ஊடக சுதந்திரம்: இலங்கையின் நிலை... - ஜீவா சதாசிவம்

May 03, 2018


இன்று ஊடக சுதந்திர தினம். ஊடக சுதந்திரத்தைப் பொறுத்தவரையில் இலங்கை யின் நிலையில் சிறிய முன்னேற்றமொன்று பதிவு செய்யப்பட்டி ருக்கின்றது. 141 ஆவது இடத்திலிருந்த இலங்கை இப்போது 131ஆவது இடத்துக்கு வந்திருக்கின்றதாம். 

பிரான்ஸை தலைமையகமாகக் கொண்டுள்ள எல்லைகளற்ற பத்திரிகை யாளர் அமைப்பு Reporters Without Borders (RSF) வெளியிட்டிருக்கும் பிந்திய அறிக்கை இதனைக் கூறுகின்றது. இதனை ஒரு முன்னேற்றமாகக் கொள்ள முடியும் என்றாலும், இது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமா என்ற கேள்வி, ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படும் இன்றைய நிலையில் அனைவரிடமும் எழுவது தவிர்க்கமுடியாததாகவே உள்ளது. 

141 இலிருந்து 131க்கு வந்திருப்பதென்பது ஒன்றும் பாரிய முன்னேற்றமில்லை. பத்து இடங்கள் முன்னால் வந்திருக்கின்றோம். இந்த "சிறிய" முன்னேற் றத்துக்கு இரண்டு காரணங்களை எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு முன்வைத்திருக்கின்றது. 

ஊடக வியலாளர்கள் மீதான தாக்குதல்கள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது அவர்கள் சொல்லும் முதலாவது காரணம். ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் (impunity) நிலையைக் கட்டுப்படுத் துவதற்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது இரண்டாவது காரணம். 

இந்த இரண்டையும்விட, தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டி ருப்பதையும் ஒரு காரணமாகச் சொல்ல முடியும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மிகவும் தாமதமாகவே இலங்கைக்கு அறிமுகமாகியிருக்கின்றது என்றாலும், ஊடக சுதந்திரத்தைப் பொறுத்தவரையில் அது ஒரு மைல் கல். 

இதனை ஒரு மைல் கல் என்று சொன்னாலும், இதிலுள்ள சில குறைபா டுகளைச் சுட்டிக்காட்டுவதும் அவசியம். முக்கியமாக, அனைத்து அமைச்சு க்களும், அரசாங்க நிறுவனங்களும் இதற்கு தயாராகவுள்ளனவா என்ற கேள்வி முதலில் உள்ளது. இரண்டாவது ஊடகவியலாளர்கள் இதனைப் பயன்படுத்துவதற்கு எந்தளவுக்குப் பயிற்றப்பட்டிருக்கின்றார்கள்? 

"ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது" என சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட சர்வதேச அமைப்பு ஒன்று அறிக்கையிட்டிருந்தது. போர் நடைபெற்ற காலப்பகுதியில் மட்டுமன்றி, அதன் பின் னரான காலப்பகுதியில் கூட இந்த நிலை தொடர்ந்தது. 

ஊடகவியலாளர்கள் கொலை, கடத்தப்படுதல், தாக்கப்படுதல் என்பவற்றுடன் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் ஊடக நிறுவனங்கள் தாக்குதலுக்குள் ளாக்கப்பட்ட சம்பவங்கள் இந்த அறிக்கைக்குக் காரணம். இதனைவிட, அரசாங்கத்தை விமர்சிக்கும் இணையத்தளங்கள் சில இலங்கை யில் பார்வையிட முடியாதவாறு தடுக்கப்பட்டிருந்தன. 

கடந்த 15 வருட காலப்பகுதியில் சுமார் 40 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாகப் பட்டியலிடப்பட்டிருந்தது. இந்தக் கொலைகளுக்கு நீதி வழங்கப்படவில்லை என்பதுடன், குற்றமிழைத்தவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் நிலையும் இருந்தது. ஊடகவியலாளர் கொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள் என்பது, ஊடகவியலாளர்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கை என்பதில் சந்தேகமிருக்க முடியாது. 

2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்த நிலையை 'ஓரளவுக்கு' முடிவுக்குக் கொண்டு வந்தது என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும். மைத் திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட பின்னர் முக்கியமான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டார். "கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் படுகொலைகள் குறித்த விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்படும்" என்பதுதான் அந்த அறிவித்தல். 

ஜனாதிபதித் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி ஒன்றின் அடிப்படை யில்தான் இந்த அறிவித்தலை அவர் வெளியிட்டார். இந்த அறிவிப்பு  ஊடக சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புக்களின் வரவேற்பைப் பெற்றது. கொலையுண்ட ஊடகவியலாளர்கள் ஒவ்வொருவரின் விவகாரமும் தோண்டி யெடுக்கப்படும் என அந்த அமைப்புக்கள் எதிர்பார்த்தன.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் இந்த செயற்பாடுகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அமைந்திருக்கவில்லை. 'சண்டே லீடர்' ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணையில் மட்டுமே குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அதுகூட கடந்த மூன்று வருடகாலமாக தொடரும் நிலையில், கொலையின் பிரதான சூத்திரதாரி இதுவரையில் பொலிஸாரின் வலையில் அகப்பட்டதாகத் தெரியவில்லை.

லசந்த 2009 ஜனவரியில் தெஹிவளை பகுதியில் நடுவீதியில் வைத்துக் கொல்லப்பட்டார். அதே மாதம் றிவிர பத்திரிகை ஆசிரியர் உபாலி தென்னக்கோன் இனந்தெரியாத குழு ஒன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டார். லசந்த மீது தாக்குதல் நடத்தப்பட்ட பாணியில் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களாலேயே அவரும் தாக்கப்பட்டார். கொலை முயற்சியிலிருந்து அவர் உயிர் தப்பினார். இதனைவிட, பிரகீத் எக்னெலி யகொட காணாமல்போகச் செய்யப்பட்டார். 

தென்பகுதியில் இடம்பெற்ற இந்த ஒரு சில சம்பவங்கள் குறித்து விசாரணை களை மீள ஆரம்பித்த 'நல்லாட்சி' அரசாங்கம், இந்த நிமிடம் வரையில் கொலையாளிகளை சட்டத்தின் முன்பாக நிறுத்தவில்லை. அது ஒருபுறமி ருந்தால், கடந்த இரு தசாப்த காலத்தில் படுகொலை செய்யப்பட்டதாக ஊடக அமைப்புக்களால் மதிப்பிடப்படும் 40 ஊடகவியலாளர்களில் பெரும்பாலா னவர்கள் தமிழர்கள். 

யாழ்ப்பாணத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனிலிருந்து, சிவராம், நடேசன், சுகிர்தராஜன் என பல தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஊடகவியலாளர்களின் கொலை கள் தொடர்பான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்படும் என வாக்குறு தியளித்த நல்லாட்சி, இந்த விடயத்தில் கூட, இன ரீதியான பாகுபாட்டை வெளிப்படுத் தியதாகத்தான் சொல்ல வேண்டும். பிரபல சிங்கள ஊடகவிய லாளர்களின் படுகொலைகள் மீள்விசாரணைக்குள்ளாக்கப்பட்ட போதிலும், தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பில் ஏன் கவனம் செலுத்தப்படவில்லை?

"ஊடகவியலாளர்கள் தங்களுடைய அரசியல் கருத்துக்களுக்காகவோ அல்லது, இராணுவத்தினுடைய மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங் களை அறிக்கையிடுவதற்காகவோ அஞ்ச வேண்டிய நிலை இனி இல்லை" என அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால், தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகளின் பின்னணியில் உள்ளவர்களை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தயாராகவில்லாத நிலையில் இவ்வாறான வாக்குறு தியை எவ்வாறு நம்ப முடியும் என்ற கேள்வியை தமிழ் ஊடகத்துறை சார்ந்த அமைப்புக்கள் எழுப்புகின்றன. அதாவது, தமிழ் ஊடகத்துறையினர் மீதான தாக்குதலை நடத்துபவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளார்களா?

இந்த விடயம் தொடர்பில் தமிழ் ஊடகத்துறையினர் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தும் கூட, அதற்கு சரியான பதில் ஒன்றைச் சொல்லும் நிலையில் அரசாங்கம் இல்லை. இதனைவிட இன்னும் இரு விடயங்களையும் இங்கு சுட்டிக்காட்டுவது அவசியம்.

2016 மார்ச்சில் இணையத்தளங்கள் அனைத்தும் பதிவு செய்வது கட்டாயமாக் கப்பட்டது. அத்துடன் இணையத்தளங்கள் மீதான கண்காணிப்பும் தீவிரமாக்கப் பட்டது. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் இப்போது இல்லை எனக் கூறப்பட்டாலும், இரு வருடங்களுக்கு முன்னர், அதாவது 2016 ஜூனில் சுயாதீன ஊடகவியலாளர் பிரடி கமகே தாக்கப்பட்டார். 

ஊடக சுதந்திர சுட்டெண்ணில் பத்து இடங்கள் முன்னோக்கி இலங்கை வந்துள்ளது எனச் சொன்னாலும் இந்தக் குறைபாடுகள் ஒரு கறையாகத்தான் உள்ளன. இந்த நிலைமையில் முன்னேற்றம் இல்லாத வரையில் ஊடகசுதந்திரம் இலங்கையில் ஆரோக்கியமான நிலையில் உள்ளது என்ற நிலையை ஏற்படுத்திவிட முடியாது என்பதே உண்மை!

நன்றி வீரகேசரி (03.05.2018)

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images