'உமா' எதிர்ப்புக்கு மைத்ரி ஆதரவு அரசியலா? சமூக நலனா?- ஜீவா சதாசிவம்

July 08, 2017


கடந்த பல மாதங்களாக இலங்கையில் தொடர் ஆர்ப்பாட்டங்கள். எவ்விடயமாயினும் அதனை சாதிப்பதற்கோ அல்லது தங்களது எதிர்ப்புக்களை  வெளிப்படுத்துவதற்கோ 'எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்' அவ்வப்போது இடம்பெறுகின்றன. ஆனால், அவை அனைத்துக்கும் அரசாங்கத்தினால் முழுமையான பதிலை தரக்கூடியதாக இருக்கின்றதா? என்பது சற்று சிந்திக்க வேண்டிய விடயம்.

நாட்டில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றபோதிலும் இன, மத, மொழி, அரசியல் பேதங்கள் கடந்த நிலையில் இடம்பெற்ற 'பண்டாரவளை மக்கள் எதிர்ப்பு போராட்டம்' கவனத்தில் கொள்ளத்தக்கது.  நாட்டில் பரவலாக இடம்பெறும் போராட்டங்களை அரசாங்கம் தனது பாதுகாப்பு பிரிவினரைக் கொண்டோ, நீதிமன்ற முன் அனுமதியுடனோ தடுக்க முற்படுகின்ற சந்தர்ப்பத்தில் பண்டாரவளையில் இடம்பெற்ற 'உமா ஓயா' திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு தெரிவித்துள்ளார்.  இந்த அறிவிப்பு பலரது மனதையும் குளிர வைத்துள்ளது. இவ்வாறு குளிர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் இது பற்றி கேள்விகளும் எழாமல் இல்லை. இதனையே இவ்வார 'அலசல்' அலசுகிறது.

உமா ஓயா திட்டத்துக்கு எதிராக பண்டாரவளையில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டம்

மஹிந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள் தான் இன்றைய நல்லாட்சி எனும் 'கலப்பு' முறையான அரசாங்கத்தை கதி கலங்க வைத்துள்ளது. அத்திவாரம் யார் இட்டாலும் பரவாயில்லை  சமகாலத்தில் ஆட்சியில் உள்ளவர்களே அதற்கான விளக்கத்தையும் முடிவையும் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆக்கிவிட்டது இந்த உமா ஓயா திட்டம்.

இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே அவ்விடத்தில் நீர்ப்பிரச்சினை ஏற்படும் என்று ஆராய்ச்சியின் மூலம் தெரிந்திருந்தும் அதனால் மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று அறிந்திருந்தபோதிலும் நிராகரிக்கப்பட்ட இத்திட்டம்  மீண்டும் மஹிந்த அரசாங்கத்தினால் 529 அமெரிக்க டொலருடன் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 85 வீதமான வேலைகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இதனை நிறுத்தக் கோரி இப்போது எதிர்ப்பு அலைகள் வெளிக்கிளம்பியுள்ளன.  சுரங்கப்பாதை உள்ளே 20 கிலோமீற்றர் தூரம் அளவிலான வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டும் விட்டன.

அபிவிருத்தி நடவடிக்கைகள் திட்டமிடப்படும்போது எதிர்கா லத்தில் அவற்றின் நிலைபேறான தன்மை குறித்து கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக பேசப்பட்டு வருகின்ற போதிலும் கூட நடைமுறையில் அத்தகைய திட்டமிடல்களுடன் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றனவா? எனும் கேள்வி எழுகின்றது.

அபிவிருத்தி திட்டமிடல்கள் மக்களின் பயன்பாடு, பொருளாதார பயன்பாடு என்பவற்றைக் கருத்தில் கொள்ளாமல் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு உட்பட்டதாக முன்வைக்கப்படும்போது  குறிப்பிட்ட காலத்திற்கு அபிவிருத்தி போன்று தென்பட்டாலும் நீண்ட நாள் நோக்கில் ' நிலைபேறான அபிவிருத்தி' யாக அல்லாமல்  மக்கள் எதிர்ப்பதாக மாறிவிடும் அதேவளை பொருளாதாரத்துக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்காததாக அமைந்து விடுகின்றது.  அதேநேரம் மோசமான விளைவுகளைத் தருகின்ற அபிவிருத்தித்திட்டங்களாக மாறுகின்றன.

மக்கள் முன்னெடுக்கும் எல்லா போராட்டங்களையும் அரசாங்கம் மறுப்பதில்லை என்பதையும் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றமையையும் இங்கு அவதானிக்கலாம். மறுபுறத்தில்  உமாஓயா திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஜனாதிபதி மைத்திரி ஆதரித்தமைக்கு அரசியல் காரணம் ஒன்றும் உண்டு. அதுதான், அந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மஹிந்த அரசின் மீதே குற்றம் சுமத்தினார்கள்.

இந்த திட்டத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளுக்கு மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பு கூற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட  மக்கள் தெரிவித்தனர். இதனை ஜனாதிபதி தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் என்றும் கூட கூறலாம். ஆனால், உமா ஓயா திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் மஹிந்த அரசின் முக்கிய அமைச்சராக மைத்திரிபால இருந்தார் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. இதனால்தான் அரசியல் நிகழ்ச்சி நிரல் ரீதியான அபிவிருத்தித்திட்டங்கள் என மேலே சுட்டிக்காட்ட நேரிட்டது.

உமாஓயா திட்டத்தை எதிர்க்கும் பண்டாரவளை பிரதேச பொதுமக்கள் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டு தமக்கு குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் அதேபோல தங்களது வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு அபாயநிலை தோன்றுகிறது என்பதுவுமாகும். இந்த நிலையில் நிலைபேறான அபிவிருத்திக் கோட்பாட்டை ஒப்பிட்டால் அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு தண்ணீர் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட திட்டமானது பண்டாரவளை பகுதிக்கு தண்ணீரை இல்லாமலாக்க காரணமாகிவிட்டது. எனவே இன்று உமா ஓயா திட்டம் செயற்பாட்டுக்கு வரும்போது அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் முன்வைக்கப்பட்ட 'அபிவிருத்தி' எத்தகைய இலக்குளைக் கொண்டது எனும் கேள்வியை எழுப்புகிறது.

நிலத்திற்கு கீழாக பாரிய சுரங்கங்களை அமைத்து அதன் வழியாக நீரை கொண்டு செல்லுகின்றபோது அத்தகைய சுரங்கம் அமைக்கப்படும் நீண்ட தூரத்திற்கு மேலான தரைப்பகுதியில் உள்ள ஊற்றுநீர் இயல்பாக சுரங்கத்தினால் ஏற்பட்ட விரிசலில் கீழிறங்கும் தன்மை காணப்படுகின்றது. எனவே, மேற்பரப்பில் உள்ள ஊற்றுநீர் வற்றிவிட அங்கு ஏற்கனவே வாழ்ந்த மக்கள் பாவித்த நீர் நிலைகளை இல்லாமல் ஆக்கி வரட்சியை தோற்றுவிக்கிறது. இது ஒருபுறம் இருக்க சுரங்கம் அகழ்வதற்காக பாரிய இயந்திரங்கள் கொண்டு மலைகளை குடைவதால், நிலத்திற்கு கீழ் ஏற்படும் அதிர்வுகள் தரைக்கு மேல் உள்ள கட்டங்களை வெடிப்புறச் செய்கின்றன. தவிரவும் மலைப்பாங்கான மண்மேட்டுப்பகுதிகளை தளர்வுக்கு உள்ளாக்கி மண்சரிவு ஆபத்துக்களையும் எதிர்கொள்ள நேரிடுகின்றது.


இதே நிலைமையை மேல்கொத்மலை திட்டத்திலும் அவதானிக்கலாம். 150 மெகாவோட் மின் உற்பத்திக்காக தலவாக்கலை நகரத்தை அண்மித்ததாக மேற்கொள்ளப்பட்ட மேல்கொத்மலை நீர் மின் திட்டத்துக்கு 2000 ஆம் ஆண்டுகளில் பாரிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அரசியல் அழுத்தங்களின் ஊடாகவும் அரசியல் இலாபங்களுக்காகவும் அந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

இன்று மேல்மெகாத்மலையில் இருந்து மடகொம்பரை வழியாக இகல கட்தொரபிட்டியவுக்கு நீர்கொண்டு செல்லும் நிலத்தடி சுரங்கம் சுமார் 12 கிலோமீற்றர் அகழப்பட்டதன் காரணமாக மேற்பரப்பில் வாழும் மக்கள் தமது நீர் நிலைகளை இழந்துள்ளனர். அங்கும் வெயில் காலங்களில் வரட்சியையே அனுபவிக்க முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அழகிய நீர்வீழ்ச்சியாக சென்.கிளேயர் நீர்வீழ்ச்சி மேல்கொத்மலைத் திட்டத்துக்கு முன்பும் பின்பும் எவ்வாறு காட்சி அளிக்கின்றது என்பதே சான்றாகும். சின்ன நயகரா போன்று அழகிய தோற்றம் கொண்ட அந்த நீர்வீழ்ச்சி இன்று சிறிய அளிவில் நீரோடும் பீலி போன்று காட்சி தருகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் புவியியல், பொருளியல், மக்கள் நலன் நீண்டகாலம் நிலைத்திருத்தல் போன்ற பல்வேறு விடயங்களையும் கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்பட வேண்டும்.

தற்போது ஐ.நா. சபை 17 அபிவிருத்தி இலக்குகளை அடையும் வண்ணம் அபிவிருத்தியை திட்டமிட்டால்தான் 2030 இல் நிலைபேறான அபிவிருத்தி ஒன்றை அடைய முடியும் என உறுப்பு நாடுகளுக்கு திட்டம் ஒன்றை வகுத்துக் கொடுத்துள்ளது. அதில் காலநிலை மாற்றம் முக்கிய விடயமாக சேர்க்கப்பட்டிருகிறது. அதற்காக கூட்டப்பட்ட G7 மாநாட்டில் ஜனாதிபதி கலந்துகொண்டு பாரிஸ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்போது உமா ஓயா திட்டத்தை ஆய்வு செய்து மாற்று நடவடிக்கை எடுக்க அமைச்சரவை உப குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, மஹிந்த அமரவீர, விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோர் அடங்கிய குழு கடந்த திங்களன்று உமா ஓயா திட்டப்பகுதிக்கு கள ஆய்வை மேற்கொள்ளச் சென்றுள்ளது. இவர்களின் அறிக்கை எதிர்காலத்தில் எத்தகைய நடவடிக்கைகள் தரக்கூடியதாக  அமையும் என பொறுத்திருந்து பார்க்கலாம். ஆகஸ்ட் முதலாம் வாரம் வெளிநாட்டு நிபுணர்களும் மேற்படி திட்ட பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர்.

எத்தனையோ பிரச்சினைகளுக்கும் போராட்டங்களுக்கும் தீர்வு காணாத நல்லாட்சி 'உமா ஓயா' விடயத்தில் அவசரமாக காரியத்தில் இறங்கியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மைத்திரி மேற்கொண்ட அரசியல் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவளித்து  அவரை ஜனாதிபதி ஆக்கினார்கள். இப்போது மக்கள் நடத்தும் போராட்டம் ஒன்றுக்கு ஜனாதிபதி ஆதரவு வழங்கியுள்ளார். முதலாவதில் ஏமாற்றம் அடைந்தததுபோல் உணரும் மக்கள் இரண்டாவதில் திருப்தி அடையும் வகையில் ஏதேனும் இடம்பெறுகிறதா /என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

நன்றி வீரகேசரி 

'உமா ஓயா' பல்நோக்கு திட்டத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஜூன் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிகழ்ந்த விவாதத்தை 37ஆம் பக்கத்தில் இருந்து பார்வையிடலாம்...

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images