அரசியலில் பெண்களும் வன்முறைகளும் - ஜீவா சதாசிவம்

April 07, 2018


இலங்கை அரசியலில் பெண்களின் பங்கேற்பு சம்பந்தமாக கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலோடு கூடிய கவனம் திரும்பியது. உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீதம் பெண் உறுப்பினர்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற சட்ட ஏற்பாடு காரணமாக நிறை குறைகளுக்கு அப்பால் பெண்கள் உள்ளூராட்சி மன்றங்களில் பங்கேற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேநேரம் அரசியல் கட்சிகளுக்கு உள்ளேயும் அரசியல் கட்சிகளுக்கி டையேயும் இடம்பெறும் வாத, விவாதங்கள் கைகலப்பாகவும் வன்முறைகளாகவும் மாறி விடுவதுண்டு. 

வாத விவாதங்களின் போதல்லாமல் அரசியல் அதிகாரம் இருப்பதன் காரணமாக அதிகாரம் கொண்டோர் பலவிதமான வன்முறைகளில் ஈடுபடுவதை அவதானித்திருக்கிறோம். கடந்த மாதம் ஒரு மாகாண சபை உறுப்பினரின் மனைவி ஓர் அரசியல்வாதியாக அல்லாதபோதும் கூட கையில் துப்பாக்கியோடு ஒருவரைத் தாக்குவதை தொலைக்காட்சி வழியாக காணக்கூடியதாக இருந்தது. ஆனால், அதனையெல்லாம் பாரதூரமான விடயமாக பேச முன்வராத சமூக வலைத்தள உலகம்,  மஸ்கெலியாவில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான கைகலப்பின்போது ஒரு பெண் பிரதேச சபை உறுப்பினர் செருப்பை எறியும் காட்சி பரவலாக உரையாடலுக்குள்ளானது.

பெண்ணொருவர் இத்தகைய நிலைமைக்கு ஏன் செல்ல வேண்டும் என்பது பற்றிய ஆராய்வுகள் ஏதுமில்லாமல் அப்பெண் பற்றிய அவதூறான செய்திகளை வெளியிடுவது அல்லது விமர்சனத்துக்குள்ளாக்குவது என்பது பற்றி ஒன்றுக்கு இரண்டு தடவை சிந்திக்க வேண்டியுள்ளது. அவர் செருப்பை ஓங்கி நிற்கும் புகைப்படத்தை வைத்துக்கொண்டு லண்டனில் இருந்துகூட ஆங்கிலத்தில் கட்டுரை எழுதி ஒட்டுமொத்த பெண்களின் அரசியல் பற்றிய விமர்சனக் கட்டுரையை எழுதுவதெல்லாம் அபத்தமானதே. அதேநேரம் பாதிப்புற்றவர்  பெண் என்ற வகையில் அவர் பக்க நியாயங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதை கேட்டறிந்து குறித்த காட்சியை விவாதிப்பதே சரியானதாகும். 

சமூகக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும்  அரசியலுக்கு ஒரு பெண் வந்தால் அதன் பிரதிபலன் என்னவாக இருக்கும் என்பதை மஸ்கெலியாவில் கடந்தவாரம் இடம்பெற்ற அசம்பாவிதம் மறைமுகமாக காட்டி விட்டுச் சென்றுள்ளது

மஸ்கெலியா பிரதேச சபை தலைவர் தெரிவு நாளில் இடம்பெற்ற கலவரத்தில் கலகத்தில் ஈடுபட்ட கூட்டத்தின் மத்தியிலிருந்து ஒரு பெண்  செருப்பைத் தூக்கி எறியும் காட்சியை ஊடகங்கள் பிரசுரித்திருந்தன. முகநூலில் அவரவர் விருப்பத்திற்கேற்ப தனது புகைப்படத்தைப் போட்டு பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். 

ஆனால், தான் தூக்கியெறிந்த செருப்பு தன்னை நோக்கி எறியப்பட்ட செருப்பு என்பதையும் அது ஒரு ஆணுடையது என்பதையும் யாரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். பெண்கள் அரசியல் களத்தில் இறங்கிச் செயற்படும்போது எதிர்கொள்ள வேண்டிய இத்தகைய பிரச்சினைகளால் தான் மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகியுளளதாகவும்  நோர்வூட் பிரதேச சபை உறுப்பினரான  மஞ்சுளா தெரிவிக்கிறார். அவருடனான உரையாடல் சுருக்கமாக இங்கே தரப்படுகின்றது.

''சிறுவயது முதலே நான் அரசியல் தொழிற்சங்க ஆர்வமுள்ளவள். பல வருடங்களாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் உத்தியோகத்தராக கடமையாற்றிய நான் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவில் செயற்பாட்டாளராக இயங்கி வருவதுடன் கடந்த இரு ஆண்டுகளாக அச்சங்கத்தின் நோர்வூட் பிரதேச அமைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றேன்.

 பெண்ணென்று என்னை ஓரம் கட்டாமல் ஒரு பிரேதசத்திற்குரிய அமைப்பாளராகவும் செயற்பட எனக்கு கிடைத்த வாய்ப்பு கடந்த பொதுத் தெர்தலில் நோர்வூட் தென்மதுரை வட்டார  வேட்பாளராக ஐக்கிய தேசிய முன்னணியில் இ.தொ.கா. முன்னாள் பிரதேச சபை உறுப்பினரை எதிர்த்துப் போட்டியிட்டேன். இதன்போது பெண் என்ற அடிப்படையில் பல்வேறு இழிசொற்களுக்கு ஆளாக நேர்ந்தது.

பெரும் பணச் செலவு செய்து என்னை வட்டாரத்தில்  தோற்கடித்தார்கள். ஆனாலும் எனது பணிகள் மீது நம்பிக்கை வைத்து எமது கட்சி எனக்கு பட்டியல் மூலமாக பிரதேச சபை உறுப்பினர் வாய்ப்பை வழங்கியது. எனது கணவர் வெளிநாட்டில் தொழில் புரியும் அதேநேரம் குடும்பத்தலைவியான நான் எனது பிள்ளைகளையும் பராமரித்துக்கொண்டு அரசியல் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருகின்றேன். குறித்த தினம் எமது அண்மைய பிரதேச சபையான மஸ்கெலியா பிரதேச சபை தலைவர் தெரிவில் எமது கூட்டணி குலுக்கல் முறையில் தெரிவுசெய்யப்படுதற்கான உறுதிப்பாடு கிடைக்கப்பெற்ற நிலையில் எமது அணியினருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கான ஆதரவாளர்களாக மஸ்கெலியா செல்ல தயாரானோம்.

அதற்காக நோர்வூட் சந்தியில் பஸ்ஸுக்காக காத்திருந்தபோது வாகனம் ஒன்றில் வந்த இ.தொ.கா. மாகாண சபை உறுப்பினரொருவர் உள்ளிட்ட ஆதரவாளர்கள் என்னருகே வந்து அவர்களது வாகனத்தை நிறுத்தி என்னை மிகவும் கேவலமான முறையில் ஏசினார்கள். ஒரு பெண்ணை எந்தளவுக்கு வார்த்தைகளால் கொச்சப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு கொச்சைப்படுத்திவிட்டுச் சென்றார்கள். நான்  மிகுந்த மனவேதனை யுடனேயே மஸ்கெலியா நகருக்கு சென்றேன். அங்கே சென்றபோது அங்கேயும் அதே கும்பல்  என்னை சீண்டியது. இதனால் நான் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட நேர்ந்தது.

மஸ்கெலியா பிரதேச சபையை கூட்டுவதில் ஏற்பட்ட குழப்பநிலையை கண்டித்து நாங்கள் மௌனமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் மீண்டும் அவ்வழியாக வந்த அக் கும்பலில் ஒருவர் தாம் வென்று விட்டதாகச் சொல்லி உன்னையெல்லாம் செருப்பால் அடிக்க வேண்டும் என தனது செருப்பை கழற்றி எறிந்தார். அச் செருப்பையே மீண்டும் தூக்கி அவர் மீது பதிலுக்கு எறிந்தேன். அது ஆணுடைய செருப்பு என்பதை அவதானியுங்கள். அந்த கட்டத்திலிருந்து மட்டுமே ஊடகங்கள் என்னை ஒளிப்பதிவு செய்திருக்கின்றன. 

அதற்கு முன்பதான எந்தக்காட்சியும் காண்பிக்கப்படவில்லை. அவை அனைத்தும் எனது மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். 'இப்போ வாடா பொம்பளைகிட்ட' என நான் அவர்களை பார்த்து ஏசும் வசனங்கள், அவர்கள் இதற்கு முன்னர் என்னிடம் வம்பு இழுத்திருக்கிறார்கள் என்பதனை நிரூபிக்கவில்லையா? அவர்கள் என்மீது வீசிய அசிங்கமான வார்த்தைகளின் வெளிப்பாடே நான் அவ்வாறு பேசிக்கொண்டு அவர்கள் என்மீது வீசிய செருப்பை மீண்டும் அவர்கள் மீது எறியக்காரணம் என்பதை புரிந்துகொள் ளாது, நான் பொத்தாம் பொதுவாக செருப்பைக் கழற்றி அடித்ததாக பலரும்  எழுதி வருவதும் எனது படங்கள்   பகிரப்பட்டதும் மிகுந்த மனவேதனை யையும் மனஅழுத்தத்தையும் தந்துள்ளது. 

இந்த உலகம் பெண்ணுக்கு நடக்கும் அநியாயங்களை, அவர்கள் மீது எறியப்படும் அவதூறு வார்த்தைகளை எண்ணிப்பார்க்கத் தவறுகின்றது.  ஒரு பெண் துணிந்து எதிர்த்தால் அவளை எப்படியெல்லாம் இந்த உலகம் சித்தரிக்க முயற்சிக்கிறது என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கின்றது'', என்றும் தெரிவித்தார். ''எனக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உண்டு.  குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் எதிர்காலம் இருக்கிறது. இதனையெல்லாம் எண்ணிப்பார்த்த பின்பே யாராக இருந்தாலும் இச்சம்பவம் குறித்து தமது கருத்தைச் சொல்லவேண்டும்'', என்று குறிப்பிடுகின்றார். 

பெண்கள் அரசியலில் கால்பதிக்க சட்டம் இடமளித்துள்ள போதிலும் சமூகம் அதனை நிறுத்துவதில் எவ்வாறு முன்னிற்கின்றது என்பது பற்றி குறித்த சம்பவமே நன்றாக வெளிபடுத்தியுள்ளது.  நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுளாவின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கும் இப் பத்தியில் அவர் தெரிவித்துள்ளவாறு அவர் பக்க நியாயங்களையும் புரிந்துகொள்ள இன்றைய அலசல் முயற்சித்திருக்கிறது. 

அதேபோராட்டத்தில் இரு மாகாண சபை உறுப்பினர்களும் மாகாண கல்வியமைச்சர் உட்பட அக்கட்சியின் ஆதரவாளர்கள் கற்களை தூக்கி எறிந்து கலகத்தில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளிக் காட்சிகளும் புகைப்படங்களும் கூட வெளிவந்துள்ள நிலையில் அவை சாதாரணமானதாகவே பார்க்கப்பட்டுள்ளன. எனவே, ஆண்கள் வன்முறையில் ஈடுபட்டால் அது சாதாரணமாகப் பார்க்கப்படுவதும் அதுவே பெண்களின் பக்கத்தில் இருந்து வந்தால் அது அசாதாரணமானதாகப் பார்க்கப்படுவதும் எந்த மனநிலை என்னும் கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.

நன்றி வீரகேசரி  05/04/2018

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images