நல்லாட்சியின் கையை முறிக்கும் எதிரணி - ஜீவா சதாசிவம்

July 14, 2017


ஆகஸ்டில் மூன்றாவது வயதை எட்டுகிறது 'நல்லாட்சி'. பெயர் நல்லாட்சி என்று இருக்கின்ற போதும், ஆட்சியை கைப்பற்றிய நாளிலிருந்து இன்று வரை  கிரக பலன்கள் அவ்வளவு சரியில்லைபோலும், நாளாந்தம்  பிரச்சினைகள். போராட்டங்கள்,  எதிர்ப்புகள் என ஏகப்பட்ட  தொல்லைகள்  நல்லாட்சியை நம்பிய  மக்களையும் எரிச்சலடையச் செய்துள்ளன.

'ராஜபக் ஷ'க்களின் ஆட்சியில் அதிருப்தியில் இருந்த மக்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு 'மைத்திரி' க்கு புள்ளடியிட்டனர்.  அப்போது அவர் கட்சி சாராத பொதுவேட்பாளர்.  அவ்வாறே இருப்பார் என்றும் மக்களும் எதிர்பார்த்தனர். தவிர்க்க முடியாத  நிலைமை  கட்சிக்கும் தலைவனாக  இருக்க வேண்டிய இக்கட்டான நிலை மைத்திரிக்கு. இந்நிலையில் யாரை திருப்திப்படுத்துவது? எந்த திசையில் நல்லாட்சியை நகர்த்திச் செல்வதென்றதொரு கேள்வியும் ஏற்பட்டுவிட்டது?

எதேச்சதிகாரத்தை இல்லாதொழிக்க மலர்ந்த இந்த  'நல்லாட்சி'  மக்களின் மத்தியிலும் வலுவான நம்பிக்கையைக் கொடுத்தது.  இந்த நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் நல்லாட்சி எப்படி இதுவரையில்  செயற்பட்டிருக்கிறது, இது எப்படி இருக்க வேண்டும் என்பதை அலசுகிறது இவ்வார 'அலசல்'.
''ஒரு சமூகத்தில் வாழும் அனைத்து மக்களின் ஒத்துழைப்பு, நம்பிக்கை, விருப்பு, நல்லுறவு ஆகியவற்றை அறிந்து கொண்டு முன்னெடுக்கப்படும் ஆட்சியே நல்லாட்சி"
என்கிறார் அறிஞர் தோமஸ் ஜீ வீஸ் (Thomas G Weiss) .    இது ஒரு சமூகத்தால் அல்லது நிறுவனத்தினால் அல்லது ஒரு நாட்டினால் செயற்படுத்தப்படும் ஆட்சிமுறை என்று தோமஸ் ஜீ வீஸ் (Thomas G Weiss)'' எனும் அறிஞர் நல்லாட்சி தொடர்பில்  கூறிய கருத்து.

இதன்படி, இலங்கையில் நல்லாட்சி இடம்பெறுகின்றதா? என்பது சற்று சிந்திக்க வேண்டிய விடயம். இலங்கையின் நல்லாட்சி 'பெரும்பான்மை' இனத்தவர்களின் நலன்களை முன்னிலைப்படுத்திய 'நல்ல' ஆட்சியாகவே இருக்கின்றது.  இதனை நாளாந்தம் இடம்பெறும் சம்பவங்கள் தெட்டத் தெளிவாக புலப்படுத்துகின்றன.

'மைத்திரி' 2015.01.08 ஆம் திகதி மக்கள் மத்தியில் தனியிடம் பெற்ற பெயர். அதுவும் சிறுபான்மையின மக்கள் மத்தியில் அதீத 'நம்பிக்கை' யை ஏற்படுத்திய பெயர். ஆனால், எதிர்பாராத வகையில் வெகு குறைவாகவே அதன் வலு குறைந்து வருகின்றதா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. ஏனெனில் நல்லாட்சி ஆளுங்கட்சியாக   இருக்கின்றதா? அல்லது கூட்டு எதிரணி என கூறப்படும் எதிரணிகள் முன்வைக்கும் விடயங்களை பின்தொடர்ந்து செல்லும் போக்கே தற்போது காணப்படுகின்றதா?. மக்களின் விமர்சனங்களும் இக்கேள்விகளை அடியொற்றியதாகவே  இருக்கின்றது.  

நாளுக்கு நாள் பிரச்சினைகளின் பட்டியல் நீண்டு செல்கின்றன. இதனை சமாளிக்க முடியாத நிலையில் நல்லாட்சி திணறுகிறது. இப்பிரச்சினை அனைத்திற்கும் காரணம் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான நல்லாட்சி மாத்திரமா என? சற்று பின்நோக்கிப் பார்த்ததால்....

சைட்டம்,  உமாஓயா, போர்ட்சிட்டி, மத்தள விமான நிலையம், மீத்தொட்டுமுல்ல குப்பை முதல் தற்போது இருந்துவரும் குப்பை பிரச்சினை வரை என  அனைத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் 'நல்லாட்சி' இருக்கின்றது.

 ராஜபக்ஷக்களின் ஆட்சியின் விளைவாகத் தோன்றிய அனைத்து பிரச்சினைகளுக்கும் நல்லாட்சி பதில் கூறும் ஒரு 'எதிர்க்கட்சி'யாகவே இருந்து வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகளால் மக்களுக்கு நல்லாட்சி வழங்கிய வாக்குறுதிகளை  கூட  நிறைவேற்ற முடியாத நிலைமையும் இருக்கின்றது.  நூறுநாள் வேலைத்திட்டமும் இன்னும் முழுமைபெறாத நிலையில் இரண்டு வருடங்கள் முடிவடைந்து விட்டன.

ஒரு சிலர்  ஐ.தே.க. ஆட்சி செய்வதாக கூறுகிறார்கள்.   ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி  ஆட்சி செய்வதாக வேறு சிலர் கூறுகிறார்கள். இல்லை இவை இரண்டுமே ஆட்சி செய்வதாக சிலர் கூறுகின்றார்கள். யார் ஆட்சியாளர்கள் என்ற சந்தேகம் இங்கு எழுகிறது. அரசாங்கம் என்பது ஒரு திட்டத்தை முன்வைத்து செயற்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால், நல்லாட்சியிலோ இந்நிலை மாறி நடக்கின்றது. 

நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் பிரதான விடயமாகக் கருதப்பட்ட 'அரசியல் அமைப்பு திருத்தம்' மாத்திரமே நல்லாட்சியின் திட்டமாக முன்வைக்கப்பட்டது.  இத்திட்டமும் முழுமையாக நிறைவேறுமா? என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.    அந்தளவுக்கு 'பௌத்த வாதம்' இத்திட்டத்திற்கு எதிராக தலைதூக்கியுள்ளது. கடந்தவார செயற்பாடுகள் இதனை தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அவை தலைதூக்குவதற்காக கூட்டு எதிரணி  திட்டமிட்டு செயற்பட்ட விதம் மகா சங்கத்தினரையே அதன் செல்வாக்கிற்கு உட்படுத்தி விட்டது.  

பௌத்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல்  'ஜனநாயக' முறைப்படி புதிய அரசியல் அமைப்பில் முழுமையான ஜனநாயகம் இருக்கும் எனவும் இதில் சிறுபான்மையினர் எவ்விதத்திலும் புறக்கணிக்கப்படமாட்டார்கள் எனும் போக்கில் புதிய அரசியலமைப்பு திருத்தம் முன்வைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டு அதற்காக விசேடமாக 'வழிநடத்தல்'   குழுவும் (steering committee)அமைக்கப்பட்டது.

 அக்குழுவுக்கு  கொடுக்கப்பட்ட வேலைகள்   பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியிலும் இடம்பெற்று வந்தன. ஆனால், அதிலும் திடீரென திருப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்விடத்தில் மைத்திரியும், ரணிலும் மகாசங்கத்தினரை திருப்திப்படுத்த வேண்டியதொரு நிலைக்கு துரதிர்ஷ்டவசமாக தள்ளப்பட்டுள்ளனர். மகாநாயக்கர்கள் தீர்மானம் எடுத்த, அடுத்த ஓரிரு தினங்களுக்குள்ளேயே ஜனாதிபதி கண்டிக்குச் சென்று அவர்களைச் சந்தித்து அமைதிப்படுத்த வேண்டியிருந்தது.

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான  விடயங்கள் தொடர்பில்   நாடளாவிய ரீதியில்  அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்களுக்கு அதுபற்றிய செயலமர்வுகளும் நடைபெற்று முடிந்துள்ளன.   கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த அரசியல் நிபுணத்துவம் பெற்றவரும் தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதம நீதியரசருமான மொசெனெகே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட விசேட செயலமர்வில்  பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில்  விளக்கமளித்தார்.  நல்லாட்சி மூலம் நாட்டில் ஜனநாயகம் வலுப்பெற வேண்டும் என்பதற்காகவே இவை முன்னெடுக்கப்பட்டன. 
  'சிறுபான்மை' மக்களையும் திருப்திபடுத்த வேண்டும் என்று நல்லாட்சி நினைத்து அரசியலமைப்பு திருத்த விடயத்தில் செயற்பட்டு திருப்தியாக அது நிறைவடைய உள்ளதாக எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில்  திடீரென மகா சங்கத்தினரின் தலையீடு அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இங்கு ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்ட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கையில் அதி கூடிய மக்கள் விருப்பை (65 சதவீதம்)   பெற்று வெற்றி பெற்றார். அது மட்டுமா? சிங்கள மக்கள் மனதில் நன்றாகவே இடம்பிடித்தார். அவரது ஆட்சியின் தொடர்ச்சியில் ஒரு கட்டத்தில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான கருத்தை முன்வைத்தார். அதில் சிறுபான்மை மக்களின் 'நலன்' சார்ந்த விடயங்களுக்கும் முக்கியத்துவம் இருந்த நிலையில் சிங்கள மக்கள் மத்தியில் தனக்கிருந்த செல்வாக்கை இழந்தார்.  அதுபோலதொரு இக்கட்டான நிலைக்கே தற்போதைய ஜனாதிபதியும் முகங்கொடுத்துள்ளார். 

 மகா சங்கத்தினரின் ஆதிக்கத்தை மீறினால், சிங்கள மக்கள் மத்தியில் தனக்கு செல்வாக்கு குறைந்துவிடும் நிலை ஏற்பட்டுவிடும் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி யுள்ளார் மைத்திரி. ரணிலும்  அவ்வாறே. ஏன் கண்டி அஸ்கிரிய பீடமும் நல்லாட்சியை விமர்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஆக, இந்த அரசாங்கம், கிளம்பும் எதிர்புக்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் பதில் சொல்லிக்கொள்வதிலேயே  தனது நேரத்தையும் கவனத்தையும் சக்தியையும் செலவிட்டுக்கொண்டிருக்கின்றதே தவிர   ஒரு முறையான செயல்திட்டத்தை முன்வைத்துக் கொண்டு செல்லவில்லை என்பதுதான் மக்களின் அபிப்பிராயமாகவும் குறைபாடாகவும் இருக்கின்றது. இது அரசாங்கத்தின் பலவீனமாகவும்  இருக்கின்றது.

 இதனை அரசாங்கம் உணர்ந்து கொண்டு ராஜபக்ஷக்களின் வேலைத்திட்டத்தின் நோக்கங்களை மக்களுக்கு உறுதியாக வெளிப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கின்றது. இதனை நல்லாட்சி செய்யுமிடத்து நல்லாட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்பதுடன் நல்லாட்சியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றக்கூடியதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 அத்துடன் தற்போதைய ஜனாதிபதி ராஜபக்ஷக்களின் ஆட்சிகாலத்தில் தீர்மானிக்கும் சக்திகளில்  மிக முக்கியமானவராக இருந்துள்ளார் என்பதையும் மறந்துவிட முடியாது.  இவற்றையும் அவர் சமாளித்து தீர்மானங்கள் எடுக்க வேண்டிய தேவையும் இப்போது ஏற்பட்டுள்ளது. 
 அரசாங்கத்தை  இப்போது எதிர்க்கட்சிகள் விஞ்சி நிற்கின்றன என்றுதான் கூற வேண்டியிருக்கிறது.  இந்த இடர்மிகு நிலையில் இருந்து அரசாங்கம் விடுபட வேண்டுமாயின் அது தனக்கு இருக்கின்றதாக அடையாளம் காணப்பட்டுள்ள பலவீனத்திலிருந்து விடுபட்டாக வேண்டும்.


You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images