இசைத்துறையில் உலக சாதனை படைத்த ஆரூரண் - ஜீவா சதாசிவம்
June 16, 2018
40 மணிநேர நீண்ட தொடரிசை மூலம் (இசை மரதன்) இசைத்துறையில் உலக சாதனை படைத்த முதலாவது இலங்கையரும் தமிழருமான பிரபல கர்நாடக சங்கீத இளம் கலைஞரும் இசைத்துறை விரிவுரையாளருமான ஆரூரன் அருணந்தி, இத்துறையில் சுமார் பதினைந்து வருட கால அனுபவம் கொண்டவர். இலக்கின் இறுதித் தருணத்தில் மண்டபம் நிறைந்திருந்த இசை ஆர்வலர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு மத்தியில் புதிய சாதனையை நிலைநாட்டினார். வாய்ப்பாட்டை பிரதானமாகக் கொண்டிருந்தாலும் மிருதங்கம், வயலின், வீணை ஆகிய கருவிகளையும் இசைக்கும் ஆளுமையையும் இவர் தன்னகத்தே கொண்டிருக்கின்றார்.
பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல் ஏதாவது ஒன்றை சாதித்தோம் என்று சமூகத்திற்கு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கின்றார் இந்த இளம் கலைஞர். அதனை அவரது 40 மணிநேர தொடரிசைக் கச்சேரி உறுதிப்படுத்திவிட்டது எனலாம். உலக சாதனை இலக்கை எட்டிய கலைஞர் ஆரூரனை அவரது இல்லத்தில் அண்மையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதன்போது கலைத்துறை சார் விடயங்கள் தொடர்பில் இடம்பெற்ற நீண்ட உரையாடலின் சுருக்கம் இங்கு நேர்காணல் வடிவில்....
இசைத்துறையில் உலக சாதனை முயற்சி யின் முதல் இலங்கையர், தமிழராக இருக்கும் உங்களுக்கு சாதனையின் இறுதித் தருணம் எவ்வாறு இருந்தது? இந்நிகழ்வு பற்றி எம்முடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
இசை உலகிற்கு புதிதாக பிறந்தது போல அந்த இறுதித்தருணம் அமைந்திருந்தது. இலங்கை சங்கீதத்துறையில் முதன் முதலாக இடம்பெற்ற சாதனை முயற்சி இது. இலங்கை வரலாற்றில் எவராலும் பதிவு செய்யப்படாத விடயம். இந்திய சாஸ்திரிய சங்கீதம் பாடிய பண்டித் பிரசன்னா குடி இந்த சாதனையை நிலை நாட்டியிருந்தார். இந்தியாவில் உள்ள Assist world Record என்ற அமைப்பு இதனை நடத்தியது. எனது நிகழ்வுக்கான அனுசரணையை கொழும்பு சைவமங்கையர் கழகம் வழங்கி யிருந்தது.
பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், சமூக ஊடகங்கள் இணை யத்தளங்கள் என்பன ஒத்துழைப்பு வழங்கி யிருந்தன. இங்கு "வீரகேசரி" பத்திரிகை வழங்கிய பிரதான பங்கைக் கூறவேண்டும். இலங்கையில் கலை, இலக்கியத்துறையில் கலைஞர்களை வெளிக்கொணர்வதில் மிகவும் பங்காற்றிக் கொண்டிருக்கும் முக்கிய பத்திரிகையாக இருக்கின்றது. அது மாத்திரமல்லாமல் ஏனைய பத்திரிகைகளும் இந்நிகழ்விற்கான பங்களிப்பை வழங்கியமை மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த வெற்றிக்கு பெரும்பாலானவர்கள் உந்துசக்தியாக இருந்துள்ளனர். நண் பர்கள், உறவினர்கள், எனக்குத் தெரிந்த, தெரியாத உறவுகள், நல்லுள்ளங்கள் என ஆயிரக்கணக்கானவர்களின் ஆதரவும் ஆசிகளுமே இந்த சாதனை முயற்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கின என்பதை இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டும். உரிய தருணத்தில் உதவிய அன்புள்ளங்களுக்கு
இத்தருணத்தில் மனமார்ந்த நன்றிகளையும் கூறிக்கொள்கிறேன்.
மிக முக்கியமானவர் என யாரையும் கூற விரும்புகின்றீர்களா?
ஆம்! முக்கியமாக ஒருவரைக் குறிப்பிட வேண்டும். அவர்தான் வைத்திய கலாநிதி அனுஷ்யந்தன். இந்த சாதனை முயற்சிகளின் வெற்றிக்கு பிரதான காரணகர்த்தா. இவ்வாறானதொரு சாதனை முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று என் மனதில் தோன்றியவுடன் முதன்முதலில் நான் Dr.அனுஷ்யந்தனிடம் கூறினேன்.
வைத்திய கலாநிதி அனுஸ்யத்தன் அவர்களுடன்.. |
அவர் உடனேயே வாழ்த்தி, கண்டிப்பாக இதனை செய்வோம் என்றார். அதனுடன் அவர் தரப்பில் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் செய்து என்னுடன் நிகழ்வின் இறுதிவரை பக்கபலமாக இருந்தார். ஆரம்பம் முதல் இறுதி வரையில் கூடவே இருந்து இந்த வெற்றியை கச்சிதமாக முடித்துத் தந்தார். சிறந்த சமூகசேவகரான இவர் வைத்தியராக மாத்திரமல்லாது சகலதுறைகளிலும் ஆளுமை மிக்கவராக இருக்கின்றார். இவர் வாய்ப்பாட்டுத்துறையில் எனது மாணவரும் கூட என்பதை சொல்லிக்கொள்வதில் பெருமையடைகின்றேன்.
இந்த சாதனை முயற்சி சரியாக இடம்பெற்றுள்ளது என்பதை எவ்வாறு, யார் உறுதிப்படுத்தினார்கள்?
Assist world Record என்ற அமைப்பின் கீழ் இந்த சாதனை முயற்சி இடம்பெற்றது. நாம் அன்று மேடையில் வைத்திருந்த Timer மூலம், நேரடி ஒளிபரப்பாகும் வகையில் சகல விடயங்களும் பதிவு செய்யப்பட்டன. இந்த
பதிவுகள், இது சம்பந்தப்பட்ட காணொளிகள், இந்நிகழ்வு தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகள், புகைப்படங்கள் என்பவையும் உரிய தரப்புக்கு அனுப்பி வைக்கப்படும். அவையனைத்தும் மேற்படி குழுவினால் பரிசீலிக்கப்பட்டுஅவர்களது சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இடம்பெற்றுள்ளனவா என்பது பற்றி ஆராய்ந்த பின்னர் இதற்கான முழுமையான அங்கீகாரம் வழங்கப்படும்.
Assist World Record பற்றிக் கூறுங் களேன்?
இந்தியாவில் இந்த அமைப்பு இருக்கின்றது. இந்த அமைப்பின் ஊடாக சாஸ்திரிய சங்கீதம் என்னும் தலைப்பில் பண்டித் பிரசன்னா குடி என்பவர் மாத்திரமே இருதடவைகள் சாதனை செய்திருக்கின்றார். முதல் தடவை 26 மணித்தியாலமும் பின்னர் சுமார் 5 வருடங்களுக்கு பின்னர் 29 மணித்தியாலமும் பாடி சாதனை படைத்தார். 48 மணித்தியாலம் தொடரிசை செய்வதற்கு அவர் முயற்சித்த போதிலும் உடல்நிலை தனக்கு சாதகமாக இல்லை என்பதால் தான் 29 மணித்தியாலத்துடன் நிறைவு செய்து கொண்டதாக அவரே தெரிவித்தார்.
நீங்கள் ஏன் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கவில்லை?
கின்னஸில் சாஸ்திரிய சங்கீத சாதனை முயற்சிகளுக்கான பிரிவு இல்லை. ஆகையால் பல உலக சாதனைகளுக்கு அங்கீகாரம் வழங்கி வரும் Assist world Record என்ற அமைப்பைத் தெரிவு செய்தேன்.
இசைத்துறையில் ‘மரதன்’ செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏன் உருவானது? இதற்கு எவ்வளவு காலம் எடுத்தீர்கள்?
இந்தியாவில் கன்னியாகுமரியில் இருக்கும் நண்பரொருவர் கடம் என்ற வாத்தியத்தில் கின்னஸ் சாதனை புரிந்திருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் ஏனைய வாத்தியங்களிலும் உலக சாதனைகள் பலவற்றை செய்திருக்கின்றார். அவரது இணையப் பக்கத்தைப் பார்த்த போது என்னுள் ஓர் ஆர்வம் ஏற்பட்டது. இவ்வாறானதொரு முயற்சியில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பமும் ஏற்பட்டது.
எனக்கு இருக்கும் இத்திறமையை ஏன் இந்த சமூகத்திற்கு கொடுக்கக்கூடாது எனவும் இத்துறையில் ஒரு சாதனை செய்து மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் எனவும் நினைத்தேன். இது பல வருட கால திட்டமிடல் அல்ல. மூன்று, நான்கு மாதங்களுக்குள்ளேயே திட்டமிட்டோம். இதற்காக பல மணித்தியாலங்கள் இருந்து பயிற்சி எடுக்கவுமில்லை. பல மேடைக் கச்சேரிகள் பாடிய அனுபவமும் 40 மணித்தியாலம் பாடி முடிப்பேன் என்ற திடகாத்திரமான நம்பிக்கையும் என்னை சாதிக்கும் வரை கொண்டுச் சென்றது.
தொடர்ச்சியாக பாடிக்கொண்டிருக்கும் போது உங்களுக்கே சலிப்புத்தட்ட வில்லையா?
ஆம்! ஒரு கட்டத்தில் இதனை விட்டு விடுவோம் என்று யோசித்தேன். ஆனால், எப்படியாவது சாதனையை முறியடிக்க வேண்டும் என்று மனதில் உறுதியும் இலக்கை அடைய வேண்டும் என்ற உத்வேகமும் இருந்தன. எனது அருகில் இருந்தவர்கள் எனக்கு அதீத நம்பிக்கையும் உற்சாகத்தையும் கொடுத்தனர். இந்த உற்சாகம் என்னை தளரவிடவில்லை என்றே கூறுவேன்.
40 மணித்தியாலத்துக்கான உங்க ளது பாடல் தெரிவுகள் பற்றி?
40 மணித்தியாலத்தை பத்து, பத்து பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்ற வகையில் தயார்படுத்தினேன். ராக ஆலாபனை, கல்பனா, தாளம் போன்ற விடயங்களை சேர்த்து ஒரு ராகத்தை மிகவும் விரிவாகப் பாடினேன்.
29 மணித்தியால சாதனையை கடக்கும் வரை ஒவ்வொரு நான்கு மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஒரு சிறிய இடைவெளி எடுத்தேன். அந்த சாதனையை முறியடித்த பின்னர் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கு ஒரு தடவையும் பத்து நிமிடங்கள் இடைவெளி கிடைத்தது. World Assist Record அமைப்பின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே இதனைப் பின்பற்றினேன். இதன் பின்னர் வந்த ஒவ் வொரு மணித்தியாலமும் எனக்கு பெரும் சவாலாக இருந்தது.
நீங்கள் பாடும் போது உங்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் ஏதாவது சம்பவங்கள் இடம்பெற்றனவா?
ஆம். ஒவ்வொரு பாடல்களையும் நான் என்னை லயித்தே பாடினேன். அவ்வாறு பாடிக் கொண்டிருக்கும் போது, என் முன்னால் இருக்கும் சபையோர் என்னை நன்றாகவே ஊக்குவித்தனர் அதேவேளை, சிலர் அருகில் இருப் பவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது என்னுடைய அவதானத்தை திசை திருப்புவதாகவும் அமைந்தது. இருப்பினும் அதனை சுதாகரித்துக் கொண்டே இறுதிக் கட்டத்திற்கு வந்தேன் எனலாம். இந்நிகழ்வின் போது நான் சதாவ தானியாகவே இருந்தேன்.
பெரும் எண்ணிக்கையிலான ஆசி ரியர்களுக்கு வாய்ப்பாட்டுக் கலைஞராக இருந்தீர்கள். ஆனால், அந்த இறுதித் தருண த்தில் அவர்களது பிரசன்னம் இருக்கவில்லையே... இது பற்றி...?
இலங்கையிலுள்ள சுமார் 35 – -40 வரையிலான நடன ஆசிரியர்களுக்கு வாய்ப்பாட்டு இசைக்கலைஞராக வேலை செய்திருக்கின்றேன். கொழும்பில் 95 வீதமான ஆசிரியர்களுக்கு நான்தான் வாய்ப்பாட்டு இசைக்கலைஞர். தங்களது வேலைப்பளு காரணமாகவோ அல்லது இதர காரணங்களாலோ அவர்களது பிரசன்னம் இல்லாமல் போயிருக்கலாம் என நினைக்கின்றேன்.
தங்களால் வர முடியாத ஆசிரியர்கள் சிலர் எனக்கு அறி வித்தார்கள். அதேவேளை தங்களது குடும்ப உறுப்பினர்களை அனுப்பி வைத்திருந்தார்கள். பிரசன்னமாகியிருந்த ஆசிரியர்களுக்கு எனது நன்றியையும் ெதரிவிக்கின்றேன். தெரிந்த சில மூத்த ஆசிரியர்கள் தெரியாதது போல இருந்தமை மனதுக்கு சிறிய வருத்தம் தான்.
உங்கள் குரலிசைக்கு பக்ககலமாக இருந்த உங்களது துணையிசைக் கலைஞர்கள் பற்றி?
ஏழு துணையிசைக் கலைஞர்கள் என்னுடன் இணைந்துகொண்டனர். திபாகரன், மதுரா பாலச்சந்திரன், வேங்கட சுப்பிரமணிய குருக்கள் ஆகியோர் வயலின் இசைக்கலைஞர்களாகவும் திவ்விய ரூப சர்மா, வேனிலான் மாஸ்டர், ரகுநாதன் மாஸ்டர் ஆகியோர் மிருதங்கத்தையும் நேத்ரா தொலைக்காட்சியைச் சேர்ந்த கேசவன் கஞ்சிராவும் வாசித்தனர். ரட்ணம் இதற்கான ஒலியமைப்பை மேற்கொண்டிருந்தார். அத்துடன் இறுதி நேரத்தில் கடம் இசைக்கலைஞராக இணைந்துகொண்டு ஊக்கப்படுத்தினார். என்னுடன் இணைந்திருந்த அத்தனை அணியிசைக் கலைஞர்களும் தங்களது சாதனை முயற்சியாகக் கருதியே என்னுடன் இணைந்து உறங்காமல் தொடர்ந்து அணியிசை கொண்டு துணையிருந்தனர்.
துணை இசைக் கலைஞர்களுடன்... |
உங்களது இலக்கை எட்டும் இறுதித்தருணத்தை எவ்வாறு உணர்கி ன்றீர்கள்?
நிகழ்வில், இறுதித் தருணத்தில் வந்து என்னை உற்சாகப்படுத்தியவர்களின் கரகோஷங்கள் அனைத்தும் எனக்கு புதுப்பொலிவைத் தந்தன. அன்றுதான் புதிதாக இசைக்குள் வந்திருக்கின்றேனோ என்ற உணர்வையும் ஏற்படுத்தியிருந்தது. அங்கு வந்தவர்கள் என்னை அவர்களது வீட்டுப் பிள்ளையாகவே நினைத்து வாழ்த்தினார்கள் என்பதை அவர்களின் ஒவ்வொரு வாழ்த்துக்களின் மூலமும் நான் உணர்ந்தேன். என்னை அறிந்தவர்கள், அறியாதவர்கள் எனப் பலரும் என்னை வாழ்த்தியதுடன் கண்ணீர் விட்டதையும் கண்டேன். இந்த வாழ்த்தொலிகளுக்கு நான் நன்றியையும் இத்தருணத்தில் கூறக்கொள்கின்றேன்.
இசைத்துறைக்குள் உங்களது பிரவேசம் பற்றி....?
எனது குடும்பத்தில் ஓர் இசை வாசனை இருந்தமையினால் சிறுவயதிலிருந்து இசை மீது ஆர்வம் இருந்தது. ஆனால், முழுநேரக் கற்கையாகக் கற்க வேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை. உயர்தரத்தில் விஞ்ஞானத்துறை கற்கைக்குப் பின்னர் வேறொரு கற்கை நெறிக்காக அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன். அப்போது சங்கீதத்தின் மீது ஒரு ஈர்ப்பும் இருக்கத்தான் செய்தது. அதில் கற்பதற்கு முயற்சித்துப் பார்த்தேன். விண்ணப்ப திகதி முடிவடைந்து விட்டதாகக் கூறினார்கள். உயர்தரத்தில் சங்கீத கற்கை நெறியைக் கற்காமையினால் பட்டப்படிப்பை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது.
பின்னர், துறைத்தலைவரை அணுகிய போது அவர் என்னைப் பாடிக்காட்டச் சொல்லி பரீட்சையொன்று (சிறிய மேடைக்கச்சேரி) இடம்பெற்றது. அதில் சித்தி பெற்றேன். அதன் பின்னர் , இசைத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு உடனடியாக விசேட அனுமதி கிடைத்தது. கர்நாடக சங்கீத இளமாணிப்பட்டத்தை இங்கு பூர்த்திசெய்ததுடன் 2003 ஆம் ஆண்டு எனது கற்கை பூர்த்தியடையும் போது பல விருதுகளையும் பெற்றுக்கொண்டேன்.
அதன் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல பிரபலமான ஆசிரியர்களிடம் முதுநிலை மாணி கற்கையைப் பூர்த்திசெய்து தாய்நாட்டிற்கு வந்தேன். அங்கு கற்கும் போது வெளிநாட்டில் கற்பிப்பதற்கான வாய்ப்புக்களும் கிடைத்தன. ஆனாலும் நான் கற்ற இசையை தாய்நாட்டிற்கு கொடுக்க வேண்டும் எண்ணத்தினால் வேறு வாய்ப்புக்களை ஏற்கவில்லை.
இசைத்துறையில் இலங்கையில் உங்களது முதலாவது அனுமதி எது?
யாழ். இராமநாதக் கல்வியகத்தில் முதன் முதலாக துணை விரிவுரையாளராக அனுமதி பெற்று இரண்டு மாதங்கள் வேலை செய்தேன். போர்க் காலச்சூழல் காரணமாக இங்கு தொடர்ந்து வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் கொழும்பில் கட்புல அரங்காற்று பல்கலைக்கழகத்தில் 2006 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சேவையாற்றிக் கொண்டிருக்கின்றேன். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத சிங்கள மாணவர்களுக்கு எமது கலாசாரத்துடன் கூடிய சங்கீதத்தை கற்றுக்கொடுக்கின்றேன். அது எனக்கு பெரும் திருப்தியாக இருக்கின்றது. சவால் மிக்கதாகவும் இருக்கின்றது. எமது தமிழ்க்கலாசாரம் வேறு இனத்தவர்களுக்கு என்னூடாக செல்வது மனதுக்கு திருப்தியாக இருக்கின்றது.
உங்களது குரு யார்?
எனது பக்கத்து வீட்டிலிருந்த சங்கீத ஆசிரியர் சௌந்தரவல்லி தர்மலிங்கம் என்பவரே கர்நாடக சங்கீதத்தின் எனது ஆரம்ப குரு. பொன் ஸ்ரீ வாமதேவன், பரமேஸ்வரி கணேசன், பத்மநாதன் ஆசிரியர் உட்பட உள்ளூர் மற்றும் இந்தியாவிலுள்ள பல பிரபலமான ஆசிரியர்களிடம் நான் கர்நாடக சங்கீதத்தைப் பயின் றேன். சங்கீதத்தின் வெவ்வேறு நுணுக்கங்களை வெவ் வேறு ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்டேன்.
இலங்கையில் முதலாவது மேடைக்கச்சேரி அனுபவம் பற்றி?
தநதையாரின் குலதெய்வமாகிய நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் எனது முதல் கச்சேரியை நடத்தினேன். பின்னர் யாழ்ப்பாணம், கொழும்பு என பல மாவட்டங்களில் வெவ்வேறு சபாக்களிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடியுள்ளேன். ஐரோப் பிய நாடுகள் உட்பட வெளிநாடுகளிலும் பாடியிருக் கின்றேன்.
உங்களது "ஆரோகணா பைன் ஆர்ட்ஸ்" இசைக்கலையகம் பற்றி?
சுமார் 5 வருட காலமாக "ஆரோகணா பைன் ஆர்ட்ஸ்" என்ற இசைக்கலையகத்தை நிறுவி இலவசமாக கச்சேரிகளை ஒழுங்கு செய்து உள்ளூர்க் கலைஞர்களை ஊக்குவித்து செயற்றிட்டத்தை முன்னெடுத்தேன். நிகழ்வுகளின் செலவுகளை நான் பொறுப்பேற்றுக் கொண்டாலும் நிகழ்வுக்கு மக்களின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. உள்ளூரிலுள்ள சகல கலைஞர்களையும் ஊக்குவிக்கும் நோக்கத்திலேயே இதனை நான் முன்னெடுத்தேன். அத்துடன் மாணவர்களுக்கான வகுப்புக்களையும் நடத்துகின்றேன்.
நீங்கள் விரிவுரையாளராக உள்ள கட்புல அரங்காற்று பல்கலைக்கழகம் பற்றி..?
கொழும்பு–7, நெலும் பொகுணவிற்கு முன்பாக கட்புல அரங்காற்று பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் அழகியல் பிரிவாக இருந்த இப்பிரிவு 2005 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் காலத்தில் தனியான அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமாக உருவானது. இங்கு ஓவியம், நாடகம் என கலைத்துறை சார் விடயங்களை உட்படுத்திய பல துறைகள் இருக்கின்றன. தமிழ் மொழி மூல மாணவர்களும் அனுமதி பெறலாம்.
சிங்கள மொழி மாணவர்களுக்கு நீங்கள் கர்நாடக சங்கீதத்தை கற்றுக்கொடுத்த அனுபவம் பற்றி..?
இது பெரும் சவாலான ஒரு விடயம். ஏனெனில் எமது மொழியின் சரியான உச்சரிப்பை வழங்க வேண்டியதொரு தேவை ஏற்படும். ஹிந்தி, பாலி, மராத்தி போன்ற மொழிகளை அவர்கள் இலகுவாகக் கற்றுக்கொண்டாலும் தமிழ்மொழி உச்சரிப்பு என்பதை அவர்களால் இலகுவாக ஈர்த்துக்கொள்ள முடியவில்லை. ஆகையால், அவர்களுக்கேற்பவே கற்றுக்கொடுப்பேன். என்னிடம் பயிற்சிபெற்ற இங்குள்ள பல மாணவர்கள் சிறந்த தேர்ச்சியடைந்துள்ள அதேவேளை அவர்கள் சிங்கள மாணவர்களா என்று அடையாளம் காண முடியாதளவிற்கு தேர்ச்சி பெற்றிருக்கின்றார்கள்.
இதனை மிகப்பெரிய வெற்றி என்றே குறிப்பிடுகின்றேன். எமது கலைஞர்கள், அவர்களது வரலாறு, எமது பாரம்பரியம் என்பவற்றை அடங்கிய சிங்கள மொழியிலான நூல் ஒன்றையும் தற்போது தயார் செய்து கொண்டிருக்கின்றேன். விரைவில் இந்நூல் வெளிவரும். இது சிங்கள மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டி நூலாக இருக்கும். கற்கும் மாணவர்களும் மிகவும் ஆர்வத்துடனேயே கற்கின்றனர்.
குறுகிய காலத்திற்குள் இசைத்துறையில் சிறந்த ஆளுமையாக இருக்கும் உங்களு க்கு கொடுக்கப்பட்ட விருதுகளும் வாழ்த்துக்களும் உங்கள் வளர்ச்சிக்கு எவ்வாறு உறு துணையாக அமைந்தன?
இத்துறையில் சுமார் பதினைந்து வருடங்களுக் குள் பல்வேறு வாழ்த்துக்களும் விருதுகளும் கிடைத்திருந்தாலும் அவை என்னை ஊக்குவிப்பதற்காகவே என்று எண்ணி தொடர்ச்சியாக பயணித்துக்கொண்டி ருக்கின்றேன். விருதுகளை வைத்து ஒருவரின் தகுதியைக் கணிக்க முடியாது.
உரிய காலப்பகுதியில் குறிப் பிட்ட விடயத்திற்கு தகுதியுடையவர்கள் விருதுகளை பெறுவார்கள். இது ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப மாறுபடும். ஆனால், அவற்றை நாம் ஊக்கியாகவே எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பல சாதனை முயற்சி களில் ஈடுபட்டு சாதனை புரிய வேண்டும் என ஆரூரன் அருணந்தியை வாழ்த்துவோம்.
(நீண்ட உரையாடல்கள் மூலம் ஆரூரன் பகிர்ந்து கொண்ட பல்வேறு விடயங்கள் எதிர்வரும் வாரங்களில் வேறொரு பதிவாக வெளிவரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.)
நன்றி வீரகேசரி - 15/06/2018
0 comments