சர்வதேச மகளிர் தினத்திற்காக 2021 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் சவாலுக்கான தெரிவுகள் (Choose to Challenge) என்பதாக அமையப் பெற்றுள்ளது. நாளாந்த வாழ்வின் சவால்களை எதிர்கொண்டவாறே சமூகம்,கலை ,இலக்கியம், கல்வி, ஊடகம், மொழிபெயர்ப்பு என பயணிக்கும் சில பெண் ஆளுமைகளுடனான உரையாடல் மகளிர் தின சிறப்பு பதிவாக இடம்பெறுகிறது. பொதுவெளியைக் கண்டு அஞ்சி இருட்டு மூலைகளில்- பாதுகாப்பைத் தேடும் முயற்சி அர்த்தமற்றது- வசந்தி தயாபரன்ஈழத்து இலக்கிய உலகம் நன்க றிந்த பல்துறை இலக்கிய ஆளுமை. 'தகவம்' அமைப்பின் செயலாளர் எழுத்தாளர் திருமதி வசந்தி தயாபரன் தனது கருந்தைபகிர்ந்துக்கொள்கிறார்:பெண் தனது பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதையே சகித்துக் கொள்ள முடியாத சமூகம், அவளது எழுத்துக்களை சகித்துக் கொள்ளாதது புதுமையன்று. எழுத்தாளர் பெண்ணாக இருந்தால், அதுவும் சமூகத்தை விமர்சித்து எழுதிவிட்டால், அவளது எழுத்துக்கள் பூதக்கண்ணாடி கொண்டு அலசி ஆராயப்படுவதுடன் அவளும் 'மெல்லும் வாய்களுக்கு' அவலாகிறாள்.எழுதப் புறப்படும் பெண்களின்மீதான உளவியல் போர்தொடுப்பு முறைதான் அது! எமது நாட்டில் படைப்பாற்றல் மிக்க சகோதரிகள் பலரது கைகளைக் கட்டிப் போடுவதும் இதே காரணிகள் தான். பெண்ணின் எழுத்துக்கள் கருத்துக்கள் என்பவற்றுடன் மோதமுடியாதபோது, தாக்குதல் அவளை நோக்கித் திசைதிரும்புகின்றது.இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போர்முறை, மேலும் உத்வேகத்துடன் எழுத முற்படுதல் ஒன்றேயாகும். ஆயாசத்துடன் ஒதுங்கி விடுவதல்ல. பொதுவெளியைக் கண்டு அஞ்சி இருட்டு மூலைகளில் பாதுகாப்பைத் தேடும் முயற்சி அர்த்தமற்றது.நமது நாட்டில் படைப்புத் துறையில் மேற்கிளம்பி வருகின்ற பெண்களின் எண்ணிக்கை கவலை அளிக்கிறது. தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து எழுத்துத்துறையில் செயற்பட இளம்பெண்கள் முன்வாருங்கள்.சவால்களை எதிர்கொள்ளத் தயாராகி விட்டால் பெண்களின் எழுத்துக்கள் சரித்திரம் படைக்கும்- தாஹிர் நூருல் இஸ்ராசமூக சேவைத் துறையில் முதுதத்துவமாணி பட்டம்பெற்றுள்ள களச் செயற்பாட்டாளரும் தேசிய கல்வி நிறுவகத்தின் விசேட கல்விக்கான உதவி விரிவுரையாளருமான இஸ்ரா பின்வருமாறு கூறுகிறார்.சவாலை தெரிவு செய்வதற்கு(Choose to Challenge) உகந்த நபர்கள் யார் என்றால் அது 'பெண்' என்பது எனது உறுதியான நம்பிக்கை. பெண்ணை பொருத்தவரை ஒவ்வொரு புதிய நாளுமே சவாலாகவே அமைகின்றது. அவள் பிறப்பிற்கு முன்னிருந்தே உடல், உள, சமூக, பொருளாதார ஆன்மீக மற்றும் கலாசார, ரீதியில் சவாலைச் சந்தித்து வருகின்றாள். அவளுக்கு இப் 'புதிய சாதாரண' சூழலில் (NEW Normal) சவாலை தெரிவு செய்வது என்பது புதிய விடயமல்ல.கொவிட்-19 பரவலுடன் வேகமாக மாறிவரும் உலகின் மாற்றங்களுக்கு ஈடு கொடுப்பதற்கு ஏற்றவகையில் பெண் தன்னை 21ஆம் நூற்றாண்டின் புரட்சிப்பெண்ணாக மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. குறிப்பாக 21ஆம் நூற்றாண்டின் திறன்களை (21st Century learning) விருத்தி செய்துக்கொள்வது தனது இருப்புக்கான அத்திவாரமாகின்றது. அவ்வகையில் 21ஆம் நூற்றாண்டில் நபரொருவரிடம் எதிர்பார்க்கப்படும் பிரதானமான திறன்களில் கற்றல் திறன்கள், கல்வியறிவு திறன்கள், மற்றும் வாழ்க்கை திறன்கள் என்பன முக்கியம் பெறுகின்றன.குறிப்பாக கல்வியறிவு திறன் என்பதில் கவனத்தில்கொள்ளப்படும் தகவல், ஊடக திறன் மற்றும் தொழிநுட்ப திறன் என்பன முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. எனவே இன்றைய தொழிநுட்ப அறிவு என்பதனை மிகவும் லாவகமாகவும் முதலீடாகவும் பயன்படுத்தவேண்டிய உன்னதமான காலத்தில் பெண்ணானவள் இருக்கின்றாள்.அச்சில் ஏற்றப்பட்ட இலக்கியங்களே இனி சாகாவரம் பெறவுள்ளன. அவைதான் எம்மை செம்மையாக்கவும், எமது ஆதாரமாகவும் நிலைப்பெறவுள்ளன. அவ்வகையில் இலக்கியங்களுக்கு அபரிமிதமான ஒரு வலிமை இருக்கிறது. அவ் இலக்கியங்களை படைக்கும் பெண்படைப்பாளி தனது எழுத்துக்களின் ஊடாக அவளது உலகத்தையும் அவளது உணர்வையும் அழகுற எடுத்தியம்ப முற்படுகிறாள்.எனவே இனி எழுத்துக்களுக்கு உயிரும் உணர்ச்சியும் ஏற்றி சுடச் சுட திறைகளில் (Screen) வாசிக்கவும் வாழவும் வாய்ப்பு பிறந்துள்ளது. அவளது போராட்டம் எழுத்தாணியுடன் குருதி எழுத்துக்களாய்ப் பச்சைக் குத்தப்படும். அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.இந்த அரசியல் மாபெரும் சவாலாக உள்ளது - சிவலிங்கம் அனுஷா கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை துறையில் விரிவுரையாளராக கடமையாற்றும் சிவலிங்கம் அனுஷா இளம் இலக்கியவாதி. மொழிப்பெயர்ப்புத்துறையில் ஆர்வம் மிகுந்தவர். இதுவரையில் மூன்று சிங்கள மொழி நூல்களை தமிழ் மொழிக்கு மொழிப்பெயர்த்துள்ளதுடன் 'தாரா' என்ற மொழிப்பெயர்ப்பு நூலுக்கு 2019ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய மற்றும் சிறந்த மொழிப்பெயர்ப்புக்காக கொடகே சாஹித்ய விருதையும் பெற்றவர். இவரது கருத்து இவ்வாறு அமைகிறது: சமூகமட்டத்தில் பல சவால்களை எதிர் நோக்கும் அனு எம்முடன் தனது கருத்தை இவ்வாறு பகிர்ந்துக்கொள்கின்றார்.'என்னைப் பொறுத்த வரைக்கும், எனது அனுபவத்திற்கமைய, தமிழ் இலக்கிய துறையில் பயணிப்பது சிங்கள இலக்கிய துறையில் பயணிப்பதை விட மிக கடினம். என்றே சொல்வேன். ஒரு இளம் பெண்ணாக இந்த துறையில் பயணிக்கும் போது, கை கொடுப்பவர்களை விட தள்ளி விடுபவர்களே அதிகம்.இளையோரை வளர்த்து விட கூடாது. அவர்களை எழும்பவே விடக்கூடாது. என்ற நிலையே இத்துறையில் காணப்படுகின்றது. சுயநலம் என்பதே இத் துறையில் உள்ள மிகபெரிய பிரச்சினையாக பார்க்கிறேன். மூத்த எழுத்தாளர்களில் இளையோருக்கு கை கொடுப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும்.நான் ஒரு எழுத்தாளர் என்பதனையும் விட மொழிபெயர்ப்பாளர் என்கின்ற வகையில் வித்தியாசமான பிரச்சினைகளை சந்திக்கிறேன்.எந்தவொரு இலக்கிய படைப்பொன்றை உருவாக்கினாலும், அது இலங்கை தமிழ் இலக்கியத் துறையில் ஏற்கனவே பிரிந்திருக்கும் குழுக்களால் அவரவர் குழுக்களுக்கு சேர்ந்ததாக அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். இந்த அரசியல் மாபெரும் சவாலாக உள்ளது. அதேவேளை, எழுத்தாளர்கள் அனைவருக்கும் அவர்களின் படைப்புகள் சகோதர மொழியில் வருவது தேவையாக உள்ளது. அதற்காக பலர் என்னை நாடுகின்றார்கள். எனக்கு உள்ள நேர அவகாசத்தை வைத்து, நான் மிக முக்கியமாக கருத்தும் சிலதை மட்டுமே என்னால், மொழி பெயர்க்க முடிகிறது. நேரப்பிரச்சினையினால் சில ந}ல்களைத் தவிர்க்கும் போது எனது அனைத்து முயற்சிகளையும் அவமதித்து பொது வெளிகள் , சமூக வலைத்தளங்களில் தமக்கு விருப்பமான கருத்துக்களை பதிவிடுவது வருத்தமாக இருக்கும். இவை அனைத்தையும் தாண்டி இத் துறையில் பயணிக்கும் போது, நம் சமூகம், குடும்பம், நண்பர்கள் சிலர் ''உனக்கெல்லாம் இது தேவையா? நீ செய்யும் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இரு, என்ன இருந்தாலும் நீ ஒரு பெண்'' எனச் சொல்லுவார்கள்.அவற்றை எல்லாம் தாங்கி கொண்டு சமூகத்திற்கு ஏதாவது நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் நமது எழுத்துக்காளால் ஏதோவொரு மாற்றத்தை எற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் சவால்கள் நிறைந்த இப்பாதையில் பயணிக்கின்றேன்.இவ்வுலகை மாற்றுவதற்கான சவாலை பெண்களே தன் கையில் எடுத்துள்ளார்கள் சுசிலா யோகராஜன் - சமூக சேவைத் துறையில் முதுதத்துவமாணி பட்டம்பெற்றுள்ள களச் செயற்பாட்டாளரும் மலையகப் பெண் ஆளுமைகளில் ஒருவருமான இவர் பின்வருமாறு கூறுகிறார்.இக்காலகட்டத்தில் ஒரு எச்சரிக்கை நிறைந்த உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வருட மகளிர்தின கருப்பொருளும் “சவாலுக்கான தெரிவு” என எச்சரிக்கையை பறைசாற்றும் வகையிலேயே அமைந்துள்ளது. நாம் அனைவரும் பெண்களின் சாதனைகளை தேடவும் கொண்டாடவும் வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. அவ்வகையில் பல பெண்கள் தன் பேனா முனையால் இவ்வுலகை மாற்றுவதற்கான சவாலை தன் கையில் எடுத்துள்ளார்கள் என்பதை எம்மால் மறுக்கமுடியாது. பத்தில் ஆறு பேர் எழுத்தாளர்களாக இருக்கிறார்கள்.அவர்களின் ஒவ்வொரு எழுத்தும் சவால் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ஒளவை தொடங்கி அம்பை என பெண் எழுத்தாளர்களின் பட்டியல் நீளமானது. அம்பைப் போன்ற பல பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் தேச, இன, மொழி, பால் என்ற எல்லைகளைத் தாண்டிச் சென்று சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் அறிமுகமோ, ஆதரவோ, ஊடக கவனிப்போ இல்லாத எத்தனையோ பெண் எழுத்தாளர்கள் சமூக வலைத்தளங்களில் வலம்வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எழுதுவதற்கான ஆற்றல் இருந்தும் தன் வேலைப்பளு காரணமாக எழுதுவதற்கான நேரத்தை ஒதுக்கமுடியாமல் தனக்குள்ளேயே தன் திறனை புதைத்துக்கொண்டிருக்கும் பலரையும் காணலாம். அவ்வாறு தங்கள் மகத்தான ஆக்கங்களை வெளிவுலகிற்கு கொண்டு வர காத்திருக்கும் மற்றும் எழுத்து உலகில் காணப்படும் தோல்விகளை கண்டு துவண்டு விடாது வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் அனைத்து பெண் எழுத்தாளர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்கலைச்செல்வி' நிர்மலாஜோன் இவ்வாறு கூறுகின்றார்... நிர்மலாஞ்சலி நாட்டிய பள்ளியின் ஸ்தாபகரும் மூன்று தசாப்தகாலமாக நாட்டியத்துறையில் தனக்கென தனித்துவ இடத்தைதக்கவைத்திருக்கும் நடன ஆசிரியர் 'கலைச்செல்வி' நிர்மலாஜோன் இவ்வாறு கூறுகின்றார்... நான் இக்கலையை கற்க ஆரம்பித்த போது மிகுந்த ஈடுபாட்டுடன் வீட்டில் கூட யாருக்கும் தெரியாமல் இறங்கினேன். நல்ல குருவும் அமைந்து விட ஆத்மார்த்த...