மலையக தமிழனாக இலங்கையில் - ஜீவா சதாசிவம்

May 12, 2018




மலையகம் என்ற ஒற்றைச்சொல்லின் அர்த்தம்  இன்று புவியியல் எல்லைகளைக் கடந்து ஓர் இனத்துக்குரிய உணர்வுச் சொல்லாக மாறியிருக்கிறது. அது ஓர் இனத்தின் அடையாளத்தை, அவர்கள் வாழுகின்ற மண்ணின் அடையாளத்தை, அவர்களின் அரசியல் இருப்பை உறுதிசெய்கின்ற சொல்லாக மாறியிருக்கின்றது. 

இலங்கை மலையகத்திற்குள்ளேயே அந்த மலையகம் அல்லது மலையகத் தமிழர் என்ற சொல்லாடல் குறித்த வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து  கொண்டிருக்கும் நிலையில் அச் சொல் இலங்கைக்கு வெளியே இந்தியாவில் அதாவது தமிழகத்திலும் இங்கு உச்சரிக்கப்படும் அதே அர்த்தத்தோடு உச்சரிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதன் பிரதிபலிப்பே "மலையகமும் மறுவாழ்வும்" என்னும் நூலாகும் என இந்நூலின் தொகுப்பாசிரியரும் "தமிழ்க்காவிரி" இதழின் ஆசிரியரும் வழக்கறிஞருமான தமிழகன் தெரிவிக்கின்றார். 

இந்தியாவின் தமிழகத்திலிருந்து வருகை தந்திருக்கும் ஆ.ராமச்சந்திரன் என்னும் இயற்பெயரைக்கொண்ட வழக்கறிஞர் தமிழகன் "வீரகேசரி" காரியாலத்துக்கு வருகை தந்திருந்த போது இடம்பெற்ற உரையாடலின் தொகுப்பு.

தமிழகன்.. - இந்த அழகான தமிழ்ப்பெயர் உங்கள் புனைப்பெயர் என அறிகிறோம். உங்கள் இயற்பெயர், பிறப்பு, பின்னணி பற்றி சுருக்கமாகச் சொல்லுங்களேன்...
எனது இயற்பெயர் ஆ.ராமச்சந்திரன். இரத்தினபுரி மாவட்டத்தின் லெல்லோபிட்டிய தோட்டத்தில் பத்து சகோதர உறவுகளுடன் பிறந்தவன். லெல்லோபிட்டிய தமிழ் வித்தியாலயத்திலும் இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலத்திலும் பரி.லூக்கா கல்லூரியிலும் கல்விகற்று ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்ததத்தின் கீழ் 1981ஆம் ஆண்டு தமிழகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டவன். ஆ.ராமச்சந்திரன் என்ற எனது இயற்பெயரில் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இருக்கவில்லை. 

இலங்கையில் இருக்கும்போதே கூட இந்தியா எமது தாய்நாடு, தமிழகமே எமது சொந்த ஊர் பூமி என்ற நினைப்பில் வளர்க்கப்பட்டவன். அதனால் தமிழகன் என்ற புனைப்பெயர் பற்றி இலங்கையிலேயே சிந்தித்திருந்தேன்.  தமிழகம் சென்றபின்னர் வழக்கறிஞராக கற்றுத் தேறினேன். எனவே வழக்கறிஞர் தமிழகன் என்றும் கூடவே திருச்சியில் வாழ்வதன் காரணமாக "வழக்கறிஞர் தமிழகன் திருச்சி" என்ற அடையாளத்துடன் உலா வந்துகொண்டிருக்கிறேன்.

இந்தியா சென்றதன் பின்னர் நீங்கள் இலங்கை வந்திருக்கும் இரண்டாவது சந்தர்ப்பம் இது. முதல் தடவையும் உங்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது இரண்டாவது தடவையாக வருகை தந்திருக்கின்றீர்கள். எத்தகைய மாற்றத்தை உணர்கின்றீர்கள்?
தமிழகனுக்கு மலையகன் என்ற உணர்வு அதிகரித்துக்கொண்டு செல்வதாக உணர்கிறேன். நாங்கள் வாழ்ந்த காலத்தில் போலல்லாது மலையகம் என்ற சொல்லாடல் வேறு ஒரு அர்த்தத்தோடு  இன்று  உச்சரிக்கப்படுவதாக உணர்கிறேன். அதற்குள் ஓர் உணர்வு கலந்திருக்கின்றது. மலையகம், மலையகத் தமிழர் என்கின்ற இனத்திற்குரியவனாக என்னை அதிகமாக உணர முடிகின்றது. கடந்த முறை வந்தபோது இந்த உணர்வு என்னிடம் அதிகம் இருக்கவில்லை. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் இந் நாட்டில் இருந்து இனவாதத் தாக்குதல்களுக்கு மத்தியில் இரு நாடுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியா செல்ல நேரிட்டபோது இலங்கை தொடர்பான ஒரு வெறுப்புணர்வோடு சென்றேன் என்று சொல்லலாம். அதே உணர்வுடனேயே தமிழகத்தில் வாழ்ந்தேன் என்று கூட சொல்லலாம். 

ஆனால், 2013ஆம் ஆண்டளவில் இலங்கை மலையக எழுத்தாளர் மல்லியப்புசந்தி திலகரை மதுரையில் ஒரு நிகழ்வில் சந்தித்ததன் பின்னர் எனது கருத்து நிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அந் நிகழ்வில் அவர் உரையாற்றிபோது மலையகம் என்ற சொல்லின் உறுதிப்பாட்டை அதன் பின்னாலுள்ள உணர்வை வேறுவிதமாக என்னால் உணர முடிந்தது. அவருடனான முறுகலுடனேயே இந்த நிலைப்பாட்டிற்கு வந்தேன். 

நாளை வெளியிடப்படவுள்ள "மலையகமும் மறுவாழ்வும்" என்ற நூல் பற்றிக் கூறுங்களேன்…
2015 ஆம் ஆண்டு எனது முதலாவது இலங்கைப் பயணத்தின் பின்னர் மலையகம் குறித்த எனது பார்வை வேறுபட்டது. மலையகம் என்ற ஒற்றைச்சொல்லின் அர்த்தம்  இன்று புவியியல் எல்லைகளைக் கடந்து ஓர் இனத்துக்குரிய உணர்வுச் சொல்லாக மாறியிருக்கிறது. அது ஓர் இனத்தின் அடையாளத்தை, அவர்கள் வாழுகின்ற மண்ணின் அடையாளத்தை, அவர்களின் அரசியல் இருப்பை உறுதிசெய்கின்ற சொல்லாக மாறியிருக்கின்றது.

இலங்கையின் மலையகத்திற்குள்ளேயே அந்த மலையகம் அல்லது மலையகத் தமிழர் என்ற சொல்லாடல் குறித்த வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த சொல் இலங்கைக்கு வெளியே இந்தியாவில் அதாவது தமிழகத்திலும் இங்கு உச்சரிக்கப்படும் அதே அர்த்தத்தோடு உச்சரிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதன் பிரதிபலிப்பே "மலையகமும் மறுவாழ்வும்" என்னும் நூலாகும். 

இந் நூலினூடாக இலங்கையில் மாத்திரமல்ல, இதே இனத்திற்குரிய மக்கள் இந்தியாவிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற கருத்து வெளிப்படும்படியாக எமது தமிழக மலையக தமிழ் மக்களின் வாழ்வியலை விளக்கும் எனது கட்டுரைகளையும் இலங்கை மலையக வாழ்வியலை விளக்கும் எனது தோழமைகளின் கட்டுரைகளையும் இணைத்ததாக இக் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளிவந்திருக்கின்றது. 

ஒரு வரலாற்றின் தொடர்ச்சியாக மலையகத் தமிழர் வரலாறு, அவர்களின் பொருளாதாரம், அரசியல், தாயகம் திரும்பிய பின்னர் அவர்களது நிலை என்பன போன்ற விடயங்களை உள்ளடக்கிய ஏழு கட்டுரைகளைத் தொகுத்திருக்கிறேன். இரா.சடகோபன், எம்.வாமதேவன், ஏ.லோரன்ஸ், மல்லியப்புசந்தி திலகர் ஆகிய எனது தோழமைகளின் கட்டுரைகளுடன் எனது கட்டுரையும் இந் நூலில் உள்ளடங்குகின்றது.

மறுவாழ்வு என்னும் போது ஒரு வாழ்வு இழக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றப்பாடு காணப்படுகின்றதே..?
நிச்சயமாக. மலையக மக்கள் என்பவர்கள் எல்லா காலப்பகுதியிலும் அவர்களது வாழ்வை இழந்து மறுவாழ்வைத் தேடிக்கொண்டிருப் பவர்களாகவே நான் உணர்கிறேன். 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக கிராமப்புற வாழ்வை இழந்துதான் அவர்கள் இலங்கையில் வெள்ளைக்கா ரர்களால் குடியமர்த்தப்பட்டார்கள். அப்போது அவர்கள் தமிழகக் கிராமங்களில் வாழ்ந்த வாழ்ககையை இழந்து இங்கு மறுவாழ்வைத் தேடினார்கள். 

இங்கு நூறு வருடங்கள் ஒரு அடிமை வாழ்வை எதிர்கொண்ட அந்த மக்கள் வாக்குரிமை பெற்ற இலங்கை நாட்டின் பிரஜைகளாக வந்ததன் பின்னர் சுதந்திர இலங்கையில் வாக்குரிமை பறிக்கப்பட்டவர்களாக மறுவாழ்வு தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். 

இந்த கட்டத்தில் 1964 ஆம் ஆண்டு இலங்கை– - இந்திய அரசுகள் செய்துகொண்ட ஸ்ரீமா–சாஸ்திரி ஒப்பந்தம் இலங்கையில் வாழ்ந்த மலையகத் தமிழ் மக்களை இருகூறுகளாக்கியது. அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழகம் சென்ற மக்கள் அங்கு மறுவாழ்வு தேட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.  இவ்வாறு வாழ்வதும் பின்னர் மறுவாழ்வு தேடுவதுமாக சுமார் இருநூறு வருடகாலமாக வாழ்ந்துவரும் மலையக மக்களின் வாழ்வியலை விளக்குவதாகவே இத் தொகுப்பிலுள்ள கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 

இரா.சடகோபன், இலங்கையில் சட்டத்தரணியாக பத்திரிகையாளராக மொழிபெயர்ப்பாளராக வரலாற்று விடயங்களைக் கொண்ட புனைவுக்கட்டுரைகளை எழுதுகின்றவராக அறியப்படுகின்றார். எனவே அவரது பார்வையில் மலையக மக்களின் வருகை, வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பை வெளிப்படுத்தும் கட்டுரையை சேரத்துள்ளேன். உண்மையில் இந் நூலுக்காகவே எழுதப்பட்ட கட்டுரை இது. எம்.வாமதேவன் மலையகத் தமிழ்ச் சமூகத்தில் பொருளாதார திட்டமிடல் துறையில் கல்விகற்று இலங்கை அரச நிர்வாகத்துறையில் உயர்பதவிகளை வகித்துவருபவர். கடந்த முறை எனது பயணத்தின்போது அவரது "மலையகம்: - சமத்துவ அபிவிருத்தியை நோக்கி" என்னும் நூல் கிடைக்கப்பெற்றது. அந் நூலிலிருந்து எனது தொகுப்புக்கு பொருத்தமான கட்டுரை ஒன்றை தெரிவு செய்து இணைத்துள்ளேன்.

அதேபோல, அ.லோரன்ஸ், இலங்கை மலையக அரசியல் செயற்பாட்டாளர்களில் தவிர்க்க முடியாத ஆளுமை.  அவரது "மலையகம்: சமகால அரசியல், அரசியல் தீர்வு" என்ற நூலிலிருந்து மலையக மக்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பான பக்கத்தைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளை தெரிவு செய்து இணைத்துள்ளேன்.

 இவற்றுக்கு மேலதிகமாக அரசியல், இலக்கியம், பத்திரிகை, அரசியல் ஆய்வு என்னும் பன்முகத்தளங்களில் இயங்கும் மல்லியப்புசந்தி திலகரின் சிறப்புக்கட்டுரை இந் நூலில்தான் முதல் அறிமுகம் காணுகின்றது. அவரது எந்த உரை மலையகம் தொடர்பான, இலங்கையில் தமிழர்கள் தொடர்பான எனது பார்வையை மாற்றியமைத்ததோ அந்த உரையினைக் கட்டுரையாக்கித் தருமாறு நான் கேட்டுக்கொண்டதற்கு  இணங்க எழுதித் தந்தார். ஒரு விஞ்ஞானபூர்வ ஆய்வுக்கட்டுரையாக அதனை நான் பார்க்கிறேன். 

இவை ஐந்தும்  இலங்கைத் தளத்தில் இருந்து எழுதப்பட்ட கட்டுரைகள். எனது கட்டுரைகள் இரண்டும் இந்தியாவுக்கு திரும்பிச் சென்ற தாயகம் திரும்பியோர் என நாங்கள் அழைத்துக்கொள்கின்ற தமிழக வாழ் மலையக உறவுகள் பற்றியதும் அவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களின் வெற்றி–தோல்விகளும் பற்றியது. இக்கட்டுரைத் தொகுப்புக்கு மணிமகுடமாக அமைவது எமது மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் ஐயாவின் அணிந் துரை. 

இந் நூலை வெளியிட்டிருக்கும் அங்குசம் பதிப்பகம் கூட ஒரு தாயகம் திரும்பிய தோழருடையது. களுத்துறை மாவட்டம் மத்துகமவை பிறப்பிடமாகக் கொண்ட டார்வின்தாசன் என்னும் தோழர் அவராக முன்வந்து இந் நூலைப் பதிப்பித்திருப்பதுடன் அவரது பதிப்புரை நல்லதோர் அறிமுகத்தை இந் நூலுக்கு வழங்கியுள்ளது. 

உண்மையில் நான் கிரமமாக ஆசிரியராக இருந்து வெளிக்கொண்டுவரும் "தமிழ்க்காவிரி" இதழின் இலங்கைப்பயண சிறப்பிதழ் ஒன்றை வெளியிடுவதற்காக நான் மேற்கொண்ட முயற்சி அவ்வாறில்லாமல் தனியான ஒரு கட்டுரைத் தொகுப்பு நூலாக வெளிவந்துவிட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது. இந் நூலின் அறிமுகக் கூட்டமும் கலந்துரையாடலும் நாளை காலை 10 மணிக்கு  கொழும்பு தமிழ்ச்சங்க, வினோதன் மண்டத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. 

நிகழ்வு ஒழுங்கமைப்புகளை மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் மேற்கொண்டுள்ளது. என் பெயரை தமிழகனாக இருந்தபோதும் ஒரு மலையகத்தவனாக மீண்டும் இலங்கை மண்ணில் எனது உறவுகளுடன் ஒன்று சேர்ந்து இத் தொகுப்பைத் தருவதும் இங்கு இந் நூலை அறிமுகம் செய்வதும் எனக்குள் ஒரு புத்துணர்ச்சியை புதுத்தெம்பை ஒரு வாழ்நாள் இலக்கை அடைந்ததான ஆனந்தத்தைத் தருகின்றது.

நன்றி வீரகேசரி சங்கமம் (11.05.2018)

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images