இலக்கியம்: எழுத்தும் செயற்பாடும் - ஜீவா சதாசிவம்
July 02, 2017இலக்கியத்தில் தொடர்ச்சியாக இருப்பவர்கள் பலர். அதில் சிலரே தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். இவ்வாறிருப்பது மிக முக்கியமான அம்சம். அந்தவகையில் இலக்கிய உலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்துக்கொண்டவர் 'மல்லிகை ஜீவா' என பலராலும் அழைக்கப்படும் டொமினிக் ஜீவா.
இது அவரது 90ஆவது பிறந்ததினத்தில் அறிந்துகொள்ளக்கூடியதாகஇருந்தது. ஒரு இலக்கியவாதியுடன் ஒரு மாலைப் பொழுதை கழிக்கும் மனநிலையுடன் எத்தனை பேர் இருக்கின்றனர். அவ்வாறிருப்பது பெரியதொரு விடயம் தான். எந்தளவிற்கு அவர் பங்களிப்புச் செய்திருக்கின்றார் என்பதும் முக்கியமானதொரு விடயம். இலக்கியவாதிகள்எத்தனையோ பேர் இருக்கின்றனர். ஆனால்இ இவ்வாறானதொரு கௌரவிப்பு எத்தனை பேருக்கு கிடைத்துள்ளது. கிடைக்கின்றது என்பது பற்றியும் சற்று சிந்திக்க வேண்டியுள்ளது.
காலவோட்டத்தில் அவரவர் வேலையை அவரவர் பார்த்துக்கொள்ள முடியாத நிலைமையில் இவ்வாறான நிகழ்வுகளுக்கென்று நேரத்தை ஒதுக்கி அதில் கலந்துகொள்வதென்பது மனமகிழ்ச்சி தரும் விடயம் என்பதுடன் இவ்வாறான தொடர் நிகழ்வுகள் இலக்கிய உலகுக்கு அவசியப்படுகின்றது கூட.
மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின்90 ஆவது பிறந்த தின நிகழ்வு 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இனிய மாலைப்பொழுதில் அவரது இல்லத்தில் சக எழுத்தாளர்களுடன் நடந்தேறியது. காக்கை தீவு என்பதாலோ தெரியவில்லை கடற்கரையோரத்தில் இந்நிகழ்வு நடைபெற வேண்டும் என்று பல இலக்கிய நிகழ்வுகளை நடத்துவதற்கு பரபரப்பாக முன்னின்று செயற்படும் மேமன் கவி ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், இயற்கையோ அவரது ஆசைக்கு இடம் கொடுக்கவில்லை.
ஜீவாவின் வீட்டிலேயே இந்நிகழ்வு பல மூத்த எழுத்தாளர்களுக்கு மத்தியில் இடம்பெற்றது. இதன்போது, அங்கு வந்திருந்த எழுத்தாளர்கள் அன்றைய கதாநாயகனுக்கு வாழ்த்து தெரிவித்தது மகிழ்ந்தனர். இங்கே பொன்னாடை கலாசாரம் இல்லாதிருந்தது மனதுக்கும்மகிழ்ச்சியாகஇருந்தது. ஆடம்பரமாக இல்லாது இடம்பெற்ற இந்நிகழ்வில், சக எழுத்தாளர்கள் ஒருவருக் கொருவர் அளவளாவிக் கொண்டனர்.
வெறுமனே பிறந்த தின நிகழ்வாக அல்லாமல் சக எழுத்தாளர்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் நிகழ்வாகவும் இது அமைந்திருந்தது.
இவ்வாறானதொரு அருமையான நிகழ்வில், இளம் எழுத்தாளர்கள் எவரேனும் இல்லாதிருந்தது மனதுக்கு வருத்தமாக இருந்தது. மல்லிகை ஜீவாவின் காலத்தில் இருந்தவர்களும் அவரால் வளர்க்கப்பட்டவர்களுமேஅங்கு வந்திருந்தனர். நாளுக்கு நாள் இளம் எழுத்தாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அவர்களில் ஒருவரையேனும் காணக்கூடியதாக இருக்கவில்லை.
மூத்த எழுத்தாளர் சமூகத்துடன் ஒரு இணைப்பை இளம் எழுத்தாளர்கள் ஏற்படுத்தினால் எதிர்காலத்தில் சிறந்ததொரு வலுவான 'எழுத்தாளர் சமூகம்' உருவாவதற்கான சந்தர்ப்பமாக அமையும். இலங்கையில் நல்ல பல எழுத்தாளர்கள் இருந்தும் ஏனோ அவர்கள் முழுமையாக வெளியில் வராதுள்ளனர். அவர்கள்இலக்கியத்தில் தொடர்ந்து இருந்தாலும் இலக்கிய உலகில் தம்மை தொடர்ந்தும் (செயற்பாட்டில்) உயிர்ப்புடன் வைத்துக்கொள்வது அரிது.
அந்த வரிசையில் சாஹித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப், கொழுந்து ஆசிரியர் அந்தனி ஜீவா, வதிரி.சி.இரவீந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்ஏ.எச்.எம். அஸ்வர், வெளிப்பனை அத்தாஸ்,பிரமிளா பிரதீபன், கே.எஸ்.சிவகுமாரன்,கலாநிதி ந.ரவீந்திரன், பேராசிரியர் மா.கருணாநிதி,மு.தயாபரன், ச.முருகானந்தன், ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன், கே. பொன்னுத்துரை, செல்வம்,தேசம் பத்திரிகையாளர் சதீஸ், ஏ.எஸ்.எம். நவாஸ்,துரைவி ராஜ்பிரசாத்துரை விஸ்வநாதன், நடராஜன், இரா.சடகோபன்,சிங்கள எழுத்தாளர் கமல் பெரேரா, ஸ்ரீரதரசிங், பூபாலசிங்கம், அட்டாளைச்சேனை முஹமது நௌபல் போன்ற பலர் கலந்து கொண்டனர்.
மேமன்கவி, திலீபன் டொமினிக் ஜீவா ஆகியோரின் ஏற்பாட்டில் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.இந்த நிகழ்வில்ஜீவாவின் 90 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு மேமன்கவி தொகுத்துள்ள ''ஜீவா பதிவுகள்-90'' ஆவணத்தொகுப்பும் விரைவில் வாசிக்கக் கூடியதாக இருப்பதும் இங்கு மகிழ்ச்சிக்குரியதே!.
அடுத்த தலைமுறையினர் என்று சொல்லக்கூடியவர்களின் (பிரமிளா பிரதீபன் தவிர்ந்த) வருகையை காண முடியாமல் இருக்கின்றது.இது ஒரு சாதாரண நிகழ்வாக இருக்கலாம். ஆனால், டொமினிக் ஜீவா போன்ற தலை சிறந்த எழுத்து ஆளுமையை மையப்படுத்தி இரண்டு தலைமுறையினருக்கான இலக்கிய இணைவு இடம்பெறாத போது எத்தகைய சந்தர்ப்பங்களில் இது நடைபெறும் என்பதே ஒரு கேள்விக்குறி.
தொடர்ச்சியாக வாராந்தம் தமிழ்ச்சங்கத்தில்நூல்வெளியீடுகள், இலக்கியக் கூட்டங்கள் என இடம்பெற்று வந்தாலும் அங்கு வருகைதருபவர்கள் கூட தெரிவு செய்யப்பட்ட மூத்த எழுத்தாளர்கள், தலைமுறையினர். இவ்விடத்திலும் பெரும்பாலும் இளைய தலைமுறையினரை காண்பது அரிதாகவே இருக்கின்றது.
எனவே இளந்தலைமுறையினர் வெறுமனே எழுத்துலகத்தில் மாத்திரம் தங்களை வைத்துக்கொள்கின்றார்களா?
இலக்கியச் செயற்பாடுகளாக பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டு அதனை பரிமாறிக்கொள்கின்ற பண்பாட்டில் இருந்து நாங்கள் விடுபட்டுக் கொண்டு செல்கின்றோமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
நன்றி சங்கமம்
0 comments