சிங்கள சினிமாவின் தந்தை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் - ஜீவா சதாசிவம்
July 07, 2018
சுமார் ஏழு தசாப்தகாலமாக இலங்கையின் சிங்கள சினிமாத்துறையில் தனக்கென தனியிடத்தை பிடித்து 'சிங்கள சினிமாவின் தந்தை' என வர்ணிக்கப்பட்டவர்தான் அமரர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ். சிங்கள சினிமாவையே சர்வதேச ரீதியில் எடுத்துச் சென்ற பெருமையும் இவரையே சாரும். இதற்கு சிறந்த உதாரணமாக லெஸ்டரின் தயாரிப்பில் வெளியான அவரது முதலாவது படம் 'ரேகாவ' பிரான்ஸ் திரைப்படவிழாவில் 1957 இல் காண்பிக்கப்பட்டமையைக் கூறலாம்.
சிங்கள சினிமாவில் இருந்த ஆர்வம் அதனை தரம் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான முன்னோடி நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அதற்கமைய லெஸ்டரின் பின் வந்த பல சிங்கள இயக்குனர்களுக்கு சிறந்ததொரு வழிகாட்டியாக இருந்து வந்தார் என்பது இங்கு மறுப்பதற்கில்லை. இப்போது இலங்கையில் சிங்கள சினிமா அச்சமூகத்திடம் தொட்டுள்ளதை வைத்தே இதனைக் கொள்ளலாம். இயக்குனர் லெஸ்டருக்கு பின்னால் ஆளுமைமிக்க பல இயக்குனர்கள் உருவாகி சிங்களச் சினிமாவை வளர்த்ததுடன் மேலும் சர்வதேச தரத்திற்கு கொண்டுச் சொன்றார்கள்.
தமிழ், சிங்கள சினிமா இவையிரண்டும் சமகாலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இன்று இலங்கைத் தமிழ் சினிமாவின் நிலை எங்கிருக்கிறது? அதனுடன் வந்த சிங்கள சினிமா எங்கிருக்கின்றது என்பதை நாம் கண்கூடாக அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. உண்மையில் சிங்கள சினிமா இன்று உச்சத்தை தொட்டுள்ளதற்கு லெஸ்டர் போன்ற சமூகத்தின் பால் ஈர்க்கப்பட்ட இயக்குநர்களாலேயே என்று குறிப்பிடலாம்.
இவ்வாறு சமூக நலநோக்குடைய சகலரும் அறிந்த இயக்குநர் லெஸ்டர் கடந்த மாதம் 29ஆம் திகதி இவ்வுலகைவிட்டுச் சென்று விட்டார். கடந்த ஏப்பிரல் மாதம் 05 ஆம் திகதி தனது 99ஆ வது பிற்ந்த தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடினார். இந்நிகழ்வுகளில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
யார் இந்த லெஸ்டர் ?
1919 ஏப்பிரல் மாதம் 5 ஆம் திகதி தெஹிவளையில் பிறந்த இவர் சென். பீட்டர் கல்லூரியின் மாணவராவார். கல்லூரி படிப்பின் பின்னர் தனது 17ஆவது வயதில் இதழியல் கற்கை நெறியில் ஈடுபட்டு தனது முதலாவது தொழிலாக ஊடகத்துறையில் 1939 ஆம் டெய்லி நியூஸ் பத்திரிகையில் இணைந்துகொண்டார்.
இவரது தந்தை Dr. James Francis Peries . கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் லெஸ்டர் ஜேம்ஸ் மாத்திரமே அவரத குடும்பத்தில் சிங்கள கலாசாரத்துடன் தொடர்ப பட்டவராக இருந்துள்ளார். தனது 11ஆவது வயதில் தன் சகோதரனுடன் சேர்ந்து சினிமா பார்க்கசட் செல்வதும் அவரது விருப்பமாக இருந்துள்ளது. பாடசாலைக்காலத்தில் கலைத்துறையில் ஈடுபடாத போதிலும் காலப்போக்கில் தான் படம் இய்க்க வேண்டும் என்ற விருப்பம் எழுந்துள்ளது.
1947ஆம் ஆண்டளவில் தனது சகோதரன் புலமைப்பரிசில் பெற்று இங்கிலாந்து கென்றபோது லெஸ்டரும் தனது அம்மாவின் ஆலோசனைக்கு அவைாக லன்டன் வென்று விட்டார். அத்தருணத்தில் லன்டனிலிருந்து "Letter on the Arts from England." எனும் கட்டுரையை தொடராக எழுத ஆரம்பித்துள்ளார்
தான் லன்டனில் இருக்கும் காலத்தில் படத்தயாரிப்புக்கள் தொடர்பில் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு சில விடயங்களை கற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பமும் கிடைத்தள்ளது.
திருமண வாழ்க்கை
வெளி நாடுகளுக்குச் சென்றிருந்தபோது பாரிஸ்ல் வைத்து சுமித்ரா என்ற பெண்மணியைச் சந்தித்துள்ளார். அவரும் ஒரு இயக்குனரே. இதன் பின்னர் இருவரின் விருப்பத்தில் 1964ஆம் ஆண்டு பொரளை SAINTS தேவாலயத்தில் அவர்களது திருமணம் நடந்தேறியது.
பின்னர் 1949 காலப்பகுதியில் இலங்கையின் சிங்கள சினிமாவிற்குள் பிரவேசித்தார். ரேகாவ (விதியின் கோடுகள்) எனும் திரைப்படத்தை 1956ஆம் ஆண்டு இயற்றிய இவர் தொடர்ந்து பல திரைக்கதைகளை எழுதியும் தயாரித்தும் இயக்கியும் ஒரு சிறந்த இயக்குனரானார். சிங்கள படைப்பிலக்கியங்களை திரைக்கு வழங்கிய முன்னோடிக்கலைஞர்
முற்போக்கான எண்ணங்களும் இடதுசாரிச்சிந்தனைகளும் கொண்டிருந்த லெஸ்டர், சிறந்த இலக்கியவாசகராகவும் திகழ்ந்தார். இலங்கைச்சிங்கள மக்களின் இயல்புகள், கலாசாரம், நம்பிக்கைகள், நாகரீகம் என்பனவற்றை யதார்த்தமாக பிரதிபலித்த சிங்கள படைப்புகளை (நாவல், சிறுகதை) திரைப்படமாக்குவதில் ஆர்வம்கொண்டிருந்தவர்.
பத்திரிகையாளராக தனது தொழில் வாழ்வை ஆரம்பித்த லெஸ்டர், சிறந்த திரைப்பட இயக்குநராகவே ஒளிவீசிக்கொண்டிருந்தவர். இவருக்கு பேராதனை பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப்பட்டத்தையும் வழங்கி, அதனாலும் பெருமைகொண்டது.
ரேகாவ (1956) சந்தேசிய (1960) கம்பெரலிய (1963) தெலொவக் அதர (1966) ரண்சலு (1967) கொலு ஹதவத்த (1968) அக்கரபஹா (1969) நிதானய (1972) தேசநிசா (1972) த கோட் கிங் (1975), மடோல் தூவ (1976), அஹசின் பொலவட்ட (1978), பிங்ஹாமி (1979), வீரபுரன் அப்பு (1979), பெத்தேகம (1980) கலியுகய (1982), யுகாந்தய (1983) அவறகிற (1995) வேகந்த வளவ்வ (2002), அம்மா வரேன் (2006) முதலான படங்களை இயக்கியிருக்கும் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், தான் உளமாற நேசித்த சிங்களத்திரையுலகில் பணத்தை சேகரிக்கவில்லை. அவர் சேகரித்தது ஆயிரக்கணக்கான ரசிகர்களைத்தான்.
அவரது மனைவி சுமித்ராவும் திரைப்பட இயக்குநர். எடிட்டர். லெஸ்டரின் அனைத்துவெற்றிகளுக்கும் பின்னின்றவர். அந்த விழாவுக்கு சென்ற விடத்தில்தான் சுமித்ராவை சந்தித்துள்ளார். அப்பொழுது சுமித்ரா அங்கு திரைப்படக்கலை பற்றி கற்றுக்கொண்டிருந்தமையால் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அதன்பின்னர் லெஸ்டரும் சுமித்ராவும் தனித்தனியாகவும் இணைந்தும் பல படங்களை இயக்கியிருக்கின்றனர் இருவருக்கும் ஆங்கிலப்புலமையும் பிறமொழி இலக்கியங்கள் பற்றிய ஆழ்ந்த ஞானமும் இருந்தமையால் தாம் கற்றதையும் பெற்றதையும் இலங்கை கலையுலகிற்கு வழங்கிவந்தார்கள்.
அதன்மூலம் இலங்கை சிங்களத் திரைப்படங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும் பாடுபட்டு உழைத்தார்கள். அவர்களின் சேவையை கவனத்தில் கொண்ட இலங்கை அரசும் 2010 இல் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் – சுமித்ராபீரிஸ் மன்றம் ( Foundation) என்ற அமைப்பையும் உருவாக்கி வர்த்தமானியிலும் பிரகடனப்படுத்தியுள்ளது.
எமது மக்களுக்கு எத்தகைய திரைப்படங்கள் தேவை என்பதை லெஸ்டர் உணர்ந்திருந்த காலத்தில்தான் யதார்த்தத்திற்கு புறம்பான நாடகத்தன்மைகொண்ட பக்கம் பக்கமாக வசனங்கள் குவிந்த தென்னிந்திய தமிழ்ப்படங்கள் வெளிவரத்தொடங்கி அவையே திரைப்படங்கள் என்ற மாயையும் எம்மத்தியில் உருவாக்கியிருந்தன.
லெஸ்டர் இலங்கையில் வெளியான சிறந்த சிங்கள இலக்கியப்படைப்புகளை திரையில் அறிமுகப்படுத்துவதிலும் முன்னோடியாகத்திகழ்ந்திருப்பவர். அவர் திரைப்படமாக்கியிருக்கும் கம்பெரலிய ( கிராமப்பிரழ்வு) மடோல் தூவ ( மடோல்த்தீவு) நிதானய ( புதையல்) கொளு ஹதவத்த ( ஊமை உள்ளம்) முதலான கதைகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்ட சிங்களப்படைப்புகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சந்தேசிய திரைப்படம் போர்த்துக்கீசியர் இலங்கையை ஆக்கிரமித்திருந்த காலத்தின் பின்னணியை சித்திரித்த திரைப்படமாகும். இதில் காமினி பொன்சேக்கா ஒரு துணைப்பாத்திரத்தில்தான் அறிமுகமானார். “போர்த்துக்கிஸி காரயா ரட்டவல்லல் யன்ன சூரயா…” என்ற இத்திரைப்படப்பாடல் அக்காலப்பகுதியில் இலங்கையில் சிங்களப்பிரதேசங்களில் பட்டிதொட்டி எங்கும் ஒலித்த பிரபல்யமான பாடலாகும்.
பெத்தேமக ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் பணியிலிருந்த ஒரு ஆங்கில ஆளுநரால் எழுதப்பட்ட நாவல். இதனை பல்கலைக்கழகத்திலும் ஆங்கில இலக்கியத்தில் பாட நூலாக வைத்திருந்தார்கள். சிங்கள மக்கள் மத்தியில் அக்காலத்தில் வாழ்ந்த வேடர்களின் கதையே பெத்தேகம.
லெஸ்டர் சமூகப்பார்வைகொண்ட யதார்த்தமான கதைகளையே தனது படங்களுக்கு தெரிவுசெய்து வெற்றிகண்டவர். கோடிக்கணக்கில் செலவுசெய்து ஆடம்பரமான காட்சிகளையும் உருவாக்கி, நம்பமுடியாத சண்டைக்காட்சிகளையும் காதல் டூயட் பாட்டுக்களையும் புகுத்தி வெளிநாடுகளின் காட்சிகளை நம்பியிருந்த தென்னிந்திய வணிக சினிமாக்கள் இலங்கையில் வந்திறங்கிக்கொண்டிருந்த (இன்றும்தான்) காலப்பகு தியிலேயே இலங்கையின் உண்மையான ஆத்மாவை, தான் தெரிவுசெய்த கதைகளிலிருந்து திரைப்படமாக்கி காண்பித்து, இதுதான் சினிமா என்று சர்வதேச திரைப்படவிழாக்களில் காண்பித்தவர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்.
2003 டிசம்பரில் பேராதனைப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. குறுந்திரைப்படங்கள், முழுநீளத்திரைப்படங்கள் என 28 திரைப்படங்களை உருவாக்கி, பல இயக்குனர்களுக்கு முன்மாதிரியாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
நன்றி வீரகேசரி - சங்கமம் (05.05.2018)
0 comments