தகவல் அறியும் உரிமையும் ஊடகவியலாளரும் - ஜீவா சதாசிவம்

December 14, 2017


நீண்ட வரலாறு கொண்ட ஊடகவியலை மேலும் பலப்படுத்தும்  வகையில்  'தகவல் அறியும் உரிமைச் சட்டம்'  முறைமையை இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தி இன்று ஒரு வருடத்தையும் கடந்துள்ளது. இவ்வாறு ஒரு வருடத்தைக் கடந்துள்ள நிலையில் அது மக்கள் மத்தியில் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் அச்சட்டத்தை பயன்படுத்தி  ஊடகவியலில்  ஊடகவியலாளர்கள் அதனை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்ற கேள்வி பல் துறைசார்ந்தவர்கள்  மத்தியில் எழுந்துள்ளது. அதற்கமைய இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  அத்துறை சார்  நிறுவனத்தினர், அதிகாரிகள் தகவல் அறியும் சட்டம் தொடர்பில் தேர்ச்சிபெற்ற அதிகாரிகள், சட்டத்தரணிகளை கொண்டு நாடளாவிய ரீதியில் தற்போது பல விழிப்புணர்வு செயலமர்வுகளை  முன்னெடுத்து வருகின்றனர். 

இதற்கமைய அண்மையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த அத்தகையதொரு கலந்துரையாடலில் பங்குகொண்டபோது  அதனை நெறிப்படுத்திய இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) நிறைவேற்று அதிகாரி குமார் லோப்பஸ்,   சட்டத்தரணி ஐங்கரன் ஆகியோர் தகவல் உரிமைச்சட்டம் தொடர்பில் பலதரப்பட்ட விடயங்கள் இதுவரையில்  எந்த நிலையில் உள்ளது. அதனை ஊடகவியலாளர் இதுவரை ஆர்வமாக பயன்படுத்துவதற்கு முன்வந்துள்ளனரா? என்பது பற்றிய விடயங்களை  இதன்போது பகிர்ந்துகொண்டனர்.  'தகவலறியும் உரிமையும் ஊடகவியலாளரும்' என்ற தொனிப்பொருளுக்கு அமைவாகவே இது அமைந்திருந்தது. 

 அவ்விடயம் குறித்தே  இவ்வார 'அலசல்' ஆராய்கிறது. 

 2016ஆம்  ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி  'தகவல் அறியும் சட்டம்'  கொண்டு வரப்பட்டு 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அதாவது சுதந்திர தினத்தோடு அமுல்படுத்தப்பட்டது. அவ்வாறு அமுல்படுத்தப்பட்டு  இன்று பத்து மாதங்கள் கடந்துவிட்டன. இக்காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் உட்பட பல பகுதிகளில் இருந்து அதாவது கிராமப்புற மட்டத்திலேயே இது தொடர்பில் பயன்பாட்டு அக்கறை  இருக்கின்றது. 

ஆனால், ஊடகவியலாளர்கள்  இச்சட்டத்தை பயன்படுத்துவது மிகவும் குறைவாகவே இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய சட்டத்தரணி ஐங்கரன், ஒரு ஊடகவியலாளர் எவ்வாறு இதனை பயன்படுத்த வேண்டும், அவ்வாறு பயன்படுத்தவதன் அவசியம் என்ன என்பது பற்றிய தெளிவான விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார். 

'இந்த சட்டத்தின் மூலம் ஊடகவியலாளர் ஒருவர் ஒரு புலனாய்வு/ சிறப்புக் கட்டுரையொன்றை அறிக்கையிடும் போது நூறுவீதம் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்களையே பிரசுரிக்க முடியும். இவ்வாறு அமையும் போது அது ஒரு பக்கச்சார்பான கட்டுரையாக  அமையாது. அத்துடன் பொதுமக்கள் சார் விடயங்கள் தொடர்பில் இதில் உள்ளடக்கப்படும்போது  பலரது கேள்விகளுக்கான பதிலாக அமையக்கூடிய வழியை இந்த தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஏற்படுத்திக் கொள்ளலாம். 

இது ஒரு புறமிருக்க, இச்சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒரு ஊடகவியலாளர் தமது கட்டுரைக்கு தகவல்களை பெற முற்படும் போது அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக வாய்ப்பிருகின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்ட மறக்கவில்லை. 

தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி தகவல்களை பெற முயன்ற ஊடகவியலாளர்கள் பலர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதனால், இதுவரையில் சிலர் கொல்லபட்டுள்ளதாகவும்  இச்சம்பவம் இந்தியாவிலேயே இடம்பெற்றதாகவும் இதன்போது ஐங்கரன் சுட்டிக்காட்டி   இவ்வாறான ஆபத்துக்களில் இருந்து தம்மை விலக்கி எவ்வாறு தகவலறியும் சட்டத்தை பயன்படுத்துவது என்பதாக அவரது விளக்கம் அமைந்திருந்தது. 

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) நிறைவேற்று அதிகாரி குமார் லோப்பஸ் இதன்போது கருத்து தெரிவிக்கையில், ஊடகவியலாளர்கள் இச்சட்டமூலத்தின் தன்மையை புரிந்து இதனை முழுமையாக பயன்படுத்துவதற்கு முன்வர வேண்டும். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கொண்டு வந்த இந்த சட்டத்தை ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்களும் பயன்படுத்தி முழுமையாக பயன்பெற வேண்டும் என்ற நோக்கிலேயே நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில் இது தொடர்பில் செயலமர்வுகளை நடத்தி வருகின்றோம். 

இதில் ஊடகவியலாளர்கள் முழுமையான பயனைப்பெற்று இதனை செயற்படுத்துவதற்கு முன்வரவேண்டும். அத்துடன் இதனை பயன்படுத்தும்போது உள்ள  சிக்கல்கள் தொடர்பிலும் அவர் சுட்டிகாட்டினார்.  

ஜனநாயக நாடொன்றில் ஊடகத்துறையினர் வகிக்கும் பங்கு மிகவும் முக்கியமானதொன்று. மக்களால் தெரிவு செய்யப்படாத, மக்கள் பிரதிநிதிகளாகிய ஊடகவியலாளர்கள் நாட்டு மக்களின் அதிகாரங்களை கொண்ட நான்காம் தரப்பினர்.

 ஜனநாயக நாடொன்றில் நான்காவது தூணாக (4th Estate) விளங்கும் ஊடகம் ,  ஊடகவியலாளர்கள் ஒரு சமூக பொறுப்பு மிக்க சமூகவிஞ்ஞானிகளாவர். இதனை அறிமலேயே இன்று ஊடகவியலாளர்கள் பலர் செயற்படுகின்றனர் என்பதும் மறப்பதற்கில்லை.  அந்த வகையில் மக்களுக்கு சரியான அதாவது மக்கள் தெரியாமல் அங்கலாய்க்கும்  விடயம் தொடர்பில் முழுமையான அறிக்கையிடல் ஒன்றை ஆதாரத்துடன் நிறுவுவதற்கும் இந்த தகவல் உரிமைச்சட்டம் துணையாக இருக்கின்றது. 

உண்மையில்  ஆனால், தகவலறியும் சட்டமூலத்தை செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவானது ஏப்பிரல் மாதமளவிலேயே செயற்பட ஆரம்பித்துள்ளது. அது செயற்பட ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்து இன்று வரை சுமார் 314 வரையிலான மேன் முறையீடுகள் கிடைக்கப்பெற்று அதில் 80 வரையானவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள அதிகாரியொருவர் தெரிவித்தார். 

இங்கு முக்கியமான விடயம் ஒன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும். மேற்படி சட்டத்தை கொண்டு வந்த அரசாங்கம் அதனை அமுல்படுத்திவிட்டு  இந்நாட்டு பிரஜைகள் இதனை பயன்படுத்தி பலன்பெற முடியும். ஊழல்களை  ஒழிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும் அதனை செயற்படுத்துவதற்கான அனைத்து சுதந்திரங்களையும் இவ்விரு தரப்பினருக்கும் வழங்க வேண்டும். ஏனெனில், சமூக நலன் சார் விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து எழுதுவதற்கு முனையும் ஒரு அச்சுறுத்தப்படும் நிலைமையே காணப்படுகின்றது. 

அந்த வகையில் கடந்த பல காலங்களில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் உண்மையை வெளிக்கொணர்வதற்கு விரைந்து தம் உயிரையே மாய்த்துக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.  அவ்வாறானதொரு நிலைமை இந்த தகவல் அறியும் சட்டத்தை பாவித்து எழுதுவதன் மூலம் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுமா? என்ற அச்சமும் இருக்கின்றது. இலங்கையைப்பொறுத்தவரையில்  இதற்கு ஒரு விஷேட வரலாறே உண்டு. இது இவ்வாறிருக்க, தகவல் அறியும் சட்டத்திற்கு அமைவாக விடயங்களை பெற முனையும் பிரஜைகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையே சார்ந்தது. இதனால், குறிப்பிட்ட தரப்பினர்,  எவ்வித பழிவாங்கல்களுக்கும் உட்படுத்தப்படாத நிலை உருவாக்கப்பட வேண்டும். 

2003 ஆம் ஆண்டளவில் இவ்வாறானதொரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று சிலதரப்பினால் கோரப்பட்ட போதிலும் 2017ஆம் ஆண்டே இதனை அமுல்படுத்துவதற்கான வாய்ப்பும் கிடைத்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

தகவல் அறியும் சட்டம் பல வருடகாலமாக அமுலில் இருக்கும் நாடுகளிலும் இதனை பிரஜைகள் பயன்படுத்தும் போது பல்வேறு பிரச்சினைகள், சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஆக,  அரச அதிகாரிகளை அணுகி  அவர்களிடமிருந்து தகவல்களை பெறுவதற்கான உரிமையை பிரஜைகள் பெற்றுக்கொள்வது சிறந்தது.  

இவ்வாறு  தகவல்களை பெற வரும் பிரஜைகளை அதற்கேற்றாற்போல அணுகி அவர்களுக்கு தகவல்களை வழங்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அரச அதிகாரிகளையே சார்ந்தது. பிரஜைகளும் அதிகாரிகளும் ஓர் இணக்கத்துடன் செயற்பட்டால் மாத்திரமே  இச்சட்டம் ஜனநாயக நாட்டில்  சிறப்பாக  அமுலில் இருக்கும் என்பதுடன் ஊழல்களையும் நிவர்த்திக்க முடியும். 

வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் ஆதாரமில்லாத செய்திகளையும்  அனுமானங்களையும்  வைத்து செய்தியாக்குவதில் காட்டுகின்ற ஆர்வத்தை விடுத்து   ஆதார பூரவமாக செய்திகளை வழங்கும் சூழல் இலங்கையில் இப்போது இருக்கின்றது. 

அதே நேரத்தில் ஊடக சுதந்திரமும் முன்பிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு கூடுதல் சுதந்திரமாகவே இப்போதைய நிலைமை காணப்படுகின்றது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்தி எந்தவொரு செய்தியாக இருந்தாலும் அதனை ஊர்ஜிதப்படுத்தி வழங்குவதற்கான செயற்பாடுகளே ஊடகவியலுக்கு காத்திரமான விடயம். இதனை ஊடகவியலாளர்கள் முழுமையாக பயன் படுத்திக்கொள்வார்களா?

நன்றி வீரகேசரி (14.12.2017)

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images