யாருக்காக தகவல் அறியும் சட்டம் - ஜீவா சதாசிவம்
June 28, 2017
தகவல் உரிமைச் சட்ட அறிமுகத்தின் பின்னர், இனி எல்லா விடயத்திலும் வெளிப்படைத்தன்மை, நேர்மை இருக்கும் என்று எதிர்பார்ப்பு. எல்லோரது மத்தியிலும் ஒரு நம்பிக்கைத் தன்மை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், அதற்கும் தடை போடும் வகையில் முறைகேடுகள் இருக்கின்றமையினால் அதன் நம்பிக்கை நிறைவேற்றப்படுமா? என்றும் கூட எண்ணத் தோன்றுகிறது.
தகவல் அறிவதற்கான சட்டமூலம் வந்தது என்பதற்காக 'தகவல் சுதந்திரம்' இந்த நாட்டில் முழுமையாக பேணப்படுமா? என்று நம்பிவிட முடியுமா? ஆம்! இந்த சட்ட மூலம் கொண்டுவரப்பட்டு இன்றுடன் ஒரு வருடமும் ஐந்து நாட்களும் ஆகிவிட்டன. இந்த ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டா தெரியவில்லை பல இடங்களில் இது பற்றி செயலமர்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.
அண்மையில், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் (SLPI) தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வொன்று நடத்தப்பட்டது. சட்டத்தரணி ஏ.கே.ஐங்கரன் வளவளராக கலந்துகொண்டார். இச்செயலமர்வில் மேற்படி சட்டத்தின் அடிப்படை விடயங்கள் பற்றி தெரிந்துகொண்டாலும் இந்த சட்டம் மக்கள் மத்தியில் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளது மக்கள் இதனை முழுமையாக அனுபவிக்க வேண்டுமாயின் எவ்வாறான பின்பற்றல்களைக் கையாள வேண்டும் என்பது குறித்து விரிவாக இங்கு கலந்துரையாடப்பட்டது. செயலமர்வும் தரமான தகவலுடனேயே இருந்தமை வரவேற்கத்தக்க விடயம்.
சுதந்திரத்தினத்தன்று முழுமையாக செயற்பாட்டுக்குள் வந்த 'தகவல் உரிமைச் சட்டம்' இப்போது எவ்வாறு செயற்பட்டு/ செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பது பற்றியே இவ்வார 'அலசல்' அலசுகிறது.
ஒரு வருட பூர்த்தியை எட்டியுள்ள இச்சட்டம் தனக்கான உத்தியோகபூர்வ இணையத்தளத்தையும் ஆரம்பித்துள்ளது. www.rticommission.lk இதுவே அதன் முகவரி. 2016ஆம் ஆண்டு இதே ஜூன் மாதம் 23ஆம் திகதி இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. கொண்டுவரப்பட்ட தினத்தில் இருந்து அதனை அமுல்படுத்தும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி அன்று வரை விறுவிறுப்பான பேசுபொருளாக இருந்து வந்தது.
இதன்போது பலதரப்புகளிடமிருந்தும் பல்வேறுபட்ட கருத்துக்களும் விமர்சனங்களும் வெளியாகின. ''அப்பாடா இந்த சட்டம் வந்தா இந்த அரசியல்வாதி என்னென்ன திருட்டு வேல செய்றாங்கன்றத பற்றி முதல்ல தெரிஞ்சிக்கலாம்'' இது பொது தரப்பில் இருந்து வந்த கருத்துக்கள். இதனை மிக ஆர்வமாக தெரிவித்ததை அவதானிக்கவும் முடிந்தது.
ஆம்! வெறுமனே அரசியல் தரப்பில் உள்ள ஊழலை மாத்திரம் அறிந்துக்கொள்வதற்குதான் இந்த 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' இருக்கின்றதா? இல்லாவிடின்?
இத்தருணத்தில் இச்சட்டத்தின் உருவாக்கப் பின்னணி குறித்து சிறு விளக்கம் ஒன்று இவ்விடத்தில் அவசியப்படுகின்றது. 1996ஆம் ஆண்டு இந்தச் சட்டம் சம்பந்தமாக பேசப்பட்டு வந்தாலும் சுமார் 10 வருடங்களின் பின்னர் நீண்ட கடினமான போராட்டங்களையடுத்து உயிர்பெற்றிருக்கின்றது.
தொடர் செயற்பாடுகளின் பின்னர் 2011ஆம் ஆண்டு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அதன் முதலாவது அறிக்கையில் 'தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை அமுல்படுத்துமாறு' பரிந்துரைத்ததுடன் 2013 ஆம் ஆண்டு இக்குழு இச்சட்டத்தினை ஒரு தேசிய செயல் திட்டத்தினது ஒரு செயல் இலக்காக உள்ளடக்கியிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
நீண்டகால செயற்பாடுகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள இச்சட்டம் மக்கள் மத்தியில் ஒரு பகுதியளவில் மாத்திரமே சென்றுள்ளது எனலாம். இலங்கையைப் பொறுத்தவரையில் மக்கள் நலன் சார்ந்த பல விடயங்கள் உயர்பீடத்தில் இருந்து அறிவிக்கப்பட்டாலும் பின்வரும் நாட்களில் மக்கள் மத்தியில் அதனை எவ்வாறு கொண்டு செல்வது, அவர்களிடத்தே அதனை எவ்வாறு ஸ்திரப்படுத்துவது பற்றிய விளக்கங்களை கொடுப்பது அரிதாகவே இருக்கின்றது.
இச்சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்தன் பின்னர் ஊடகங்கள் , இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் என சகல மட்டங்களிலும் பேசப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக அதன் நிலை மிகவும் மந்தமாகவே இருக்கின்றது. மக்கள் நலன் கருதி அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படும் இவ்வாறான சட்டங்கள் அரச பத்திரிகைகளில் முழுமையாக விளம்பரப்படுத்தப்படுகின்றனவா? அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு எவ்வாறான வழிமுறைகளை கையாளுகின்றனர் என்பதை பார்த்தால் அதுவும் மந்தகதியே!!!!!
இந்த சட்டம் ஏன்? அவசியம் என்பது பற்றியதொரு சிறிய விளக்கங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடப்பாடு ஊடகங்களுக்கு இருந்தாலும் அதில் உள்ள நுணுக்கங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டிய தேவை அரசாங்கத்தையே சேர்ந்தது. இவ்வாறானதொரு சட்டத்தை அறிமுகப்படுத்துவது 2016ஆம் ஆண்டே அரசாங்கத்திற்கு தெரிந்திருக்கின்றபோதும் அந்தாண்டு வரவு- – செலவு திட்டத்தில் இதற்கென தனியான நிதி ஒதுக்கீடு எதனையும் செய்திருக்கவில்லை. இதனுடன் இணைந்து வேலை செய்வதற்கென்று அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இருக்கின்ற அதிகாரிகளுக்கும் இது பற்றிய போதிய பயிற்சியும் வழங்கப்படாதிருப்பது அதனை கையாள்வது மிகவும் சிரமமான நிலைமையை தோற்றுவித்து விடுகின்றது.
மக்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள The Right to Information Act, No. 12 2016 இந்த சட்டம் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் ஒரு வெளிப்படைத்தன்மையை கொண்டுவரும். ஆனால், மக்கள் , அரசு அதிகாரிகள் என எல்லோருடைய ஈடுபாடும் இருந்தால் தான் இந்த சட்டத்தை வெற்றி பெறச் செய்ய முடியும் .
இந்த சட்டம் மக்களிடத்தே முழுமையாக சேருமிடத்து நாட்டில் தலைவிரித்தாடுகின்ற இலஞ்ச ஊழல், ஏனைய அத்துமீறல்களை இல்லாதொழிக்க முடியும். வெறுமனே சட்டத்தை கொண்டு வந்து விட்டோம். எமது கடமை முடிந்து விட்டது என்று அரசாங்கம் அசமந்தப்போக்கில் இருந்து விடக்கூடாது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கின்றது என்பது பற்றி மக்கள் தங்களுக்கு தகவல் அறியும் உரிமையை எந்த அளவுக்கு விவேகத்துடனும் வலுவாகவும் பயன்படுத்துகிறார்கள் என்பதை வைத்தே தெரிந்துக்கொள்ள முடியும். ஆனால், இந்த ஒரு வருட காலத்தில் அவ்வாறானதொரு நிலைமை தோன்றியதாகத் தெரியவில்லை. குறிப்பாக தலைநகரை அண்டிய பகுதிகளுக்கு இந்த தகவல் அறியும் 'தகவல்' எந்தளவுக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளது என்றால் அது கேள்விக்குறியே.
'தகவல் பெற விரும்பும் நபர்கள் மிகுந்த விருப்பத்துடன் இருப்பது போலவே, தகவல்களை ,முடிந்த வரை மிக குறைவாக தர வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசியல் சூழ்ச்சியால் ஆதரிக்கப்படும் அதிகாரிகளும் இருப்பதற்கான வாய்ப்புக்களும் இருக்கக் கூடும். அவ்வாறான விடயங்கள் தவிர்க்கப்பட்டு மக்கள் மத்தியில் இதனை வலுப்பெறச் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இன்று அரசுக்கு உள்ளேயும் வெளியேயும் அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி உட்பட பலதரப்பட்ட விடயங்களிலும் மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து பொதுமக்களிடத்தில் பலதரப்பட்ட கேள்விகள் எழுந்தாலும் அதனை தத்தமது பிரதேசத்தில் எவ்வாறு நிவர்த்தி செய்துக் கொள்வார்கள் அதனை எவ்வாறு உறுதிப்படுத்திக்ககொள்வார்கள் என்பதற்கு இச்சட்டத்தின் விளக்கம் மக்களுக்கு தேவைப்படுகின்றது. இச்சட்டம் உலகிலுள்ள பல ஜனநாயக நாடுகளில் வலுப்பெற்றிருப்பது யாவரும் அறிந்ததே. இதனால் மக்கள் அரசை நேசிக்கும் தன்மையும் இருக்கின்றது. ஜனநாயக நாடொன்றுக்கு அத்தியாவசியமான இவ்வாறான சட்டங்கள் மக்களின் நலன் கருதி அமுல்படுத்தப்பட்டாலும் அதில் மக்களை எவ்வாறு உள்வாங்கச் செய்வது என்பது பற்றிய தெளிவை மக்களுக்கு வழங்க வேண்டிய தேவையும் பொறுப்பும் அரசாங்கத்தையே சார்ந்தது. இதனை வழிநடத்தி செல்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கான பொறுப்பையும் கடமையையும் வலியுறுத்தி அவர்களை முழுமையாக செயற்படுத்த வேண்டிய கடப்பாடும் அரசாங்கத்தையே சார்ந்தது.
நன்றி - வீரகேசரி
0 comments