உங்களை நீங்கள் வெல்ல வேண்டுமா? - ஜீவா சதாசிவம்
July 09, 2018
இந்த உலகிலுள்ள ஒவ்வொருவரும் தனித்திறமையுடையவர்கள். ஒவ்வொருவரும் தனக்குள் இருக்கும் திறமையை பயன் படுத்தும் வரை அத் திறமை தெரியாமலேயே போய்விடுகின்றது. தன்னைத்தானே நேசிக்கின்ற சகலருமே திறமைசாலிகள். யார் ஒருவர் தன்னை ஏற்றுக்கொள்கிறாரோ மதிக்கிறாரோ உயர்வாக நினைக்கின்றாரோ அவர் கண்டிப்பாக வாழ்வில் வெற்றி பெறுகின்றார் என்கிறார் மனித வள ஆலோசகர் கலாநிதி மு.பாரிவள்ளல்.
இந்திய, பெங்களூருவைச் சேர்ந்த இவர் சுமார் இரு தசாப்தங்களுக்கு மேல் உலகளாவிய ரீதியில் சர்வதேச தரம் வாய்ந்த பல்வேறு மனவளப் பயிற்சிகளை வழங்கி வருகின்றார். அந்தவகையில், கடந்த பல வருடங்களாக இலங்கையிலும் பலதரப்பட்ட தரப்பினருக்கு மனவளப் பயிற்சிகளை வழங்கி வருகின்றார்.
கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்த இவர், மனவள பயிற்சி நிலையமாக சர்வதேச தரத்தில் ஆரம்பிக்கப்பட்ட "விவேகா" பயிற்சி நிலையத்தை ஆரம்பித்துவைத்து அன்றைய தினம் விசேட செயலமர்வொன்றையும் கொழும்பு பிரைட்டன் ரெஸ்டில் நடத்தினார். இதன்போது கலாநிதி பாரிவள்ளலை சந்திக்கும் வாய்ப்பொன்று கிடைத்தது. இச்சந்தர்ப்பத்தில் அவர் பகிர்ந்துகொண்ட விடயங்கள் எமது வாசகர்களுக்காக....
இலங்கையில் பல வருட காலமாக மனவள பயிற்சிகளை வழங்கி வருகின்றீர்கள். இதுவரையில் நீங்கள் இலங்கையில் உள்ள இளம் தலைமுறையிடம் கண்ட குறைபாடுகள் என்ன?
உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்றிருக்கின்றேன். அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இலங்கையில் உள்ள இளைஞர்கள் மிகவும் கூச்ச சுபாவம் உடையவர்களாக இருக்கின்றனர். தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடே கூச்ச கூபாவமாகும். ஒருவர் வாழும் சூழல், இனம், பெற்றோரின் சூழல் என்பனவே தாழ்வுச்சிக்கலை உருவாக்குகின்றது.
தமிழ் சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் நான் தாழ்த்தப்பட்டவன் என்ற எண்ணம் பலருக்கு அடிமனதில் வந்துவிட்டது. மாணவர்களுக்கு அதிகளவு பயிற்சிகளை வழங்கியதால் அவர்களது மனதிலிருந்து வெளியான விடயங்களே இவை. இவ்வாறானதொரு சிந்தனை தைரியமாக ஒரு விடயத்தை பேசுவதற்குத் தயங்கும் நிலையாகிவிட்டது.
தனக்குள் எத்தனை திறமைகள் இருந்தாலும் தனக்கு திறமைகள் இல்லை என்ற எண்ணத்துடன் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருப்பதால் கூச்ச கூபாவம் தானாகவே குடிகொண்டு தன்னை முன்நிலை படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. தன்னுடைய உடலைப் பற்றியும் தான் அழகாக இல்லை, கறுப்பாக இருக்கின்றேன் என்ற சிக்கல்களையும் சம்பந்தப்பட்ட இளம் தலைமுறையினரிடம் கண்டிருக்கின்றேன். ஏதோ ஒரு வகையில் தன்னுடைய வெளிப்புற அழகின்மீதே பெரிதும் அக்கறை காட்டுகின்றவர்களாக இருக்கின்றார்கள்.
வெளிப்புற அழகை விடுத்து தனது திறமையை காண்பிப்பார்களேயாயின் அது நிரந்தர அழகாக இருக்கும். நிரந்தரமாக இருக்கும் பலத்தை விடுத்து தற்காலிக விடயத்துக்கே பெரிதும் அக்கறை காட்டுகின்றார்கள். என்பதையும் நான் பயிற்சி காலப்பகுதியின்போது அறிந்துக்கொள்ளக்கடியதாக இருந்தது.
அத்துடன், உயர்தரம் (A/L) கற்றுவிட்டால் கல்வி நடவடிக்கை முடிந்து விட்டதாகவும் எண்ணுகின்றனர். இது மாணவர்களின் பொதுவான நினைப்பு. மேற்படிப்பைக் கற்கும் உத்வேகத்துடன் வருபவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றது. எதிர்காலம் குறித்த எண்ணம் இல்லாமலேயே பலர் இருப்பதையும் நான் அறிந்தேன்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச் சியால் பெற்றோர், உறவுகளுடன் கூட தொடர்பு அருகி வரும் இக்காலத்தில் உளவளப் பயிற்சி (Motivation) எந்தளவுக்கு தேவைப்பாடாக இருக்கின்றது.?-
உயர் தொழில்நுட்பம் மனிதனின் நுட்பத்தையே தன்னகப்படுத்தி வைத்துள்ளது. மனிதன் தொழில்நுட்ப சாதனங்களுக்கு தற்போது அடிமைப்படுத்தப்பட்டுள்ளான். இதனால் தனிமனித சுதந்திரம் இல்லாத நிலையில் வாழும் நிலைமை உருவாகியுள்ளது. ஒரு விடயத்தைக் கேட்பதை விட பார்ப்பதற்கு சுகம் அதிகம். வகை வகையாக பார்க்கும் மனநிலைமையே ஏற்படுகின்றது. இதுவே மனிதனின் உளவியல். மனிதன் சுயஆளுமையுடன் வாழ இவ்வாறான பயிற்சி அவசியம்.
ஒரு மனிதன் நாௌான்றுக்கு 890 முறை கைபேசியைப் பார்ப்பதாக ஆய்வொன்று கூட்டிக்காட்டியுள்ளது. டிஜிட்டல் சாதனத்துக்கு அடிமை யாவதே இவ்வாறானதொரு நிலை க்கு காரணம்.
இந்நிலையில் இருந்து விடுபட முடியுமா?
ஆம். கண்டிப்பாக விடுபட முடியும். எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் – எவ்வாறான விடயங்களில் பொறுப்பாக இருக்க வேண்டும் – என்பதில் தெளிவாக இருந்துவிட்டால் நிச்சயமாக இதிலிருந்து விடுபடலாம். இவ்விரு தன்மைகளும் பெரும்பாலானவர்களிடம் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.
எனக்கு எது முக்கியம் என்ற தெளிவு அவசியம். நான் முக்கியமா? அல்லது எனது கைபேசி முக்கியமா? இதற்குத் தீர்வு கண்டால் இதிலிருந்து விடுபட முடியும். தமக்கு இருக்கும் கடமை, பொறுப்பைக் கொண்டு செல்வதற்கு இந்த கையடக்கத் தொலைபேசி உதவியாக இருக்கின்றதா? அல்லது தடையாக இருக்கின்றதா? என்பதையும் தெரிவு செய்ய வேண்டும்.
மனித ஆளுமை விருத்திக்காக நாம் வழங்கும் பயிற்சி இதற்கு சிறந்ததாக இருக்கின்றது. எமது பயிற்சியின் போது கைபேசிப் பாவனை ஏற்படுத்தும் தவறான தாக்கம் பற்றி எடுத்துக் கூறி அதனையே சரியாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற விழிப்புணர்வை வழங்குகின்றேன். இதன் பாவனை யானது உளரீதியில் மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்துவதல்ல. பொருளாதார ரீதியிலும் பெரிதும் தாக்கத்தை எற்படுத்தும் என்பதை உணரச் செய்து சரிப்படுத்தினால் இதிலிருந்து படிப்படியாக விடுதலை பெற முடியும்.
இன்று பெரும்பாலானவர்கள் சரியான தெரிவு, சரியான புரிதல் ஆகிய இரண்டும் இல்லாமையினாலேயே பெரும் பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தாங்கள் செய்யும் தவறு என்ன என்று தெரியாமலும் அதனை எப்படி சரிசெய்வது என்று புரியாமலும் இருக்கின்றனர். இதனை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைத் தெரிந்துகொண்டால் தெளிவான பதில் கிடைத்தவிடும். சில நேரங்களில் சுயகட்டுப்பாடு மாத்திரமே இதற்குரிய பதிலைத் தரக்கூடியதாக இருக்கும்.
மனவளப் பயிற்சியை எங்களுக்குள்ளே முழுமைப்படுத்திக் கொள்வ தற்கான கால எல்லை பற்றி..?
எமது தேவைகளைப் பொறுத்தே பயிற்சியும் நம்முள் மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் ரீதியாக சில மாற்றங்களை இலகுவாக ஏற்படுத்தலாம். ஆனால், மன / உள (Mental) ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்த சில காலம் எடுக்கும். அதற்குத் தொடர் பயிற்சி அவசியம். தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சியே சாத்தியமாகும்.
நான் ஒரு வங்கியின் முகாமையாளராக கடமைபுரிந்தேன். 1988 ஆம் ஆண்டு முதன்முதலாக இவ்வாறு ஒரு பயிற்சிக்குச் சென்றிருந்தேன். ஒரு நாள் இடம்பெற்ற இம் மனவளப் பயிற்சி எனக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இப் பயிற்சியில் ஏற்பட்ட தாக்கமே இன்று என்னை ஒரு பயிற்றுவிப்பாளராக முன்னிறுத்தியுள்ளது.
Spending, Using, Investing, Wasting இவை நான்கும் இன்று மனித வளர்ச்சியில் பெரிதும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இது வெறுமனே பணத்துக்காக மாத்திரம் பொருந்தும் விடயமல்ல. பொதுவாக எமது நேரம், உழைப்பு போன்ற விடயங்களுக்கு மிகவும் அவசியமானதொன்றாகவும் இருக்கின்றது. இதனைப் புரிந்துகொண்டு செயற்பட்டாலேயே நாம் வாழ்வில் பல பிரச்சினைகளிலிருந்து விடுபட்டுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
ஒருவர் இன்னொருவருட ன் தன்னை ஒப்பிட்டு பார்த்தே காலம் சென்று விடுகின்றது... உளவியல் ரீதியாக உங் கள் கருத்து என்ன?
ஒப்பிட்டுப் பார்ப்பதென்பது மனிதனின் பரம்பரை இயல்பு. எதையும் ஒப்பிடாமல் சொல்ல முடியாது. ஆனால், ஒப்பிட்டுப் பார்த்து அதை வைத்து இதுதான் நிஜம் என்று உறுதிப்படுத்திக்கொள்ள முடியாது. அவரவர் அவரவருக்கு சிறப்பானவர்கள். நம்மை நம்முடனேயே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமே தவிர இன்னொருவருடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது சிறப்பாக அமையாது.
வெற்றிக்காக முதல் படி என்ன செய்யலாம்-?
எனக்கு நான் முக்கியமா? அல்லது ஏனையோர் முக்கியமா? இதனை நினைத்தாலேயே அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிடலாம். உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்காவிடின் அது எம்மை இயங்கவிடாது. 30வயதுக்கு மேல் 6 மணி நேர உறக்கமும் 40 வயதுக்கு மேல் 8 மணிநேர ஓய்வும் ஒரு மனிதனுக்கு நிச்சயம் தேவை. அதனை நாம் கண்டிப்பாக பழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும். ஒருநாளும் நம்மை நாம் சமரசம் (compramise) செய்து கொள்வது, சமாளித்துப்போவது (Adjustment) இவையிரண்டும் புறந்தள்ளி வைக்கப்பட வேண்டும்.
உதாரணமாக இரவு உறங்கச் செல்லும் முன் face book/whatsapp பார்த்துவிட்டு செல்லலாம் என நினைத்து சுமார் அரை மணி நேரத்துக்குள் முடித்துவிடுவோம் என நினைத்து அதற்குள் நுழைந்தால் ஒரு மணிநேரம் ஆகிவிடுகின்றது.
இந்த இடத்தில் நம்மை நாமே சமரசம் செய்து சமாளித்துக்கொள்கின்றோம். இது இரண்டுமே தோல்வியைத் தந்துவிடுகின்றது. அதிகாலையில் நேரத் துடன் எழுந்து விடுபவர்கள் வாழ்வில் வெற்றி கண்டுவிடுவார்கள். எவர் ஒருவர் தன்னை ஏற்றுக்கொள்கிறாரோ மதிக்கின்றாரோ உயர்வாக நினைக்கி ன்றாரோ அவர் வாழ்வில், கண்டிப்பாக வெற்றி பெறுவார்.
0 comments