நோர்வூட்டில் மோடி; வரலாற்றை மீட்டிப்பார்த்தல் - ஜீவா சதாசிவம்

June 25, 2017


''நோர்வூட்டில் தனக்கு வரவேற்பளித்த இந்திய வம்சாவளி தமிழ்த் தலைவர்களுக்கு நன்றி'' என இந்திய பிரதமர் மோடி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படத்துடனான 'ட்வீட்டர்' செய்தி பல இலட்சம் பேரினால் சர்வதேசமெங்கும் பார்வையிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வேறு கட்சியை சார்ந்தவர்களும், ஏனைய மக்களை உள்ளடக்கியதாக பல புகைப்படங்களையும் அவரின் முகப்புத்தகத்தில் பிரசுரிப்பதற்குத் தவறவில்லை. உள்ளூர் ஊடகங்கள் முதல் சர்வதேச ஊடகங்கள் வரை மீட்டிப்பார்க்கும் ஒரு நகராக,  கடந்த வாரம்  'நோர்வூட்' எனும் நகரம்  விளிக்கப்பட்டது. பாரதப்பிரதமரின் வருகையினால் நகருக்கும் பெருமைதான்!

 1970களில் கீனாக்கொலை தொழிலாளர்கள் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு எதிரான கண்டனக் கூட்டம்தான்  இதற்கு முன்னதாக நோர்வூட் கண்ட பெரிய  கூட்டம்  என்று கூறப்படுகிறது. இந்தக் கண்டனக்கூட்டத்திற்கு இலங்கை திராவிட செயற்பாட்டாளராகவும்  இளம் சோசலிஸ்டுகள் முன்னணியின் செயற்பாட்டாளராகவும்  ஏ.இளஞ்செழியனே தலைமை தாங்கினார். எல்லா தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் பாலாதம்புவும், ரோஹன விஜேவீரவுமே உரையாற்றினார்கள்.

ரோஹன விஜேவீர துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தாரே தவிர மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை பற்றி ஒன்றுமே பேசவில்லை. இதற்கு காரணம் மலையகத் தோட்டத் தொழிலாளர்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் அங்கமாக மக்கள் விடுதலை முன்னணி கொள்கையை கொண்டிருந்தது. இன்று என்னதான் மக்கள் விடுதலை முன்னணி மலையக மக்களுக்காக குரல் கொடுத்தாலும் அந்த பழைய வடு அவர்கள் மீது இருக்கவே செய்கிறது. பெ.முத்துலிங்கம் எழுதிய 'எழுதாத வரலாறு'  எனும் வரலாற்று நூல் இதனை விரிவாக பேசுகிறது.

இந்த வரலாற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே இம்மாதம் 12இல் இதே நோர்வூட்டில்   ஆயிரக்கணக்கான மலையக மக்கள்  பங்கேற்ற அவர்கள் பலதரப்பட்ட விடயங்களை எதிர் பார்த்துச்  சுட்டெரிக்கும் சூரியனையும் எதிர்த்து தலைவர்களின் உரைகளுக்காக காத்திருந்த  மக்கள் மத்தியில் தலைவர்கள் ஆற்றிய உரைகளில் பேசப்பட்ட வரலாற்று விடயங்களை ஆராய்வதே இந்த வார 'அலசல்'.

இந்திய பிரதமர், இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களை சந்திக்க வரும் மாபெரும் பொதுக்கூட்டம் என பெருமெடுப்பில் விளம்பரப்படுத்தப்பட்டு சேர்க்கப்பட்ட சுமார் முப்பதினாயிரம் அளவான மக்கள் கூட்டத்தில் நான்கு உரைகளே இடம்பெற்றன. முதலாவது வரவேற்புரை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்  மனோகணேசன் உடையது. இந்த உரை அவருக்கு வழங்கப்பட்டதோடு கூட்டத்தை ஒழுங்கமைத்தது தமிழ் முற்போக்கு கூட்டணியா? இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸா? எனும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

இ.தொ.கா சார்பில் அதன் தலைவர் முத்து சிவலிங்கம் இரண்டாம் வரிசையிலும் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் முதல் வரிசையின் ஓரத்திலும் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். இதனை ஒரு வார இறுதி ஆங்கில பத்திரிகை கூட சுட்டிக்காட்டியிருக்கின்றது. தவிரவும் தமிழ் முற்போக்குக் கூட்டணி கூட்டத்திற்கான ஒழுங்கமைப்பின் உரிமையை தனதாக்கிக்கொண்டது. அதன் தலைவர் மனோ கணேசனின் உரையில் பேசப்பட்டது என்ன என்பதனை  இறுதியில் பார்ப்போம். 

அதற்கு முன்னதாக, இரண்டாவதாக உரையாற்றிய இலங்கைப் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம். வழமையான ஏழு பேர்ச்சஸ் காணி, புதிய கிராமம் என்பதற்கு அப்பால் பிரஜாவுரிமை இல்லாதிருந்த இந்த மக்களுக்கு நாங்கள் பிரஜாவுரிமை வழங்கினோம் என பாரதப் பிரதமரை விளித்து உரையாற்ற அவரும் பெருமிதத்துடன் புன்னகைத்து கைதட்ட கூட்டத்தினரும் கைதட்டினர். இன்று மார்தட்டிக்கொள்ளும் பிரதமரின் ஐ.தே.க தான் இந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பிரஜாவுரிமையை பறித்தெடுத்தது என்பதை எவ்வளவு இலகுவாக கடந்துபோகிறார். அந்த நாளில் இதே இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஏழு உறுப்பினர்கள் இருந்தார்கள் என்பதை மறந்துபோகிறார். 
அந்த நாளில் ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மலையக மக்களின் குடியுரிமை பறிப்புக்கு துணைபோனது என்பதையும் மலையக மக்கள் மறந்துபோவார்களா என்ன? அதனை எதிர்த்தே இலங்கை தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்றதாகவும் சொல்லப்பட்டது. இந்த வரலாற்று நிகழ்வுகள் இலகுவாக மறக்கப்படக்கூடியதா?

அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை இலங்கையில் வாழும் ஏனைய சிங்கள, இலங்கைத் தமிழ், முஸ்லிம், பறங்கிய மக்களுக்கு மலையக தமிழ் மக்களும்  சமமாக நடத்தப்படுவார்கள் என்று இந்திய பிரதமர் முன்னிலையில் உரையாற்றியது, அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் கூறுகின்றேன் என உறுதியளித்தது மகிழ்ச்சியளித்தாலும், மலையக மக்களின் பிரஜாவுரிமை வழங்கும் விடயத்தில் தனது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அப்போதைய தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்க அப்போதைய இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியுடன் இணைந்து சிறந்த ஒரு முடிவை எடுத்ததாக மார்தட்டிக்கொண்டார். பாரத பிரதமர் மோடியின் முகத்திலும் அப்போது புன்னகை. அவருக்கு இது பற்றி ஏதும் தெரிந்திருக்குமோ என்னவோ?

ஜனாதிபதி  மார் தட்டிக்கொள்ளும் அளவுக்கு என்ன இருக்கிறது. ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் பண்டாரநாயக்க சேர்ந்திருந்தபோதுதான் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் 1964 ஆம் ஆண்டு சுதந்திர கட்சி ஆட்சியில் மலையக மக்களைக் கேட்டுக்கொண்டா ஒப்பந்தம் செய்தார்கள்?. காரண காரியம் தெரியாமல் குடும்பங்களை வேரறுத்து உறவுகளைப் பிரித்தெடுத்து இங்கும் அங்குமாக அங்கலாய்க்கச்செய்து  இன்றைக்கு ஐம்பதாண்டுகளாகிவிட்டன. இங்கே இவர்கள் இன்னும் 'இந்திய தமிழர்' என்றும் அங்கு அவர்கள் இன்றும் 'சிலோன் தமிழர்கள்' என்றும் அழைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

இலங்கையின் சனத்தொகையில் இரண்டாம் நிலையில் இருந்த சனத்தொகையை நான்காம் நிலைக்குத் தள்ளிய ஒப்பந்தமே சிறிமா- – சாஸ்திரி ஒப்பந்தம் என கடந்த வாரம் இந்தியன் எக்ஸ்பிரஸ் கூட செய்தி வெளியிட்டிருக்கிறது. இன்றைய மலையக மக்களின் அரசியல் பலத்தை கேள்விக்கு உள்ளாக்கிய அந்த துரோக ஒப்பந்தத்தை எப்படி அந்த மக்கள் முன்னே மார்தட்டி பெருமையாக பேச முடிகிறது? மக்கள் வரலாற்றை மறந்துவிட்டதாக நினைக்கிறார்களோ? அடுத்து பாரத பிரதமர் மோடியின் உரை. 

வழமைபோன்றே ராஜபக் ஷ பாணியில் மனனம் செய்யப்பட்ட இரண்டொரு தமிழ் வசனங்கள் -மகிழ்ச்சி. இலங்கைத் தேயிலையின் பெருமையையும் அதில் மலையக மக்களின் உழைப்பையும் மெச்சியதோடு தான் ஒரு தேநீர் கடைக்காரர் என சொல்லாமல் சொன்னது உணர்ச்சிமேலீட்டுக்காக.  இதேநேரம் பத்தாயிரம் வீடுகள் உள்ளிட்ட சலுகை அறிவிப்புகள் அரசியல் கவர்ச்சிக்காக. எம்.ஜி.ஆரையும், முரளிதரனையும் நினைவுபடுத்தியது கைதட்டலுக்காக. மறைந்த தொண்டமானை நினைவுபடுத்தியது, ஓரத்தில் உட்காரவைக்கப்பட்ட ஆறுமுகன் தொண்டமானையும் அவர்தம் ஆதரவாளர்களையும் ஆறுதல்படுத்த. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானை நினைவுபடுத்தியது ஒன்றும் தவறில்லை. 

அவர் ஒரு தேசிய தலைவர் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. உண்மையில் 200 வருட கால இந்திய வம்சாவளி மக்களின் வருகையை நினைவுபடுத்துகையில் அவர்கள் அந்த நாளில் அடிமையாக வைக்கப்பட்டிருந்த போது மாறு வேடமிட்டு மக்களிடையே சென்று தொழிற்சங்க அமைப்பையும் 1936 லேயே அரசியல் பிரதிநிதித்துவத்தையும் உருவாக்கிய தேசபக்தன் கோ.நடேசய்யரை நினைவுபடுத்தாமல் நேரடியாக சௌமியமூர்த்தி தொண்டமான் நினைவுக்கு வந்தார். இது உரை தயாரிப்பில் ஏற்பட்ட சூட்சுமமோ தெரியவில்லை. 

''நீங்கள் இந்திய வம்சாவளி என்பது எனக்குப் பெருமை. ஆனால், நீங்கள் உங்கள் உழைப்பால் இலங்கையை உங்கள் நாடாக்கிக் கொண்டீர்கள். தமிழும் பேசுகின்றீர்கள். சிங்களமும் பேசுகின்றீர்கள்'' என்ற மோடியின் அறிவிப்பு நீங்கள் தொடர்ந்தும் இந்திய தமிழராக இந்த நாட்டில் இருக்க வேண்டியதில்லை என்பதன் உட்பொருள் எனக்கொள்ளலாம். உரையின் இந்த பகுதிக்காக பிரதமர் மோடிக்கு ஒரு சபாஷ் போடலாம். அவரது உரையின் மூலம் இலங்கை மலையகத் தமிழர்களுக்கு உருப்படியான ஒரு தகவலை உறுதியாகச் சொல்லிச் சென்றுள்ளார்.

இறுதியாக, முதலாவதாக ஆற்றப்பட்ட அமைச்சர் மனோகணேசனின் வரவேற்புரை. மிகக் குறுகிய காலத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி இந்த மாபெரும் கூட்டத்தின் ஏற்பாடுகளையும் தலைமைப்பொறுப்பையும் கூட உருவாக்கிக்கொண்டது பாராட்டுக்குரியது. ஆனால், அந்த மாபெரும் மக்கள் கூட்டத்தில் இலங்கை சனாதிபதி, இலங்கை பிரதமர், இந்திய பிரதமர் முன்னிலையில் உரையாற்ற கிடைத்த அந்த வாய்ப்பை  மலையக வம்சம் பற்றி இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம். 

அதுவும் ஆங்கிலத்தில், ஜனாதிபதியும், பிரதமரும் சிங்களத்தில் பேசும்போது அதனை மொழிமாற்றல் கருவி மூலம் ஹிந்தியிலோ ஆங்கிலத்திலோ பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுதானே இருந்திருப்பார். அதுபோல உங்களது உரையையும் தமிழில் மட்டும் ஆற்றியிருந்தால் அவர் கேட்டிருப்பார். மக்களும் கேட்டிருப்பார்கள். பாவப்பட்ட மலையக மக்களின் உண்மைத் தன்மை இதன்போது தெரிந்திருக்கும் அல்லவா? 

அதேநேரம், அடுத்த நாள் அறிக்கையாக 'மலையக தேச பிதா நடேசய்யரின் கனவை நனவாக்குவோம்' என்ற அறிக்கை அருமையாக அமைந்திருந்தது. அதை அன்றைய மேடையில் கூறியிருந்தால் (12.05.2017) அதுவே வரலாற்றில் எழுதப்பட்டிருக்கும்.

 வரலாறு முக்கியம் அமைச்சரே. பொருத்தமான தருணங்களில்.

நன்றி - வீரகேசரி

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images