உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: கலப்பு முறையா? குழப்ப முறையா? - ஜீவா சதாசிவம்
July 22, 2017
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இழுபறி நிலையில் கிடந்த இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் வருட இறுதியில் இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் பற்றி இந்த வார செய்திகள் அரசியல் களத்தில் வெளியாகியுள்ளன. இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதுபற்றி கருத்துத் தெரிவித்துள்ளார். தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனும் தன் பங்குக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் கலப்பு முறையில் நடக்கவுள்ளதாகவும் அது சிறுகட்சிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் அறிக்கை விட்டுள்ளார்.
இந்த கலப்பு முறை என்றால் என்ன என்ற 'குழப்பம்' இவ்வளவு நாளும் அரசியல்வாதிகளுக்கு இருந்தமையே தேர்தல்களின் தாமதத்திற்கு ஒரு காரணம் என்று கொள்ளலாம். அரசியல்வாதிகளுக்கு இருந்த ‘குழப்பம்’ இனி வாக்காளர்களுக்கு வரப்போகின்றது. காரணம் விகிதாசார தேர்தல் முறை கலப்பு முறையாக மாறுவது மட்டுமல்ல வேட்பாளர்களின் எல்லைப்பிரதேசங்களும் மாற்றம் அடையப்போகின்றது. வாக்காளர்களுக்கு இருந்த விருப்பு வாக்கு முறை இல்லாமல் ஆகப்போகின்றது. மறுபுறம் பெண்களின் பங்களிப்பு உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதமாக அமைய வேண்டும் எனும் சட்ட திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இங்கு மேற்சொன்ன முறைமைகளை எல்லாம் உள்ளூராட்சி சபை சட்டத்தில் உள்வாங்கும் திருத்தம் எதிர்வரும் வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் இதுவரை எவ்வாறு நடந்தேறின. இனி எவ்வாறு நடைபெறப்போகின்றன. பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீடு சாத்தியமா? என இந்த வார 'அலசல்' ஆராய்கிறது.
விகிதாசார முறையும் விருப்பத்தெரிவு முறையுமாக இருந்த தேர்தலே பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியவற்றில் நடைமுறையில் இருக்கின்றது. விகிதாசார முறையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். பின்னர் அந்த கட்சிகளுக்குள் யாரை வாக்காளர்கள். விரும்பினார்கள் என்பதை விருப்பத்தெரிவாக யாருடைய இலக்கத்தை மக்கள் தெரிவு செய்தார்களோ அதன் வாக்குகளின் எண்ணிக்கை ஒழுங்கில் தெரிவு செய்யப்படுவார்கள்.
கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக உள்ளூராட்சி மன்றங்களான மாநகரசபை, நகரசபை, பிரதேசசபை ஆகிய மூன்றிலும் இந்த முறைமையே பின்பற்றப்பட்டு வந்தது. ஒரு பிரதேச சபையின் கீழ் 100 கிராம சேவகர் பிரிவுகள் அமைந்துள்ளதெனில் குறித்த பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 100 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்தும் தமக்கான விருப்பு வாக்குகளைப் பெறலாம். கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிடும் ஒருவர் வெள்ளவத்தையிலும், மட்டக்குளியிலும், பொரளையிலும் என எல்லாத்திசைகளிலும் வாக்குகளை சேகரிக்க முடியும்.
இப்போது முன்மொழியப்பட்டுள்ள கலப்பு முறை என்பது வேறு வகையானது. பிரதேச சபையோ அல்லது நகரசபையோ அல்லது மாநகர சபையோ அதற்குள் உருவாக்கப்பட்டிருக்கும் 'வட்டாரத்திற்குள்' மாத்திரமே ஒரு வேட்பாளர் தமக்கான வாக்குகளைக் கோர முடியும். ஒரு வட்டாரம் என்பது இரண்டு அல்லது மூன்று கிராம சேவகர்கள் பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த வட்டாரங்களை தீர்மானிக்கும் செயற்பாடே 'எல்லை மீள்நிர்ணயம்' என கடந்த சில வருடங்களாக பரவலாக பேசப்பட்டது.
கடந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 'எல்லை மீள் நிர்ணயம்' உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷ சூட்சுமமான முறையிலே தங்களது ஆட்சியை உள்ளூராட்சி மட்டத்தில் அதிகாரத்தில் தக்கவைத்துக்கொள்ளக்கூடியதாக எல்லை மீள்நிர்ணயத்தை செய்துள்ளார் என்பது பரவலான குற்றச்சாட்டாக எழுந்தது.
குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியும் சிறுகட்சிகள், சிறுபான்மை கட்சிகளும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தன. அதேநேரம் வட்டார முறையிலமைந்த கலப்பு முறையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டம் 2012 ஆம் ஆண்டு திருத்தப்பட்டும் இருந்தது. எனவே எற்கனவே இருந்த 'விகிதாசார விருப்புமுறை' அடிப்படையில் தேர்தலை நடத்த முடியாமலும் உத்தேச வட்டார முறையில் எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு விடை காணாமலும் அரசாங்கத்தினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டு வந்தது.
எனவே தற்போதைய சட்டதிருத்தத்திற்கு ஏற்றதாக வட்டார முறையில் தேர்தலை நடாத்த கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட எல்லை மீள் நிர்ணயத்தை 'சரிபார்க்கும்' தேவை அரசாங்கத்துக்கு எழுந்தது. ஓய்வுபெற்ற காணி அமைச்சின் செயலாளரான அசோக்க பீரிஸ் தலைமையில் எல்லை மீள்நிர்ணயத்தை சரிபார்க்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டது. எல்லை மீள்நிர்ணயத்தின் மீது அதிருப்தியுடையோர் தமக்கு முறைப்பாடு செய்யலாம் என குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைய கட்சிகள், சமூக ஆர்வலர்கள் தமது முன்மொழிவுகளை குழுவுக்கு சமர்ப்பித்தனர்.
எப்படியோ இப்போது அந்த எல்லை மீள்நிர்ணயம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டு இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட வட்டாரங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டுவிட்டன.
அதேநேரம் தேர்தல் முறைமையிலும் மாற்றத்தைக்கொண்டு வந்த முன்னைய அரசாங்கம் ஒரு சபைக்கு தேவையான 72 சதவீதமான உறுப்பினர்களை வட்டார முறையில் இருந்தும் எஞ்சிய 28 சதவீதமான உறுப்பினர்களை விகிதாசார முறையிலும் உள்வாங்கும் வகையில் தீர்மானித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுகட்சிகள் 60 சதவீதமான உறுப்பினர்களை வட்டாரத்திற்கான ஆசன முறையிலும் 40 சதவீதமான உறுப்பினர்களை விகிதாசார முறையிலும் தெரிவு செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தன. இப்போது இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவே அமைச்சர் மனோகணேசன் தனது அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தேர்தல்கள் நடைபெறும் விதம் பின்வருமாறு அமையலாம். குறித்த வட்டாரத்திற்கான வேட்பாளராக ஒரு கட்சியினால் ஒருவரே நியமிக்கப்படுவார். (அது பல் அங்கத்தவர் வட்டாரம் எனில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர் ஒரு கட்சியினால் நிறுத்தப்படுவார்.) அவ்வாறு ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒவ்வொரு வேட்பாளர் ஒரு வேட்பாளர் நியமிக்கப்படும்போது அந்த கட்சிக்கு வழங்கப்படும் வாக்கும் அந்த வேட்பாளருக்கு வழங்கப்படும் வாக்கும் ஒரே வாக்காகவே அமையும். குறித்த வட்டாரத்தில் எந்த கட்சியின் வேட்பாளர் வெற்றிபெறுகிறாரோ அந்த வட்டாரத்தில் அவர் சார்ந்த கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். உதாரணமாக 100 கிராம சேவகர்களைக்கொண்ட ஒரு பிரதேச சபையில் ஏறக்குறைய 30 முதல் 35 உறுப்பினர்கள் வட்டாரத்தில் இருந்து தெரிவு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்த பிரதேச சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 60 மாகக் கொள்ளப்படும் எஞ்சிய 40 இந்த வட்டார தெரிவுக்கு மேலதிகமாக விகிதாசார முறையில் தெரிவுசெய்யப்படுவர். எனவே வட்டார முறையில் 30 உறுப்பினர்கள் தெரிவாகும் ஒரு பிரதேச சபைக்கு விகிதாசார முறையில் 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இந்த இருபது உறுப்பினர்களை தெரிவு செய்ய வட்டார முறையில் முழு பிரதேச சபைக்குமாக கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் அடிப்படையாகக் கொள்ளப்படும். அவ்வாறு கிடைக்கும் ஆசனங்களுக்கு யாரை நியமிப்பது என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும். இந்த வேட்பாளர்களின் பட்டியல் முன்கூட்டியே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த விளக்கம் இதுவரை உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் வெளிவாரியாக கிடைக்கக் கூடிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. உள்வாரியாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற சட்ட திருத்தம் எதிர்வரும் வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது அறியக்கூடியதாக இருக்கும். இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இதுவரை காலமும் உறுப்பினராகப்போகும் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு வாக்காளருக்கு இருந்துவந்த உரிமை இனி இல்லாமல் செய்யப்படப்போகின்றமை தெளிவாகிறது.
கட்சி தெரிவு செய்யும் வேட்பாளர் ஒருவருக்கே வாக்காளர் வாக்களிக்க வேண்டும். இதனால் வாக்காளர் வசமிருந்த ஒரு உரிமை கட்சித் தலைமைக்கு போகிறது எனக் கொள்ளலாம். கட்சிப்பணியில் இல்லாத ஒருவர் வேட்பாளராக களமிறங்கி தனது செல்வாக்கினால் உறுப்பினராவது இதன் மூலம் தடுக்கப்படலாம். அதேநேரம் கட்சித் தலைமைக்கு விசுவாசம் காட்டும் எவரும் வேட்பாளராகும் சாத்தியமும் இங்கு உண்டு. விகிதாசார முறையில் இருந்து தெரிவு செய்யப்படுவர் யார் என்பதையும் கட்சித் தலைமையே தீர்மானிக்கும்.
ஆக மக்கள் வசம் இருந்த ஒரு தேர்தல் முறை கட்சிகளின் வசத்திற்கு மாற்றப்படுகின்றமையே இங்கு பெரும்பாலும் நிலவுகின்றது. ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்டும் பிரதேச எல்லை பெரிதாக இருப்பதன் காரணமாக தான் அளித்த வாக்குக்கு ஏற்ப சேவையை பெற முடியாதிருந்த மக்களுக்கு தனது கிராமசேவகர் பிரிவு எல்லைக்கு உள்ளாகவே ஒரு உறுப்பினர் கிடைக்கப் போகிறார் என்பது புதிய முறையின் பலமான அம்சமாகிறது.
வட்டார முறையிலும் விகிதாசார முறையிலும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படப் போகின்றமையால் பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்காக அமையப்போகின்றது. இதனால் பிரதேச சபை கட்டடங்கள் விரிவாக்கப்பட்டு சபை மண்டபங்கள் பெரிதாக்கும் தேவை எழக்கூடும். இதற்கெல்லாம் மேலாக பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீதம் இருக்க வேண்டும் எனும் சட்டத் திருத்ததத்தையும் அரசாங்கம் ஏற்கனவே கொண்டுவந்துள்ளது. ஏற்கனவே இளம்வயதினருக்கு வாய்ப்பளிக்கும் ஏற்பாடுகள் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.
ஆக, ஒரே மூச்சில் தேர்தல் முறை, வட்டார முறை, பெண்களின் பங்களிப்பு, இளம் வயதினர் பங்களிப்பு, உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக உள்ளூராட்சி மன்றதேர்தல் அமையப்போகிறது. இந்த 'கலப்பு' தேர்தல் குழப்பமான முறையாகி வாக்காளர்களை கலக்கம் கொள்ள வைக்கப்போவதாகவே தெரிகிறது. அரசாங்கத்தையும் தான்.
நன்றி வீரகேசரி.
0 comments