ஊடக ஆளுமை வி.என். மதிஅழகனுடனான சந்திப்பில்...- ஜீவா சதாசிவம்
June 30, 2018
வானொலியில் உங்களது பிரவேசம், அதன் அனுபவம் பற்றி எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?
இளம் வயதிலிருந்தே ஊடகத்துறையில் எனக்கு அதீத ஆர்வம் இருந்தது. 1969 ஆம் ஆண்டு "தினபதி"யில் இணைந்தேன். அப்பத்திரிகையில் பணிபுரிந்த மூத்த ஊடகவியலாளர் ரத்தினம் என்னுடைய தமிழ் ஆளுமை, பேசுகின்ற விதம் போன்ற பல விடயங்களை அவதானித்து பத்திரிகைத்துறையை விட ஒலிபரப்புத்துறைக்கு பொருத்தமான ஆளுமை இருக்கின்றது என என்னை வழிகாட்டினார்.
அதற்கமைய 1971 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒலிபரப்புப் பணியில் சேர்ந்த முதல் வாரத்தில் ஒரு நாள்... கொழும்பு–7, கூட்டுத்தாபன பயிற்சிப் பிரிவின் மேல் மாடியில் உள்ள நூலகத்துக்குச் சென்றேன். தேடி எடுத்து நான் வாசித்தது "வானோசை". ஸ்ரூவட் வேவல் என்ற ஒலிபரப்பு விற்பன்னர் எழுதி தமிழ் ஒலிபரப்பாளர் சி.வி.இராஜசுந்தரம் தமிழில் மொழிபெயர்த்த நூல். ஒலிபரப்பு நுட்பங்களை முதன்முதலாகப் படித்தறிந்தேன்.
1979 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சுயாதீனத் தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பாளராகத் தேர்வான மறுநாள். நான் ஓடோடிப் பேருந்து ஏறிச் சென்ற இடம் கொழும்பு –3 இல் அமைந்த பிரிட்டிஷ் லைப்ரரி. நூலகரை நாடினேன். "தொலைக்கட்சி என்றால் என்ன? தொலைக்காட்சிக்கென செய்தி சொல்வது எப்படி? போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லவல்ல நூல்கள் இங்கு உள்ளனவா?" எனத் தயங்கித் தயங்கிக் கேட்டேன். அதற்குக் காரணம் தொலைக்காட்சிச் சேவை என்பதே அதுவரை இல்லாதிருந்த நாட்டில் அத்தகைய நூல்கள் அங்கே இருக்குமா என்ற அவநம்பிக்கையே. "நூல்கள் அதிகமாக உள்ளனவே..." எனக் கூறியவாறே ஆசனத்திலிருந்து எழுந்த நூலகர், அவை நேர்த்தியான ஒழுங்கில் அடுக்கியிருந்த பிரிவுக்கு என்னை அழைத்துச் சென்றார்.
ஆர்வத்துடன் வாசித்தேன். நாளாந்தம் சென்று சென்று கருத்தூன்றி வாசித்தேன். ஒன்றையும் தவறவிடவில்லை. என் நோக்கம் நிறைவெய்தியது. என் மூளையில் ஆற்றலை ஏற்றினேன். தொலைக்காட்சிச் செய்தி வாசிப்புக்குத் தாயாக வானலைகளில் இலக்கணம் வரையுமளவுக்கு என்னுள் உள் ஒளி பாய்ச்சிய பாசறை, பிரிட்டிஷ் நூலகமே. பயிற்சியளிக்க எவரும் இருக்கவில்லை.
எந்த ஒரு புதிய துறையையும் முன்கூட்டியே அறிய உதவுவது ஏட்டுப் படிப்பே. ஆனால், தேர்ந்தெடுத்த துறையில் அனுபவம் ஏற,ஏற ஏட்டுப் படிப்பு தந்த மதிப்பீடுகள் ஒவ்வொன்றாக விலகும். 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பயிற்சிப் பிரிவிற்கென அமைந்த வசதிகள் குறைந்த TR–1 கலையகத்திலிருந்து ஒலிப்பதிவுக்காகச் செய்திகள் சொல்லி வந்த நான், ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியோடு கட்டியெழுப்பப்பட்டிருந்த பிரமாண்டமான ரூபவாஹினி கலையகத்திலிருந்து நேயர்களை சந்திக்க, உற்சாமிகு தொழில்நுட்பவியலாளர்களிடமிருந்து பயிற்சிகளைப் பெற்றேன். நேரடிச் செய்தி வாசிப்பினை உயிரோட்டமாகப் பேணும் பாங்கினை வளர்த்தேன்.
இலங்கை வானொலி முதல் கனடா தொலைக் காட்சி வரையிலான பயணம் பற்றி?
இலங்கையில் ஒலி/ஒளிபரப்புத்துறையில் பணி யாற்றி 2000ஆம் புலம்பெயர்ந்து கனடா சென்றேன். அங்கு 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், கனேடிய 24 மணிநேர ரீ.வி.ஐ சமூகத் தொலைக்காட்சியில் சிறப்பு அழைப்பின் பெயரில் இணைந்தேன். புலம்பெயர்ந்து செல்பவர்கள் பெரும்பாலானவர்களுக்கு தங்கள் துறைசார்ந்த துறையில் தொழில் வாய்ப்புக் கிடைப்பதில்லை. ஆனால், நான் கொடுத்து வைத்தவன். என் உயிரிலும் மேலாக நேசித்த நான் உழலும் ஊடகத்திலேயே எனக்கு வேலை கிடைத்துவிட்டது. இது ஒரு அதிர்ஷ்டம் தான்.
அங்கு செய்தி ஆசிரியராக, செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றினேன். ஒலிபரப்புத்துறையின் உச்சத்திலிருந்து கீழே இறங்கி புதிதாக அனுபவம் பெறுகின்ற இளைஞர்களுடன் சேர்ந்து செயற்படப் பயிற்சி பெற்றேன்.
முரண்பாடுகள் தோன்றின. ஆனால், அவை என்றுமே பூதாகரமானதில்லை. அரச ஒலிபரப்பு நிலையம் போல் அல்லாமல் ஆளணி குறைந்த நிலையில் ஒருவரே பல பொறுப்புக்களை நிறைவேற்ற வல்ல பயிற்சிகளை அங்கு பெற முடிந்தது. 15 ஆண்டுகாலக் கனேடிய ஒலிபரப்பு அனுபவம் மகிழ்வானது – சிறப்பானது.
'வி.என்.மதியழகன் சொல்லும் செய்திகள்' என்னும் நூலை நீங்கள் எழுதுவதற்கு எழுந்த உந்துதல் என்ன?
மூன்று வருடகாலம் ஏற்பட்டது இந்நூலை எழுதுவதற்கு. இணையம் தற்போது அனைவரையும் ஆக்கிரமித்துள்ளது. அந்த ஆக்கிரமிப்பில் ஊடகவி யலாளர்கள் மூழ்கிவிடுவார்களோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறான நூலை எழுதினேன். இந்நூல் ஊடகத்துறையினருக்கு ஒரு வழி காட்டியாக இருக்கும் என நினைக்கின்றேன். என்னுடைய ஒலி/ஒளி பரப்புதுறையில் ஏற்படுத்த பயிற்சியுடனான அனுபவத்தை இந்நூலில் குறிப்பிட்டுள்ளேன்.
2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சித் துறைகள் அடங்கிய 48 ஆண்டுக்கால ஊடக வாழ்க்கையின் உறுபயனாக ஓர் ஆக்கபூர்வமான பணியைச் செய்தாக வேண்டும் என்ற வேட்கை என்னுள் எழுந்த வேளை கனடாவின் டொரண்டோ மாநகரிலிருந்து வெளியாகும் மாதாந்த "தாய்வீடு" பத்திரிகையின் பதிப்பாளரும் ஆசிரியருமான பி.ஜே.திலிப்குமார் என்னைத் தொடர்பு கொண்டார். "உங்கள் தொழில்சார் அனுபவத்தைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளை மட்டுமே இனி நான் எதிர்பார்க்கிறேன்" எனக் கடிவாளம் போட்டார்.
செய்தித்துறையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் பயிற்சி நிலையங்கள் நடத்திய பயிற்சிக் களங்களில் பங்குபற்றியிருக்கின்றேன். மலேசியா,சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, ஜெர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகளின் நிபுணர்கள் நடத்திய செயலமர்வுகள், கருத்தரங்குகள் மற்றும் புலமைப் பரிசில்கள் மூலமான வதிவிட பயிற்சி நெறிகள் என்பவற்றில் ஈடுபட்டிருக்கின்றேன். இருந்தாலும் எத்துறை சார்ந்த மொத்த அறிவையும் எந்தப் பயிற்சியாளராலும் கற்றுத் தர முடியாது. பெற்ற பயிற்சிகள் மூலம் ஒலிபரப்பாளர்கள் தொழில்சார் திறனை தாமாகத் தேடிக் கொள்ள வேண்டும் என்பதே எனது அனுபவம் கற்றுத் தந்த பாடம். செய்திப் பரிமாற்றம் தொடர்பில் புதிதாக எடுத்துச் சொல்ல எதுவும் இல்லை. எல்லாமே முன்னமே சொன்னவையே. படித்தவையே. என் சுய அனுபவப் பதிவுகளையும் அனுபவம் தழுவிய அறிவையும் இணைத்து இந்நூலில் மீட்டிச் சொல்கிறேன். அவ்வளவே.
நீங்கள் இத்துறையில் பிரவேசித்த காலத்தை விட இக்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமாக இருக்கின்றது. ஆனால், இதற்கேற்றவாறு இத்துறைசார் விடயங்கள் வளர்ச்சியடைந்துள்ளனவா?
ஒலிபரப்பில் நாங்கள் உச்சம் பெற்றிருந்த காலத்தில் இல்லாத அளவிலான தொழில்நுட்ப சாதனங்கள் தற்போது உள்ளன. எங்களது காலத்தில் ஒலிபரப்பு உதவியாளர்கள் இருந்தார்கள். ஆனால், இப்போது தொழில்நுட்பங்களே பிரதான அதிகாரிகளின் உதவியாளர்களாக இருக்கின்றன. எமது இசைவாக்கத்துக்கேற்ப தொழில் நுட்பசாத னங்கள் இசைந்து செல்வதால் சுயமான திறமையை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பம் இல்லாது போகின்றது.
தொழில்நுட்பங்களுடன் இணைந்து பலதரப்பட்ட வேலைகளை ஒருவரே செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் போதே வானொலிகளில் பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் அதிகமாகக் காணப்படுவதுடன் சில விடயங்களுக்கு குறைந்தள விலான விளக்கங்கள் மாத்திரமே வழங்குவதற்கும் ஏதுவாக இருக்கின்றது. விளக்கங்கள் குறையும் போது நேயர்களுக்கு சரியான தகவல்கள் முழுமையாக சென்றடைய முடியாத நிலைமை ஏற்படும். என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி தற்போது ஏற்பட்டிருந்தாலும் சில விடயங்களுக்கு இது வசதியாக இருந்தாலும் பல விடயங்களில் மந்தகதியாக்கியும் விடுகின்றது.
ஒலிபரப்புத்துறையில் இருந்தாலும் எழுத்து, வாசிப்பு, இலக்கியத்தில் உங்களுக்கு அதீத ஆர்வம் இருப்பதாக உங்களது நூலின் மூலம் அறிந்தேன். இது பற்றி எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?
ஒரு ஆளுமை மிகுந்த ஊடகவியலாளராக தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நினைக்கின்ற ஊடகவியலாளர்களுக்கு வாசிப்பு மிக முக்கியம். இலக்கியத்துறையுடனான ஈடுபாடும் அவசியம். மகாபாரதம், கம்பராமாயணம், காப்பியங்கள் என பல தரப்பட்ட இலக்கிய நூல்களை வாசிக்க வேண்டியது அவசியமாகின்றது. அத்துடன் பாரதி, புதுமைப்பித்தன் காலத்திலான எழுத்து நடைகள் என்பன பற்றியும் அறிந்திருக்க வேண்டும். இவ்வாறான வாசிப்புக்களில் ஈடுபடும் போது சொற்களுக்குப் பஞ்சம் ஏற்படாது என்பதுடன் இலகுவான மொழிப்பிரயோகமும் அமைந்துவிடும்.
ஒலிபரப்புத்துறையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தை எவ்வாறு உணர்கின்றீர்கள்?
எங்களது ஒலிபரப்புத்துறை காலத்தில் பல புகழ்பெற்ற ஒலிபரப்பாளர்கள் பிரசித்தி பெற்றவர்களாக இருந்தார்கள். அப்போது உரிய பயிற்சிகள் கிடைக்கப்பெற்றன. ஆனால், இப்போதுள்ள இளம் தரப்பினருக்கான உரிய பயிற்சிக் களங்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. இவர்கள் கேள்வி ஞானத்தினூடாகவே தமது துறையில் செயற்படுகின்றனர். இவ்வாறு பயிற்சியில்லாமல் தமது துறைசார் விடயங்களில் ஈடுபடும் போது அதில் சிறந்த ஆளுமையாக எம்மால் வரமுடியாத நிலைமை ஏற்படும். ஆனாலும் பயிற்சிகள் இல்லாமலேயே சில அறிவிப்பாளர்கள் திறம்பட செயற்பட்டதையும் நான் அவதானித்தேன்.
ஊடகத்துறையில் மறக்க முடியாத விடயமாக நீங்கள் எதனைக் கருதுகின்றீர்கள்?
முதன்முறையாக கண்டி பெரஹராவை தொலைக் காட்சிக்காக சிங்கள, ஆங்கில ஒளிபரப்பாளர்களுடன் இணைந்து அங்கிருந்து மிகத் தெளிவாக சரியான முறையில் இரவிரவாக ஒளிபரப்புச் செய்தமை மறக்க முடியாத விடயம் எனலாம். மஹியங்கனையிலிருந்து அதாவது மிக நீண்ட தூரத்தில் இருந்து அஞ்சல் நிகழ்வை வழங்கியமை, நயினாதீவு ஆலயத்தில் மக்கள் நேரடியாகச் சென்று வழிபட முடியாத அந்த யுத்த காலகட்டத்தில் நாம் அங்கு சென்று நேரடியாக நிகழ்வுகளை வழங்கியமை என குறிப்பிட்டுக் கூறக்கூடிய பல நிகழ்வுகளை மறக்க முடியாது.
இணைய வானொலிகளின் வருகை பற்றி..?
இப்போது அதிகளவான இணைய வாெனாலிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் எவரும் அறிவிப்பாளர்களாக ஆகிவிடலாம் என்றதொரு நிலைமை உருவாகியுள்ளது. தம்மிடமுள்ள கேள்வி ஞானத்தை வைத்தே இன்று பெரும்பாலான இணைய வானொலிகள் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவர்கள் முழுமையான பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்களா?
இவ்வாறான பயிற்சிகள் இல்லாத சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு வானொலியில் எவ்வாறான மொழிப்பிரயோகங்களைக் கையாள வேண்டும் என்பது தெரியாது. சாதாரண வழக்கு, மொழிப்பிரயோகமே பயன்படுத்தப்படுகின்றது. அவர்களது தகுதிக்கு ஏற்றால் போலவே அந்த வானொலியின் தரமும் இருக்கும். மொழிச்சிதைவு அதிகளவு ஏற்படுகின்றது.
மொழியை ஆளுமை செய்கின்ற அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டும். தகுதி மிக்கவர்களை நாடி உரையாடல்களை நடத்தி அவர்களிடமிருந்து பல விடயங்களை பொறுமையாகக் கிரகித்துக்கொள்ள வேண்டும். நாம் சிறந்த ஆளுமையாக வரவேண்டும் என்றால் அவ்வப்போது கிடைக்கின்ற பாராட்டு மலரை முழுமையாக விழுங்கிவிடாமல் அதன் வாசத்தை மாத்திரம் நுகர்ந்து கொண்டால் நமது ஆளுமையை மேலும் வளர்த்துக் கொள்வதற்கும் எம்மை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.
இலங்கை நேயர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது...?
வானொலி நிலையங்களோ அல்லது ஒளிபரப்பு நிலையங்களோ நிகழ்ச்சிகளைத் தொகுத்து, தயாரித்து ஒளிபரப்புச் செய்கின்றபோது அவை சமூகத்துக்கு ஒவ்வாத நிகழ்ச்சிகளாக இருக்கும் பட்சத்தில் அதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அபிப்பிராயங்களைத் தெரிவிக்க வேண்டும். அதேபோல் நிறைவான நிகழ்ச்சிகளைச் செய்தால் அது பற்றிய வாழ்த்துக்களையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறான கருத்துக்களைக் கூறி அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டி பொறுப்பு நேயர்களுக்கு இருக்கின்றது.
0 comments