ஊழலும் விசாரணைகளும் - ஜீவா சதாசிவம்
November 24, 2017
அரசியல் என்றாலே ஊழலும் இருக்கும் என்பது பொது மொழியாகிப்போன ஒன்றாகி கிடக்கின்றது. அரச பொது நிதிகளை கையாளும் அதிகாரம் ஆட்சியாளர்கள் வசம் வரும்போது இன்னும் பல அதிகாரங்களும் அவர்களுக்கு வருவதனால் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் உருவாகி விடுகின்றன.
மேலைத் தேய நாடுகள், ஆசிய நாடுகள் என எல்லாவற்றிலும் இது இடம்பெற்றாலும் மேலைத்தேய நாடுகளில் இத்தகைய ஊழல் குற்றச்சாட்டுக்கள் வரும்போது குறித்த அரசியல்வாதி அவர் வகிக்கும் பதவியில் இருந்து விலகுவார். ஆசிய குறிப்பாக தென்னாசிய நாடுகளில் அந்த பதவியில் இருந்தவாறே தங்களைச் சரிப்படுத்தவும் அரசியல்வாதிகள் முயற் சிப்பர்.
மிகப்பொறுப்புமிக்க பதவி வகிக்கும் ஒருவர் மீதான தென்னாசியாவில் மிகப்பிரபலமான ஊழலாக அமைந்தது முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியுடன் தொடர்புபடுத்தப்பட்ட 'போபர்ஸ்' ஊழல் அந்த வழக்கு விசாரணை தொடர்ந்துகொண்டு போனதோடு அவரது மறைவோடு பல்வேறு திசைகளைக் கண்டது. இலங்கை ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக் ஷ தெரிவு செய்யப்பட்ட தறுவாயிலேயே ஹெல்பிங் அம்பாந்தோட்டை என்னும் திட்டத்தில் ஊழல் புகார் எழுந்தது. எனினும் அவர் ஜனாதிபதியாக தெரிவானதும் அந்த ஊழல் பற்றி அடையாளமே மறந்துபோனது. சுமார் பத்து ஆண்டுகள் அவர் ஜனாதிபதியாக ஆட்சி நடத்திய காலத்தில் பல்வேறு ஊழல்கள் இடம்பெற்றதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்ததோடு அதற்கு எதிராக அணிதிரண்ட சிவில் சமூகக் குழுக்களும் அரசியல் மாற்றம் ஒன்றைவேண்டி நின்றதோடு ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படவும் அது வழிகோலியது.
2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கான பிரதான பேசுபொருளாகவிருந்த ஊழல் புதிய ஆட்சியைத் தோற்றுவிக்க காரணமாகியது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஊழல் இடம்பெற்றதாக அவரது கட்சியின் செயலாளரான மைத்திரிபால சிறிசேன அவருக்கு எதிராக களத்தில் இறங்கியபோது பெரும் பரபரப்பும் ஆர்வமும் ஏற்பட்டது. அவர் வெற்றிபெற்றுவிட்டால் மஹிந்த ராஜபக் ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் விசாரணை செய்யப்பட்டு அம்பலப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பே அன்றைய சூழலில் இருந்தது.ஏன், மஹிந்த தரப்பு கூட அவ்வாறு தான் எண்ணியது. அதனால் தான் மைத்திரிபால ஜனாதிபதியாக தெரிவானதும் முன்னைய மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் முக்கிய தூணாக விளங்கிய முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இரவோடு இரவாக ஏறக்குறை தப்பியோடிய பாணியில் நாட்டை விட்டு வெளியேறினார். மஹிந்த ராஜபக்ஷவும் அனைத்தையும் இழந்தவரான தோற்றப்பாட்டுடன் தன்னுடைய மெதமுலன இல்லத்திற்கு சென்று கிராம மக்கள் மத்தியில் யன்னலில் நின்றவாறு பேசியிருந்தார். ஆனால், இன்றைய நிலவரம் அதுவல்ல.
பஷில் புதிய கட்சி தொடங்கி அதனை பலப்படுத்தும் தீவிர செயற்பாட்டில் இறங்கியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மாத்திரமல்லாமல் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துகொண்டு நாடு முழுவதும் தற்போதைய அரசுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்து தன்னை பலப்படுத்தி வருகிறார். ஜனாதிபதியாக இருந்து இறக்கப்பட்டவர் வீட்டில் ஓய்வெடுப்பார் அல்லது விசாரணைகளினால் ஓரம் கட்டப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட எல்லோருக்கும் பெரிய ஏமாற்றமானது. ஜனாதிபதியாக தெரிவான மைத்திரிபால சிறிசேன தான் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றதும் மஹிந்த ராஜபக் ஷவை குற்றவாளி கூண்டில் ஏற்றாது தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து பாராளுமன்ற உறுப்பினராக்கி அதிகார மிக்கவராகவே வரப்பிரசாதங்கள் நிறைந்தவராகவே ஆக்கி வைத்துள்ளார்.
அதேநேரம் தன்னோடு களத்தில் இறங்கி தனது கட்சி வாக்காளர்கள் அனைவருக்கும் ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருக்கு பிரதமர் பதவி வழங்கு வதாக உறுதியளித்த ஜனாதிபதி, வெற்றிபெற்றதன் பின்னர் ஊழல்களை விசாரிப்பதில் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சி மீதான ஊழல்களை விசாரிப்பதற்கு காட்டிய ஆர்வத்தை விட ஆளும் பங்காளிகளான ஐக்கிய தேசிய கட்சியின் ஊழல்களை விசாரிப்பதில் காட்டும் ஆர்வம் அதிகம் என்ற நிலைக்கு இன்றைய நிலைமைகள் தள்ளப்பட்டுள்ளன.
புதிய ஆட்சி அமைந்ததும் அதற்கு தேசிய அரசாங்கம் என பெயர் சூட்டிக்கொண்டாலும் இணைந்த இரண்டு தேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கும் பூரணமான நல்லுறவு ஒன்று நிகழவில்லை. அவ்வப்போது ஊடல்கள் இருந்தவண்ணமே இன்று வரை ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
மஹிந்த தரப்பினர் மீது தேர்தலுக்கு முன்னர் பாரிய குற்றச்சாட்டுக்கள் இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் நல்லாட்சியில் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பாரியளவானதாக இருக்கவில்லை. அரச சொத்துக்களை குறிப்பாக வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டாலும் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெறுவதால் அவை பாரிய குற்றச்செயல்களாக வெளிக்கா ட்டப்படவில்லை.
ஒரு வகையில் தங்கள் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை என்பதுபோல மஹிந்த தரப்பினர் தம்மை பிரகடனப்படுத்திக்கொள்ளும் அளவான குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே கைதுகளும் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
ஆனால், பங்காளி கட்சியான ஐக்கிய தேசிய கட்சி வசமிருந்த மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி தனியான ஆணைக்குழு ஒன்றை நியமித்ததும் அந்த ஆணைக்குழு தொடர்ச்சியான அழுத்தங்களின் ஊடே அதனை விசாரித்துச் செல்லும் விதமானது பிரதமராகவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரையே விசாரிக்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.
பிணைமுறி விவகாரம் செல்லும் போக்கினைப்பார்த்தால் அதில் ஊழல் இடம்பெற்றுள்ளமை உறுதிபட தெரிகிறது. ஆணைக்குழு விசாரணை செய்து அறிக்கை மட்டுமே வழங்கும். தண்டனை வழங்காது. நீதிமன்றத்திற்கு அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே மேலதிக விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்குவதென்றால் அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படல் வேண்டும்.ஆனால், அதற்கு முன்பதாகவே ஐக்கிய தேசிய கட்சி இப்போது மக்கள் மத்தியில் தண்டனைக்கு உள்ளாகியிருப்பதுபோல தெரிகிறது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ரவி கருணாநாயக்க நிதி அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் வெளிவிவகார அமைச்சு பதவியில் இருந்தும் விலகி சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே இருக்கும் நிலை.
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோப் குழுவில் அங்கம் வகித்த வேளை பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய நிறுவன உரிமையாளருடன் தொடர்பு கொண்டமை தொடர்பான தொலைபேசி விபரங்கள் வெளியிடப்பட்டு இப்போது தங்களை நியாயப்படுத்த தடுமாறிக்கொண்டு இருக்கின்றார்கள்.
கட்சித்தலைவர் பிரதமர் பதவியில் இருந்தவாறே தனது கட்சியின் முழுமையாக தியாகத்துடன் உருவாக்கப்பட்ட ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆணைக்குழுவுக்கு நேரில்சென்று சாட்சியமளிக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது. இதனை ஜனநாயக இலட்சணமாக காட்ட முற்பட்டாலும் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதைதான் அது.
இதனால் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இப்போது கடுப்பான மனநிலையில் உள்ளார்கள். ஜனாதிபதி இதயசுத்தியுடன் செயற்படுபவராக இருந்தால் இத்தகைய ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்களுக்காகவே நியமித்து அதனை விசாரணை செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் ஐக்கிய தேசிய கட்சி தரப்பில் செய்யப்பட்டதாக சொல்லப்படும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தை விசாரிக்கவே ஆணைக்குழு அமைத்துள்ளார்.
இது ஐக்கிய தேசிய கட்சியை பலவீனப்படுத்தும் தந்திரோபாயமா என்னும் கேள்வியையும் கிளம்பியுள்ளது. ஜனாதிபதி தனது நடுநிலைமையை நிரூபிக்க முன்னைய ஆட்சியின் ஊழல்களை விசாரிக்க இத்தகைய ஆணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணியின் பின்வரிசை ஆசன எம்.பி.க்கள் எழுத்து மூலம் கோரியுள் ளதாகவும் தெரிகின்றது.
முன்னைய அரச முறைகேடுகளை விசாரிக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டால் அந்த ஆட்சியில் இறுதி நிமிடம் வரை அங்கம் வகித்த இப்போதைய ஜனாதிபதியையும் சம்பந்தப்படுத்தி யாராவது வாக்குமூலம் கொடுத்துவிட்டால் தானே தான் நியமித்த ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுவிடும். பிரதமரின் பெயரை ஒரு சாட்சியாளர் குறிப்பிட்டதன் காரணமாகவே இன்று பிரதமர் ஆஜராக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எது எவ்வாறாயினும் இப்போது இரண்டு தரப்புகளும் ஊழல்வாதிகள் என்ற நிலையில் யார் யாரை விசாரிப்பது என்னும் குழப்பமாக கட்டத்தை அடைந்துள்ள அரசியல் சூழல் உருவாகியிருக்கிறது. கடந்த வாரம் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்னாயக்க பாராளுமன்றத்தில் முன்னைய ஆட்சியினர் செய்த குற்றங்களையும் வழக்குகளையும் பட்டியலிட்டபோது மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார கூறிய கருத்து அவதானத்துக்குரியது.
முன்னைய ஆட்சியாளர்கள் முறைகேடாக நடந்துள்ளார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதனை விசாரிக்கும் அருகதை இப்போதைய ஆட்சியாளர்களுக்கும் இல்லை. நீங்கள் அதனை விட பாரிய ஊழல்களை புரிந்துள்ளீர்கள் என்பதே அவரது கருத்து. ஆகவே இப்போது இலங்கை அரசியலில் யார் ஊழல்வாதிகள், யார் விசாரணையாளர்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.
நன்றி வீரகேசரி்
0 comments