உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வேட்பாளர் பட்டியலில் 25 சதவீத அரசியல் அனுமதி பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோட்டா முறை குறித்து மறு பரிசீலனை செய்யப்பட்டு வருவதுடன் அதற்கான கருத்தாடல்களும் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. இவ்வருட இறுதியில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இவ்விடயம் பேசுபொருளாகியிருப்பது வரவேற்கத்தக்கது.
தேர்தல் காலங்களில் வழங்கும் வாக்குறுதிகள் போலவே இவ்விடயமும் வெறும் உறுதியோடு போய்விடுமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.
சொல்ல முடியாதளவில் பல பிரச்சினைகளை எதிர் கொண்ட ஆபிரிக்க நாடான ருவாண்டா பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தில் முதலிடம் வகித்துள்ளது. அந்நாட்டின் பாராளுமன்றத்தில் உள்ள 85 உறுப்பினர்களில் 45 பேர் பெண்களாவர். பாலின சமத்துவத்திலும் சிறந்த நாடாகவும் இது விளங்குகின்றது.
ஆங்கிலேய காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில் முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு இலங்கை. பிரான்ஸ் போன்ற பல வளர்முக நாடுகளில் கூட அப்போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. இவ்வாறான வரலாற்றுப் பெருமை இருந்தும் கூட இலங்கை அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6.5 வீதத்தை இதுவரை தாண்டியதில்லை என்பது ஆச்சரியமே. இவ்வாறான நிலைமை தொடர்வதற்கான காரணம் என்ன என்பது பற்றி இவ்வார 'அலசல்' ஆராய்கிறது.
இலங்கையைப் பொறுத்த வரையில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது சாதாரண விடயம் அல்ல. ஏனெனில் தெரிவு செய்யப்பட்ட பெண் பிரதிநிதிகள் எவ்வாறு பல வசைபாடல்களுக்கு முகங்கொடுக்கின்றனர் என்பதை இலங்கையில் இருந்து அறியலாம். இது இவ்வாறிருக்க அரசியலில் பெண்களின் பங்களிப்பு வீழ்ச்சிக்கு ஓரிரு காரணங்களை மாத்திரம் கூறி சாதாரண விடயமாக கருதி விட முடியாது.
எந்தத்துறையாக இருந்தாலும் பொதுவாக இங்கு 'தலைமைத்துவம்' என்ற ஒரு பிரச்சினை ஏற்படுகின்றது. ஒரு பொறுப்பை ஏற்க வேண்டுமாயின் தலைமைத்துவத்தில் தனித்துவமாகவும் சுயாதீனமாகவும் பெண்கள் இருக்க வேண்டும். அப்படி இருந்தாலும் கூட அதனை வழங்குவதற்கு இந்த ஆணாதிக்க சமூகத்தினர் மானசீகமாக முன் வரவேண்டியது அடிப்படை விடயம். பல தரப்பட்ட விடயங்களில் பெண்களை முன்னிலைப்படுத்தும் இச்சமூகம் 'அதிகாரம்' என்று வரும்போது அவர்களை பின்தங்கியவர்களாகவே நோக்கிச் செயற்படுகிறது.
'தலைமைத்துவ' விடயத்தில் பெண்கள் பல ஆளுமைப் பண்புகளை கொண்டவர்களாக இருந்தாலும் குடும்ப தலைமைத்துவப் பொறுப்பை தவிர பல்துறையில் அவர்களுக்கான தலைமைப் பொறுப்பு நழுவி விடுகின்றது. சமூகத்தின் பார்வையும் இவ்வாறான நிலைக்கு இசைவாக்கப்பட்டு விடுகின்றது. இங்கு அரசியலில் தலைமைத்துவம் என்பது பிரதான விடயம். அரச நிறுவனங்களை வழிநடத்தும் பிரதான நிறுவனங்களில் உள்ளூராட்சி மன்றங்கள் என்பது அடித்தளம். இந்த உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை 25 சதவீத கோட்டா முறை அதிகரிப்பு பற்றியதைத் தெளிவுபடுத்தும் முகமாக அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் களுக்கு செயலமர்வும் நடத்தப்பட்டது.
பிரித்தானியா, ஸ்கொட்லாந்து, பகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தந்த நாடுகளில் அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு எவ்வாறான நடைமுறைகளை கையாளுகின்றார்கள் என்பது பற்றி தெளிவுபடுத்தபட்டதாக அதில் பங்கு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
தேர்தல் முறைக்கான சர்வதேச மன்றம் (IFES) இலங்கைத் தேர்தல்கள் திணக்களத்துடன் இணைந்து அண்மையில், நீர்கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
பெண்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமாயின் அவர்களை ஊக்குவிப்பதற்கான செயற்பாடுகளை ஊடகங்கள் எந்தளவில் கையாளுகின்றது என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது. ஆண் வேட்பாளர்களுக்கு வழங்கும் இடம் (செய்திகள் பிரசுரிப்பது) பெண் வேட்பாளர்களுக்கும் வழங்கப்படுகின்றதா? என்பது தொடர்பிலும் இதன்போது, கலந்துரையாடப்பட்டதுடன் அது பற்றி கேள்விகளும் எழுப்பப்பட்டன. இவ் விடயத்தில் பால் சமத்துவம் பேணப்படுவது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஏனெனில் மக்கள் மத்தியில் பெண் வேட்பாளர்கள் தொடர்பில் ஊடகங்கள் ஆரேக்கியமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் போதுதான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள். பெண்களின் ஆளுமை தேர்தல் களத்தில் அவர்கள் இருக்கும் போது அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய கடப்பாடு ஊடகங்களையே சாரும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் பின்னர் மாகாணசபை, பாராளுமன்றம் என்ற படிநிலை அடிப்படையில் இலங்கையின் நிர்வாக கட்டமைப்பு இருக்கின்றது. இதில் ஆரம்ப அரசியல் தளமாகவும் களமாகவும் இருக்கும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் வலுப்படுத்தப்பட வேண்டும். அந்தவகையில் அரசியலை ஒரு துறையாக கற்கும் பெண்கள் அத்துறைக்குள் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முன்வரும் போதே பிரதிநிதித்துவம் என்ற வார்த்தைக்கு பலம் சேர்ப்பதாக அமையும். இதற்கு ஏனைய பெண்களும் உறுதுணையாக இருக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
பெண்கள் வேட்பாளராக களமிறங்கும் பட்சத்தில் அவர்களுக்கு வாக்களித்து அவர்களை ஊக்கப்படுத்தி அதிகாரத்தில் அமர்த்த வேண்டிய பொறுப்பும் ஏனைய பெண்களைச் சாரும். சமூக நலனுக்காக அரசியலில் ஈடுபடுவதற்கு பெண்கள் முன்வரும் போது பெரியளவில் முகங்கொடுக்கும் பிரச்சினையாக கலாசார அதாவது சமூக கட்டமைப்பு பல விமர்சனத்திற்குள்ளாவதற்கான வழியை ஏற்படுத்தி விடுகின்றது. இவ்வாறான விமர்சனங்களுக்கு முகங்கொடுத்து முன்வருவதும் தம்மை தக்கவைத்துக்கொள்ளவதும் பெரும் சவாலான விடயம் தான். இவ்விடயத்தில் சமூகத்தில் இருந்து ஒரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசியலில் இதுவரை ஈடுபட்ட பெண்களின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், பெரும்பாலும் பரம்பரை வழியில் வந்தவர்களாகவும் ஆண் உறவுகள் மூலமும் வந்தவர்களாகவே இருந்துள்ளனர். இவ்விரண்டும் இல்லாது நேரடியாக களமிறங்கியவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்திருந்தாலும் அதில் வெற்றி பெற்றவர்கள் மிகவும் குறைந்தளவினரே.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ஐ.தே.க வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், “உள்ளூராட்சி மட்டங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஒதுக்குவதற்கூடாகவும் தேர்தல்களின் போது வேட்பாளர் பட்டியலில் குறைந்தபட்சம் 25 சதவீத பெண்களுக்கு இடம் ஒதுக்குவதற்கூடாகவும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று கூறப்பட்டிருந்ததும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிதொன்று. கூறப்பட்டது போல இப்போது பிரதமர் தலைமையிலான குழுவினர் அது தொடர்பில் முழுமூச்சாக ஈடுபடுகின்றார்கள் என எண்ணத் தோன்றுகிறது.
தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்ட பிரதான விடயம் நிறைவேறுவதற்காக கதவுகள் திறக்கப்பட்டு அதற்கான வேலைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தாலும் அதிகாரத்தில் உள்ள தொழிற்சங்கமாக இருந்தாலும் சரி கட்சிகளாக இருந்தாலும் சரி பெண்களுக்கான உரிய அந்தஸ்தை (பெயரளவில் மாத்திரம் அல்லாமல்) வழங்கவேண்டிய தேவையொன்று இருக்கின்றது.
பெண்களுக்கும் அரசியலில் முன்னுரிமை வழங்கும் பட்சத்தில் 25 வீத கோட்ட முறைமை சாத்தியமாகும் என்பதுடன் பெண்களும் அதிகாரத்தில் ஈடுபடுபவர்களாக உருவாகும் நிலை ஏற்படுகின்றது. அதுமாத்திரமன்றி பெண்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் சமூக பிரச்சினைகள் உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கக்கூடியதாகவும் இது அமைந்து விடும். சமூகமும் இதில் அக்கறை கொள்ள வேண்டும். சட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்ட போதும் சமூகத்தினர் மத்தியில் எவ்வாறான மனநிலை இருக்கின்றது என்பதுதான் கேள்வியே?
தெற்காசியாவை பொறுத்த வரையில் நேபாளம்-, ஆப்கானிஸ்தான் 25 – -29.9 வீதமாகவும் பாகிஸ்தான், பங்களாதேஷில் 20 – -24.9 வீதமாகவும் இந்தியா,- பூட்டான் 10 – 14.9 வீதமாகவும் மாலைதீவு, இலங்கை 5- 9.9 வீதமாகவும் அரசியலில் பெண்களின் பங்களிப்பின் புள்ளி விபரங்கள் எடுத்து காட்டுகின்றன. ஆக தென்னாசியாவில், பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் இலங்கையே பின்தங்கியுள்ளது.
உலகிலேயே முதல் பெண் பிரதமராக சிறிமா பண்டாரநாயக்க, முதலாவது பெண் நிறைவேற்று ஜனாதிபதி சந்திரிகா ஆகிய இரு பெண் ஆளுமைகளை கொண்ட நாடு என்றும் உலக மட்டத்தில் பெயர் எடுத்திருந்தாலும் ஒட்டு மொத்தமாக அரசியலில் பெண்கள் என்று பார்க்கும் போது தென்னாசியாவிலேயே கடைசியாக இலங்கையே இருக்கின்றது. உலகளாவிய ரீதியில் 131 ஆவது இடத்தில் இடம்பிடித்திருக்கினறது. சட்டம் கொடுக்கப்போகும் இந்த கோட்டாமுறைக்கு சமூகம் இணங்குமா?