காலமாற்றத்திற்கேற்ப பயணிப்பது அவசியம் - ஜீவா சதாசிவம்

July 29, 2017

நிகழ்ச்சிப் பணிப்பாளர் ,சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.வி.லோஷன்
உடனான ஓரு சந்திப்பு

அம்மாவின் முழுமையான ஆதரவுடன் இத்துறைக்குள் நுழைந்தேன். அதேபோல மனைவியும் எனக்கு இத்துறையில் நான் தொடர்ந்து பயணிப்பதற்கு ஆதரவாக இருக்கின்றார். அதனால் இலகுவாக பயணிக்க கூடியதாக இருக்கின்றது. இத்துறைதான் எனது இலட்சியம் என நான் கூறவில்லை.  வந்த  பிறகு  இத்துறையில் தான் இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன். இத்துறைக்குள் பிரவேசித்த பின்னர் துறைசார் விடயங்களை தொடர்ச்சியாக கற்று காலத்திற்கேற்ப என்னை நான் வளர்த்துக்கொண்டேன். என் அப்பாவின் அனுமதியுடன் மூத்த அறிவிப்பாளர் எழில் அண்ணா சக்தி வானொலியில் சிறுவர் நிகழ்ச்சி ஒன்றில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.  ஒலிவாங்கியின் முன்பு என் முதல் அனுபவம் அது. அதன் பின்னர் ஒலிப்பரப்புத்துறையிலேயே எனது பயணம் தொடர்கின்றது இது மனதுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என்கிறார் லோஷன்.

 அறிவிப்புத்துறையில் சுமார் 19 வருடங்கள் அனுபவம் கொண்ட அதிகளவான நேயர்கள் மனதில் தனியிடத்தை பிடித்துக்கொண்ட சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.வி லோஷனை நேர்காணல் செய்யும் வாய்ப்பொன்று கிடைத்தது. இதன்போது அவர் எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்கள் எமது வாசகர்களுக்காக...

நீண்டகால அறிவிப்புத்துறை தற்போது எத்தகைய மாற்றத்தைக்கொ ண்டுள்ளது? 
அறிவிப்புத்துறையில் நுழைந்து  19 வருடங்கள் ஆகின்றன. இன்று சூரியனுக்கும் 19 வயதாகிவிட்டது.   நீண்டகால அறிவிப்புத்துறையில் பல மாற்றங்களை கண்டுள்ளோம். இத்துறையில் தொழில் நுட்ப ரீதியில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  மாற்றங்களை படிப்படியாக அனுபவிக்கும் வாய்ப்பு எங்களது தலைமுறைக்கு மாத்திரமே கிடைத்துள்ளது. 

இத்துறையில் தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவனாக இருப்பதனால் இதனை என்னால் உணரக் கூடியதாக இருக்கின்றது. இப்போதிருக்கும் போட்டித்தன்மை, வர்த்தக துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், அதற்கேற்றவாறு எம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவையும் அவசியமும் இருக்கின்றது. 

ஆரம்ப காலங்களில் வானொலிகளுக்கிடையில் போட்டி, பின்னர் வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் இடையே போட்டி.  இந்திய தொலைக்காட்சிகளுடன் போட்டி என நீண்டது. ஆனால், இப்போது வானொலிக்கும் சமூக வலைத்தளங்கள், ஸ்மார்ட் போன்களுக்கிடையே போட்டி அதிகரித்துள்ளன. இப்போது இளையவர்களின் தேவை அறிந்து ரசனை அறிந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இளையவர்கள் இதிலிருந்து விலகிச் செல்கின்றார்கள் என்ற அச்சமும்  ஏற்பட்டுள்ளது.

அப்படியானால் எதிர்காலத்தில் வானொலி இல்லாமல் போய்விடும் என்று கருதுகின்றீர்களா?
அப்படி ஒரு சிலரின் ஊகங்களை பார்த்திருக்கின்றேன்.  ஆரம்பத்தில் வானொலிக்குள் நுழைவதற்கென ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் (Applications) வந்து சேரும் . ஆனால், இப்போது அது குறைவடைந்து வருகின்றது. 
தொலைக்காட்சி பரவலான போது,   இன்னும் சில வருடங்களில் வானொலியின் ஆதிக்கத்தைவிட தொலைக்காட்சியின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் என்றார்கள். ஆனால், வானொலியின் ஆதிக்கமே இன்றும் அதிகமாக இருக்கின்றது. எங்கு சென்றாலும் யாரும் தன்னுடனேயே வைத்திருக்கும் அதாவது, கேட்டுக்கொண்டிருக்கக்கூடிய சாதனமாக வானொலி இருப்பதே இதற்கான பிரதான  காரணம். காலமாற்றத்திற்கு ஏற்ப மாற்றிக்கொண்டால் தொடர்ந்து நிலைத்திருப்போம். 

உலகிலேயே வானொலி மிகவும் பரவலானதும், சமூக வலைத்தளங்கள் அதிகளவு பரவி இருப்பதும் மேற்குலக நாடுகளில்தான். அமெரிக்காவிலேயே எப்.எம்.   வானொலிகள் அதிகம். தேவைப்பாடு அளவு இருக்கும் வரைக்கும் எதிர்கால தலைமுறைக்கு ஏற்ப எம்மை மாற்றிக்கொள்ளும் வரைக்கும் வானொலியும் நிச்சயமாக இருக்கும்.

இன்று பெருமளவானோர் கையடக்கத் தொலைபேசிகள், இணையத்த ளங்களின் ஊடாக எப்.எம் கேட்பதால் இங்கு வானொலிக்கான தேவை இல்லாது போகின்றதா?
முழுமையாக அவ்வாறு கூற முடியாது. 2000 ஆண்டு இணையத்தள பாவனை அதிகரித்த அத்தருணத்தில் எமது நிறுவனத்தலைவர் காலமாற்றத்திற்கேற்ப தொழில்நுட்பத்தை புகுத்தினார். இப்போது இணையத்தளம், சமூக வளலத்தளங்கள், ஸ்மார்ட் போன்களிலும் எமது அலைவரிசையை கேட்டுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

தற்போது இணைய வானொலிகள்(Online Radio) அதிகரித்துள்ளன. இது வானொலிக்கு எவ்வாறான சவாலாக இருக்கின்றது?
சட்ட விரோதமான இணைய வானொலி ஒலிபரப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை நான் அடிக்கடி கூறி வருகின்றேன். இது வர்த்தக ரீதியில் எமக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

 ஆனால், இளைய தலைமுறையினர்  குறிப்பாக வானொலிக்கு வரவேண்டும் என்று நினைக்கின்ற பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்   இத்துறைக்கு வரவேண்டும் என்ற ஈர்ப்பினால் தவறான சில இணைய ஒலிபரப்புக்களில் புகுந்து விடு கின்றார்கள். இது பெரும் பாதிப்புக்குரிய விடயம். இப்படி நுழைபவர்களை இணைய அறிவிப்பாளர்கள் என முத்திரை குத்தி தள்ளி வைக்கும ஒரு காலமும் வந்து விடும். இது பெரியதொரு ஆபத்தான விடயம். 

இணைய வானொலிகளின் அதிகரிப்பின் பின்னர் 'மைக் எடுப்பவர்கள் எல்லோரும் அறிவிப்பாளர்கள்' என்ற நிலை உருவாகிவிட்டது. இவ்வாறான நிலை அறிவிப்புத்துறையின் மகத்துவத்தை குறைப்பதாக அமைந்து விடாதா? 

இப்படியொரு ஆபத்து இருக்கின்றது என்பது பலரின் கூற்று. சமூக வலைத்தளங்களின் உருவாக்கத்தின் பின்னர் எல்லோரும் எழுத்தாளர்கள், விமர்சகர்கள் என்றதொரு நிலை உருவாகிவிட்டது.  ஒரு துறையை பற்றி தெரியாவிடினும் அதனை பற்றி விமர்சிக்கும் தன்மை ஏற்பட்டுள்ளது. பேஸ்புக் இருப்பதனால் குறிப்பாக யார் வேண்டுமானாலும் எதனையும் எழுதலாம் என்ற நிலை இருக்கின்றது.

அதேபோலதான் யார் வேண்டுமானாலும் தங்களை RJ, DJ  என்று  தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் நிலைமை உருவாகிவிட்டது.  இதற்கான அங்கீகாரம் மக்களிடம் இருந்து எமக்கு கிடைக்க வேண்டும். எப்.எம்.  களில் வேலை செய்பவர்கள் எல்லோரையும்  மக்கள் அறிவிப்பாளர்களாக எடுத்துக்கொள்வதில்லை. மக்களுக்கான விடயங்களை தேடிக் கொடுப்பதன் மூலமே அதனை வெற்றி கொள்ளலாம். எனவே நிலைத்திருத்தல், நீடித்தல் என்பது சமூகத்திற்கு செய்யும் சேவைகளைப் பொறுத்தே இருக்கின்றது.

அரச வானொலியின் தரத்திற்கு (நிகழ்ச்சி)  தனியார் வானொலி இல்லை என்ற கருத்து நிலவுகின்றது. இது பற்றி நீங்கள் கூற விரும்புவது?
காலமாற்றம், அதன்தேவையே இங்கு பிரதானமாகக் கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு கால மாற்றத்திற்கு ஏற்ப  மாற வேண்டிய தேவை உள்ளது. இலங்கையின் தாய் வானொலியான SLBC வழங்கிய சேவை அளப்பரியது. இலங்கையில் வானொலியை அறிமுகப்படுத்தினார்கள். ஏன் இந்தியாவிலும் கூட இலங்கை வானொலிக்கு தனியான இடம் இருக்கின்றது.

மரபு வழியான ஒலிபரப்பு முறையே இதற் கான பிரதான காரணம். ஆனால், இதில் சூரியனே மாற்றத்தை ஏற்படுத்தியது. சகல மக்களிடத்திலும் கொண்டு செல்வதற்கும் தமிழை இலகுபடுத்தி பெரியதொரு மாற்றத்தை கொண்டு வந்தோம். 

மக்கள் நெருங்கி வந்து பழகும் நிலை அத்துடன் அவர்களின் கருத்துக்களை (Feed Back) சுதந்திரமாக கூறுதல் என்ற நிலையை ஏற்டுத்தியது. இந்த கால இளையவர்களுக்கு ஏற்ப செய்திகள், தகவல்களை நேர்த்தியாக வழங்க வேண்டும். இப்போது இத்துறைக்கு வரும் இளம் அறிவிப்பாளர்கள் திறமையான வர்களாகவும்தேடல் உள்ளவர்களாகவும் ஆர்வமுள்ளவர்க ளாகவும்  இருக்கின்றனர்.

எவ்வாறான நிகழ்ச்சிகளை மக்கள் கூடுதலாக விரும்பிக் கேட்கின்றார்கள்--?
தகவல்கள், செய்திகளுக்காக கேட்கும் நேயர்கள், பாடல்களுக்காக மட்டும் கேட்கும் நேயர்கள் இருக்கின்றார்கள்.  வானொலி மீதான விசுவாசத்தை கொண்டவர்கள் ஈர்க்கப்பட்டவர்கள் கேட்பார்கள்.  இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட நேயர்கள் இருக்கின்றனர். ஆகையால், இவர்களுக்கு ஏற்றாற்போலவே நிகழ்ச்சிகளும் இருக்கின்றமையால், அனைவரும் கேட்கின்றனர். 

புதுபுது நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தும் போதும் அது பற்றி நேயர்களின் வரவேற்பு, கருத்துக்கள் அவதானிக்கப்பட்டு அதற்கேற்றாற்போல நிகழ்ச்சிகளை வழங்குகின்றோம். எமது அறிவிப்பாளர்களும் அதீத ஆர்வம் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். ஆகையால், நேயர்களின் இரசனைக்கேற்ப நிகழ்ச்சிகளை  வழங்கக்கூடியதாக இருக்கின்றது.

அறிவிப்பாளர்கள் மொழியாள்கையை முறையாக கையாள்வதில்லை என்று கூறப்படுகின்றது. பொதுவாக தென்னிந்திய தழுவலும் இருப்பதாக கூறப்படுகின்றது. இது பற்றி நீங்கள் கூறவிரும்புவது?
சில குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஓரிருவர் செய்தாலும் எல்லா அறிப்பாளர்களுக்கும் அதேபெயர்தான். சூரிய குடும்பத்தில் உள்ள அறிவிப்பாளர்கள் மொழியாள்கை, உச்சரிப்பு, அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் என்பனவற்றில மிகுந்த கவனமாக இருக்கின்றனர். 

ஒரு வானொலியில்  எந்த பிரதேச வழக்கும் வெளிப்படாதிருப்பது உண்மையான நடைமுறை விடயம். ஒருவர் பேசும் போது அவர் இந்த ஊரைச் சேர்ந்தவர் என தனியாக அடையாளப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு பொது மொழியை கையாள்வது சிறப்பு. 

சூரியன் ஆரம்பித்த காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட பொதுமொழி எமது அறிவிப்பாளர் சிலருக்கு புதுமொழியாக  தெரிந்தது. சாதாரணமாக நண்பர்கள் மத்தியில் பேசுவதைப்போல நேயர்கள் விரும்பகூடியதான மொழிப்பிரயோகத்தையே நாம் பயன்படுத்தினோம். 

எப்பிரதேசத்தைச் சேர்ந்தவராயினும்  வானொலிக்கென பொதுமொழி கையாள்வது சிறப்பு. உச்சரிப்பு விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும். பேசும் போது சொற்களுக்கு (vocabulary) பஞ்சம் வராமல் இருப்பதற்கு நிறைய வாசிப்பில் ஈடுபட வேண்டும்.

தொடர்ச்சியாக ரசிகர்களை தக்க வைத்துக்கொள்வதற்கு நீங்கள் கை யாளும் உத்தி-?
அறிவிப்பாளர்களின் சினேகபூர்வமான தன்மை. செய்திகள் மீதுள்ள நம்பிக்கை. மக்களுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பதால் தொடர்ச்சியாக தக்க வைத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. அனைத்து மக்களின் விடயங்களையும் பிரதேச வாதம் பாராமல் செயற்படுகின்றமை போன்ற  பல செயற்பாடுகளே இன்னும் எமது நேயர்களை எம்முடன் தக்கவைத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. அதேபோல எமது நேயர்களும் ஒரு தீவிர அன்புடன் இருக்கின்றார்கள் எமது சூரிய குடும்பத்துடன்

அறிவிப்புத்துறைக்குள் வரவேண் டுமாயின் அடிப்படையில் என்ன தேவை?
ஆர்வம் அடிப்படை. இன்று பெரும்பாலானவர்கள் மீடியா கற்கைநெறி, அறிவிப்பாளர்  பயிற்சிநெறி என ஆயிரக்கணக்கில் செலவழிக்கின்றனர். எப்படியாவது செலவு செய்து இத்துறைக்குள் நுழைய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இவர்களுக்கு நான் சொல்லும் விடயம் உங்களது மொழி நல்ல உச்சரிப்புடனேயே  பேச வேண்டும. உயர்தரம் பூர்த்தி செய்யப்பட்டிருக்க  வேண்டும்.ஏனைய மொழியறிவு அவசியம். 

நிறைய வாசிப்பு. புது விடயங்களை கற்றல். இதன் மூலம் நல்லதொரு முன்னேற் றத்தை பெறலாம். துடிப்பானவர்களாக இருக்க வேண்டும். இது போன்ற பல திறமைகள் இருக்கும்  போது நல்லதொரு அறிவிப்பாளர் ஆகலாம் என்றார்.

நன்றி வீரகேசரி -சங்கமம்

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images