நடனத்துறையில் வெள்ளிவிழா கண்ட நாயகிக்கு சர்வதேச விருது - ஜீவா சதாசிவம்

June 11, 2018
நடனத்துறையில் வெள்ளிவிழாவையும் பயிலுநர் துறையில் ஒரு தசாப்தத்தையும் கடந்துள்ள தனது நடனப்பணியை கிரமமாக முன்னெடுத்து வருகிறார் கலாசூரி திவ்யா சுஜேன். இளம் வயதில் நடனத்தில் தன்னுடைய ஈடுபாட்டை முழுமையாக செலுத்திய இவர் இத்துறையில் தான் சிறப்புத்தேர்ச்சி பெற்றவராக விளங்க வேண்டும் என்பது மாத்திரமல்லாமல் தான் கற்ற இக்கலையை சக மாணவர்களுக்கும் வழங்கவேண்டும் என்ற நோக்கில் அபிநயக்ேஷத்திரா என்னும் நடன கல்வியகத்தை அமைத்து அதனூடாக பல மாணவர்களுக்கு பரதக்கலையை கற்பித்து வருகின்றார். பல மாணவர்களுக்கு அரங்கேற்றமும் செய்துள்ளார். 

தனது இளம் வயதில் அதிக ஈடுபாடு கொண்டு விளங்கும் இவர் ஒரு சிறந்த மிருதங்கக் கலைஞராகவும் இருக்கின்றார். அத்துடன் இக்கலைத்துறையில் பல படைப்புக்களை முன்வைத்து கலைஞர்களை உருவாக்கி வரும் திருமதி திவ்யா சுஜேன் அண்மையில்  'ஆர்யபட்டா'  சர்வதேச விருதைப் பெற்று நம் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவ்விருது உட்பட பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அண்மையில் இவருடன் இடம்பெற்ற உரையாடல் இங்கே..


'ஆர்யபட்டா' சர்வதேச விருது பெற்று இலங்கை கலை உலகுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். இவ்விருது பற்றி பகிர்ந்து கொள்வீர்களா? 
1975 ஆம் ஆண்டிலிருந்து ஆர்யபட்டா கலாசார மையம் இந்தியாவில் பெரும்பாலும் கர்நாடக மாநிலத்திலுள்ள பல்துறை சார்ந்த சாதனையாளர்களை இனம் கண்டு விருது வழங்கி கௌரவித்து  வருகிறது. அதில் அதிசிறந்த திறமையுள்ள வெளிநாட்டு சாதனையாளர்களுக்கும் இடமுண்டு. பரதநாட்டியத்துறையில் பன்முக திறமைகளை வெளிக்கொ ணரும் கலைஞர் என்னும் வகையில் "ஆர்யபட்டா சர்வதேச விருது" எனக்கு கிடைக்கப்பெற்றது. இறையருளும்  குருவருளும் என்றும் துணை வர அண்மையில் பெற்ற இவ்விருதினை இலங்கைக் கலைஞர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதோடு மூத்த கலைஞர்களது ஆசிகளையும் வேண்டி நிற்கிறேன்.

இளம் வயதில் பல காத்திரமான விருதுகளைப் பெற்றுள்
ளீர்கள். இவை உங்கள் துறைக்கு எவ்வாறு சாதகமாக  அமைகிறது?
விருதுகள், பாராட்டுக்கள் பெறுவதற்காக எதனையும் இதுவரை செய்ததில்லை. ஆனால் சிறுவயது முதல் கலை மேல் எனக்கிருந்த தீவிரமே அசுர சாதகம் பண்ண வைத்தது. அதுவே என்னை அறியாமலேயே இலங்கை கலைத்துறையில் முதன்முறையாக  இளம் வயதில் பல விடயங்களை செய்த பட்டியலை கொணர்வித்தது. 

இலங்கை அரசின் உயர் விருதான “கலாசூரி”, இந்தியாவில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளையின் சிறந்த நடன ஆற்றுகைக்கான "மயூர நாட்டிய தாரகை  விருது", "அகில உலக பத்மா சுப்ரமணியம் விருது" என்பன பெறும் போது கண்ணீர் மல்க அதி அற்புதமான ஆசிகளையும் அருளையும் உணர முடிந்தது. 

இலங்கை கலாசார அமைச்சால் சிறந்த நடனக் கலைஞர் விருது, இளம் கலைஞர் விருது, சிறந்த நடனத்துறை சேவைக்கான உயர் விருது என்பனவும் தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் சிறந்த கலை, கலாசார, சமய சேவைக்கான விருது, நாட்டிய கலா ரத்னா விருது, நாட்டிய ஜோதி, முத்தமிழ் செம்மல், கலை கோமகள், நாட்டிய மயில் விருதுகள், சிறந்த நடன பயிற்றுவிப்பாளர் விருது போன்றவை யாவுமே சிரத்தையுடனான உழைப்பின் பலனாலும் அபிநயக்ேஷத்திரா நடனப்பள்ளி ஊடாக வழங்கும் சேவையாலும் இறை தந்த அன்புப்பரிசென்றே கருதுகிறேன். 

இவற்றினை வழங்கிய அமைப்புகளும் பரிந்துரைத்தோரும் நம் மீது அளவிலா நம்பிக்கையில் அன்புடன் ஆனந்தமாக வழங்கியவை. ஆதலால் என்னை நாடி வருவோர்க்கு சிறந்த கலை அனுபவத்தைத் தர வேண்டும் என்பதிலும் நம் நாட்டின் கலை வளர்ச்சிக்கு என்னாலான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் இவ்விருதுகள் உற்சாகத்தைத் தந்தன. எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஆகியோர் உட்பட இன்னும் பல மேதைகள் பெற்ற ஆர்யபட்டா சர்வதேச விருதினைப் பெறுமளவு நம்பிக்கையை விதைத் துள்ளது.

அபிநயக்ேஷத்திரா நடனப்பள்ளி சேவைகள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள், இதன்ஆரம்பம்,  அதன் சேவை பற்றி அறியத் தருவீர்களா? 
 வட இலங்கை சங்கீத சபையால் ஆசிரியர் தரம் அதி விசேட சித்தி எய்தி "பரத கலா வித்தகர்", "மிருதங்க கலா வித்தகர்" பட்டம் பெற்றதோடு இந்தியாவில் குரு பத்மபூஷண்  பேராசிரியர் சி.வி.சந்திரசேகர் ஐயாவிடம் கற்றபின்பு 2006 ஆம் ஆண்டு எனது 20 ஆவது வயதில் அபிநயக்ேஷத்திரா நடனப்பள்ளியை ஆரம்பித்தேன். சிறு வயதில் ஆரம்பிக்கிறேன் என்று சில எதிர்ப்புகள் இருந்தாலும் நாட்டியத்தில் என் தேடல் என்றுமே குறையாது என்னும் ஆர்வத்திலும் சேகரித்து வைத்துள்ள பல அனுபவ விடயங்களை பரிமாறும் களமாகவும் அமையும் என்று கற்பித்தல் பயணத்தை ஆரம்பித்தேன்.

நடப்பள்ளியின் நோக்கம் கலை வழியால் வாழ்வியலை புரிந்து தெளிதல். அதன் ஆரம்ப எண்ணச்செயல்களாக நடனத்தில் ஆசையுள்ளோர் யாவரும் நடனம் பயிலலாம் என்னும் அளவு அடிப்படை வசதிகளை அமைத்தோம்.இலவச பயிற்சி நெறி, இலகு நேரங்கள், நடன ஆடை ஆபரணம் அமைத்துக் கொடுத்தல், பெரும்பாலும் மலையக, பெற்றோர் இழந்த அடிப்படை வசதி இல்லாத மாணவிகள் இதில் அடங்குவர். ஓவ்வொருவர் வாழ்க்கை அனுபவங்களும் எனக்குள் பல தேடல்களைத் தந்தன.

 "அன்பு" என்பதே தாரக மந்திரமாக நடனப்பள்ளி ஆனந்தப் பூங்கா ஆனது. அதீத ஈடுபாடுடைய மாணவிகளுக்கு மட்டும் அரங்கேற்றம் நிகழ்த்துவோம். அந்த பயிற்சிக்காலம் குருகுலக் கல்வி முறையாக அமையும். அவயவங்களுக்கு உரியதல்ல ஆடல், அகம் சார்ந்து ஆன்ம விலாசம் அறியும் கலைப் பயணம் என்பதை குருகுல கல்வியில் உணர ஆரம்பிப்பர். இவை தவிர "சத்க்ரியா" என்னும் நிகழ்வுகளூடாக இயற்கை பற்றிய  விழிப்புணர்வும் வழங்குகின்றோம். 

இங்கு கற்பித்தல் முறை, நடனத்தில் செய்முறை, அறிமுறை தவிர்த்து, அபிநய நுட்பங்கள், ஆற்றுகை கலைஞருக்கான நுட்பமான பயிற்சிகள், நட்டுவாங்கம், தாள ஜதி அமைப்பு முறை, தமிழ்மொழி சம்பந்தமாக சங்கத்தமிழ் நூல்கள், கவிதைகள், புராண இதிகாசங்களின் தாத்பரியம் அறிதல், மூத்த கலைஞர்கள் பரம்பரை அறிதல், சிறந்த தத்துவவியலாளர்கள் கருத்துக்கள் பரிமாறல்  என அவரவர் ஆர்வத்திற்கேற்ப பன்முகமாக விரிவடையும். அந்த வகையில் என் குரு உட்பட  அபிநய அறிவு தந்த அபிநய அரசி  ஸ்ரீமதி ப்ரக பேசல், லய ஞானத்தை தந்த மிருதங்க வித்துவான் ஸ்ரீ ஜம்புநாதன், என்னை அரங்கேற்றிய ஆசிரியர் ஸ்ரீமதி நளாயினி ராஜதுரை ஆகியோரை  என்றும் என்னகத்தில் வைத்துப் பூஜிக்கிறேன்.

விருது  பெறுகையில்...

இத்தனையையும் முன்னின்று  செய்ய சவால் மிக்க இத்துறையில் எவ்வாறு முகம் கொடுத்தீர்கள்?
வழமையான நல்ல கேள்வி. முதலாவது, எனக்கான பாதையில் பயணிக்கின்றேனே தவிர அடுத்தவர் பாதை என் கண்ணில் சிக்கவில்லை. யாருக்கு எது கிடைக்குமோ அதில் மாற்றம் இருக்காது. அதனால் எல்லோரிலும் எனக்கு அன்பு அதிகம். அன்பு இருக்கும் இடத்தில் துன்பம் இல்லை.

இரண்டாவது, சிறு வயதிலேயே தந்தையை இழந்து, பிறந்த மண்ணை விட்டு வந்து, பலவிதமான சவால்களி லும் பக்குவமாக நெறிப்படுத்திய என் அம்மாவின் வளர்ப்பு  மற்றும் யார் எதை சொன்னாலும் செய்தாலும் அவை யாவும் என் வளர்ச்சி பரிமாணங்களுக்கான பாதையாகத் தான் அமைந்தன."என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள், எத்தனை மேன்மைகளோ தன்னை வென் றால் அவை யாவும் பெறுவது சத்தியம் ஆகும்" என்ற மகாகவி பாரதி வரிகள் துணை நின்றன. ஒவ்வொரு நாளும் படைப்புக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அத்தனை நிறைவான அனுபவங்களை உணர பாக்கியம் பெற்றுள்ளேன். அதைப் போல என் மாணவர் களும் சூழ்ந்தோரும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்க வேண் டும் என்றும் முயற்சிப்பேன்.

நாட்டிய நாடகங்களுக்கு இயலாக்கம் அமைப்பதிலும் நெறிப்படுத்துவதிலும் உங்களுக்கான தனி இடம் உண்டு. அத்தோடு "நின்னை சரணடைந்தேன்" என்ற தொடர் பாரதி  கட்டுரையும் வெளிவருவதை அறிந்தோம். எவ்வாறு இலக்கியம் மீது ஆர்வம் வந்தது?
மொழி நம் மூச்சு. பள்ளிக்காலத்தில் பாரதியும் கம்ப னும் என் தோழர்கள். குறளமுதும் பிரபந்தங்களும் குதூக லிக்க வைத்தன. எல்லையற்ற சமுத்திரத்தில் நானும் சிறு துளி தேடிச் செல்லச் செல்ல, சாரலடித்த சந்தத்தில் தொலைந்து போய் எழுதுகோலைப் பற்றிக் கொண்டு சிறகடிக்க ஆரம்பித்தேன். பாரதி மேலான முடிவிலி காதல் அவன் காலில் சரணடைய வைத்து கட்டுரையாகக் கிறுக்க வைத்தது. கடந்த 2 வருடங்களாக ஜெர்மனி, லண்டன் பத்திரிகைகளில் அவை வெளிவருகின்றன. நாட்டியப் படைப்புகளில் கருப்பொருளை முழுவதும் உணரும் பொருட்டு நூல்கள் பலவற்றை தேடுவதால் 90 நிமிடங்களில் அடங்கவல்ல காட்சி அமைப்புக்கேற்ற வண்ணம் இயலாக்கம் செய்வதில் திருப்தி கிடைக்கிறது. 

தமிழ் சார்ந்த இந்திய மேதைகள் பலரது பாராட்டும் கிடைப்பதால் அதை தொடர்வதற்கு உற்சாகமும் கிடைக்கிறது. என் தமிழ் விரும்பிகள் அத்தனை பேருக்கும் இத்தருணத்தில் தலை வணங்குகிறேன். விவேகானந்த சச்சரிதம் பாடலாக்கத்தில் ஆரம்பித்த ஆசிகள் ஒவவொரு வருடமும் ஒவ்வரு நாட்டிய நாடக பணியை வழங்கியதோடு  ஷீரடி சாயி சச்சரிதத்தை முதன்முறையாக நாட்டிய வடிவமாக்கி பாடலாக்கிடவும்  அருள் கிட்டியது. இசையமைப்பு வழங்கி உயிர் கொடுக்கும் இசை மேதை லால்குடி கிருஷ்ணன்  உட்பட அனைத்து இந்திய இசைக் கலைஞர்களுக்கும் எனது மரியாதைக்குரிய நன்றிகள்.

இந்தியக் கலைஞர்கள் பலருடனும் பணிபுரியும் வாய்ப்பு எவ்வாறு கிட்டியது? அந்த அனுபவம் பற்றி கூறுங்கள் ?
கணக்கியல், முகாமைத்துவ சந்தைப்படுத்தல் துறை யில் என் முழுநேர வேலை அமைந்ததால் அணிசேர் கலைஞர்கள் குறிப்பிட்ட காலத்தில் என் எண்ணங்க ளின் தேவையறிந்து செயற்பட வேண்டியிருந்தது. நடனப்பள்ளி நிகழ்வுகளுக்கு இந்திய அணிசேர் கலைஞர்களை வரவழைத்தோம். அற்புதமான ஆனந்த அனுபவம் கிட்டியதால் தொடர்ந்து அக்கலைஞர்களின் ஆதரவு கிடைக்கின்றது. 

இந்தியாவின் பல பாகங்களிலும் ஆற்றுகை வழங்கியதாலும் இலங்கையில் இந்தியக் கலைஞர்கள் பலருடன் ஒருங்கிணைந்து நாட்டிய நிகழ்வுகளை
அமைத்ததாலும் கடந்த 10 வருடங்களில் 70 க்கும் மேற்பட்ட இந்தியக் கலைஞர்களோடு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தமை மிகச் சிறந்த அனுபவமும் பாக்கியமுமாகும்.

பல வெற்றிகளைக் கொண்ட சாதனைக் கலைஞராக நம் கலை உலகிற்கு என்ன பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள்?
கலை பயில்வோர் நல்ல குருவைத் தேர்ந்தெடுங்கள், நம் அறிவுக்கு அப்பாற்பட்டது கலைகள் என்று அறிந்து தொடர்ந்து ஆராய்ந்து தேடுங்கள்.  முழு ஈடுபாடும் தூய நோக்கமும் இருந்தால் வெற்றிகள் நிழலாகத் தொடர ட்டும்!! அன்புதான் அடிப்படை, எல்லை முடிவற்றது...

இசையும் நாட்டியமும் வேறு வேறல்ல. ஆதலால் நாட்டியக் கச்சேரிகளுக்கு இசைக் கலைஞர்களும் வருகை தந்து வாழ்த்துங்கள். அது போல நாட்டியத்தில் ஈடுபடுவோர் இசை கச்சேரிகளுக்குச் செல்ல வேண்டும். கலை என்னும் ஆதார தளத்தில் அனைவரும் ஒருமை ப்பட வேண்டும். வாழ்தல் இனிது..! கலை இனிதிலும் இனிது..!!

நம் நாட்டில் கலை வெற்றிகளுக்கு பக்கபலம் ஊடகங்களும் கலை வளர்க்கும் சங்கங்களுமாகும்.  அவர்களால் இயன்றளவு கலைக்கான ஆதரவினை மென்மேலும் நல்க வேண்டும், இதற்கு எவ் வகை யான உதவிகளையும் செய்யக் காத்திருக்கிறேன் என்று பணிவன்புடன் கூறிக்கொண்டு, வீரகேசரி பத்திரிகையின் தொடர் ஆதரவுக்கு அபிநயக்ேஷத்திரா சார்பாக மனம் கனிந்த நன்றி களைத் தெரிவிக்கிறேன்.

நன்றி வீரகேசரி - சங்கமம்You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images