ஈழத்தின் மூத்த படைப்பாளி என்.கே.ரகுநாதன் - ஜீவா சதாசிவம் (தொகுப்பு)

June 22, 2018



இளம் வயதிலேயே தீண்டாமைக் கொடுமைகளுக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு உழைத்த மூத்த  படைப்பாளியான   என்.கே.ரகுநாதன் சிறந்த இலக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவராவார்.

"கம்யூனிஸ்ட்" மு. கார்த்திகேசன், - பொன். கந்தையா ஆகியோரின் வழிகாட்டலில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளராகச் செயற்பட்ட இவர்,  1964 ஆம் ஆண்டளவில் கம்யூனிஸ்ட் கட்சி பிளவடைந்தபோது தோழர் என்.சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு அணியில் இணைந்து செயற்பட்டார்.

இலங்கைப் பாராளுமன்றம், - சீன வானொலி, -லண்டன் பிரிவுக்கவுன்சில் நீதிமன்றம் வரை பேசப்பட்ட மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயப்பிரவேசப் போராட்டம் முதல் வட இலங்கையில் தீண்டாமைக்கெதிராக நடைபெற்ற அத்தனை போராட்டங்களிலும் இயன்றவரை தனது பங்களிப்பை வழங்கினார்.

அப்போராட்ட காலங்களில் கிராமங்கள் தோறும் அரங்கேற்றப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திய ''கந்தன் கருணை'' நாடகத்தின் மூலக்கதையை இவரே எழுதினார். இவரது முதல் சிறுகதைத் தொகுதியான ''நிலவிலே பேசுவோம்" பெரும் பாராட்டைப்பெற்ற தொகுதியாகும்.

பயிற்றப்பட்ட தமிழாசிரியராகக் கடமையாற்றிய இவர் "மக்கள் எழுத்தாளர்" கே.டானியலின் உடன்பிறந்த தங்கையைக் (ஆசிரியர்) காதலித்துத் திருமணம் செய்தார். இவரது கதைகளை தீவிர பிரசாரத் தொனியற்ற அழகியல் அம்சம் நிறைந்த முற்போக்குக் கதைகளென விமர்சகர்கள் குறிப்பிடுவர்.

வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் தொடர்பு இருக்க வேண்டும்  என்ற வகையில்  தனது அனுபவங்களை  எழுதும் பிரபல எழுத்தாளரும்  ஆளுமை மிக்க படைப்பாளியுமான என்.கே.ரகுநாதன்  சிறுவயதிலிருந்தே   வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தவராவார்.

"யாழ்ப்பாணக் கவிராயர்" எனப்படும் கவிஞர் பசுபதியுடன் நல்லதொரு நட்பையும்  கொண்டிருநதார்.  இத்தொடர்பு இவரது இலக்கியப்பயணத்துக்கு ஓர் உந்துதலாக இருந்துள்ளது. என்.கே.ரகுநாதனின்   கதைகள் எல்லாவ ற்றையும் உடன் பிரசுரம் செய்த "சுதந்திரன்" பத்திரிகையின்  ஆசிரியர் அ.ந.கந்தசாமியும் அவரது இலக்கியப் பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவராவார்.

1951 ஆம் ஆண்டு தனது  20ஆவது வயதில் எழிலன் என்ற புனைபெயரில் அவர்  எழுதிய "முந்திவிட்டாள்" என்ற கதை இந்தியாவில் அந்த நேரம் வெளிவந்த "பொன்னி" என்ற சஞ்சிகையில் அட்டைப்படத்துடன் பிரசுரமாகி அவருக்கு வழங்கிய ஊக்கமே  தொடர்ச்சியாக அவரது இலக்கியப்பணிகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது.

"நிலவில் பேசுவோம்", "நெருப்பு", "குடை" போன்ற அவரது பல கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள கதைகளாகும்.  இவரின் "தசமங்களம்" என்ற சிறுகதைத் தொகுதி  சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றுக்கொண்டது.   1962 இல் "நிலவிலே பேசுவோம்" வெளியான நீண்ட காலத்தின் பின்னர்  1996 இல்  "தசமங்களம்" வெளிவந்தது. இவர் எழுதிய "கந்தன் கருணை'"என்ற  நாடகம் மிகவும் பிரபலமானது என்பதுடன் அது சகலராலும் பேசப்பட்ட நாடகமாகவும் இருந்தது.

தீண்டத்தகாதோர் என தள்ளிவைக் கப்பட்ட மக்கள் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குள் போவதற்காக மேற்கொண்ட போராட்டம் பற்றிய கதை தான் "கந்தன் கருணை".  "அன்று கோவிலுக்குள் புக  முயன்ற வர்களை சுந்தரலிங்கம் எம்.பி. தடுத்த போது  எனக்கு ஏற்பட்ட மன  உணர்வுகளையும் பாதிப்புக்களையும் மற்றவர்களின் கொதிப்பையும் "கந்தன் கருணை" நாடகத்தில் பதிவு செய்துள்ளேன்" என்கிறார் இவர்.

பேராசிரியர் மெளனகுரு, குழந்தை சண்முகலிங்கன் போன்றோர்  நடத்தி வந்த நாடகக்குழு ஒன்றினூடாக அது யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் பல தடவைகள் நாடகமாக அரங்கேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் வராத்துப்பளை கிராமத்தில் 1929 இல் பிறந்த இவர் தனது கிராமத்தைப் பற்றிய "ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின்  எழுச்சி" என்று ஒரு  நூலையும் வெளியிட்டுள் ளார்.

சிறந்த எழுத்தாளுமையான இவர் புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்த நிலையில், 12.06.2018 அன்று இலக்கிய உலகை விட்டுச்  சென்றார். அன்னாரது ஆத்மா சாந் தியடைய பிரார்த்திப்போமாக.

நன்றி  - வீரகேசரி (16.06.2018)


You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images