தேர்தல்களும் தாவல்களும் - ஜீவா சதாசிவம்
December 22, 2017
தேர்தல் காலத் திருவிழாக்கள் ஆரம்பித்த பின்னர் சகலரது காதுகளிலும் ஒலிக்கும் ஒரு சொல் 'தாவல்கள்'. அந்த வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெறும் என சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட உடனேயே கட்சித்தாவல்கள் தொடர்பான பேரம்பேசல்கள் ஆரம்பித்துவிட்டன. இடம்பெற்ற பேரம்பேசல்களுக்கு அமைய இன்று கிரமமாக நாளாந்தம் கட்சித்தாவல்கள் இடம்பெற்று வருகின்றன.
ஊடகங்களின் நாளாந்த செய்தியாகவும் இதனை அவதானிக்கின்றோம். இந்த தாவல்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் இருந்து பல நையாண்டியான, நகைச் சுவையான கருத்துக்களையும் கேட்கத் தவறவில்லை. இந்த கட்சித் தாவல்கள் வெறுமனே இந்தத் தேர்தலுக்கு மாத்திரமா என்று பார்த்தால் இல்லை என்று தாராளமாகக் கூறலாம். ஏனெனில், குட்டி தேர்தல் முதல் மெகா தேர்தல்கள் வரை இவ்வாறான நிலைமையே காணப்படுகின்றது.
இவ்வாறான தாவல்கள் இருப்பதாலேயே இன்று பல முதிர்ச்சியடைந்த அரசியல் வாதிக ளும் வளர்ந்து வரும் சில அரசியல்வாதிகளும் தம்மை அரசியலில் தக்கவைத்துக் கொள்ள சிறந்த உத்தியாகவே இந்த தாவல்களை கையாளுகின்றனர் என்பது கண்கூடாக காணக்கூடி யதாக இருக்கின்றது.
கட்சித்தாவல் என்பது ஒரு தடைசெய்யப்பட்ட விடயமாகவே பல நாடு களில் சட்ட முறைமையாக இருக்கின்றது. அந்தவகையில், இலங்கையில் கட்சித்தாவல்களுக்கு ஒரு வரலாறு உண்டு என்பதையும் நாம் இங்கு மறந்து விட முடியாது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதலாவதாக கட்சித்தாவல் அதாவது ஆளுங்கட்சியிலிருந்து விலகிச்சென்ற பெருமை எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டார நாயக்கவையே சாரும். 1951ஆம் ஆண்டில்ஆ ளும் கட்சியான ஐ.தே.கவிலிருந்து விலகினார்.
1964ஆம் ஆண்டு சி.பி.த.சில்வா 13 எம்.பி.க்.களுடன் அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சியில் இணைந்தார். அக்காலகட்டங்களில் நாட்டை வழிநடத்திய சோல்பரி அரசியல் யாப்பில் கட்சி தாவுவதற்கு தடை இருக்கவில்லை.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை கொண்ட 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் (தற்போது நடைமுறையில் இருப்பது) கட்சி தாவுவது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், 1999இல் இந்தத் தடையை நீக்கும் வகையிலும், கட்சி தாவுவதை சட்டபூர்வமாக்கும் வகையிலும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திலிருந்து வெளியேறுகின்றவர்களில் பெரும்பாலானோர் அவர்களின் அரசியல் எதிர்காலம் பற்றி, இருப்பு பற்றி அச்சம் கொண்ட நிலையிலேயே வெளியேறி யுள்ளனர். அரசாங்கத்திற்கு சென்றவர்கள் வெகுமதிகளுக்காகவும் பதவிகளுக்காகவும் சென்றதாகவே பரவலாக பேசப்படுகிறது.
உண்மையில் ஒவ்வொரு கட்சிகளிலும் உள்ள உறுப்பினர்களின் வரலாறுகளை பார்க்கும்போது பெரும்பாலும் ஏதாவது ஒரு பிரதான கட்சியில் இருந்து வெளியேறிவர்களாக இல்லாவிடின் அக்கட்சி பலவீனமடையும் போது தம்மை அரசியலில் தக்கவைத்துக்கொள்வதற்காக கொள்கை மாற்றத்தை மேற்கொண்ட வர்களாகவும் காணப்படுகின்றனர்.
தேர்தல்கள் மூலம் தவால்கள் இன்று அதிகரித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளே பிளவுட்ட நிலைக்குள்ளாகியுள்ளது. இவ்விடத்தில் 2015 ஆம் ஆண்டு .நடைபெற்ற ஜனாதிபதித் தேர் தலை நினைவுகூரவேண்டும்.
2015ஆம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது என அறிவித்த மறுகணமே வேட்பாளர்களுக்கு பஞ்சம். யாரை நிறுத்துவது என்பது பற்றி ஒவ்வொரு பிரதான கட்சிகளுக்குள்ளும் பேசப்பட்டு வந்த விடயம். இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் சுமார் 48 வருடகாலமாக இருந்து அதனுள் சுமார் 13 வருடங்கள் கட்சியின் பொறுப்பான செயலாளர் பதவியை வகித்து வந்த அப்போதைய ஜனாதிபதி வேட்பாளராகவும் இப்போது ஜனாதிபதியாக இருக்கும் மைத்திரிபால சிறிசேனவின் கட்சித்தாவலை வரலாறு மறந்து விடாது.
இலங்கையின் மூத்த கட்சிகளில் ஒன்றான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகி தான் ஒரு பொதுவேட்பாளராக களமிறங்கினார். மக்கள் மனதிலும் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. தான் .தேர்தலில் வெற்றி பெற்றாலும் எந்தவொரு கட்சிசார் உறுப்பினராகவும் இல்லாதவராகவே இருப்பேன் என அவரது அறிவிப்பு இருந்தது. உண்மையில் கட்சி சாராத ஒருவர் .ஜனாதிபதியாக இருந்தால் மக்களுக்கு பொதுவாக சிறுபான்மையின மக்கள் பெரிதும் நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களித்து வரவேற்றனர். அவர் மீது மக்கள் நம்பிக்கையும் வைத்திருந்தனர். அதன் மூலம் தேசிய அரசாங்கமும் உருவானது.
ஆனால், அதன் நிலையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கலாம். அன்று அக்கட்சியில் இருந்து தாவி வந்த இவர் இன்று அக்கட்சியை காப்பாற்றும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றார் என்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அவரது நாளாந்த செயற்பாடுகள் மூலம். இப்போது அவர் ஒரு கட்சியின் தலைவராகவே பார்க்கப்படுகின்றார். எந்தவொரு காட்சியையும் சாராது வந்த இவர் ஐந்து வருடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்றே மக்கள் நம்பியிருந்தனர். ஆனால்?
பொதுவாக ஜனாதிபதி என்பதை விட கட்சியின் தலைவராகவே இவர் பார்க்கப் படுகின்றார். அதுபோலவே அவரும் நடந்துகொள்கின்றார். அதற்காக ஏனைய கட்சிகளில் இருந்து கட்சி தாவி வருபவர்களை சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு அமைச் சுப்பதவிகளையும் வழங்கிவருகின்றார். கட்சி தாவி வந்த பாராளுமன்ற உறுப்பினர் சிறியாணிக்கு உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் பதவி நியமனத்தையும் வழங்கினார் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.
தங்களது வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவும் தம்மை அரசியலில் இருந்து தம்மை ஓரங்கட்டிவிடக்கூடாது என்பதற்காகவும் கட்சி தாவியுள்ளவர்கள் ,மீண்டும் அவர்களது கட்சிக்குள் தாவி அந்தக் கட்சியை காப்பாற்ற வேண்டும் என இவர்போலவே நினைத்தால் இவர் இப்போது உள்வாங்கிக்கொண்டதற்கு என்னபலன்.
ஒரு கட்சியில் போட்டியிட்டு மக்களின் வாக்குகளை பெற்று வென்று பதவிகளை பெற்றவர்கள், அவர்களுக்கு வாக்களித்த மக்களை கேட்காமலேயே இன்னொரு கட்சிக்கு தாவி தொடர்ந்து பதவிகளில் இருப்பது எந்தவிதத்திலும் தார்மீக நியாயப்பாடுகளை கொண்டதாக இருக்கமாட்டாது.
0 comments