அரசியலில் முதுமையும் முதிர்ச்சியும் - ஜீவா சதாசிவம்
March 29, 2017
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களால் வெறுத்து ஒதுக்கப்படும் வரை அரசியலில் தொங்கிக் கொண்டிருப்பதை நாம் அவதானிக்கின்றோம். இதனால், பல அவதூறுகளையும் அவர்கள் மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள். ஒருவருக்கு அரசியலில் முதிர்ச்சி இருக்கின்றதோ இல்லையோ ஆனால், அவர்கள் தாங்கள் முதுமை அடையும் வரை தொடர்ச்சியாக அரசியலில் தம்மை தக்க வைத்துக்கொள்வதற்கான முஸ்தீபுகளை கையாள்வதை இலங்கை, அரசியலில் நீண்ட காலமாக அவதானிக்கலாம்.
இதனை ஏன் அலச வேண்டிய தேவை ஏற்பட்டது என்று நினைக்கின்றீர்களா?
நியூசிலாந்தின் பிரதமராக இருந்த ஜோன் கீ கடந்த வருட இறுதியில் தான் பதவி விலக வேண்டும் என்று தீர்மானித்தார். 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அந்நாட்டின் 38ஆவது பிரதமராக தெரிவு செய்யப்பட்ட இவர் 2016 ஆம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார். நியூசிலாந்து தேசியக் கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துவிட்டார். இதனை அறிந்த வேறு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்களும் இவ்வாறு விலகுவதாக அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் மூலம் அறியக்கிடைத்தன.
இதற்கு இவ்வாறான காரணம் ஒன்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 'மக்கள் செல்வாக்-குப்பெற்ற மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு செல்வாக்கு இருக்கின்ற காலத்திலேயே உரிய சேவைகளை செய்து விலகிவிட்டால் அதற்கான பெறுமதி அதிகமே' என்று குறிப்பிடப்படுகிறது. இதனை வாசித்து கொண்டிருக்கும் போது இலங்கையை பற்றியும் இங்குள்ள பாராளுமன்ற நடைமுறைகள்இ கட்டமைப்புக்கள் பற்றியும் அதன் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் பற்றியும் அண்மைய கால செயற்பாட்டு பின்னணியுடன் தேட வேண்டிய தேவை ஏற்பட்டதன் விளைவே இன்றைய 'அலசல்'...
ஒரு மனிதனின் தன்மையை அறிய வேண்டுமாயின் , அதிகாரத்தை கொடுத்துப்பார்த்தால் தெரியும். அவரை பற்றி நாம் தெட்டத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம் என்பார்கள். அதிகார துறை சார் அனைத்திற்கும் மிகவும் பொருத்தமான கூற்றாகவே கொள்ளலாம். அதிகாரத்தை அனுபவிப்பதற்கு வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?
1977ஆம் ஆண்டு தனது 69ஆவது வயதில் அதிகாரத்துக்கு வந்த காலஞ்-சென்ற ஜே.ஆர்.ஜயவர்த்தனா தனது அரசியல் வாழ்வின் எல்லைகளை அடிப்படையாக வைத்தே சகல விவகாரங்களையும் அணுகினார். அதன் தொடர்ச்சியாகவே பிற்பகுதியில் வந்த பலர் அணுகினார்கள். தங்கள் வசதிக்கேற்ப அணுகிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதுவும் மறுப்பதற்கில்லை. அவர்கள் தங்கள் 'முதுமை' யின் போதான அரசியலையும் தக்கவைத்துக்கொள்ள தமக்கேற்றவகையில் கையாண்ட உத்திகள் இலங்கை அரசியலை பொறுத்தவரையில் மிக சுவாரஷ்யமானதே. இதற்கு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இங்கு குறிப்பிடலாம்.
தாம் பதவியில் இருப்பதற்காகவும் தனது குடும்ப அரசியலை ஆதிக்கப்படுத்துவதற்காகவும் தமது கட்சி சார், சாராத பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரை தன்னகப்படுத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற போர்வையில் அரசியல் அமைப்பையே மாற்றியமைக்கும் முதிர்ச்சியற்ற ஒரு செயற்பாட்டை அவதானித்தி-ருப்பீர்கள். இவ்வாறானதொரு தொடர்ச்சியான போக்கு இளம் தலைமுறையினரை அரசியலுக்குள் எவ்வாறு உள்வாங்கும் என்பது சிந்திக்க வேண்டிய விடயம். இளம் தலைமுறையினர் உள்வர வேண்டுமாயின் அவர்கள் முதுமை அடையும் வரை காத்திருக்காமல் முதிர்ச்சியுடன் உள்வாங்கப்பட வேண்டியதொரு தேவை இருக்கின்றது.
அயல் நாடான இந்தியாவை நோக்கினால் அரசியலில் பெரும்பாலானவர்கள் முது-மையாகவே தெரிகிறார்கள். இளமையானவர்கள் உள்வாங்கப்பட்டாலும் அவர்கள் அரசியல் முதிர்ச்சிப்பெற்றவர்களாக அன்றி பரம்பரை அரசியலிலோ சினிமாவிலோ புகழ்பெற்றதனால் தெரிவு செய்யப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.
இலங்கையில் இவ்வாறான சுவாரஷ்ய போக்கிற்கு காரணம் அதன் பின்னணி என்ன? அதிகாரத்திற்கு வந்த பல தலைவர்கள் பதவிக்கு வரும் முன்னர்இ பதவிக்கு வந்தப்பின்னர் என்று பார்க்க வேண்டியதொரு தேவை இங்கு எழுகின்றது. அரசியலில் முத்திர்ச்சிபெற்று இருப்பது என்பது வேறு முதுமை வரைக்கும் இருப்பது என்பது வேறு. முதுமை வரைக்கும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறே தவிர முதிர்ச்சி வரைக்கும் இருப்பது தவறு அல்ல.
இந்த இடத்தில் சிக்மண்ட பிரைய்ட் (Sigmund Freud) என்ற புகழ்பெற்ற உளவிய-லாளர் இந்த முதுமை – முதிர்ச்சி பற்றி கூறியிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்-டலாம்
ஒரு மனிதனைIQ (Intelligence Quotient) அளவிடுவதற்கு உளவியலில் ஒரு வாய்ப்பாடு இருக்கின்றது. ஒருவரது Mental age, Chronological / Biological age இவை இரண்டையும் தொடர்பு படுத்திப்பார்ப்பது சிறந்தது. இங்கு Biological age ஒருவருக்குரிய வயது அதற்குரிய செயற்பாடுகளை குறிப்பதாக அமைகின்றது. Mental age எனும் போது மனித வயதுக்கு மேலான மூளை வயதைப் பற்றி குறிக்கின்றது. இவ்வாறான செயற்பாடே ஒருவரின் IQ நிலைமையை தீர்மானிக்கின்றது.
இந்த வாய்ப்பாட்டின் அடிப்படையில், அரசியலை நோக்கினால் தம்மை மூத்தவர்கள் என பிரசாரப்படுத்திக்கொள்பவர்கள் வயதில் முதுமையானவர்களாக இருப்பார்களேயன்றி மூளை வயதிலும் முதிர்ச்சிப்பெற்றவர்களாக இருக்கிறார்களா? எனும் கேள்வியைத் தோற்றுவிக்கிறது. அரசியலில் முதிர்ச்சிபெற்ற மக்கள் பிரதிநிதியை உருவாக்குவது என்பது கட்சியின் கட்டமைப்பிலேயே தங்கியுள்ளது. கட்சி கட்டமைப்பு அதற்கு வழிவகுப்பதாக அமைய வேண்டும். இவ்வாறான நிலைமையே பிற்கால அரசியலில் முதிர்ச்சிப்பெற்றவர்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எடுத்துக்கொண்டால், அரசியல்வாதி என்ற ரீதியில் அவர் சிறந்த முதிர்ச்சிபெற்றவராக இருப்பதைக் காணலாம். பல்வேறு விமர்சனங்கள் வந்தபோதிலும் அதனையும் தாண்டி இன்று பிரதமர் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறார். அவர் இளைஞராக இருந்த காலத்திலேயே கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு அந்த அரசியலுக்குள் நுழைந்தமையே பிரதான காரணமாக அமைகின்றது. திடீரென வெற்றிடத்துக்கு நிரப்பப்பட்டவராக அவர் வரவில்லை.
பல்கலைக்கழக காலத்தில் இருந்தே அரசியல் செயற்பாட்டில் இருந்து வந்தமையால் இன்று வரைக்கும் அவர் வந்த வழியிலேயே ஏனைய அரசியல்வாதிகளையும் உருவாக்கும் எண்ணத்தைக்கொண்டவராகவும் இருக்கின்றார்.
சமகால இலங்கைத் தமிழ் அரசியல் பின்னணியில் இரா. சம்பந்தனின் முதுமையும் முதிர்ச்சியும் குறித்து இங்கு அலசுவது பொருத்தமாகும். சம்பந்தன் முதுமை அடைந்திருப்பதால் அவரை அரசியலில் இருந்து ஓரம் கட்ட வேண்டும் என குரல்கள் ஒலிப்பதை நாங்கள் அவதானிக்கின்றோம். அவ்வாறு ஓரம் கட்டப்பட்டுவிட்டால் அவரை ஈடுசெய்யக்கூடிய அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடியவர் யார் இருக்கின்றார் என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அவரது முதிர்ச்சியே இன்றைய தமிழ் மக்கள் அரசியலில் சில நகர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை.
ஆனால், தமிழ் அரசியலில் எந்தளவு முதிர்ச்சி பெற்றவராக சம்பந்தன் திகழ்கிறாரோ அதே முதிர்ச்சியினை எதிர்க்கட்சித்தலைவராக நாம் அவரிடத்தில் பார்ப்போமெனில், எதிர்க்கட்சித்தலைவரைவிட அதன் பிரதம கொறடாவாக செயற்படக்கூடிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார முன்நிற்பதையும் மறுப்பதற்-கில்லை. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடுத்தபின்னரும் தான் கட்சி சார்ந்த, மக்கள் சார்ந்த பிரச்சினைகள் பற்றி மாத்திரம் பேசுகின்றாரே தவிர தேசிய அரசியலை முன்வைப்பதில் ஒரு தேசிய எதிர்க்கட்சித்தலைவராக செயற்படுவதில் அவரது முதிர்ச்சி குறித்த கேள்வி எழுகிறது.
மலையக அரசியல் சூழலில் காலஞ்சென்ற சௌமிய மூர்த்தி தொண்டமான் முதுமை வரைக்கும் அரசியலில் இருந்ததோடு அவர் ஒரு முதிர்ச்சிப்பெற்ற அரசியல்வாதியாகவே இறுதிநாள் வரை செயற்பட்டார் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவருக்கு பின்னால் முதிர்ச்சி பெற்ற ஒருவரிடம் அவரது கட்-சியின் பொறுப்பை வழங்காமல் அவரது பரம்பரை சார்ந்த ஒருவருக்கு வழங்குகின்ற அவரது எண்ணப்பாடு இன்றைய நிலையில் இலங்கை அரசியலில் இ.தொ.க வை எந்த நிலையில் வைத்திருக்கிறது என்ற வினாவுக்கு இட்டுச் செல்கின்றது. மறுபுறத்தில் த.மு.கூ. புதிய அமைப்பாக உருவெடுத்தபோதும் அதிலும் ஏற்றத்தாழ்வு இருந் தாலும் அதற்குள் ஒரு அரசியல் முதிர்ச்சி தன்மை வெளிப்படுத்தப்படுவது அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இலங்கை முஸ்லிம் அரசியலின் பின்னணியை பார்தாலும் கூட அதன் பிரதான கர்த்தாவான மர்ஹும் அஷ்ரப் முஸ்லிம் அரசியலை தோற்றுவிக்கும் போதே முதிர்ச்சி பெற்றவராக இருந்துள்ளார். தமிழரசுக்கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளராக இருந்துள்ளமையினால் அவர் முஸ்லிம்களுக்கான அரசியலை கட்டமைப்பதில் முன்னிலையில் செயற்பட்டிருக்கின்றார். அவரது மறைவுக்குப்பின்னர் கட்சியின் உள்ளேயும் வெளியேயும் பல பிரச்சினைகள் விமர்சனங்கள் வந்தபோதும் அஷ்ரப்பின் அரசியலின் ஊடே பயணித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று வரை கட்சியை வழிநடத்திச் செல்கின்றார். அதேநேரம் அவருக்கு ஈடாக செயற்பட்ட தலைமைப்பதவியையும் பொறுப்பேற்ற அம்மையார் பேரியல் அஷ்ரப்பை இன்று அரசியலில் காணக்கிடைக்கவில்லை. இது அரசியலில் முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.
இலங்கை போன்ற நாடுகளில் இத்தகைய முதுமை வரைக்குமான அரசியலையும் முதிர்ச்சியுடனான அரசியலையும் தீர்மானிக்கையில் பாராளுமன்ற கட்டமைப்பும் அதன் உறுப்பினர்களுக்கான சம்பளத்திட்டங்களும் செல்வாக்கு செலுத்துவதனையும் அவதானிக்கலாம். அதனை பிறிதொரு பத்தியில் பார்க்கலாம். இந்நிலையில் பொருளாதார ரீதியில் தம்மை தக்க வைத்துக்கொள்ள முடியாத புதுமுகங்கள் பலர் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுகின்றார்கள் அல்லது தோல்வியை தழுவிக்கொள்கின்றார்கள். இவ்வாறான நிலையைப் பார்க்கும் போது செல்வாக்குப் பெற்ற பரம்பரையே தொடர்ச்சியாக நிலைத்திருக்கக் கூடிய தன்மையை இந்த கட்டமைப்பு உருவாக்கியுள்ளது என்று கூறலாம். இதன் காரணமாகவே புது முகங்களும் வருவதற்கு தயங்குகின்றன. இதுவே முதுமை அரசியலுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது என்பது மறுப்பதற்கில்லை.
அரசியலை பிழைப்புக்கான தொழிலாகக் கொள்வதானால் ஆரோக்கியமான போக்குகள் ஒருபோதும் வளர்வதற்கான வாய்ப்புகள் இருக்காது.
நன்றி - வீரகேசரி
0 comments