கலை, இலக்கிய ஆளுமை நாட்டாரியல் கலைஞர் விமலநாதன் - ஜே.சதா
June 23, 2018
பதுளை ஊவா ஹைலன்ஸ் தோட்டத்தில் தோட்டப் பராமரிப்பாளராக தொழில் புரியும் நாட்டாரியல் கலைஞர் விமலநாதன் யாழில் "நாட்டாரியல் நட்சத்திரம்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். நாட்டாரியல் கலைஞர் விமலநானுக்கு யாழில் கடந்த வாரம் யாழ். சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தால் “மலையக நாட்டாரியல் நட்சத்திரம்”என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது . யாழ்.நாவலர் மண்டபத்தில் நடைபெற்ற “அரசியல் சிந்தனை நூல்வரிசை பத்து சிறு நூல்கள்”வெளியீட்டு விழாவிலேயே விமலநாதன் கௌரவிக்கப்பட்டதோடு மேற்படி விருதும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் விமலநாதனின் நாட்டார் பாடல்களும் சபையினரின் கைத்தட்டல்களோடு இடம்பெற்றன.
அண்மையில் கந்தப்பளை சென்றிருந்தபோது தற்செயலாக இக்கலைஞரை சந்திக்க நேர்ந்தது. தோட்டத்தொழிலாளியான இவருடன் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது, இலக்கியத்துறை சார்ந்த பல விடயங்கள் பற்றிப் பகிர்ந்துகொண்டார். இதன்போது ஆச்சரியமாக இருந்தது. தொடர்ச்சியாக அவருடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது மலையகக் கலைகள் சம்பந்தப்பட்ட பலதரப்பட்ட விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவருடன் உரையாடிய விடயங்கள் இங்கு எமது வாசகர்களுக்காக...
பண்டாரவளை ஊவா ஹைலன்ஸைச் சேர்ந்த மிகவும் இனிமையான குரல் வளத்தை கொண்ட நாட்டாரியல் கலைஞர் விமலநாதன் ஊவா மாகாண சாகித்திய விருதுவிழாவில் "நாட்டாரியல் காவலன்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். CIC கல்வி நிறுவனத்தால் "கலை விற்பன்னர்" விருது எனப் பல விருதுகளையும் பல கௌரவிப்புக்களையும் பெற்றுள்ளார்.
கலைகளையும் அதன் சுவைகளையும் மாத்திரம் சொல்லாமல் மக்களது வாழ்வியலை தொடர்பு பட்டதாகவே மலையக நாட்டார் பாடல்கள் அமைந்துள்ளன என பாடலையும் பாடிக்காட்டினார். சுமார் 20 வருட காலமாக பாடப்பட்டு வந்த இப்பாடல்களை நான் தொகுத்து வைத்திருக்கின்றேன். தோட்டத் தொழிலாளியாக சுமார் 15 வருடங்களாக தொழில் செய்கின்றபோதும் கலை, இலக்கியத்துறையில் எனக்கு அதீத ஆர்வம் இருக்கின்றது. வாய்மொழிப்பாடல்களாக மலையக இலக்கியம் தோன்றியது என்பார்கள். ஆரம்ப காலந்தொட்டு மக்களால் அந்தந்த சந்தர்ப்பத்தில் பாடப்பட்ட பாடல்களை ஆவணப்படுத்தி வைத்துள்ளேன்.
எனது வீட்டில் சிறிய நூலகம் ஒன்று இருக்கின்றது. தொழிலாளியாக நான் இருந்தாலும் வாசிப்பில் அதிக ஆர்வம் இருக்கின்றது. இம்மக்களுடைய உணர்வுகள், உண்மைகள் என்பன அந்நாட்டாரிய பாடல்களில் வெளிப்படுத்தப்படும். மலையக மக்களுடைய வாழ்வியல், கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்திருப்பதாக நாட்டாரியல் பாடல்கள் அமைந்திருக்கின்றன. என்னிடம் இருக்கும் நாட்டாரியல் பாடல் தொகுதிகளை உள்ளடக்கிய அனைத்து ஆவணங்களையும் தொகுப்பதற்கு முயற்சித்து வருகின்றேன்.
அன்றைய காலகட்டத்தில் கலைகளை வளர்ப்பதற்கு பலரும் முன்வந்தார்கள். அவர்களுக்கு நாட்டமும் இருந்தது. ஆனால் இப்போது நவீன சாதனங்களின் வளர்ச்சியால் பக்கத்து வீட்டாருடன் கூட தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாதுள்ளது. இந்நிலையில் கலைகளை பற்றி யோசிப்பதற்கு யார் இருக்கின்றார்கள்?
மலையக நாட்டாரியல் தொடர்பாக கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் சில வருடங்களுக்கு முன்னர் அவர் ஆற்றிய உரையின் சிறு தொகுப்பு இவ்வாறு அமைகிறது.
மலையக நாட்டார் பாடல்களை வெறுமனே பாடுவதோடு மட்டும் நின்றுவிடாமல் மலையக நாட்டாரியலை பழங்காலத்து இலக்கியங்களான புறநானூறு, பரிபாடல், நாலடியார், நளவெண்பா, திருக்குறள் என்பவற்றோடும் சமய இலக்கியங்களோடும் பாரதி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் என நவீன கவிஞர்களின் கவிதைகளோடும் ஒப்பிட்டு ஆய்வுரையையே நடத்திவிட்டார்.
நாட்டாரியல் தொடர்பாக கணிசமான ளவு ஆய்வுகளும் தேடல்களும் இடம்பெற்று அவை நூலுரு பெற்றிருந்தாலும் இவ்வாறானதொரு இலக்கிய ஒப்பீட்டு ஆய்வு இதுவரையும் இடம்பெறவில்லை என்றே கருதுகின்றேன். இவரது சரளமான பேச்சு நாட்டுப்புறப் பாடல்களோடு பழங்காலத்து இலக்கியங்களிலும் இவருக்குள்ள புலமையை வெளிப்படுத்தியது. மலையக நாட்டாரியல் தொடர்பாக கணிசமான ளவு ஆய்வுகள் இடம்பெற்றிருந்தாலும் ஒலி வடிவில் அவை இதுவரையும் பதிவு செய்யப்படவில்லை.
தெருக்கூத்து என்கின்ற நாட்டுக்கூத்தை நவீனமயப்படுத்தி பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்கான பாடமாக்கியதில் பேராசிரியர்களான சு.வித்தியானந்தன், மௌனகுரு போன்றவர்களின் பங்க ளிப்பு போற்றுதற்குரியது. அதுபோல
நாட்டுப்புறப் பாடல்க ளும் நவீனமயப் படுத்தப்பட்டு இறுவட்டாகவோ வேறு வடிவிலோ பதிவு செய்யப்படுவது அவ சியமாகும்.
மலையகத்தில் பல திறமை வாய்ந்த மூத்த கலைஞர்கள் இருக்கின்ற போதி லும் அவர் வெளியுலகில் பிரகாசிக்காமல் மறைந்துவிடும் நிலைமையே இருக்கின் றது. இவ்வாறான நிலைகளில் எதிர்காலத் தில் மாற்றங்கள் ஏற்படும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
0 comments