நான் ஒரு சிறந்த கதை சொல்லியாக இருக்க விரும்புகிறேன் - ஜீவா சதாசிவம்

April 23, 2018





பிரபல தென்னிந்திய இயக்குநரான பாலுமகேந்திராவின் கண்டுபிடிப்பான  இளம் இயக்குநர்  மீராகதிரவன் இந்தியாவில் மாத்திரம் அல்லாமல் சர்வதேச மட்டத்திலும் இரசிகர்கள் மத்தியில் இன்று தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்துள்ளார்.  சினிமாவில் தான் இயக்குநராக வரவேண்டும் என்று தீவிர எண்ணத்துடன் இளம் வயதிலேயே தங்கர்பச்சனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் மீரா. மலையாளப் படங்களில் ஆர்வம் கொண்டு அதற்காகவே மலையாளத்தையும் கற்றுக்கொண்ட இவர் சிறந்த இலக்கியவாதியும் கூட.  

இயக்குநராவதற்கு இலக்கியம் அவசியமில்லை என்ற போதிலும் ஒரு நல்ல இயக்குநராவதற்கு இலக்கிய பரிச்சயம் அவசியம் என்கிறார் மீரா.  இலக்கியம் ,திரைப்படம் ஆகியவை தனித்துவமான குணங்களோடு இயங்குபவை. புத்தகம் ஒரு பார்வையாளனுக்குத் தருகிற சுதந்திரத்தை, கற்பனானுபவங்களை ஒரு திரைப்படத்தால் முழுமையாகத் தர முடியாது என்று கூறும் தென்னிந்திய இளம் இயக்குநர் மீராகதிரவன் ஈழத்து ரசிகர்களுக்கு தனது அன்பையும் நன்றியையும் உரித்தாக்குவதுடன் தொடர்ந்தும் உங்களின் ஆதரவையும் கோரும் இயக்குநர் மீராவை அண்மையில் சென்னை சென்றிருந்தபோது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

தென்னிந்திய இயக்குநர்களில் சற்று வித்தியாசமான தன்மையுடைய தனக்கென ஒரு தனித்துவத்தை கொண்டிருக்கும் இயக்குநர் மீராவுடன் அவரது சினிமா பயணம் உட்பட பலதரப்பட்ட விடயங்களை கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அமைதியான சுபாவமும் சிறந்த ஆளுமையும் கொண்ட இயக்குநர் மீராவுடன் உரையாடிய விடயங்கள் எமது வாசகர்களுக்காக இங்கு...


பாலுமகேந்திரா,  மீரா கதிரவன்,  தங்கர்பச்சன்
கேள்வி: மலையாள சினிமாவின் முக்கிய இயக்குனர்களான அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘ சினிமாவின் உலகம் ‘எலிப்பத்தாயம்’ , பி.பத்மராஜனின் ‘பெருவழியம்பலம்’,எம்,டி, வாசுதேவ நாயரின் ‘நிர்மால்யம்’ஆகிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் நீங்கள். உங்கள் முதற்படமான ‘அவள் பெயர் தமிழரசி’ யின் தலைப்புக் காட்சியில் மலையாளத்தின் மறைந்த இயக்குனர் திரு.லோகிதாஸ் அவர்களுக்கு நன்றியும் கூறியிருந்தீர்கள் . உங்கள் சினிமா ரசனையில் தமிழ் மற்றும் ஏனைய மொழிகளை விட மலையாளம் அதிக ஆதிக்கம் செலுத்தியது என்று இதனைக் கொள்ளலாமா ?

தமிழ் அடையாளத்தை, வாழ்வியலைப் பெரிதும் பேசிய திரு, தங்கர்பச்சனி டம்தான் நான் முதன் முதலில் உதவி இயக்குனராகச் சேர்ந்ததும், அந்த காலகட்டத்தில் என்னுடைய சிறுகதையை வாசித்து விட்டு என்னை நேரில் வரவழைத்துப் பாராட்டினார் திரு. பாலுமகேந்திரா. அவரிடம் படங்களில் நான் வேலை செய்யவில்லையென்றாலும் சில கதை விவாதங்களில் ஈடுபட்டிருக் கிறேன். அவருடைய அன்பிற்கிணங்க அழியாத கோலங்கள், அது ஒரு கனாக்காலம் படங்களின் திரைக்கதைகளைப் புத்தகங்களாகக் கொண்டு வர உதவி செய்தேன். அதன் அடிப்படையிலேயே அப்புத்தகங்களின் வெளியீட்டு விழாவில் ‘என்னுடைய உதவியாளர் மீராவின் துணை கொண்டு மற்ற படங்களின் திரைக்கதைகளையும் புத்தகங்களாகக் கொண்டு வரப்போகிறேன்’ என்று அறிவித்தார்.

கவித்துவமும் அழகியலும் யதார்த்தமும் இருக்கிற எல்லா மொழிப்ப டங்களாலும் வசீகரிக்கப்பட்டேன். அப்படித்தான் மலையாளப் படங்களின் மீதும் ஈர்ப்பு உண்டானது. உதவி இயக்குனராக இருந்த காலகட்டத்தில் திரை இலக்கியம் சார்ந்து ஏதாவது பங்களிக்க வேண்டுமென விரும்பிய போது எனக்குப் பரிச்சயமாகியிருந்த, நெருக்கமாகவிருந்த மொழியிலிருந்து ஆரம்பித்தேன். அதைத்தொடர்ந்து ஏனைய மொழிப் படங்களையும் ஆங்கில மொழி துணை கொண்டு மொழிபெயர்க்கும் எண்ணம் இருந்தது. ஆனால், அதற்கான நேரம் வாய்க்கவில்லை.

இயக்குனர் லோகிததாஸ் தமிழில் படம் இயக்கப்போகும் செய்தியறிந்ததும் அவரிடம் முயற்சி செய்தேன். மலையாளம் அறிந்த ஒரு உதவி இயக்குனர் தேவைப்பட்டதால் என்னை அவர் சேர்த்துக்கொண்டார். என் உழைப்பின் மீதும் திறமையின் மீதும் அதிகமான நம்பிக்கை வைத்திருந்தவர். என் முதல் படத்தை அவரிடம் காட்டுவதற்கு மிகவும் விரும்பினேன். 2007ல் துவங்கப்பட்ட படம் 2010ல் வெளியானது, அதற்குள் அவர் இறந்துவிட்டிருந்தார்.என் வாழ்வில் பேரிழப்பு அது. ‘அவருடைய ஆசீர்வாதங்களுடன்’ என்று படத்தின் துவக்கத்தில் இட்டதற்கு அதுவே காரணம்.

மேலும் தென் தமிழகத்தின் நிலபரப்புகளில் சில பகுதிகள் உணவு, கலாச்சாரம், வட்டார வழக்கு உட்பட்ட பல தன்மைகளில் கேரளாவை ஒத்திருப்பதை நாம் கணக்கில் எடுக்க வேண்டும்.  குறிப்பிட்ட மனிதர்களின் நடைமுறை பழக்க வழக்கங்களைத் தீர்மானிப்பதில் அப்பகுதியின் உணவு மற்றும் நிலப்பரப்பு முக்கிய பங்கு வகிக்கிறது .கேரளாவின் ஒரு எல்லையான தென்காசியை நான் பூர்விகமாகக்கொண்டவன். கதை நிகழும் களம் பசுமையாக இருப்பதினாலோ கவித்துவமும் இயல்பும்  நிரம்பியிருப்பதாலோ அது தமிழ் நிலப்பரப்பிற்கு தொடர்பில்லாதது என்று கூறி விட முடியுமா?

தமிழ் கிராமங்கள் மிக வறட்சியானவை, அந்த மனிதர்கள் மிக மூர்க்கமானவர்கள் என்று காலம் காலமாக தமிழ் சினிமா உருவாக்கி வைத்திருக்கும் பொதுப்புத்தி ஒன்று இருக்கிறது. அப்படி காட்டப்படும் கிராமங்கள் தான் தமிழ் நாட்டின் கிராமங்கள் என்று தமிழ் நாட்டிற்கு வெளியே இருக்கிற ரசிகர்களையும் நம்ப வைத்திருப்பதில்  அப் பொதுப்புத்தி வெற்றி யுமடைந்திருக்கிறது. 

ஒரு வேளை அது பெரும்பான்மையாக இருக்கலாம். ஆனால், அது  உண்மை அல்ல. மற்றபடி எல்லா மொழிகளிலும் உள்ள நல்ல சினிமாக்களை ரசிப்பது போலத்தான் நான் மலையாள சினிமாக்களையும் ரசிக்கிறேன். மதிக்கிறேன். அந்த சினிமாக்களில் உள்ள இயல்புத் தன்மையும் இலக்கிய சாராம்சமும் கவித்துவம் நிரம்பிய வாழ்வியலும் என்னைக் கவர்ந்தாலும் என்னுடைய படைப்பு ரசனையை ஆதிக்கம் செலுத்துவதென்பது. என் நிலம் சார்ந்தது. என்னுடைய மனிதர்களின் வாழ்வியல் சார்ந்தது.


கேள்வி: தமிழ்ப் படங்களின் பொதுப் போக்கிலிருந்து  பெரும்பாலான மலையாளப் படங்களை வேறுபடுத்திக் காட்டும் முக்கிய அம்சங்கள் என நீங்கள் உணர்வது எவற்றை ?
அவர்கள் வாழ்க்கையிலிருந்து கதையை உருவாக்குகிறார்கள். அவர்களின் அரசியல் பார்வையையும் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டும். படைப்பாளி வழங்குகிற ஒரு படைப்பின் உயரங்களை நோக்கி மேலெழுந்து வருகிற ஆற்றலை அவர்கள் இயல்பிலேயே அடைந்திருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவிற்குப் பிறகான சில வருடங்களில் அங்கு அமைந்த இடதுசாரிகளின் ஆட்சி கலை மற்றும் பண்பாட்டுத் தளங்களில் மாற்றங்களை உருவாக் குவதற்கு பெரிதும் உதவிகரமாக இருந்தது. 

பெரும்பான்மையான நடிகர்கள் நாடகப் பிண்ணனியிலிருந்தும் தொழில் நுட்பக்கலைஞர்கள் இலக்கியப் பின்னணியிலிருந்தும் சினிமாவுக்குள் நுழைந்தார்கள்,. நிலம் சார்ந்த கதைகளையும் மக்களின் பிரச்சினைகளையும் பேசிய அவர்களின்  படங்கள் மக்களிடம் தேர்ந்த ரசனையை உருவாக்கின. மலையாளத்துவம் என்றழைக்கபடுகிற அவர்களின் நிலம் சார்ந்த மதிப்பீடுகளை அங்குள்ள ரசிகன் கொண்டாடுகிறான். (அங்கு கொண்டா டப்பட்ட பல வெற்றிப்படங்கள் தமிழில் ஈர்க்காமல் போவதற்கான காரணங் களும் அவைதான்). அந்த ரசனையின் தொடர்ச்சியும் பாரம்பரியமும் இன்றும் உள்ளன. அவர்களுக்காக திரைக்கதையில் சமரசங்களை  உருவாக்க வேண்டியதில்லை. 

இங்கு ஒரு சிறிய நடிகர் நடிக்கத் தயங்கும் கதாபாத்திரத்தைக் கூட அங்கு உச்சத்திலிருக்கும் ஒரு பெரிய நடிகர் அனாயசமாக நடித்து ஆச்சரியப்ப டுத்துகிறார். அறிமுகக் காட்சியிலேயே ஒரு பெரிய நடிகர் பேருந்தில் ஒரு பெண்ணிடமிருந்து நகையைத் திருடுகிறார். பேருந்திலுள்ள அனைவராலும் அடி வாங்குகிறார். தப்பிப்பதற்காக வயிற்றில் விழுங்கிய நகையை எடுக்கும் பொருட்டு படத்தின் பல இடங்களில் பொலிஸாரால் மறைவான இடத்திற்கு அழைத்துசெல்லப்பட்டு பேண்ட்டைக் கழற்றி மலம் கழிக்க வைக்கப்படுகிறார்.

இப்படி ஒரு காட்சியை இங்குள்ள உச்ச நடிகர் யாராவது ஒத்துக்கொள் வார்களா? அப்படி ஒத்துக்கொண்டால் அவருடைய ரசிகர்கள் ஏற்றுக்கொள் வார்களா? அப்படியே அவர் திருடுவதாக இருந்தாலும் திருடிய பொருளை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவும் மகானாக மாறுகிறார் என்று அடுத்த காட்சியிலேயே விளக்கவும் வேண்டும். 

எளிய மனிதர்களின் கதைகளை படமாக்குவது போல் மலையாளத் திரையு லகினர் எளிதில் அணுகி விட முடிகிற எளிமையோடும் இருக்கிறார்கள். அந்த எளிமையும் இயல்புமே அவர்களின் சினிமாவிலும் பிரதிபலிப்பதாய் நினைக்கிறேன். வாழ்க்கையிலிருந்தும் மக்களிடமிருந்தும் விலகி நின்று ஒரு போதும் நல்ல படைப்புகளை உருவாக்க முடியாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள், வணிக ரீதியான வெற்றி தோல்வி களுக்கு அப்பாற்பட்டு சக கலைஞர்களை அவர்கள்  நேசிக்கிறார்கள். மதிக்கிறார்கள்.

தரம் தரமின்மை என்பது மட்டுமே அங்கு அளவுகோலாக இருக்க, இங்கோ வணிக ரீதியான வெற்றி தோல்வி மட்டுமே அளவுகோலாக இருக்கிறது. முக்கியமாக அங்கு சாதியும் அரசியல் கட்சிகளும் சினிமாவும்  ஒன்றுட னொன்று பெரிதாகக் கலந்து விடவில்லை. ஆனால், தமிழ் சினிமாவின் யதார்த்தம் முற்றிலும் நேரெதிராக இருக்கிறது. இங்கு இந்த மூன்றும் பின்னிப் பிணைந்திருக்கிறது  என்பது தான் அதிர்ச்சியான உண்மை.

கேள்வி: யதார்த்த பாணி, ஜனரஞ்சக அம்சம் என்ற இரு வகைப் போக்குகளுக்கும் இடம் கொடுத்த ஒரு திரைப்படமாக ‘அவள் பெயர் தமிழரசியை ‘ சொல்லத் தோன்றுகிறது . மண் சார்ந்த கலைகளில் ஒன்றான ‘தோற்பாவைக் கூத்தின் ‘ இன்றைய அருகல் நிலை பற்றி அது மிகவும் அக்கறையுடன் பேசுகிறது . படத்தின் முற்பகுதியில் கவித்துவமும் , மிக நுட்பமான காட்சிகளும் உள்ளன . அசல் மனிதர்களைக், கிராமங்களைக் காண்கிறோம் . ஆனால் பின் பகுதியில் வணிக சமரசங்களைக் காண்கிறோம் . ஆடல் ...பாடல் ...ஹாஸ்யம்... உச்சக் கட்ட மெலோ ட்ராமா ‘.... இவற்றையெல்லாம் தவிர்த்திருக்கலாம் என இன்று உங்களுக்குத் தோன்றுவதில்லையா ?

நிச்சயமாக தவிர்த்திருக்கலாம், தவிர்த்திருக்க வேண்டும். அப்படி தவிர்த்திருந்தால் நான் என் படைப்பை மட்டுமல்ல என் வாழ்க்கையின் விலை மதிப்பற்ற பத்து வருடங்களையும் இழந்திருக்க மாட்டேன். குத்துப்பாட்டு, காமெடி டிராக் எதுவுமில்லாமல்தான் அப்படத்தின் திரைக்கதையை எழுதியிருந்தேன். அவை எல்லாம் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் நிர்ப்பந் தமாக சேர்க்கப்பட்டது.

எழுதுவது போல, ஓவியம் தீட்டுவது போல சினிமா தனி நபர் கலை இல்லை. அங்கு நாம் விரும்புவது போல் இயங்குவதற்கான சுதந்திரமும் கிடையாது. முக்கியமாக முதல் படம் இயக்குகிற இயக்குனர்களில் அதிகமா னோர் அந்த கொடுப்பினையற்றவர்கள். குழுவாக சேர்ந்து இயங்குவதுதான் சினிமாவின் பலமாகவும், ஆகப் பெரிய பலவீனமாகவும் இருக்கிறது.  நம்மை விட எண்ணிக்கையில் அதிகமாக படம் பார்க்கும் ஒரு பார்வையாளன் எந்த கணக்குகளுமில்லாமல் திறந்த மனது டன் தான் படம் பார்க்க வருகிறான். 

குத்துப்பாட்டும் காமெடி டிராக்கும் உள்ளது என்பதற்காகவே அவன் எந்த படத்தையும் வெற்றியடையச் செய்ததில்லை. படத்திலுள்ள நடிகர்களைக் காட்டி, குத்துப்பாட்டைக் காட்டி விற்று விடலாம் என்று வியாபார தளத்தில் இயங்குபவர்கள் சில கணிப்புகளை வைத்திருக்கிறார்கள். ஆனால், ரசிகர்கள்  இந்த கணக்குகளுக்கு ஏமாறுவதில்லை. சமரசமில்லாத பல முயற்சிகளை அதன் நேர்மைக்காக அவன் கொண்டாடியிருக்கிறான். பல படங்கள் அதற்கு உதாரணாணங்களாக இருக்கின்றன.

ஒரு படத்தின் திரைக்கதையை எழுதிய இயக்குனர்  தான் விரும்பியது போலவே ஆக்கபூர்வமாக ஒரு சினிமாவை எடுக்க முயற்சிக்கிறார். ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என சகல துறைகளிலும் அத் திரைக்கதையின் தன்மையைப் புரிந்துகொள்கிற, அதை நேசித்து வேலை செய்ய வேண்டுமென்கிற ஒத்திசைவுள்ள ஆட்களை தேர்வு செய்ய விரும்பு கிறார். ஆனால், தயாரிப்பாளரோ இன்னும் கொஞ்சம் கூடுதலாக அடுத்த கட்டத்திற்கு சென்று அந்தப் படத்தின் தன்மையோடு சேர்த்து அதை வியாபாரமாக்கத் தேவையான அம்சங்களையும்  வணிக மதிப்புள்ள ஆட்களையும் படத்திற்குள் கொண்டு வருகிறார். 

இந்த கணக்குதான் சினிமாவில் பல வேளைகளில் தப்புக்கணக்காக மாறுகிறது. இயக்குனர் ஒருவரே அப்படத்தின் முதல் வடிவத்தையும் இறுதி வடிவத்தையும் மனதால் அறிந்தவர். அவர் அந்த படத்தின் தன்மைகேற்பவே போஸ்டர்கள் முதல் டிரைலர் வரை உருவாக்குகிறார். அதன் வழியாக இயக்குனரின் மனதைப் பின் தொடரும் குறிப்பிட்ட ரசிகர்கள் அதன் தன்மையிலான ஒரு படத்தையே எதிர்பார்த்து வருகிறார்கள்.

அரங்கத்திற்குள் வந்தவர்களுக்கு துவக்கக் காட்சிகள் திருப்திகரகமாக இருந்து படத்துடன் முழுமனதாய் ஒன்றும் வேளையில்  சிறிதும் எதிர்பாராத, அவர்கள் மனதில் உருவகித்து வைத்திருந்த தன்மைக்குப் பொருந்தாத  ஒரு குத்துப்பாட்டைக் கண்டு ஒவ்வாமை வருகிறது. அது வரை படத்துடன் அவர்களைப் பிணைத்திருந்த கண்ணிகள் அறுபட்டு மனதால் அந்த அரங்கத்தை விட்டு வெளியேறுகிறார்கள். அதன் பிறகு அங்கு அமர்ந்திருப்பது அவர்களின் உடல்கள் மட்டுமே.
அடூர் கோபாலகிருஷ்ணன் 

‘அவள் பெயர் தமிழரசிக்கு’ நிகழ்ந்ததும் அதுதான். நான் எழுதிய திரைக்கதையின் தன்மையில் உருவா க்கிய சுவரொட் டிகளும் பட பூஜை அழைப்பிதழும் ரசிகர்களிடமும் அறிவார்ந்த படைப்பா ளிகள் மத்தியிலும்  நன்மதிப்பைப் பெற்று எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. உதவி இயக்குனராக இருந்த போதே நான்  கணையாழி உட்பட சில இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதிய தகவலும் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற தீவிர படைப்பாளிகளின் திரைக்கதையை மொழிபெயர்த்திருந்த தகவலும் என் மீதான் சிறப்புக் கவனத்தை உருவாக்கியிருந்தது. 

படம் வெளியாவதற்கு முன்பே தோல்பாவைக் கூத்து தொடர்பான சில காட்சிகள் காட்டப்பட்டு துபாய் சர்வதேச திரைப்பட விழாக் கமிட்டியினரால் படம் அங்கு திரையிட தேர்வு செய்யப்பட்டிருந்தது. இந்த செய்தி எல்லா நாளிதழ்களிலும் வர வைக்கப்பட்டது. இதுவும் தீவிர விமர்சகர்கள் மற்றும் படைப்பாளிகள் மத்தியில் படத்தின் மீதான கவனத்தைக் குவித்தது, இசை வெளியீடு 2009 அக்டோபரில் பிரம்மாண்டமாய் நடந்தது. அதற்கான அழைப்பிதழை இயக்குனர் சசிக்குமாரிடம் நான் கொடுக்கச் சென்ற போது official selection at dubai 6th international film festival என்று இரண்டு கோதுமைக் கதிர்களுக்கு நடுவே அச்சிடப்பட்ட லோகோவைப் பார்த்து அவர் கூறியது இப்போதும் நினைவிருக்கிறது.

”மீரா.. இப்படி விருதுப்படம் போல காண்பித்தால் வியாபாரத்தை பாதிக்காதா?” என்று. ஆனால், விருதுகளுக்கு படத்தை அனுப்பி விட்டு திரையரங்குகளுக்கு கொண்டு வருகிற வழக்கம் இன்றைய சினிமா வியாபரத்தில் முக்கிய அம்சமாக மாறியிருக்கிறது. ஆனால், அன்று  நிலை வேறு. அவர் கூறியது போல படத்தின் வியாபாரத்தை அதுவும் பாதித்திருக்கலாம். வியாபாரத் திற்காக குத்துப்பாட்டும் வைக்க வேண்டியிருக்கிறது.

சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்ட படம் என்று காட்டிக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது (அங்கு  குத்துப்பாட்டு இல்லாமல் தான் திரையிடப்பட்டது). இந்த இரட்டை மனோநிலைதான் பெரும் பாதகமாக மாறியது. கூட்டாகச் சேர்ந்து இயங்குவது தான் சினிமாத் துறை என்பதை நாம் அறிவோம் என்றால் இப்படியான கீழ் படிதல்களும் சமரசங்களும் அங்கு நடக்க வாய்ப்புகளும் உண்டு  என்கிற உண்மையையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். 

இன்றளவிலும் அவள் பெயர் தமிழரசி பற்றி சிலாகித்துப்பேசுபவர்களில் நிறைய பேர் அந்த சமரசங்களையே குறையாகச் சொல்வதுண்டு. அதை நீக்கியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே என்று சொல்கிற போது ரசிகர்களின் கணக்கும் வர்த்தகத்திலிருப்பவர்களின் கணக்கும் வேறு வேறு என்கிற என்னுடைய புரிதல் மேலும் வலுப்பெறுகிறது. குத்துப்பாட்டு,காமெடி டிராக் என்று எதுவுமேயில்லாமல்  நான் விரும்பியது போலவே அந்த சினிமா எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் ஒரு வேளை அது பார்வையாளர்களிடம் இன்னும் அதிகமான தாக்கத்தை உருவாக்கியிருக்கலாம்.

அதிகமான பார்வையாளர்களிடமும் சென்று சேர்ந்திருக்கலாம்.  விருதுகளையும் குவித்திருக்கலாம்.. அந்த அங்கீகாரம் எனக்கு அடுத்த கட்டத்திற்கு உடனடியாக நகர்வதற்கான உத்வேகங்களை  வழங்கியி ருக்கலாம்.. இரண்டுமே நடக்கவில்லை. படத்தை தயாரித்த நிறுவனத்தின் முந்தைய படங்கள் வெற்றிப்படங்களாக மாறியிருந்தால்  அவள் பெயர் தமிழரசியின் திரைக்கதையில் மாற்றங்களைச் செய்திருக்க மாட்டோம். பல நிறுவனங்கள் தயாரிக்க முன் வராத,யோசித்த திரைக்கதையை நம்பி உடனடியாக தயாரித்தவர் திரு. தனஞ்செயன் அவர்கள். மிக நல்ல மனிதர். கலாப்பூர்வமான மனசுக்குச் சொந்தக்காரர். அப்படியான மனதில்லை யென்றால் அந்தப் படத்தை தயாரித்திருக்கவே முடியாது. மோசர்பேர்  நிறுவணத்தின் சார்பில் தயாரித்தவர் திரு. தனஞ்செயன். "அவள் பெயர் தமிழரசி வணிக ரீதியான வெற்றியைப் பெற்றிருந்தால் அவர் இன்னமும் அதைப் போல் நூறு படங்களைச் செய்திருப்பார்.எப்போதும் அவர் மீது எனக்கு அளவற்ற அன்பும் நன்றியும் இருக்கிறது.

இன்னொரு புறத்திலிருந்து பார்த்தால் படைப்பாளிகள் மற்றும்  விமர்சகர்களில் சிலர் மட்டுமே இது போன்ற கருத்துக்களை முன் வைக்கிறார்கள், பார்த்தவரையில் இப்போதும் அந்த படத்தைக் கொண்டாடிக்கொண்டு இருப்பவர்களும் நிறைய இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர் என்று பல பத்திரிகைகளும் பாராட்டின. நூறு வயதுள்ள  மைய நீரோட்ட தமிழ் சினிமாவில்  நலிந்து போன நாட்டுபுறக் கலைகளைப் பற்றி பேசிய ஒரு சில படங்களில் அவள் பெயர் தமிழரசிக்கு முக்கிய இடமளித்திருக்கிறார்கள். 

என்னுடைய தரப்பிலும் பல தவறுகள் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. சினிமாவில் எனக்கான, நான் சுதந்திரமாக இயங்குவதற்கான ஒரு நிலையை எட்டிய பிறகு  அந்த படத்தை இயக்கியிருக்க வேண்டும். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வில் இன்னும் பக்குவமடைந்த நிலையில் அனுபவம் மிக்கவர்களை தேர்வு செய்திருக்க வேண்டும்,  பலருக்கும் உதவி செய்ய வேண்டுமென்கிற நிலையில் மட்டுமில்லாமல் கொஞ்சம் சுய நலமாக இருந்திருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், உணர்வுபூர்வமாக இல்லா மல் அறிவு பூர்வமாக இருந்திருக்க வேண்டும். 

ஒரு வேளை சமரசமாகாமல் நான் பிடிவாதமாக இருந்திருந்தால் அப்படி ஒரு படமே எடுக்கப்படாமல் போயிருக்கவும் வாய்ப்புகளுண்டு. இன்றளவும் எல்லோரின் வீடுகளிலும் உள்ள தொலைக்காட்சிப் பெட்டி வழியாக தோல் பாவைகளின் பிம்பமும் அதன் அழிவு பற்றிய பதிவும் தவழ்ந்து கொண்டி ருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கண்களுக்கும் காட்சியாவதை பெருமையாகத் தான் கருதுகிறேன்.

திரையரங்குகளில் படம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஆளுங்கட்சியின் சாதனை களைப் பட்டியலிடும் பிரச்சாரப் படத்தையும் இடைவேளைகளில் திரையி டப்படும் விளம்பரப் படங்களையும் நாம் விரும்பித் தான் பார்க்கிறோமா? அந்த நிர்பந்தங்களைப் புரிந்து கொண்டு நாம் கடந்து போய் விடுவதில்லையா? சினிமாவை நேசிக்கிற பார்வையாளன், சினிமாவிற்கு முதலீடு செய்யும் தயாரிப்பாளர், சினிமாவை உருவாக்கும் இயக்குனர் இந்த மூன்று பேரை மையப்படுத்தித் தான் மைய நீரோட்ட சினிமா உலகமே இயங்குகிறது.

பிராதானமாக  பார்வையாளனுக்கும் தயாரிப்பாளருக்கும் உருவாக்கும் சினிமாவில் தனக்கெனக் கிடைக்கும் ஒரு சில இடங்களில் தான் இயக்குனர் எட்டிப்பார்த்து தன் முகத்தைக்காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நீரின் மேற்பரப்புக்கு வந்து மூச்சு வாங்கிக்கொண்டு மீண்டும் ஆழ்கடலுக்குள் மூழ்குவதைப்போல. 

கேள்வி: விமர்சகர்களை விட்டு விடுவோம் .இந்த வணிக சமரசங்கள் உங்களுக்கு வியாபார ரீதியாக சாதகமான பலன்களைப் பெற்றுத் தந்தனவா ?

சுப்ரமணியபுரம் படப்படிப்பு நடந்துகொண்டிருக்கும் போதே என்னுடைய படத்திற்காக  நடிகர் ஜெய்யை  நான் ஒப்பந்தம் செய்தேன். அதற்கு அடுத்த படமாக வர வேண்டிய படம் அவள் பெயர் தமிழரசி. ஆனால், அவருடைய வரிசையான மூன்று தோல்விப் படங்களுக்குப் பிறகே என்னுடைய படம் வெளிவந்தது. படத்தை தயாரித்த நிறுவனத்திற்கும் வரிசையாக சில படங்கள் தோல்வியடைந்தன. 
இந்த கால கட்டத்தில்தான் நடிகர் ஜெய் தான் நடித்துக்கொண்டிருக்கும் படங்களில் ”வாமனனைத்” தவிர எல்லாப் படங்களும் தோல்வியடையும் என்று அவர் கூறியதாக டைம்ஸ் ஆப் இண்டியா பத்திரிகை ஒரு பேட்டியை வெளியிட்டது (வாமனன் பெரும் தோல்வியடைந்தது).இப்படியான பல காரணங்கள் படம் வெளிவருவதற்கு முன்பே படத்தின் வியாபாரத்தைப் பல வழிகளிலும் பாதித்திருந்தன என்பதுதான் உண்மை. சுப்ரமணியபுரம் படத்திற்குப் பிறகு அடுத்த படமாக என்னுடைய படம் வந்திருந்தால்  நடிகர் ஜெய்க்கான அப்போதைய ஒரு வசீகரத்துக்காகவாவது சிறிய வரவேற்பு கிட்டியிருக்கும். வசூல் ரீதியாக சிறப்பான இடத்தை அடைந்திருக்கும். 

கேள்வி: பால்யகால சினேகிதி , அவள் பற்றிய நினைவேக்கம் , அவளைத் தேடியலைதல் என்ற  வழக்கமான அம்சங்களைக் கொண்டிருந்தாலும் ‘தோற்பாவைக் கூத்துக்’ கலை பற்றி நம்பகத் தன்மையுடன் பேசிய படம் என்ற வகையில் ‘அவள் பெயர் தமிழரசிக்கு’ குறிப்பிடத் தகுந்ததோர் இடமுண்டு . இக் கலை பற்றிய விபரங்களை எவ்வாறு சேகரித்தீர்கள்? கள ஆய்வுகள் எவையேனும் செய்தீர்களா ?

 தமிழ் நாடு முழுவதும் இருக்கிற பல தோல் பாவைக்கூத்து கலைஞர்களைச் சந்தித்துப் பேசினேன். பேராசிரியர் மு.ராமசாமி (ஜோக்கர் படத்தில் நடித்தவர்) அ.கா. பெருமாளின் சில புத்தகங்கள் போன்றவற்றில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் முதல் கட்ட திரைக்கதையை எழுதினேன். இயக்குனர் ரமணி அவர்களின் ஆவணப்படம், வட இந்தியா மற்றும் கேரளாவில் எடுக்கப்பட்ட சில ஆவணப்படங்கள் உதவியாக இருந்தன, விருதுநகர் அருகேயுள்ள கள்ளிக்குடியைச் சேர்ந்த மறைந்த தோற்பாவைக்கூத்துக் கலைஞர் திரு.முருகன் ராவும் கோவில் பட்டியைச் சேர்ந்த கலைஞர் லட்சுமண ராவும் பல அரிய தகவல்களைக் கூறி உதவினார்கள்.

குன்னாங்க்குண்ணூர் செல்வம் களப்பணிகளில் உடனிருந்து தகவல் சேகரிக்க உதவினார். டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலே அவள் பெயர் தமிழரசிக்கு முதல் தூண்டுதலாக இருந்தது மாற்று சினிமா, சமாந்தர சினிமாக்களைப் பார்க்கிற பார்வையில் மைய நீரோட்ட சினிமாவைப் பார்க்கக் கூடாது,முழுக்க முழுக்க வர்த்தகமாக மட்டுமே இயங்கும் வழக்கமான சினிமாக்களில் இது போன்ற விசயங்களைப் பேசுவதில் தான் பெரும் சவால் இருக்கிறது அதற்கே நிறைய இழக்க வேண்டியிருக்க்கிறது.


கேள்வி: நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உங்கள் இரண்டாவது படமான ‘விழித்திரு’ வெளியானது . இந்தத் தாமதத்துக்கான காரணம் என்ன ?

அவள் பெயர் தமிழரசி முக்கியமான திரைப்படம் என்று  பரவலான பாராட்டுக்களைப் பெற்றிருந்தாலும் அடுத்த படத்திற்கான வாய்ப்புகள் உடனே கிடைக்கவில்லை. ஒரு நிலையில் நானே தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். நான் கதை நாயகனாக நடித்து ஒரு புதுமுக இயக்குனர் இயக்குவதாக இருந்தது. பிறகு அதை கைவிட்டு  நண்பர்களுடன் இணைந்து 2012ல் ‘விழித்திரு’வை துவங்கினோம். முற்றிலும் புதுமுகங்களை வைத்து எடுக்கும் திட்டமேயிருந்தது. 

சினிமாவில் அப்போது புதுமுகங்களுக்கு தொலைக்காட்சி உரிமை விற்பனை இல்லாத நிலைமையிருந்தது. புதுமுகங்களின் படங்களைப் பெரிய தயரிப்பு நிறுவனத்தைத் தவிர எவர்  வெளியிட்டாலும் திரையரங்குகள் கிடைக்காது என்கிற நிலையும் இருந்தது. அதனால் அப்போது வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்த ‘கழுகு’ படத்தில் நடித்திருந்த கிருஷ்ணாவை அணுகினேன், அவர் என்னுடன் பணிபுரிவதற்கு உடனே ஒத்துக்கொண்டார். 

விதார்த், தன்ஷிகா, தம்பி ராமய்யா என்று எல்லோரையும் தெரிந்த முகங்களாக ஒப்பந்தம் செய்தோம். ஒரு வகையில் அவள் பெயர் தமிழரசியில் உருவான அனுபவங்களே எல்லா வித்திலும் இயக்கியது. தனியாக அலுவலகம் பிடிப்பது முதல் படத்திற்கு தேவையான நடிகர் நடிககைகளை ஓரளவுக்கு தெரிந்தவர்களாக ஒப்பந்தம் செய்தது வரை  என எல்லாமே அப்படித்தான். படத்தில் பணியாற்றிய முன்னணி தொழில்நுட்பக் கலைஞர் ஒருவர் மூலமாக ஒரு பெரிய தொகை வருவதாக இருந்தது. அது கடைசி வரையிலும்  வரவில்லை. 

.ஆனால், அதை நம்பி வெளியே ஒருவரிடம் பணம் வாங்கினேன். அதிலிருந்து மீண்டு வர முடியாதபடி பெரிய இடியாப்பச்சிக்கலையும் அவருடைய வாக்குறுதி உருவாக்கி விட்டது . இப்படியான பல போராட்டங்களுக்குப் பிறகு 2015லேயே படம் முடிந்தும் விட்டது. இதற்கிடையில் நடிகர் கிருஷ்ணா நடித்து வெளியான அனேகப் படங்களும் பெரும் தோல்வியைத் தழுவின. டி.வி சேனல்கள் புதிய  படங்களை வாங்குவதை நிறுத்திக்கொண்டன. சிறிய தொகையை முன் பணமாகக் கொடுத்து ஒப்பந்தம் போட்டு படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியவரால் படத்தை சொன்ன தேதியில் வெளியிட முடியாமல் போனது. 

இரண்டரை வருடம் இழுத்தடித்தார்கள். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தேன். இயக்குனர் கலைப்புலி தாணு மற்றும் விஷால் என இரண்டு தலைமையும் மாறி மாறி பஞ்சாயத்து செய்தார்கள். இதற்கிடையில் படத்தைப் பார்த்து பிடித்துப்போன இரண்டு பெரிய தயாரிப்பாளர்கள் வெளியிடுவதற்கு முன் வந்த போதும் படத்தை வாங்கிய விநியோகஸ்தர் அனுமதிக்க வுமில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நடையாய் நடந்து களைத்துப்போனேன். இயக்குனர் திரு. விக்ரமன் தலைமையிலான இயக் குனர் சங்கம் எனக்காக இப்பிரச்சினயில் தலையிட்டது.

பல கட்ட பேச்சு வார்த்தைகளின் முடிவில் சென்ற அக்டோபர் 6ஆம் திகதி படத்தை வெளியிட்டு விடுவோம் என்று சங்கத்தின் முன் வாக்குறுதி யளித்தார்கள். வெளியீட்டு வேலைகள் மும்முரமாய் நடந்து கொண்டிருக்கும் போது தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எல்லாம் சேர்ந்து தமிழ் நாட்டு அரசின் வரிக்குறைப்பிற்காக  வேலை நிறுத்தத்தை அறிவித்தார்கள். அது நல்ல ஓரு திகதியாக இருந்தது. மாற்றுத் திகதியான நவம்பர் 3 ல் வெளியீட்டிற்கான தீவிர வேலைகளில்  நானும் எனது குழுவினரும் ஈடுபட்டிருந்தோம்.  வெளியீட்டுக்கு முதல் நாள் இரவில், எங்களால்  வெளியீடு செய்ய முடியாது, பணமில்லை என்றும் எனக்கு செட்டில் செய்யவும் முடியாது என்று தலையில் தீயை வாரிக்கொட்டினார்கள். 

மூன்றாவது முறையும் வெளியீடு செய்ய முடியமல் தள்ளிப் போனால் படத்தின் மீதான மதிப்பு முற்றிலுமாய் குலைந்து விடும் என்று  தெரிந்தது. நானும்  என்னுடைய நண்பரும் மிகவும் போராடி ஓர் இரவுக்குள் ஒண்ணே கால் கோடி வரை பணம் புரட்டி அவர்கள் வாங்கிய கடனையும் செலுத்தி படத்தை வெளியிட்டோம். விதி வலியது. இயற்கையும் சதி செய்து எங்களைக் கை விட்டது. அந்த வாரம் முழுவதும் பார்வையாளர்கள் திரையரங்கிற்கு வர முடியாத அளவிற்கு அடை மழை கொட்டித் தீர்த்தது. எங்கள் கண்ணீரிலும் மழையிலும் ஐந்து வருட கால உழைப்பு கரைந்து போனது. 

ஒரு வைராக்கியம் காரணமாகத் தயாரிப்பில் ஈடுபட்ட எனக்கு  இப்படி வரிசையாக சறுக்கல்கள்.  கடைசி வரையிலும் விதி துரத்திக்கொண் டேயிருந்தது..  வேலை நிறுத்தம் அறிவிக்கப்படாமல் அக்டோபர் ஆறாம் திகதியன்று படம் வெளியாகியிருந்தால்  நிச்சயம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டேன்.

எல்லாக் காலங்களிலும் பொதுச் சடங்குகளுக்காக எளியவர்களின் தலைகளே பலி பீடங்களில் உருள்கின்றன. விழித்திரு படத்திற்கு  இழைக்கப்பட்ட துரோகங்களையும் அநீதியையும் புத்தகமாக எழுதினால் இன்னொரு ‘துலாபாரமாக’ இருக்கும். அப்படி எழுதுகிற எண்ணமும் இருக்கிறது.யாரோ ஒருவன் ஆடுகிற சூதாட்டத்திற்கு யாரோ ஒருவன் பணயமாகாமல் இருக்க அது பேருதவி செய்யும்.

கேள்வி: ‘அவள் பெயர் தமிழரசி’ யில் இருந்த கவித்துவமும் , எளிமையும் ,இயல்புத் தன்மையும் ‘விழித்திரு’ வில் நழுவிப் போய் விட்டது போல் உணர்ந்தேன். இரண்டு படங்களுக்குமிடையில் காலத்தால் மட்டுமில் லாமல் , வெளிப்பாட்டு முறையாலும் பெரும் வித்தியாசங்களை உணர முடிந்தது . ‘ட்ரென்ட் ‘ என்ற ஓர் ஈர்ப்பில் நீங்கள் இன்னொரு பக்கம் நகர்ந்து விட்டதைப் போலுள்ளது. மெக்ஸிக்கன் இயக்குனர் அலெசா ன்ட்ரோ கொன்ஸலெஸ் இனாரிட்டு(Alejandro González Iñárritu )போன்ற இயக்குனர்களின் வெளிப்பாட்டு முறை உங்களுக்கு வசீகரமளித்திருக்கக் கூடும் . அந்தப் போக்கை , ட்ரென்ட்டை நீங்களும் பிரதிபலித்தீர்களா?

அடிப்படையில் நான் ஒரு சிறந்த கதை சொல்லியாக இருக்க விரும்புகிறேன். ஒரே வகையான படத்தயாரிப்பிலும் கதை சொல்லல் முறையிலும்  சிலந்தி யைப் போல் அடைபட்டுக் கிடக்க விரும்பவில்லை. படைப்பாளிக்கென்று எந்த தனித்துவமும் கிடையாது. ஆனால், படைப்புகள் ஒன்றிலிருந்து மற்றொன்று  வேறுபட்டு தனித்துவமாக நிற்கிறது.அதைப் புரிந்து கொள்ளாமல்  தனக் கென்று மட்டுமே  ஒரு நிலையான தனித்துவம் இருப்பாதாய் நினைக்கிற படைப்பாளிகளின் படங்கள் சீக்கிரத்திலேயே கிளிஷேயாக மாறி விடுகின்றன .நான் அதை விரும்பவில்லை. 

‘அவள் பெயர் தமிழரசி’ அதன் தன்மையில் இயல்பிலேயே ஒரு தனித்து வத்தைக் கொண்டிருந்தது. அந்த கவித்துவமும் எளிமையும் அத் தனித்து வத்தால் வெளிப்பட்ட ஒன்று. அந்தப் படத்தில் சூழல் மட்டுமே வில்லனாக இருந்ததற்கும் விழித்திருவில் வில்லன் கதாப்பாத்திரம் ஒன்று இருந்த தற்குமான வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் ஏற்கனவே சொல்லியது போல சமரசமில்லாமல் ,விரும்பிய ஒரு சினிமாவை உருவாக்கு வதற்கான ஒரு இடத்தை நோக்கி நகர்வதே தீர்வு என்கிற நிலைப்பாட்டிற்கு உந்தப்பட்டேன்.

பொருளாதார ரீதியான வெற்றிகள் மட்டுமே அதற்கான அடித்தளங்களை உருவாக்கும் எனத் தோன்றியது.  அவள் பெயர் தமிழரசி படமும் அதற்கு
முன்பிருந்த என்னுடைய செயல்பாடுகளும் ஒரு வலிமையான இமேஜை என் மீது உருவாக்கியிருந்தது. மீரா கதிரவன் மைய நீரோட்ட சினிமாவுக்கான ஆள் இல்லை. கலா பூர்வமான படங்களைத் தவிர மீரா கதிரவனால் வேறு சினிமாவைச் செய்ய முடியாது என்று என் காது படவே பேசிக்கொண்டார்கள்.

சக இயக்குனர்கள், விமர்சகர்கள் என்னை அங்கீகரித்ததும் தயாரிப்பாளர்கள்,  வினியோ கஸ்தர்கள் என்னைத் தள்ளி வைத்ததும் எதிரெதிர் துருவங்க ளிலிருந்தது. நான் அந்த இமேஜை உடைக்க வேண் டுமென மனப்பூர் வமாகவே விரும்பினேன். திட்டமிட்டேன். விழித்திருவை ஜனரஞ்சகமான ஒரு சினிமா வாக எடுக்க விரும்பியதற்கு  அதுவே முதற் காரணம்.
நான்கு விதமான கதைகளையும் என்னால் அணுக முடியும் என்பதைக் காட்டவே ஓர் இரவில் நான்கு வெவ்வேறு விதமான கதைகள் என முடிவு செய்தேன்.அதி புனைவான கதைப்பாத்திரங்களும் பரபரப்பான கதையின் மையமும் கவித்துவத்தையும் எளிமையையும் கோரி நிற்கவில்லை.

இன்றைய நவீன யுகத்தில் கதை சொல்லியின் ஆர்வத்தைக் காட்டிலும்  கதை கேட்பவனின் வேட்கை விசாலமடைந்து கொண்டேயிருக்கிறது. நேர்கோ ட்டின் மரபில் கதை சொல்லும் உத்தியிலிருந்து நவீன பார்வையாளன் மெல்ல மெல்ல  விலகிக் கொண்டு வருகிறான் என்பதே உண்மை. தேர்ந்த ரசனையை உருவாக்குவதில் கதையின் உள்ளடக்கத்தைப் போலவே கதை சொல்லுகிற உத்தியும் பெரும் பங்களிப்பு செய்வதாய் நம்புகிறேன். ஒரு கலைஞனாக அந்த நம்பிக்கையைப் பின் தொடர்ந்து செல்கிறேன். ட்ரெண்டின் மீதான ஈர்ப்பினால் அல்ல, 

 மேலே நான் சொன்ன மெக்சிக்கன் இயக்குனர்  இந்திய இயக்குனர்கள் பலரிலும் செல்வாக்கு செலுத்தியுள்ளார் . மணிரத்தினம் கூட விதி விலக்கல்ல . அவருடைய ‘ஆயுத பூஜை ‘ படம் அதற்கு உதாரணம் . அதாவது ஒரே படத்தில் வெவ்வேறு தடங்கள் பயணிக்கும் முறை. இந்த வெவ்வேறு தடங்கள் எல்லாம் இறுதியில் ஒரு புள்ளியில் வந்து குவியும் . என் அபிப்பிராயம் சரியா ?
 ரஷோமான் போன்ற படங்களில் அகிரா குரசேவா  நவீன கதை சொல்லல் முறையை நீண்ட காலத்திற்கு முன்னரே முயற்சி செய்து வெற்றியும் அடைந்திருக்கிறார்.மலையாளத்தில் எழுபதுகளில் வந்த கே.ஜி .ஜார்ஜின் ‘ஆதாமிண்ட வாரியெல்லு’ படமும் இப்படியான முயற்சி தான். ஆனால் கெய்ரிச், ராபர்ட்டினரோ, குவெண்டின் டொரண்டினா, அலசாண்ட்ரோ கொன் ஸ்லஸ் இனாரித் உள்ளிட்ட பல இயக்குனர்கள் தங்களின் வீரியமான, அழுத்தமான  நவீன கதை சொல்லல் முயற்சியால் உலகெங்கிலும் உள்ள  பல இளம் தலை முறை இயக்குனர்களிடம் பெரும் தாக்கத்தைச் செலுத்து கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.அதில் நானுமொருவன். ஆனால் உண்மையில் ட்ரெண்ட்டை உருவாக்குவது நான் ஏற்கனவே சொன்னது போல கதை கேட்பதில் விசாலமடைந்து கொண்டிருக்கும் பார்வையாளனின் வேட்கையே தான்.

கேள்வி: மதிப்பு மிகுந்த இலக்கியப் பின்புலம் ஒன்று உங்களுக்கு உண்டு . அவற்றைத் திரைப்படங்களாக மடைமாற்றுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் எவை ?
நான் எழுதிய முதல் சிறுகதை ‘வதை’ , அது ஒரு தமிழ் இஸ்லாமிய நாவிதரைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டது. கணையாழியில் எழுதிய இரண்டாவது சிறுகதை ஒரு தமிழ் சிறுவனின் வாழ்வில் இரண்டாம் தாயாக கடந்து வருகிற ஒரு தமிழ்ப் பெண்ணைப் பற்றியது. மூன்றாவதாக எழுதி கல்கி இதழில் பிரசுரமான ’மழை வாசம்’’ சிறுகதை ஒரு நடுத்தர தமிழ் இளைஞனின் பழைய காதலைப்பேசுகிறது. 

இலக்கியம், திரைப்படம் ஆகிய இரண்டும் இரண்டு தனித்துவமான குணங்க ளோடு இயங்குபவை. புத்தகம் ஒரு பார்வையாளனுக்குத் தருகிற சுதந்திரத்தை, கற்பனானுபவங்களை ஒரு திரைப்படத்தால் முழுமையாகத் தர முடியாது. எல்லாக் கதவுகளையும் அடைத்து  ஒரு இருட்டுக்கொட்டடியில் போட்டு கையில் குச்சி வைத்து மிரட்டி நான் சொல்வதை மட்டுமே நீ கேட்டாக வேண்டும் என்கிற அளவில் தான் ஒரு திரைப்படம் பார்வையாளனுக்கு சுதந்திரத்தை வழங்குகிறது.

ஒரு அழகான பெண் தெருவில் நடந்து செல்கிறாள் என்று வாசித்தால் அந்த வரி தருகிற அனுபவமும் கற்பனையும் பெரிது. வாசிப்பவன் தனக்குப் பிடித்த மான பெண்ணை நினைத்துக்கொள்கிறான். தனக்கு பிடித்தமான தெருவை நினைத்துக் கொள்கிறான்.தனக்குப் பிடித்தமான நிறத்தில் அவளுக்கான ஆடையை அணிவிக்கிறான். தெருவில் நிறைந்திருக்கும் ஒளியும் அவள் நடக்கையில் பின்னணியாக ஒலிக்கும் இசையும் வாசிப்பவனின் விருப்பத்திற்கேற்ப அவன் மனதிலிருந்து வருபவை.

ஆனால், சினிமாவில் காண்பவை ஏற்கனவே இன்னொரு மனித மனதால் முடிவு செய்யப் பட்டவை. இந்த இரண்டு மனங்களும் இணைகிற புள்ளியில்தான் ஒரு மேஜிக் நிகழ்கிறது. அந்தப் பெண்ணின் அழகைப் பற்றி பல பக்கங்களில் விவரிக்கலாம், ஆனால்  சினிமாவில் அதை ஒரு குளோசப் ஷாட்டில் காட்டி விட முடியும், அதற்கு மேல் அங்கு விவரணைகளுக்கு அனுமதியில்லை. அது தேவையற்றதாகி விடுகிறது.

இலக்கியப் பிரதி அதிகமாக விவரணைகளால் ஆனதென்றால் சினிமா அதிகமும் சம்பவங்களாலும் காட்சித் துணுக்குகளாலும் ஆனது .சம்பவங்கள் அதிகம் இல்லாத நாவல் என்னதான் ஆகச் சிறந்ததென்றாலும் சினிமாவாக்க முடியாது , அல்லது அந்த நாவலைத் தழுவி திரைக்கதையாசிரியன் புதிய திரைக்கதையை எழுத வேண்டும். முழுக்க முழுக்க நடிகர்கள் மயமாகி விட்ட தமிழ்  சினிமாவில் அவதார புருஷர்களாக அல்லாமல் பலஹீனத்தோடு நிறைந்த சராசரியான, இயல்பான மனிதர்களின் வாழ்க்கையைப் பேசுகிற நாவல்களை படமாக்குவது என்பதும் குதிரைக் கொம்பான விசயம் தான்.

கேள்வி: தமிழில் அண்மையில் தோன்றி குறிப்பிடத் தகுந்த படைப்புகளைத் தந்த இளம் இயக்குனர்கள் பலரும் ஏன் மறுபடியும்  நட்சத்திர ஆதிக்கங் களுக்குத் தம்மைக் காவு கொடுக்கின்றனர் ?

நடிகர்கள் மயமாகி விட்டிருக்கும் சினிமாதான் அதற்குக் காரணம். ஒரு படத்தில் பெரிய நடிகரொருவர் இருக்கிறாரென்றால் அந்தப் படத்திற்கு சுலபமாக கடனுதவி கிடைக்கும். அறியப்படுகிற சக நடிகர்கள் நடிகைகள் தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆர்வமாக பங்கு பெறுவார்கள். திரையரங்குகளும் காட்சி நேரங்களும் அதிகமாகக் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலே ரசிகர்களாகிய பார்வையாளர்கள் முதல் மூன்று நாட்களிலேயே பார்த்தும் விடுவார்கள். ஆனால் புதுமுக நடிகர்களின் விசயத்தில் இதெல்லாம் தலை கீழாக இருக்கிறது.

பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருந்தால் மட்டுமே இன்றைய சூழலில் புதுமுகங்கள் நிறைந்த படத்தை திரையரங்கிற்கே கொண்டு வர முடிகிறது. எல்லா காலத்திலும் ரசிகர்கள் எனப்படுபவர்கள்  பல பிரிவுகளாகத்தான் பிரிந்து கிடக்கிறார்கள். சகல கலா வல்லவனையும் முரட்டுக் காளையையும் வெற்றிப் படமாக்கியது இன்றைக்கிருக்கிற மாதிரியான அதே ‘ஒப்பணிங் ஆடியன்ஸ் ‘ அல்லது ரசிகர்கள் தான். ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு  நல்ல படத்தை பத்திரிகைகளும் பார்வையாளர்களும் பாராட்டுவதறிந்து  தேர்ந்த ஆடியன்ஸான ஒரு கூட்டம் திரையரங்கிற்கு வந்தார்கள். அது வரை படத்தை தியேட்டரில் நிறுத்தியிருந்தார்கள்.

ஆனால், இப்போது சினிமாவின் ஆயுள்  முதல் மூன்று நாட்களாகச் சுருங்கி விட்டது. நான்காவது நாள் படம் செத்து விடுகிறது. அடுத்த வெள்ளிக்கிழமை மேலும் ஐந்து அல்லது ஆறு புதிய படங்கள் ரிலீசுக்கு வருகின்றன. படங்களின் உருவாக்கத்தையும் வெளியீட்டையும் முறைப்படுத்தாமல் போனதே சிறிய படங்களின் மீது பார்வையாளனுக்கு தனிக் கவனம் இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம். ஒரு நடிகரின் படத்தை முதல் மூன்று நாட்களில் பார்த்து விடுகிற ரசிகர்கள் (அது மிக மோசமான மொக்கையாக இருந்தாலும்)மற்ற சிறிய படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் நல்ல படங்களாக இருந்தாலும் வசூலில் பின் தங்கிவிடுகிறது.

அந்தப் படம் வெளியாவதே தெரியாமல் போய் விடுகிறது, வசூலை மட்டுமே மையமாக வைத்து ஆடும் ஆட்டத்தில் நல்ல இயக்குனர்கள் களத்திலிருந்து வெளியேற்றப் படுகிறார்கள். ஆகவே தங்களின் இரண்டாவது படத்திற்குப் பிரபல நடிகர்களைத் தேடிச் செல்கிறார்கள். சினிமாவின் தற்போதைய இந்த அவல நிலையைப் புரிந்து கொள்வதற்கு ஆழ்ந்து நோக்குவது அவசிய மாகிறது. 

 உங்கள் அடுத்த திரைப்பட முயற்சியில் இறங்கி விட்டீர்களா ?
ஆமாம். சிறிய பட்ஜெட்டில் ஒரு படமும் பிரபல நடிகருடன் ஒரு படமும் என பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது

நன்றி வீரகேசரி  சங்கமம் - 21.04.2018



You Might Also Like

1 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images