பாராளுமன்றமும் 'குண்டும்' - ஜீவா சதாசிவம்

November 01, 2017


உத்தேச அரசியல் யாப்புக்கு எம்.பி.க்கள் ஆதரித்து வாக்களிப்பார்களாயின்  பாராளுமன்றத்தின் மீது குண்டுத்தாக்குதல் நடத்த வேண்டும் என்று  தேசிய சுதந்திர முன்னணியின்  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அண்மையில் கூறியுள்ள கருத்து ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கியுள்ள அதேவேளை  அநாகரிக அரசியலுக்கு  அச்சுறுத்தல் விடுத்திருப்பதாகவும் உள்ளது.  

குண்டுத்தாக்குதல் நடத்த வேண்டும் என்று விமல்   ஒரு பக்கம் கூறியுள்ள  நிலையில் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல,  விமல் கூறியதுபோல் ஒரு குண்டு அல்ல நூறு குண்டுகள் பயன்படுத்த வேண்டும் என கூறியிருப்பதன் மூலம் குண்டுகளின் எண்ணிக்கையையும் அதிகரித்திருப்பதானது ஆச்சரியமானதாக இருக்கின்றது. 

விமலின்  இந்த 'குண்டு' விவகாரம் கடந்தவார அரசியலில் பலதரப்பிலும் பேசப்பட்டு வந்த நிலையில், அது பற்றியே இவ்வார அலசல் ஆராய்கிறது.
நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் அதியுயர் சபையில் குண்டு மழை பொழிவது  பற்றி இவர்கள் இவ்வாறு உரக்க பேசுவதால் நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நாட்டில் நீதியை நிலைநாட்டி நாட்டு மக்களுக்கு நல்ல பல விடயங்களை செய்ய வேண்டும் என மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதி நிதிகளின் இவ்வாறான தீவிரவாத கருத்துக்கள் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  


இது இவ்வாறிருக்க, விமல் கூறிய இந்த கருத்தை சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு பிரசாரமாகவே எண்ண வேண்டியுள்ளது. புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் படி சிறுபான்மையினரின் நலன்கள் அதிகளவில் கருத்திற்கொள்ளப்படுவதும் அதிக கவனத்திற்குட்படுவதென்பதும் சில இனவாத அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத தருணத்தின் வெளிப்பாடாக இருக்கின்றது. சிறுபான்மையினர் விடயத்தில் தென் னிலங்கை இனவாதிகள் இன்று நேற்று அல்ல, கடந்த 30 வருட காலமாக  அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. 

சில இனவாத சக்திகளின் இனவாத கருத்துக்கள், அச்சுறுத்தல்கள் என்பனவே இன்றும் சிறுபான்மை இன மக்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கூட முழுமையாக பெற முடியாத இக்கட்டான நிலைமையை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் எந்தவிதத்திலும் பெரும்பான்மையினரை பாதித்து விடக்கூடாது என்ற நோக்கிலேயே அப்போதைய குண்டுத் தாக்குதலையும் நடத்தியுள்ளனர். 

அதன் நீட்சியே இன்றைய சிறுபான்மையினர் நலனையும் முடக்குவதற்கு விமல் போன்ற இனவாதிகள் கையாண்டு வரும் உத்தியாக இருக்கின்றது. அந்த ஒப்பந்தம் அன்று எவ்வித தடையுமின்றி சரியாக அமுல்படுத்தப்பட்டிருக்குமானால், இன்று சிறுபான்மையினர் உயிரிழப்புக்களை இழக்க வேண்டியதொரு நிலையும் ஏற்பட்டிருக்காது. 

இங்கு இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். விமல் ஆரம்பத்தில் இருந்து கூறும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் அவரை பிரபலமடையச் செய்வதற்காகவே இருந்து வருகின்றன. ஆனால், இந்தக் கூற்று அவரது தலைமைப் பதவியையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.  'எமது கட்சியின் தலைவர் ஒரு சண்டியராக இருப்பதை நாம் விரும்பவில்லை' என அக்கட்சியின் அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். இதன்மூலம் விமலின் தலைமைத்துவம் பறிபோகும் நிலைமையும் உருவாகியுள்ளது.

விமலை காப்பாற்றுவதற்கு மாத்திரம் நாம் பேசுகின்றோம். நாட்டுக்கு ஏற்படப்போகும் பங்கம் தொடர்பில் பதில் தேடுவதற்கு எமக்கு முடியாது போகும். எம்மால் பிரச்சினை ஏற்படுமானால் ஒரு அரசியல் கட்சி என்ற ரீதியில் அதனை திருத்திக் கொள்வது எமது பொறுப்பாகும். 

நாட்டுக்கு எமது கட்சியினால் ஏதும் பிழை ஏற்படுமாயின் அதனை திருத்திக்கொள்ளும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது என்றும் பியசிறி விஜேநாயக்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.பாராளுமன்றத்தின் மீது குண்டுத்தாக்குதல் நடத்த வேண்டும் என்று விமல் வாய்மூலம் சொல்லியிருப்பது பற்றி நல்லாட்சி தண்டிக்குமா, இல்லையா என்றதொரு கேள்வி மனதில் எழுந்தாலும் இவ்வாறானதொரு உண்மையான சம்பவம் 1987 ஆம் ஆண்டு  நடைபெற்று முடிந்தது. இப்போது விமல் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவராக இருந்துகொண்டு இக்கருத்தை கூறியிருக்கிறார். 


1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி இலங்கை –-இந்திய சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம்  செய்த பிறகு அரசாங்க பாராளுமன்றக் குழுவின் முதல் கூட்டம் நடந்த தினமான 1987, ஆகஸ்ட், 18ஆம் திகதி  பாராளுமன்ற கட்டடத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. 

அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையில் நடந்த அந்த  கூட்டத்தில் இரண்டு கிரனைட் குண்டுகள் வெடித்ததில் தெனியாய எம்.பி.யும் மாத்தறை மாவட்ட அமைச்சருமான கீர்த்தி அபேவிக்கிரம கொல்லப்பட்டார். ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை துப்பாக்கியால் சுட்டுக்கொலை  செய்ய எடுத்த முயற்சி தோல்வியுற்றமையினாலேயே 'கிரனைட் குண்டு' வீச்சு நடத்தப்பட்டுள்ளது.

எனினும் ஜனாதிபதிக்கு வைத்த இலக்கு குறி தவறி அது பாராளுமன்ற ஊழியர் மீது தாக்கி அந்த ஊழியர் படுகாயமடைந்தார். இச்சம்பவத்தில், அமைச்சர்களான லலித் அத்துலத் முதலி, வின்சென் பெரேரா , மேஜர் மொண்டேகு, காமினி ஜெயசூரிய, ஈ.எல்.பி.ஹுருள்ளே ஆகியோர் காயமடைந்தனர். பிரதமர்பிரேமதாஸாவுக்கும் இதன்போது காலில் காயம் ஏற்பட்டதுடன் 15 எம்.பி.க்கள் காய மடைந்தனர். பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் இலங்கையின் பாராளுமன்ற  வரலாற்றில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் அத்தருணத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.  

''நாட்டின் இறைமைக்கும் சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் தென்னிலங்கை பயங்கரவாதிகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியான நடவடிக்கையொன்றே பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பாகும் என்று அப்போதைய ஜனாதிபதி  ஜெயவர்த்தன அந்த நேரத்தில் தெரிவித்திருந்தார். வடகிழக்கு பகுதியில் பயங்கரவாதம் முடிவடைந்த நிலையில் அதேநேரம் தென்னிலங்கையில் வன்முறைகளை தென்பகுதி பயங்கரவாதிகள் தூண்டிவிட ஆரம்பித்துள்ளனர் என்றும் ஜே.ஆர். குறிப்பிட்டிருந்தார்.  இச்சம்பவத்திற்கு இந்திய மக்களவையும் வன்மையான கண்டனத்தை தெரிவித்திருந்தது.  இவ்வாறான வரலாறு ஒன்று இலங்கை பாராளுமன்ற குண்டு வெடிப்பில் இருக்கின்றது. 


குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள் மக்கள் நலன் சார் விடயங்களில் அக்கறையுடன் இருப்பது மாத்திரமன்றி அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய இவர்கள் தீவிரவாத கருத்துக்களை கூறுவதன் மூலம் நாட்டு மக்களுக்கிடையே இன்னுமொரு இனக்கலவரத்தை உருவாக்குவதாகவே அமைந்துவிடும். ஆகவே எதிர்காலத்தில் இவ்வாறான தீவிரவாத கருத்துக்களை அநாகரிகமான வார்த்தைகளை கூறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு நீதித்துறைக்கு உண்டு. அச்சுறுத்தலான 'குண்டு' பற்றிய   கூற்றுக்களால் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கும். 

அதேநேரம்  தமிழீழத்துக்கான ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் இயக்கங்களுக்கு தலைமை தாங்கியவர்களும் இந்த பாராளுமன்றத்திற்கு    பின்னாளில் ஜனநாயகவாதிகளாக திருந்தி இதே   ஜனநாயக பாராளுமன்ற த்தில் அங்கம் வகித்தார்கள்.  இப்போதும் வகிக்கின்றார்கள் என்பதையும் இங்கு நினைவுபடுத்த வேண்டும்.

நன்றி வீரகேசரி

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images