இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உயரிய தேசிய விருதான ''சாஹித்ய ரத்னா'' விருது நீர்வை பொன்னையனுக்கு கிடைத்ததல்ல. இது எங்களது முற்போக்கு இலக்கிய இயக்கத்துக்கும் எனது கொள்கைக்கும் கிடைத்த விருது. நான் அரசியலில் இருந்து இலக்கியத்துக்கு வந்துள்ளேன. இலக்கியத்தில் இருந்து அரசியலுக்கு வரவில்லை. எனது அரசியல்பயணம் 1947 இல் ஆரம்பமானது. இலக்கியப்பயணம் 1957 இல் ஆரம்பித்தது... என்று பேசத் தொடங்குகிறார் மூத்த முற்போக்கு எழுத்தாளர் 'சாஹித்ய ரத்னா' நீர்வை, பொன்னையன்...
ஈழத்து முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான நீர்வை பேனாவை ஆயுதமாகக் கொண்ட ஒரு சமூக போராளி. தொழிலாளர் வர்க்கத்துக்காகவே பேனாவை எடுத்த இவர் அவர்களது உரிமைகள், போராட்ட விடயங்கள் தொடர்பில் தனது எழுத்து ஆளுமையினூடாக சமூகத்துக்கு வெளிகொணர்ந்துள்ளார்.
முற்போக்கு எழுத்துலகில் இன்று ஆறு தசாப்தங்களை எட்டியுள்ள நீர்வை இன்றும் எழுத்துத் துறையில் தன்னன ஈடுபடுத்தி வருகின்றார். அத்துடன் இலங்கை முற்போக்குக் கலை, இலக்கிய மன்றத்தின் ஊடாக இலக்கிய கூட்டங்கள், நினைவுப்பேருரைகள், நூல்வெளியீடுகள் என்பவற்றை முன்நின்று நடத்தி வருகின்றார்.
அண்மையில், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உயரிய தேசிய விருதான ''சாஹித்ய ரத்னா'' விருதைப் பெற்றுக்கொண்ட நீர்வை பொன்னையனை சந்திப்பதற்கு அவரது வீட்டுக்கு சென்றேன். 87ஆவது வயதைக் கொண்டுள்ள இவரது பணிவான தன்மை, பணிவான பேச்சு அவர் தான் கடந்து வந்த பாதையில் சந்தித்த இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்ட போது மெய்சிலிர்த்தது. தான் ஒரு பட்டதாரியாக இருந்தாலும் தான் சார்ந்த சமூகத்துக்காக எவ்வாறு கொள்கைபிடிப்புடன் வாழ்ந்து வந்தார் என்பது ஆச்சரியமிக்கதாக இருந்தது.
இதன்போது அவர் பகிர்ந்து கொண்ட விடயங்கள் எமது வாசகர்களுக்காக...
அரசியல் துறையில் ஏழு தசாப்தங்கள் எழுத்துத்துறையில் ஆறு தசாப்தங்கள். இவ்வாறு தசாப்தங்களை கண்டுள்ள நீங்கள் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் 'சாஹித்ய ரத்னா' விருதை பெற்றுள்ளீர்கள். இதனை எவ்வாறு உணர்கின்றீர்கள்? உங்கள் துறைசார் அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ள முடியுமா?
நான் சார்ந்த இலக்கிய அமைப்புக்கும் என்னுடைய கோட்பாட்டுக்கும் கிடைத்த விருதாகவே இந்த 'சாஹித்யரத்னா' விருதை கருதுகின்றேன். இவ்விருதை பெற்றதில் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.
அரசியல் களத்திலிருந்து சிலர் எழுத்துலகிற்குள் பிரவேசிக்கின்றனர். எழுத்துத் துறையிலிருந்து சிலர் அரசியல் களத்திற்குள் நுழைகின்றனர். நான் அரசியல் களத்திலிருந்து எழுத்து உலகிற்குள் பிரவேசித்தேன். என்னுடைய அரசியல் பயணம் 1947ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பமானது. இலக்கிய பயணம் 1957இல் ஆரம்பமானது. நான் பாடசாலையில் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை தனியாக இயங்கியது கிடையாது. எப்பொழுதும் கூட்டாகத்தான் இயங்கி வந்துள்ளேன். கூட்டாக இயங்கினால் தான் உருப்படியாக எதனையும் சாதிக்க முடியும் என்று அனுபவரீதியாக நான் கண்டுணர்ந்தவன். படிக்கும் பொழுது எனக்கு சிறந்த நண்பர்கள் கிடைத்தனர். எந்த வேலையானாலும் நாம் கூட்டமாகத்தான் செயற்படுவோம்.
![]() |
| இலங்கை அரசாங்கத்தின் அதியுயர் விருதான சாஹித்ய ரத்னா விருதை பெறுகின்றார் |
1957ஆம் ஆண்டே எனது முதலாவது சிறுகதை படைப்பு ஈழநாடு வாரப்பதிப்பில் வெளியானது. இந்த முதல் படைப்புக்கு நான் அந்த பத்திரிகை ஆசிரியரால் பாராட்டு பெற்றேன்.அதனை தொடர்ந்து அவரது ஊக்குவிப்பினால் தொடர்ச்சியாக எழுத்தளனானேன். கவிஞன் இ.நாகராஜன் என்ற எனது அமைப்பைச் சேர்ந்தவர் 'தமிழர்' என்ற பத்திரிகையை நடத்தினார். இது வாரப்பத்திரிகையாகும். இதில் எழுதுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க எழுத ஆரம்பித்தேன். சுமார் 12 சிறுகதைகளை எழுதினேன.
எனக்கு விருப்பமான தொழில் ஆசிரியர் தொழில். ஆனால், விவசாயம் செய்வது எனது விதியானது, ஆசிரியர் தொழிலை எடுப்பதற்கு பலமுறை முயற்சித்தும் கிடைக்கவில்லை. பட்டதாரியாக இருந்தும் சில,பல காரணங்களால் எனக்கு ஆசிரியர் தொழில் கிடைக்காமலே போய்விட்டது. கல்கத்தாவில் சென்று பட்டப்படிப்பை பூர்த்தி செய்து வந்தேன். ஆனால், முயற்சித்தும் தொழில் கிடைக்கவில்லை. எனது தந்தைக்கு அது பெரும் கவலை. அதன் பின்னரே நான் அரசியலுக்குள் நுழைந்தேன். என்னுடைய எழுத்து அரசியலில் இருந்தே பிறக்கின்றது.
நான் ஒரு விவசாயியின் மகன் என்ற ரீதியில் தொழிலாளர் சார் விடயங்களை எனது எழுத்தில் உள்வாங்கினேன் தொழிலாளர் சார் விடயங்களின் உணர்வுகளே தனக்கு அதிகமாக இருந்தது. அதில் முதலாவதாக எடுக்கப்பட்டது விவசாயிகளை மையப்படுத்தி எழுதப்பட்டதே 'மேடும் பள்ளமும்' எனும் சிறுகதை தொகுதி. எனது இலக்கியத்துக்கு அரசியலே தலைமை தாங்கியது.
சமூக மாற்றத்தை அரசியல் போராட்டங்கள் மூலம்தான் ஏற்படுத்த முடியும் என்பதையும் உணர்ந்தேன். சரியான அரசியல் களத்தைத்தேடி அலைந்த எனக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் கைகொடுத்தது. நாற்பதுகளின் இறுதிக்கால கட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தேன். நான் மாணவனாக இருந்த காலத்தில் என் பேரன்பிற்குரிய ஆசிரியர் நீர்வேலி எஸ்.கே. கந்தையா ஆங்கில இலக்கியத்திலும் மார்க்ஸிசத்திலும் எனக்கு ஆர்வத்தையூட்டி, என் அறிவு வளர்ச்சிக்கு வழிவகுத்தார்.
அதேவேளை, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த தோழர் கார்த்திகேசன் மார்க்ஸிசம் பற்றிய தெளிவை ஏற்படுத்தினார். இவ்விரு ஆசான்களது சரியான வழிகாட்டுதலும் இந்த சமூகத்தை மாற்றி அமைப்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களும் எனக்கு உறுதியான அரசியல் தளத்தை இட்டன.
புரட்சியின் தொட்டில் என்று கூறப்படுகின்ற கல்கத்தாவிற்கு நான் சென்ற பின் வங்காளத் தொழிலாளி வர்க்கத்தின் தீவிர போராட்டங்களிலிருந்தும் கலை , இலக்கிய இயக்கத்தின் செயற்பாடுகளிலிருந்தும் நான் பெற்ற புரட்சிகர உணர்வும் அனுபவங்களும் நான் படைப்பிலக்கிய களத்திற்குள் பிரவேசிக்க உந்துதலாயிருந்தன.
இக்கால கட்டத்தில்தான் நான் மார்க்ஸிம் கார்க்கி, முல்க்ராஜ், ஆனந்த், கே..ஏ. அப்பாஸ், பிரேம்சந், கிஷன்சந்தர், சரத்சந்ர சட்டர்ச்சி, மாணிக் பந்தோபாந்யாய, தரசங்கர் பாணார்ஜி, விபூதிபூஷன் பர்ணார்ச்சுஜி ஆகியோரது படைப்புகளை ஆங்கிலத்தில் பார்த்தேன். நான் முதல் முதல் படித்த சிறுகதைத் தொகுப்பு புதுமைப் பித்தன் கதைகள், அத்துடன் சிதம்பர ரகுநாதன் தமிழில் மொழிபெயர்த்த மார்க்ஸிம் கார்க்கியின் தாய் என்ற படைப்பு தான் நான் படித்த முதல் நாவல். எனது படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பெரும் உந்துதலாக இருந்தது.
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அதன் குறிக்கோள்கள் பற்றி ...
ஐம்பதுகளின் இறுதியில் இலங்கை எழுத்தாளர் சங்கம் என்ற ஒரு அமைப்பு சுவாமி விபுலானந்தர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த அமைப்பு சிறிது காலம்தான் செயற்பட்டது. இச்சங்கத்தின் இணைச் செயலாளர்களில் ஒருவரான டாக்டர் சரத் சந்ரா, கல்வி கற்க லண்டன் சென்றபின் இச்சங்கம் செயலிழந்தது. அறுபதுகளின் முற்பகுதியில் இச் சங்கம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற பெயருடன் புனரமைக்கப்பட்டது.
இலக்கியத்தை மக்கள் மயப்படுத்தல் மக்களை இலக்கிய மயப்படுத்தல், அரச, இன, மத, சாதி ஆகிய சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடுதல், தொழிலாளர், விவசாயிகள், உழைக்கும் வெகுஜனங்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டி நிலப் பிரபுத்துவத்தின் எச்ச சொச்சங்கள், அனைத்தையும் துடைத்தெறிதல், முதலாளித்துவத்துக்கும் ஏகாதிபத்தி யத்துக்கும் எதிராகப் போராடுதல், சுரண்டலும் சூறையாடலுமற்ற ஒரு சோஷலிஸ சமுதாயத்தை அமைத்தல் ஆகியவைதான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் குறிக்கோள்களாகும்.
இலக்கிய மாநாடுகள், விழாக்கள், கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், செயலமர்வுகள் போன்ற இலக்கியச் செயற்பாடுகளை நடத்தி பல அரிய சாதனைகளைப் புரிந்தது. ஒவ்வொரு மாதமும் ஒரு கலை இலக்கிய நிகழ்ச்சியை 2006 ஆம் ஆண்டிலிருந்து இ.மு.க.இ. மன்றம் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றது.
அரசியல் எல்லாவற்றிற்கும் தலைமை தாங்குகின்றது. இதற்கமைய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் பிரதிபலித்தது. இதனால் சங்கத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன. இச்சங்கத்தைப் புனரமைக்க சில மூத்த முற்போக்கு எழுத்தாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். இம்முயற்சிகள் பலனளிக்கவில்லை. காலத்தின் தேவை கருதி சில மூத்த முற்போக்கு எழுத்தாளர்களால் இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை அமைக்கப்பட்டது.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறைவேற்ற வேண்டிய வரலாற்றுக் கடப்பாடுகளை இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை கையேற்று நிறைவேற்றுமுகமாக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது.
சிறிது காலத்தின் பின்னர் 2002 முற்பகுதியில் நண்பர் சமீமின் சர்வதேச பாடசாலையில் நாங்கள் கூடினோம். இக்கூட்டத்தில் சமீம், நான், கவிஞர் ஏ. இக்பால், களனி சஞ்சிகை ஆசிரியர் சண்முகம் சுப்பிரமணியம், சிவா சுப்பிரமணியம், கே. சோமசுந்தரம், எம். குமாரசாமி ஆகியோர் சந்தித்தோம். முஹம்மது சமீம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
ஏற்கனவே இரண்டு தடவைகள் கூட்டம் கூட முயற்சித்து அது கைகூடாமை பற்றி நான் விளக்கினேன். பின்னர் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பை இயக்குவதற்கு ஐவர் கொண்ட ஒரு செயற்குழு அமைக்கப்பட்டது. காலகதியில் க. சிவபுத்திரன், சுமதி குகதாசன், செல்விகள், றின்சா மொஹமட், தித்தலாவை ரிசானா, , எஸ். சதானந்தம் ஆகியோர் எம்முடன் இணைந்தனர். பின்னர் இராசரத்தினம், தர்மலிங்கம் அருளானந்தம், கருணைநாதன், ஆகியோரும் உள்வாங்கப்பட்டனர். இவர்கள் எமது பல்வேறு செயற்பாட்டுக் குழுக்களில் பொறுப்பாயிருந்து செயற்படுகின்றனர்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஈழத்து முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் ஒரு மைல்கல் எமது மன்றத்தின் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் கொழும்பு இல. 6, தர்மராம வீதியிலமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. எமது நிகழ்வுகள் இந்த கேட்போர் கூடத்தில் எதுவித தங்கு தடையுமின்றி நடைபெறுவதற்கு இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி செல்வி திருச்சந்திரனும், இந்நிறுவனத்தின் பணியாளர்களும் பூரண ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கி வருகின்றார்கள்.
இலக்கிய உலகில் மறக்க முடியாத விடயம்..
எனது முதலாவது சிறுகதைத் தொகுதி 1961 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதை தொகுதியாக அவ்வாண்டின் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிகிறேன். ஆனால், அன்றைய சாஹித்திய குழுத் தலைவரான ஒரு பேராசிரியர் 'சிறுகதை என்பது ஒரு இலக்கிய வடிவம் அல்ல அதற்குப் பரிசு கொடுக்க வேண்டியது அவசியமில்லை' எனத் தடுத்துவிட்டதாகத் தெரிகிறது. அந்த ஒரே வருடம் மட்டும் சிறுகதைக்கென சாஹித்தியப் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் சிறந்த சிறுகதைத் தொகுதியாக பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டும் பரிசு கிடைக்காமல் போய்விட்டது. இது ஆச்சரியமான செய்தி மட்டுமல்ல. பரிசளிப்புகளின் போது திறமைகளைவிட வேறு விடயங்களும் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. தனிப்பட உள்நோக்கம் கொண்ட செயற்பாடுகளுக்கும் குறைவில்லை என்று உணர்ந்தேன். நான் ஒரு போதும் பரிசுகளைத் தேடி ஓடியதில்லை. ஒரு எழுத்தாளனுக்கான அங்கீகாரம் மக்களிடம் இருந்தே வரவேண்டும்.
உங்களது எழுத்துக்களில் எப்படி போராட்ட வடிவங்களும் இருக்கின்றன?
ஆரம்ப கல்வியைப் பிறப்பிடத்தில் கொண்ட நான் பட்டப்படிப்பை மேற்கொள்ள கல்கத்தா சென்றேன். அங்கு படிக்கும் போது மாணவர் எழுச்சிப் போராட்டங்களில் பங்கு பற்றி அடக்குமுறை எதிர்ப்பு, மக்கள் எழுச்சி, போராட்டம், போன்றவற்றில் நல்லதொரு அனுபவமும் கிடைத்தது. அத்துடன் அங்கு கற்கும் காலத்தில் ஆங்கிலம் முதல் இந்தியாவின் பல்வேறு மொழி இலக்கியங்களைப் படிக்கும் வாய்ப்பும் கிட்டியது. இவற்றை கற்பதனூடாக நவீன இலக்கியங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள வாய்ப்பாகவும் இருந்தது. இதுவே பிற்காலத்தில் எனது எழுத்தின் உயிர் ஓட்டத்துக்கும் காரணமாக அமைந்துவிட்டது.
நீங்கள் எழுதிய சிறுகதை தொகுதிகள் பற்றி...?
'பாசம்' எனது முதல் சிறுகதை. இது 1959 இல் புனையப்பட்டது. 'மேடும் பள்ளமும்' எனது முதலாவது சிறுகதைத் தொகுதி. இத்தொகுதி 1961 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பாதை, வேட்கை ஆகிய எனது இரண்டு சிறுகதைத் தொகுதிகள் பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர், உரிமையாளர், நண்பர் சிறீதர்
வெளியிட்டுள்ளார். ஈழத்து முற்போக்குச் சிறுகதைகள் என்ற 25 கதைகள் அடங்கிய தொகுதியையும் முற்போக்கு இலக்கிய எழுச்சி நான்கு முன்னோடி எழுத்தாளர்கள் என்ற இ.மு.க. மன்றத்தின் இருநூல்களும் பூபாலசிங்கம் புத்தகசாலையின் ஆதரவுடன் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரையில் 11 நூல்களை வெளியிட்டுள்ளேன்.
முற்போக்கு இலக்கியத்தினுடைய போக்கு இப்போது எப்படி இருக்கின்றது?
முற்போக்கு இலக்கியம் என்பது மக்கள் இலக்கியம். மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் என்பவற்றை பிரதிபலிப்பதாகவே முற்போக்கு இலக்கியம் இருக்கின்றது. வர்க்க அடிப்படையிலேயே இந்த இலக்கியம் அமைந்திருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் இயங்காமல் இருந்த
இன்றைய இளம் தலைமுறையினருக்கு நீங்கள் கூற விரும்புவது?
வாசிப்பு இப்போது மிகவும் குறைந்துள்ளது. எங்களுக்கு வாசிக்காமல் இருக்க முடியாது. இன்றைய தலைமுறையினரிடம் வாசிப்பு குறைவு. ஒரு எழுத்தாளர் எனும் போது அவர் வாசிப்பை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும். இன்றைய இளம் எழுத்தாளர்களை பார்க்கும் போது கவலையாக இருக்கின்றது. வாசிக்காமல் எழுதுகின்றார்கள் வெறும் கற்பனை எழுத்துக்களாகவே இருக்கின்றது. என்னிடம் பல சிறுகதைகள் திருத்துவதற்கு வரும் அதனை வாசித்து நான் கவலையடைந்திருக்கின்றேன். எழுத்து என்பது ஒரு தவம். அதனை சரியாக செய்ய வேண்டும்.
நேர்கண்டவர் : ஜீவா சதாசிவம்














