விழா தொடர்பிலும் புலம்பெயர் இலக்கிய நிலைமைகள் தொடர்பிலும் இரா.உதயணனுடன் பகிர்ந்து கொண்ட விடயங்கள் எமது வாசகர்களுக்காக. 

கேள்வி : புலம்பெயர் இலக்கியம் தற்போது எப்படி உள்ளது?

இன்னும் இரண்டு தலைமுறையினருக்கு பின்னர் 'புலம்பெயர் இலக்கியம்' இல்லாமல் போகக் கூடியதான நிலைமையே தற்போது இருக்கின்றது. அதற்கு பிரதான காரணம் மொழி. அங்குள்ள பிள்ளைகள் தமிழ் மொழியை படித்து அதில்மிகத் தரமான சித்தியைப் பெறுகின்றனர். பெற்றோர்களின் விருப்பத்தின் காரணமாகவே தமிழை அப்பிள்ளைகள் கற்க வேண்டிய தேவை இருக்கின்றது. இவ்வாறு சித்தியடைந்த பின்னர் தொடர்ச்சியாக தமிழ் புத்தகங்கள் வாசிப்பதோ அல்லது தமிழ்  மொழியில்  எழுதுவதென்பதோ வலு குறைவாகவே இருக்கின்றது. 

இவ்வாறான நிலையில் அப்பிள்ளைகளுக்கு தமிழ் மொழி சிந்தனா மொழியாக இருப்பதில்லை. எந்த மொழியை சிந்தனா மொழியாக கொண்டுள்ளார்களோ அம்மொழியிலேயே எழுத்து ஆளுமையை வெளிகொணர முடியும் என்பது யதார்த்தம். இப்பிள்ளைகள் கற்ற இடம், வேலை செய்யும் இடம், உட்பட பலதரபட்ட விடயங்களை கையாள்வதற்கு அந்நாட்டு மொழியையே பயன்படுத்தவேண்டிய நிலையிலுள்ளனர்.  இந்நிலையில் தமிழ் மொழியை அவர்கள் தம்மிடம் தக்கவைத்துக்கொ ள்வதில் சிக்கல்களும் இருக்கின்றது அல்லவா? தமிழை படித்திருந்தாலும் அவர்களிடமிருந்து எழுத்தாற்றலை எதிர்ப்பார்க்க முடியாது. 

ஆனால், தமிழ்ப்பெயருடன் அந் நாட்டு மொழியுடன் இலக்கியக் கட்டுரைகளோ, நூல்களோ வெளிவரலாம். இவ்வாறான நிலைமையே தற்போதும் உருவாகிக் கொண்டிருக்கின்றது. விரல் விட்டு எண்ணக் கூடியவர் களே தமிழில் எழுதக் கூடியவர்களாக இருப்பார்கள்.

புலம்பெயர் இலக்கியம் படைக்கும் உங்களது எழுத்துக்கள் உயிர்த்துடிப்புள் ளவையாக இருக்கின்றது. உள்ளூரில் அல்லாத நீங்கள் இதனை எவ்வாறு கையா ளுகின்றீர்கள்?
 என்னுடைய எழுத்துக்கள் நேரடியான களப்பார்வையாகவே இருக்கும். போருக்குப்பின்னர், நான் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்கள், விதவைப்பெண்கள் உட்பட பலரையும் நேரடியாகச் சந்தித்துள்ளேன்.  எனது கதை களத்திற்கு அவர்களையே பயன் படுத்தியுள்ளேன். எனது எழுத்துக்களை அழகூட்டி எழுதுவேன். ஆனால்,  புனைவுகளாக படைப்பதில்லை. 

 சுனாமியின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட பலதரப்பினரையும் சந்தித்து பல கதைகளை எழுதியிருந்தேன். பாதிக்கப்பட்ட பல இடங்களும் சென்றிருந்தேன். நான் கண்ட அனுப வங்கள், சம்பவங்களே எனது எழுத்தில் இருக்கும். எழுதும் போது கருவுக்கு பஞ்சம் இருக்காது. எல்லா  எழுத்துக்களையும் சமூகத்துடனேயே இணைத்துக் கொள்வேன். 
 ஆரம்ப கால கட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட சிறுகதைகள் ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்நது வீரகேசரி,  தினக்குரல் மற்றும் பல சஞ்சிகைகளில் எனக்கு எழுதுவதற்கு களம் கிடைத்தது. அதனையே இன்றும் தொடர்கின்றேன். உண்மையில் எனக்கு களம் தந்தவர்களை இவ்விடத் தில் நினைகூற வேண்டும். 

சிறுகதைகளை விட நாவல்களையே அதிகமாக எழுதியுள்ளீர்கள். இந்நிலையில் நாவல்களில்  சுவாரஸ்யமான அனுபவ ங்களை எவ்வாறு கொண்டு செல்லலாம்?
நாவல் எழுத ஆயத்தமாகும் முன்பு எந்த இடத்தில்  ஆரம்பிக்கப்போகின்றீர்கள், எத்தனை கதாப்பாத்திரம், உங்களது முடிவு என்னவாக இருக்க வேண்டும், இடையிடையே ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்ன விடயத்தை நோக்கப்போகின்றீர்கள் என்றவாறு ஒழுங்கு படுத்திவிட்டு அதிலிருந்து நாம் எழுதத் தொடங்கும்போது நாவலில் ஒழுங்கும், அதனை உயிரோட்டத்துடன் கொண்டு செல்வதற்கும்  வசதி யாக இருக்கும். இவ்வாறான உத்திகளையே நான் கையாளுகின்றேன்.

சிறுகதைகளை விட நாவல்கள் எழுதுவதில் அதிகளவான ஈடுபாடு இருக்க காரணம்?
சிறுகதை எழுதினால் அதனை ஒரு கட்டத்திற்குள் முடித்துவிட வேண்டும். ஆனால், நாவல் எனும் போது அது ஒரு பரந்த பரப்பாக இருக்கின்றது. இவ்வாறான  நிலையில்  கதைக்கான கருவை எடுத்துக்கொள்ளும் போது சொல்ல வந்த விடயத்தை விரித்து கூறிச் செல்லக்கூடியதாக இருக்கும். 
 என்னுடைய கதை கரு களத்துடன் நேரடியான தொடர்புகொண்டது. ஆகையால் அதில் பாத்திர வடிவமைப்பும் நேரடியானதாகவும் மிக உணர்வு பூர்வமானதாகவும் இருக்கும் இதனை வெறுமனே சிறுகதைகளில் ஒரு கதையாக சொல்லி விட முடி யாது. ஆகையால் இவ்வாறான கதை களங்களை உயிர்ப்புடன் நாவலில் பயன்படுத்துவேன். 

கணக்கியல் துறையை சேர்ந்த நீங்கள் இடைவிடாது எழுத்துறையை எவ்வாறு கையாளுகின்றீர்கள்?
தமிழ், ஆங்கில எழுத்துத்துறையில்  சிறுவயதில் இருந்தே ஆர்வம் இருந்தது. சிறு சிறு கட்டுரைகளை எழுதுவேன். அதன் தொடர்ச்சியே எழுத்துத்துறையில் ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது. தொழிற்துறை கணக் கியலாக இருந்தாலும் எழுத்துத் துறை எனக்கு சிரமம் இல்லை. 

உங்களது   மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றி?
ஹிந்தியில் –-3, மலையாளம் -–3, சிங்களம்– -4 ஆகிய மொழிகளில் எனது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. நான் எழுதிய தமிழ் நூலையே லண்டனில் உள்ள இளம் தலைமுறையினருக்காக அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக ஆங்கிலத் தில் நானே மொழிப்பெயர்த்தேன். 

இலங்கையில் முதன் முறையாக  உங்களது நூலே ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு டில்லியில் வெளியிடப்பட்டது. இது பற்றி எம் முடன் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்த பேராசிரியர் பாலசுப்பிரமணியம் என்பவரே எனது நாவலை மொழிபெயர்த்துள்ளார். இவர் தொல் காப்பியம் உட்பட பல முக்கியமான நூல்களை தமி ழில் இருந்து  ஹிந்திக்கு மொழிப்பெயர்த்துள்ளார். சாஹித்திய அகடமியில் மொழிபெயர்ப்பு குழுவின் உறுப்பினராகவும் இவர் இருக்கின்றார். 

எனது நாவல் ஹிந்திக்கு மொழி  பெயர்ப்பு செய்ததன் பின்னர் அங்குள்ள சாதாரண (வட இந்தியா) மக்களுக்கும் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையாண பிரச்சினையை புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. இதனை எனது மொழிபெயர்ப்பு நூல் டில்லியில் வெளியானதன் பின்னர் அங்குள்ள பத்திரிகைகளில் வெளிவந்த விமர்சனங்களின் ஊடாகவும் இந்நூல்கள் தொடர்பில் அங்கு இடம்பெற்ற பல கலந்துரையாடல்களின் ஊடாகவும் அறிந்துக் கொள்ளக் கூடியதாக  இருந்தது.  உண்மையில் இவ்விடயம் மனதுக்கு மகிழ்ச்சியையும் தந்தது. 

இலக்கிய நண்பர்கள்-?
எழுத்துலகத்தைப் பொறுத்த வரையில் புலம்பெயர் நண்பர்களைவிட இலங்கையிலேயே அதிகளவான நண்பர்கள் இருக்கின்றனர். 

எழுத்துலகின் குரு என்று யாராவது இருக் கின்றார்களா?
சசி பாரதி என்பவரை இவ்விடத்தில் நான் நினைவுபடுத்த வேண்டும். சிறுகதைத்துறையில் என்னை வெளி உலகுக்கு கொண்டு வந்தவர் சசிபாரதி. அவரையடுத்து இப்போது சின்னப்பப்பாரதி இரு க்கின்றார். நான் எழுதும் எழுத்துக்களுக்கானதிருத்த ங்கள், சில ஆலோசனைகளை அவரிடமே கேட்டுக் கொள்வேன்.  

நீங்கள் எழுதிய நூல்களில் உங்களுக்கு பிடித்த நூல்-
'பனிநிலவு', 'வலியின் சுமைகள்' ஆகிய நாவல்கள்  எனக்கு மிகவும் விருப்பம். நேரடி சம்பவங்களுடன் தொடர்புடைய அனுபவத்துடன் எழுதிய நாவல்கள் இது. 

 எதிர்கால எழுத்துத் துறையில் புலம்பெயர் பெண்களின் பங்களிப்பு பற்றி?
தமிழ் இலக்கியம், தமிழ் இருந்தால் எதிர்காலத்தில் பெண் களும் எழுத்துத்துறைக்குள் வருவார்கள்.  இது  தான் புலம்பெயர் இலக்கிய நிலைமை. 

இன்று இடம்பெறவுள்ள 'உதயணன் விருது' விழா பற்றி கூற முடியுமா?

இவ்விருது விழா இலங்கையில் இரண்டாவது வருடமாக இன்று மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இடம்பெறவுள்ளது. இவ்விழாவில் 15 துறைகளைச் சேர்ந்தவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். இலங்கை இலக்கியத்தை வலுப்படுத்தவும் இங்குள்ள எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவே இலங்கை – லண்டன் இலக்கிய நிறுவகம் உருவாக்கப் பட்டு  அதனூடாக இவ்வாறான விருது விழாக்களை நடத்தி வருகின்றோம். இது அவர்களுக்கு ஒரு ஊக்குவிப்பாகவே இருக்கும் என்று நினைக்கின்றேன்.           

நன்றி வீரகேசரி - சங்கமம் (16.12.2017)


You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images