பாராளுமன்றமும் சிறுபான்மையினரும்

October 05, 2017


''எமது நாட்டிலுள்ள பாராளுமன்றமே ஆசியாவில் பழமையான பாராளுமன்றம் என்று'' பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அந்த பழமையான பாராளுமன்றம் நேற்று (03.10.2017) தனது 70ஆவது அகவையை கொண்டாடும் முகமாக விசேட அமர்வையும் நடத்தியது.

அகவை 70 ஐ கொண்டு வயதில் முதிர்ச்சி பெற்றிருந்த்போதிலும் அது இலங்கையில் இரண்டாவது இனமான சிறுபான்மை சமூகத்தினர் மீது எவ்வாறான பார்வையை கொண்டிருந்தது. அதன்மூலம் சிறுபான்மை சமூகத்தை எவ்வாறான செல்நெறியில் கொண்டு சென்றது என்பது பற்றியே இவ்வார 'அலசல்' ஆராய்கிறது. 

ஒரு நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் உச்ச சட்டவாக்க பீடமாகவும் அதியுயர் சபை யாகவும் விளங்குவதே  பாராளுமன்றம். பல்லின சமூகம் வாழும் இலங்கையில் அவர்களின் உரிமைகளை மேம்படுத்த எந்தளவிற்கு முன்னின்று செயற்பட்டிருக்கின்றது என்பதை வைத்தே பாராளுமன்றத்தின் முதுமையையும் முதிர்ச்சியையும் பற்றி பேச முடியும். 

சுதந்திர பாராளுமன்றத்தில் இருந்து இன்று வரை அதன் செயற்பாடுகளை சிறு பான்மையினரை மையப்படுத்தி நோக்கும் போது  வருந்தத் தக்கதாகவே இருக்கின்றது. அதன்முதற்கட்டமாக  மலையக மக்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டதைக் சொல்லலாம். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் அமைக்கப்பட்ட  முதல் பாராளுமன்றத்திலேயே இந்த துயர சம்பவம் அரங்கேற்றப்பட்டு இன்றும் மலையக சமூகம் பெரும் துயர் நிலையிலேயே இருப்பதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது. 

நேற்று (03.10.2017) பாராளுமன்றத்தில் 70 ஆவது ஆண்டு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், எதிர்க்கட்சி கொறடா அனுரகுமார திஸாநாயக்க ஆகிய இருவரும் மிகவும் மனவருத்தத்துடன் இச்சம்பவத்தை சுட்டிகாட்டி உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது. 

இதனைத் தொடர்ந்து அவ்வப்போது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட சட்டங்கள். அதில் முக்கியமானதொன்று தனிச் சிங்கள சட்டம் 1956ஆம் ஆண்டு பண்டார நாயக்காவினால் கொண்டு வரப்பட்ட தனிச்சிங்கள சட்டம் இன்றும் தமிழ் மக்கள் தமது தாய்மொழியிலேயே எந்தவொரு வேலையையும் இலகுவாக செய்துகொள்ள முடியாத  நிலைமையை  தோற்றுவித்துள்ளது. காலப்போக்கில் தமிழ் மொழியும் 'அரச கருமமொழி' என்று பேச்சளவில் சொல்லப்பட்டாலும் நடைமுறையில் அது எத்தகைய துன்பத்தை அனுபவித்து வருகின்றது என்பதை கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கின்றோம். 

இவ்வாறு ஒவ்வொரு  காலகட்டங்களிலும் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் சிறுபான்மையின மக்களுக்கும் எதிரானதாகவே அமைந்தது என்பது மறுப்பதற்கில்லை. இந்த சமகாலத்திலும் அவ்வாறானதொரு நிலைமையே காணப்படுகின்றது. திட்டமிடப்பட்டு இவ்வாறு செய்யப்படுகின்றதா? அல்லது இது நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளதா? என்று சிந்திக்க வேண்டிய தேவையும் இங்கு எழுந்துள்ளது. 

225 அங்கத்தவர்களைக் கொண்ட ஓரவையுடைய சட்டவாக்க மன்றமான இந்த பாராளுமன்றத்தில்  ஆறு ஆண்டு கால தவணையைக் கொண்டுள்ளது. பிரித்தானிய பாராளு மன் றத்தை ஒத்ததாகவே இது அமைந்துள்ளது.   225 அங்கத்தவர்களில் 196 அங்கத்தவர்கள் 25 தேர்தல் மாவட்டங்களிலிருந்து பொது வாக்கெடுப்பின் மூலமும், மிகுதி 29 அங்கத்தவர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெரும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசியப் பட்டியலிலிருந்தும் தெரிவு செய்யப்படுகின்றனர்.

கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி பிரித்தானிய இலங்கையின் முதலாவது சட்டமன்றம் இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை, மற்றும் இலங்கை சட்டவாக்கப் பேரவை ஆகியன 1833 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 13 ஆம் திகதி  நிறுவப் பட்டன. நிறைவேற்றுப் பேரவையின் கடமைகள் பொதுவாக இலங்கை ஆளுநருக்கு ஆலோசனை வழங்கல் மட்டுமே. ஆனாலும் இந்த ஆலோசனைகளை ஆளுநர் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கவில்லை. 

ஆரம்பத்தில் பிரித்தானியர் மட்டுமே உறுப் பினர்களாக இருந்தனர், பின்னர் இலங்கையரும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். சட்டவாக்கப் பேரவைக்கு முதலில் 16 உறுப்பினர்களும், பின்னர் 49 உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை இலங்கையின் குடிமக்களில் குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 1931 இல் சட்டவாக்கப் பேரவை இல்லாதொழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக 101 உறுப்பினர்களுடன் இலங்கை அரசாங்க சபை நிறுவப்பட்டது. இதற்கான உறுப்பினர்கள் டொனமூர் அரசியலமைப்பின் மூலம் இன, சாதி, மதம், பால் என்ற வேறுபாடின்றி அனைத்து வயது வந்தவர்களுக்கும் முதற் தடவையாக தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டது.

உலகிலேயே முதன்முதலாக இருபாலருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக  இலங்கை கணிக்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்டமை ஜனநாயகத்துக்கு சிறப்பு. இருப்பினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 'சர்வஜன வாக்குரிமை காடையர்களின் கூடாரம்' என அப்போதே சேர். பொன் இராமநாதன் கூறியுள்ளார்.   கடந்த சில வருடங்களாக  உயரிய சபையான பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் பல அராஜக நடவடிக்கைகள் இக்கூற்றுக்கு பொருத்தமானதாகவே இருக்கின்றதா என்றும் எண்ணத் தவறவில்லை. 

1947 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி சபாநாயகர் அல்பிரெட் பிரான்சிஸ் மொலமூரே அல்பேர்ட் பீரிஸ் தலைமையில் கூட்டப்பட்டிருந்தது.1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை விடுதலை அடைய முன்னர், 1947 ஆம் ஆண்டில் சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி, அரசாங்க சபை கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஈரவை பாராளுமன்றம் அமைக்கப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறை மையை ஒத்த செனட் சபை என்ற மேலவையும், பிரதிநிதிகள் சபை என்ற கீழவையும் அமைக்கப்பட்டன. கீழவைக்கான உறுப்பினர்கள் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக் கப்பட்டனர். பிரதிநிதிகள் சபையில் 101 உறுப்பினர்கள் (1960 இல் 157 ஆக அதி கரிக்கப்பட்டது) தேர்ந்தெடுக்கப்பட்டனர். செனட் சபைக்கான 30 உறுப்பினர்களில் 15 பேரை பிரதிநிதிகள் சபை தேர்ந்தெடுத்தது. ஏனைய 15 பேரையும் மகாதேசாதிபதி நியமித்தார்.

1971, அக்டோபர் 2ஆம் திகதி செனட் சபை கலைக்கப்பட்டது. 1972,  மே 22 ஆம் திகதி இலங்கை குடியரசானது. பிரதிநிதிகள் சபைக்குப் பதிலாக தேசிய அரசுப் பேரவை உருவாக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக தேசிய அரசுப் பேரவை கலைக்கப்பட்டு இலங்கை பாராளுமன்றம் அமைக்கப்பட்டது.

1979 , ஜூலை மாதம் 4ஆம் திகதி, அன்றைய பிரதமர் ஆர். பிரேமதாச கொழும்பில் இருந்து 16 கி.மீ. கிழக்கே கோட்டே நகரில் தியவன்ன நதியில் அமைந்துள்ள 12 ஏக்கர் தீவில் புதிய பாராளுமன்றக் கட்டடம் அமைக்க  அனுமதி பெற்றார். இக்கட்டடம் ஜெஃப்ரி பாவா என்பவரால் வடிவமைக்கப்பட்டு, இலங்கை அரசின் நிதியுதவியில் கட்டப்பட்டது. 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி இக்கட்டடத்தை அன்றைய அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா திறந்து வைத்தார். இது பராளுமன்றத்தின் ஒரு சிறு வரலாற்று குறிப்பு. (மூலம் :விக்கிபீடியா)

இன்றைய பாராளுமன்றங்களிலும் சிறுபான்மையினருக்கான தேவைகள் குறித்து மக்களால்  தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்  அனைவரும் உரியவாறு கொண்டு செல்கின்றனரா என விரல் விட்டு எண்ண கூடிய சிலரே அதனை நிறைவேற்றுகின்றனர். ஏனெனில், சபை அமர்வுகளில் விவாதங்கள் இடம்பெறும் போது அதற்கு உரியதான விடயதானத்தை பற்றி பேசாமல் தாம் எப்போதும் மனதில் இருத்திவைத்திருக்கும் தங்களுக்கு தெரிந்த விடயத்தை மாத்திரமே சபை விவாதங்களின் போது பேசும் வல்லமை கொண்ட வர்களாகவே மக்கள் பிரதிநிதிகள் பலர் இருக்கின்றனர். 

கடந்து வந்த பாராளுமன்றத்துக்கு  சமகாலத்தில் இருக்கும் பிரதிநிதிகள் சிறுபான்மையினர் விடயம் தொடர்பில் இன்று 70ஐ எட்டியுள்ள பாராளுமன்த்தை சரியாக பயன்படுத்தியிருந்திருத்தால் சிறுபான்மையினர் இன்றும் அடிமைப்போல வாழ வேண்டிய ஒரு தேவை இருந்திருக்காதல்லவா? ஆக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும்  மக்கள் பிரதிநிதிகள் உருப்படியான பாராளுமன்ற சம்பிரதாயங்களையும் தெரிந்திருக்க வேண்டிய தேவையும் .அவசியம்.

பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத இடதுசாரி கொள்கையுடையோரும் பாராளுமன்ற முறைக்கு மாறிக்கொண்டனர் என்பதால் பாராளுமன்றம் தொடர்பான விமர்சனங்களைத் தாண்டி அதில் நம்பிக்கை கொள்ள வேண்டியிருக்கிறது. விமர்சனங் களுக்கு அப்பால் பாராளுமன்ற அரசியலை ஏற்றுக்கொண்டு மக்கள் வாக்களித்து விடுகி ன்றனர். இதற்கு ஜனநாயகம் என்று பெயர். உண்மையில் ஜனங்களை நாயகமாக கருதும் நிலை இப்போது அரசியலில் இல்லை. 

இருக்கின்ற நடை முறைகளை நேர்மையாகக் கையாண்டு மக்களுக்கான ஆட்சியைப் பெற்றுக்கொடுக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பணியாற்றாதவரை 70 அல்ல 100 வருடங்கள் கடந்தாலும் அழகிய கட்டடமாகவே விளங்கும். 

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images