மல்லிகை ஜீவா ஒரு மகத்துவம் - தெளிவத்தை ஜோசப்

June 20, 2018

காலம் மெய்ப்பித்திருக்கும் ஒரு புதிய இலக்கியக்குரல்  ‘மல்லிகை ஜீவா என்றே பெரிதும்  அறியப்பட்ட டொமினிக்  ஜீவா’ வின் ஆத்மக்குரல். அதைத் தான் மகத்துவம் என்று குறித்தேன்.
மார்க்சியக் கலை இலக்கியக் கோட்பாட்டோடு  ஒன்றித்து நிற்பவர்கள், ஓரளவு சார்ந்து நிற்பவர்கள், மார்க்சியத்தை எதிர்ப்பவர்கள் போன்று அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு பரந்த நிலையில் இயங்குவதற்கான ஒரு அணியை மல்லிகையூடாகக் திரட்டிக்கொண்ட மகத்துவம் அவருடையது. அதை வளர்த்தெடுத்த மகத்துவம்  அவருடைய  மல்லிகையுடையது.  இதற்கான   காரணமே டொமினிக்  ஜீவா  முதலில்  ஒரு படைப்பாளி, எழுத்தாளர். 

‘எழுத்துலகில் இருந்தே மார்க்சியத்துக்கு வந்தவர் ஜீவா’ என்று குறிக்கும் பேராசிரியர் சபா ஜெயராசா ஜீவாவின்  எழுத்துக்கள் பற்றிக் குறிப்பிடுகையில் ‘மலினமான இலக்கிய ரசனையில்  அமிழ்ந்து  விடாமல், எழுதத் தூண்டப் பெற்றமை  எழுத்தின் நெறிப்பாடு முதலியவற்றுக்கு விசையூட்டியது மார்க்சியம். சமூகவெளியில்  பட்டு அனுபவித்த அனுபவங்களே எழுத்துக்குரிய களமாக அமையும் நிலையில், சமூக நோக்குள்ள எழுத்தாளன்  அந்தத் தளத்தையே பலமாகப் பற்றிக் கொள்ள நேரிடும். ஆக்கத்துக்குரிய அழகியலும்  அந்தத் தளத்திலிருந்தே  மேலெழும் டொமினிக் ஜீவாவின்  படைப்பாக்கங்கள் அந்த எழுபுலத்திலிருந்தே  பாய்ச்சல் கொள்கின்றன. எழுத்துக்குரிய புலத்தெரிவிலும் காட்சித் தெரிவிலும் சாதிய ஒடுக்குமுறையே முன்னுரிமை பெறுகின்றது. ஒடுக்கப்பட்டோர் நிலையில்  அவரின்  சமூகப் புலக்காட்சியும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்  மண்வாசனை மற்றும்  பேச்சுமொழி தொடர்பான கருத்தியல் உணர்வும்  நெடுங்கோட்டில் ஒன்றிணைந்து கொண்டன….  என்றெழுதுகின்றார்.
மல்லிகையின் முழுச்சுமையையும் டொமினிக் ஜீவாவே தாங்கி சுமந்தமையால் அவரின் படைப்பு  மலர்ச்சி  பின்னடைவுகளை எதிர்கொண்டது என்றும் குறிக்கின்றார் பேராசிரியர் சபா ஜெயராசா.
மல்லிகையூடான  இந்த பரந்த நிலை செயற்பாடுகள் மல்லிகை என்னும் சிற்றிதழ்  சுமையுடன்,  தோழர்களின்  கண்டன விமர்சனங்களின் சுமையும் ஜீவாவின்  தோள்களையும் மனத்தையும் அழுத்தின என்றாலும் வளர்ச்சி தடைப்படவில்லை. அந்த வளர்ச்சியின் நீட்சியாகவே  மா.பாலசிங்கத்தின் மா.பா.சி கேட்டவை தொகுதியை வெளியிட்ட  புதிய பண்பாட்டுத்தளம் எஸ்.பொ.விற்கு சமர்ப்பணம் செய்துள்ளமையை நான் காணுகின்றேன்.

‘எஸ்.பொ.’வுக்கு இந்நூல் படையலாகும் போது உண்மையில் வீறுமிக்க அந்த வரலாற்றுக் காலத்துக்கான  போர்க்குணமிக்க மக்கள் அனைவரும், கூடவே அவர்களது பிரதிநிதிகளாக வெவ்வேறு தளங்களில் செயற்பட்ட ஆளுமைகள் எல்லோரும் மதிக்கப்படுகின்றார்கள். நினைவு கூரப்படுகின்றார்கள் என்பது பொருளாகும்’ என்று பதிகின்றார். கலாநிதி ந.ரவீந்திரன்.
இலங்கைத்  தமிழரசுக் கட்சியின் ஏடாகத் தொடங்கினாலும் ஈழத் தமிழ்ச் சிறுகதைத்துறைக்கான வளர்ச்சிப் பாதையை உருவாக்கிய சுதந்திரன் பத்திரிகையிலேயே தனது முதற்கதையை எழுதியவர் டொமினிக் ஜீவா.
‘எனது  முதல் கதை  எழுத்தாளன்’  சுதந்திரனில் தான் பிரசுரமானது. அதன் அரசியல் கோட்பாடுகளில் எங்களுக்கு அன்றும் நம்பிக்கை  இல்லை, இன்றும் நம்பிக்கை இல்லை. எம்மை  எல்லாம் எழுத ஊக்குவித்த ஏடு அது’. (மூன்றாவது மனிதன் நேர்காணல் –1997).
ஒரு படைப்பாளியாக மேற்கிளம்பிய  ஜீவாவை  விஜய பாஸ்கரனின் சரஸ்வதி வளர்த்தெடுத்தது மட்டுமல்லாமல் ஜீவாவின் படத்தை சரஸ்வதியின் அட்டையிலிட்டு கௌரவித்தது. சரஸ்வதி  வெளியீடாக டொமினிக் ஜீவாவின்  “தண்ணீரும் கண்ணீரும்” சிறு கதைத்தொகுதியை1960 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டது.
இந்த நூலுக்கான இலங்கை சாகித்திய மண்டலத்தின் புனைகதைகளுக்கான விருதை முதன் முதலாகப் பெற்று வரலாறு படைத்தவர் இவர். அத்துடன்  5 சிறுகதைத் தொகுதிகளின் சொந்தக்காரரான முதல்வரிசைப் படைப்பாளி இவர்.
இவருடைய சிறுகதை  நூல்களாக வெளிவந்துள்ளவை. தண்ணீரும், கண்ணீரும் – 1960, பாதுகை – 1962, சாலையின் திருப்பம் – 1965, வாழ்வியற் தரிசனங்கள்,· டொமினிக் ஜீவா சிறுகதைகள் – 1996 ஒரு படைப்பாளியாக எழுத்துலகில் கால் பதித்து, மல்லிகை என்னும்  சிற்றிதழை 1966  இல் தொடங்கி ஈழத்து தமிழ் சிற்றிதழ்  சாதனையாளராகத் தடம் பதித்து, மல்லிகைப் பந்தல்  மூலம்  நூல்  வெளியீட்டாளராகி  தமிழ், முஸ்லிம், சிங்கள எழுத்தாளர்களின்  உறவுப் பாலமாகத் திகழும் மல்லிகை ஜீவா ஒரு சகாப்தமே தான்.

90 ஐப் பிடித்துவிட்ட அவர் 100 ஐப் பிடிக்க வாழ்த்துவோம்.


You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images