வாசிப்பதனால் மனிதன் முழுமையடைகின்றானா? - ஜீவா சதாசிவம்

December 23, 2016


இன்றைய தகவல்யுகம்  நாளுக்கு நாள் நமது 'மூளை'யை  சுயமாக இயங்கவிடாமல் செயழிலக்கச் செய்து வருகின்ற இக்காலக்கட்டத்தில், வாசிப்பை வலியுறுத்துமுகமாக, எல்லோர் மத்தியிலும் வாசிப்பை வலுப்படுத்தும் முகமாக நாடளாவியரீதியில் கடந்த செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் பல்வேறு கலந்தாய்வுகள், செயலமர்வுகள் நடைபெற்றதோடு பல்வேறு பத்திகளும் பதிவுகளையும் அவதானிக்க முடிந்தது.

 எல்லோரும் வாசிப்பைப் பற்றி யோசிக்கின்றோம். எல்லோரும் வாசித்து கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால், வாசிப்பின் மூலம் பூரண மனிதனாகுகின்றோமா? இவ்வாறு ஒரு கேள்வி வருமானால்,  இதனை மீளாய்வு செய்ய வேண்டிய தேவையுள்ளது. எல்லோரும் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது மனநிலையில் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. கடைப்பெயர் பலகை, வீதிப்பெயர், விளம்பரங்கள் எல்லாமே வாசிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன. அதனால் பயனும் நிகழந்துகொண்டிருக்கிறது.

 இப்போதெல்லாம்  பரவலாக நிகழ்ந்து கொண்டிருக்கும் 'வாசிப்பு', தகவலை அறிந்து கொள்வதற்காக இருக்கின்றதே தவிர அறிவைத் திரட்டிக் கொள்வதற்கான நோக்கம் கொண்டதாக இருக்கின்றதா எனும் கேள்வி எழுகின்றது.  அவசரமாக சில தகவல்களை தெரிந்துகொண்டு அதன் மூலம் தான் அறிவாளியாக நின்று தீர்ப்பு வழங்கும் 'முகநூல்' வாசிப்புக்கு நமது வாசிப்பு கலாசாரம் முடக்கப்பட்டு வருகிறது. வாசிப்பு குறைந்துவிட்டது. என்பது தவறு. அது பரவலாக்கப்படிருக்கின்றது. இதுதான் உண்மை. 

Book இல் வாசித்துக் கொண்டிருந்தவர்கள், face book இல் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். Paper வாசித்தவர்கள் what's app வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அறிவைத் தரவேண்டிய வாசிப்புகள் தகவலைத் தரும் வாசிப்புகளாக பரவலாக்கப்பட்டு வருகின்றன. கண்டதை கற்க பண்டிதனாவான் என்கிறார்கள். கண்டதையும் கற்றுவிடுவதால் மனிதன் முழு மனிதன் ஆகிவிடுகிறானா எனும் கேள்வி வருகிறது.

இக்கேள்வியை முன்னிறுத்தி தமது வாசிப்பு கலாசாரத்தை மீளாய்வு செய்யும் போது, இவ்விடத்தில் 'மறுவாசிப்பு'  பற்றி பேச வேண்டிய தேவை ஏற்படுகின்றது. வாசிப்பு என்பது என்ன? வாசிப்பு என்றவுடன் ஒரு பிரதியை உச்சரித்து வாசிப்பது என்பது பற்றி யோசிக்கிறோம்.ஆனால், உண்மையில் வாசிப்பு என்பது அதுவல்ல.  இப்போதெல்லாம் 'மறுவாசிப்பு' எனும் சொல் பிரபலமாகவுள்ளது. மறுவாசிப்பு என்பது ஏற்கனவே வாசித்த ஒரு பிரதியை திரும்பவும் வாசிப்பதும் அல்ல. 

ஒரு பிரதியை வாசித்து தான் பெற்றுக் கொண்ட அறிதலை அப்படியே ஏற்றுக் கொள்வது என்பதும், அல்லாமல் அவ்வாறு வாசித்தவற்றை தனது புற அறிதல்களுடன் ஒப்புநோக்கி தனக்குள்ளே விவாதித்து ஏற்கனவே தான் வாசித்த பிரதியை மீளவும் புரிந்துகொள்ள முற்படும் போது, முதலாவது வாசிப்பில் கிடைத்த புரிதல் ஒன்றில் இருந்து வேறுபட்ட கருத்து நிலை ஒன்றை அதே பிரதியில் இருந்து பெற முடியுமென்றால் அதுவே மறுவாசிப்பு என்றாகிறது. 

 எந்த ஒரு பிரதியையும் எவர் மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறாரோ அந்த வாசிப்புதான் 'ஒரு மனிதனை முழு மனிதனாக்கும்' வாசகர் பலருக்கு இந்த மறுவாசிப்பு இல்லை. அதனால்தான் வாசிக்கும் எல்லோரும் முழுமையான மனிதர்கள் இல்லை. எனவே தான் 'வாசிப்பு ஒரு மனிதனை முழுமனிதனாக்கும்' என்பது இன்னும் இந்த உலகத்தில் நிகழாமலேயே இருக்கிறது.

 எனவே வாசிப்பதோடு மாத்திரம் நின்று விடாமல் வாசித்த விடயத்தை 'மறுவாசிப்பு' செய்வது இங்கு அவசியப்படுகிறது. ஒரு தடவை வாசித்த நூலை/பிரதியை கூட திரும்பவும் வாசிக்கும் போது முதல் முறையாக கிடைத்த அறிவை விட புதிய புரிதல் கிடைக்கும். நாளாந்தம் வாசிக்க வேண்டும் என்பதற்காக வெறுமனே காலையில் இருந்துமாலை வரை வாசிக்காமல் வாசிப்பு என்பதை ஒரு உணர்வாகவும் உழைப்பாகவும் எடுத்துக்கொண்டு அதனைப் பழக்கப்படுத்திக்கொண்டு அதனை மறுவாசிப்பு என்பதனூடாக அர்த்தப்படுத்தப்பட வேண்டும். அத்தகைய வாசிப்பின் போது பெற்றுக்கொண்ட 'தகவல்கள்' ஒரு மனிதனுக்குள் எப்பொழுது 'அறிவுபூர்வமாக' அடங்குகின்றதோ அப்போதே ஒரு மனிதன் முழு மனிதனாவான்.



You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images